Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கீலேயாத்தின் தைலம் குணமாக்கும் தைலம்

கீலேயாத்தின் தைலம் குணமாக்கும் தைலம்

கீலேயாத்தின் தைலம் குணமாக்கும் தைலம்

எகிப்தை நோக்கி இஸ்மவேல வியாபாரிகள் கூட்டமாகப் பயணிக்கிறார்கள். கீலேயாத்திலிருந்து அவர்கள் புறப்பட்டு வந்திருக்கிறார்கள்; அவர்களின் ஒட்டகங்கள் பிசின் தைலத்தையும், மற்ற பொருள்களையும் சுமந்து வருகின்றன. இந்த வியாபாரிகளிடம்தான் யோசேப்பின் அண்ணன்மார்கள் அவரை விற்றுவிடுகிறார்கள். இச்சம்பவம் பைபிளிலுள்ள ஆதியாகமப் புத்தகத்தை வாசித்தவர்களுக்கு நன்கு பரிச்சயம். (ஆதியாகமம் 37:25) மருத்துவ குணம் கொண்ட கீலேயாத்தின் பிசின் தைலத்திற்கு மத்தியக் கிழக்குப் பகுதிகளில் ஏகப்பட்ட வரவேற்பு இருந்தது என்பதை இதிலிருந்து தெரிந்துகொள்கிறோம்.

கி.மு. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த எரேமியா தீர்க்கதரிசி வருத்தத்தோடு இவ்வாறு கேட்டார்: “கீலேயாத்திலே பிசின் தைலம் இல்லையோ?” (எரேமியா 8:22) எரேமியா இப்படிக் கேட்டதற்குக் காரணம் என்ன? சரி, இந்தப் பிசின் தைலம் எதிலிருந்து கிடைக்கிறது? நிவாரணமளிக்கும் ‘பிசின் தைலம்’ இன்றும் கிடைக்கிறதா?

பைபிள் காலங்களில் பிசின் தைலம்

இந்தப் பிசின் தைலம் நறுமணம் உள்ளதாகவும், எண்ணெய்ப் பசை உள்ளதாகவும் இருந்தது; இது பலவகை தாவரங்கள் மற்றும் புதர்ச் செடிகளிலிருந்து கிடைத்தது. தூபப் பொருள்களையும் வாசனைப் பொருள்களையும் தயாரிக்க இந்தத் தைலம் பொதுவாகப் பயன்படுத்தப்பட்டது; பண்டைய கால மத்தியக் கிழக்கு நாடுகளில் இது ஓர் ஆடம்பரப் பொருளாக இருந்தது. இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து வந்த சில காலத்திற்குப் பிறகு ஆசரிப்புக் கூடாரத்தைக் கட்டினார்கள்; அங்கே பயன்படுத்தப்பட்ட அபிஷேகத் தைலத்திலும் தூபப் பொருள்களிலும் இந்தத் தைலம் சேர்க்கப்பட்டது. (யாத்திராகமம் 25:6; 35:8, NW) சேபா நாட்டு ராணி சாலொமோன் ராஜாவுக்குக் கொண்டு வந்த ஏராளமான பரிசுகளில் இந்தத் தைலமும் இருந்தது. (1 இராஜாக்கள் 10:2, 10, NW) எஸ்தர், பெர்சிய ராஜா அகாஸ்வேருவின் முன்பு நிறுத்தப்படுவதற்கு முன்னால், “ஆறுமாதம் . . . வாசனைத் தைலங்கள், நறுமணப் பொருள்கள்” ஆகியவற்றால் அழகுபடுத்தப்பட்டாள்.எஸ்தர் 1:1; 2:12, பொது மொழிபெயர்ப்பு.

பிசின் தைலம் மத்தியக் கிழக்கிலுள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து வந்தது; கீலேயாத்தின் பிசின் தைலமோ வாக்குபண்ணப்பட்ட தேசத்திலேயே கிடைத்தது. ஆம், யோர்தான் நதியின் கிழக்குப் பகுதியில்தான் கீலேயாத் இருந்தது. இஸ்ரவேல் மக்களின் மூதாதையான யாக்கோபு பிசின் தைலத்தை, “இந்தத் தேசத்தின் உச்சிதமான வஸ்து” என்று சொன்னார். அதை எகிப்தின் அதிபதிக்குப் பரிசாகக் கொடுத்தனுப்பினார். (ஆதியாகமம் 43:11) யூதாவும் இஸ்ரவேல் தேசமும் தீருவுக்கு ஏற்றுமதி செய்த பொருள்களில் அந்தத் தைலமும் இருந்ததாக எசேக்கியேல் தீர்க்கதரிசி குறிப்பிட்டார். (எசேக்கியேல் 27:17) இந்தப் பிசின் தைலம் அதன் மருத்துவ குணங்களுக்குப் பேர்போனது. இந்தத் தைலத்திற்குக் குணப்படுத்தவும் புத்துணர்வு அளிக்கவும் சக்தி இருந்ததெனப் பூர்வ இலக்கியப் புத்தகங்கள் அடிக்கடி குறிப்பிடுகின்றன; முக்கியமாய், காயத்தை ஆற்றும் சக்தி அதற்கு இருந்ததாக அவை குறிப்பிடுகின்றன.

நோய்வாய்ப்பட்ட தேசத்திற்கு மருந்து

“கீலேயாத்திலே பிசின் தைலம் இல்லையோ” என எரேமியா ஏன் கேட்டார்? இதைத் தெரிந்துகொள்ள அன்றைய இஸ்ரவேல் தேசத்தாரின் நிலைமையைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அவர்களுடைய மோசமான ஆன்மீக நிலைமையைப் பற்றி ஏசாயா தீர்க்கதரிசி முன்பு இவ்வாறு வர்ணித்திருந்தார்: “உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை உங்கள் உடலில் நலமே இல்லை; ஆனால், காயங்கள், கன்றிப்போன வடுக்கள், சீழ்வடியும் புண்களே நிறைந்துள்ளன; அங்கே சீழ் பிதுக்கப்படவில்லை, கட்டு போடப்படவில்லை.” (ஏசாயா 1:6, பொ.மொ.) தனது நோய்வாய்ப்பட்ட ஆன்மீக நிலையை உணர்ந்து அதற்கு மருந்து தேடுவதற்குப் பதிலாக, இஸ்ரவேல் தேசம் சீர்கெட்ட போக்கிலேயே போய்க்கொண்டிருந்தது. அதைப் பார்த்த எரேமியாவால் இப்படிப் புலம்ப மட்டுமே முடிந்தது: ‘இதோ, யெகோவாவுடைய சொல்லை வெறுத்துப்போட்டார்கள்; அவர்களுக்கு ஞானமேது?’ அந்த மக்கள் யெகோவாவிடம் திரும்பியிருந்தால் அவர்களை அவர் குணப்படுத்தி இருப்பார். “கீலேயாத்திலே பிசின் தைலம் இல்லையோ” என்று எரேமியா கேட்டது சிந்தனையைத் தூண்டும் கேள்வி அல்லவா?—எரேமியா 8:9.

இன்றைய உலகமும்கூட, ‘காயங்கள், கன்றிப்போன வடுக்கள், சீழ்வடியும் புண்கள்’ நிறைந்ததாய் இருக்கிறது. வறுமை, அநீதி, சுயநலம் போன்றவை மக்களை வாட்டி வதைக்கின்றன; கருணை என்ற குணம் கொஞ்சங்கூட இல்லை. இவற்றுக்கெல்லாம் காரணம், கடவுள் மீதும் சக மனிதர் மீதும் மக்களுக்கு அன்பு தணிந்துபோயிருப்பதே. (மத்தேயு 24:12; 2 தீமோத்தேயு 3:1-5) இனம், ஜாதி, வயது போன்ற காரணத்தால் அநேகர் ஒதுக்கப்பட்டிருக்கிறார்கள். போதாக்குறைக்கு பஞ்சமும், போரும், சாவும் மக்களின் வேதனையைக் கூட்டுகின்றன. எனவே, ஆன்மீக ரீதியிலும் உணர்ச்சி ரீதியிலும் துன்பப்படுகிறவர்களின் காயங்களை ஆற்ற “கீலேயாத்திலே பிசின் தைலம் இல்லையோ” என்று எரேமியாவைப் போலவே உண்மைக் கிறிஸ்தவர்கள் பலரும் கேட்கிறார்கள்.

நிவாரணமளிக்கும் நற்செய்தி

இயேசுவின் நாட்களில் வாழ்ந்த தாழ்மையுள்ள மக்களும் இதே கேள்வியைக் கேட்டார்கள். அதற்குப் பதிலையும் பெற்றார்கள். கி.பி. 30-ஆம் ஆண்டின் ஆரம்பத்தில், நாசரேத்திலிருந்த ஒரு ஜெபக்கூடத்தில் ஏசாயாவின் சுருளைத் திறந்து இயேசு இவ்வாறு வாசித்தார்: ‘சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்க யெகோவா என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்ட என்னை அனுப்பினார்.’ (ஏசாயா 61:1) பின்பு இந்த வார்த்தைகளைத் தமக்குப் பொருத்தி, ஆறுதலின் செய்தியை அறிவிக்கிற மேசியாவாகத் தம்மை அடையாளம் காட்டினார்.—லூக்கா 4:16-21.

இயேசு பூமியில் ஊழியம் செய்தபோது, கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியைப் பக்திவைராக்கியத்தோடு அறிவித்துவந்தார். (மத்தேயு 4:17) பல பிரச்சினைகளால் அல்லல்படுகிறவர்களின் நிலைமை மாறும் என மலைப்பிரசங்கத்தில் வாக்குறுதி அளித்தார்; ஆம், “இப்போது அழுகிற நீங்கள் சந்தோஷமானவர்கள், ஏனென்றால் நீங்கள் சிரித்து மகிழ்வீர்கள்” என்று சொன்னார். (லூக்கா 6:21) கடவுளுடைய அரசாங்கம் வரப்போகிறது என்ற நம்பிக்கை அளிக்கிற செய்தியை அறிவிப்பதன் மூலம், ‘இருதயம் நொறுங்குண்டவர்களுக்கு அவர் காயங்கட்டினார்.’

“கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தி” இன்றும் ஆறுதலின் செய்தியாக இருக்கிறது. (மத்தேயு 6:10; 9:35) ரோஜர் மற்றும் லில்லியான் தம்பதியின் உதாரணத்தை எடுத்துக்கொள்வோம். முடிவில்லா வாழ்வைப் பற்றிய நற்செய்தியை 1961 ஜனவரியில் அவர்கள் முதன்முதலாகத் தெரிந்துகொண்டார்கள்; வலியோடு இருந்த ஒருவருக்கு அன்றைய பிசின் தைலம் எப்படி இதமளித்ததோ அப்படித்தான் அந்த நற்செய்தி அவர்களுக்கு இதமளித்தது. “கற்றுக்கொண்ட விஷயங்கள் என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தின; சந்தோஷம் தாங்காமல் சமையலறையில் நடனமாடினேன்” என்று லில்லியான் சொல்கிறார். அச்சமயத்தில் ரோஜர் பத்து வருடங்களாகப் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தார்; அவர் இவ்வாறு சொல்கிறார்: “எனக்கு ரொம்பவே சந்தோஷமாக இருந்தது. வேதனைகளுக்கும் நோய்களுக்கும் முடிவு வரப்போகிறது, உயிர்த்தெழுதல் நடக்கப்போகிறது என்ற அற்புதமான வாக்குறுதிகளைப் பற்றித் தெரிந்துகொண்டபோது என் வாழ்க்கையில் மகிழ்ச்சி பூக்க ஆரம்பித்தது.”—வெளிப்படுத்துதல் 21:4.

1970-ல் இந்தத் தம்பதியர் தங்களுடைய 11 வயது மகனைப் பறிகொடுத்தார்கள். ஆனால், அவர்கள் சோகக்கடலில் மூழ்கிவிடவில்லை. யெகோவா, “இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார், அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார்” என்பதைத் தங்கள் அனுபவத்தில் கண்டார்கள். (சங்கீதம் 147:3) பைபிளிலிருந்து தெரிந்துகொண்ட வாக்குறுதிகள் அவர்களுக்கு ஆறுதலளித்தன. இப்போது 50 வருடங்களாக, கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தி அவர்களுக்குச் சந்தோஷத்தையும் மனநிறைவையும் அளித்துவருகிறது.

எதிர்காலத்தில் கிடைக்கும் நிவாரணம்

அப்படியென்றால், ‘கீலேயாத்தின் பிசின் தைலம்’ இன்றும் கிடைக்கிறதா? ஆம், ஆன்மீகப் பிசின் தைலம் இன்றும் கிடைக்கிறது. கடவுளுடைய அரசாங்கத்தின் நற்செய்தி அளிக்கிற ஆறுதலும் நம்பிக்கையும் நொறுங்குண்ட இருதயங்களுக்குக் காயங்கட்டுகிறது. இப்படிப்பட்ட நிவாரணத்தைப் பெற நீங்கள் விரும்புகிறீர்களா? அப்படியானால், பைபிளிலுள்ள ஆறுதலான செய்திக்கு உங்கள் இதயக் கதவைத் திறந்திடுங்கள். அது உங்கள் வாழ்க்கையில் செல்வாக்கு செலுத்த அனுமதியுங்கள். லட்சக்கணக்கானோர் ஏற்கனவே அவ்வாறு செய்திருக்கிறார்கள்.

இந்தத் தைலம் அளிக்கிற நிவாரணம், எதிர்காலத்தில் நமக்குக் கிடைக்கப்போகிற மாபெரும் நிவாரணத்தைப் படம்பிடித்துக் காட்டுகிறது. முடிவில்லா வாழ்வைப் பெறுவதற்காக யெகோவா தேவன் ‘தேசத்தாரைக் குணப்படுத்துகிற’ காலம் நெருங்கிவிட்டது. அப்போது “வாழ்பவர் எவரும் ‘நான் நோயாளி’ என்று சொல்ல மாட்டார்.” ஆம், கீலேயாத்தின் தைலம் இன்றும் கிடைக்கிறது.—வெளிப்படுத்துதல் 22:2; ஏசாயா 33:24, பொ.மொ. (w10-E 06/01)

[பக்கம் 27-ன் படம்]

கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தி, நொறுங்குண்ட இருதயங்களின் வலியைத் தணிக்கிற மருந்தாகச் செயல்படுகிறது