Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நட்சத்திரங்கள்—உங்கள் வாழ்க்கையைக் கட்டுப்படுத்த முடியுமா?

நட்சத்திரங்கள்—உங்கள் வாழ்க்கையைக் கட்டுப்படுத்த முடியுமா?

நட்சத்திரங்கள்—உங்கள் வாழ்க்கையைக் கட்டுப்படுத்த முடியுமா?

கும்மிருட்டு.. நிர்மலமான வானம்.. சற்று அண்ணாந்து பார்க்கிறீர்கள்.. என்ன தெரிகிறது? பெரிய கருப்புக் கம்பளத்தில் ஆயிரக்கணக்கான வைரங்கள் மின்னுவது போலத் தெரிகிறதா? நட்சத்திரங்கள் எவ்வளவு பெரியவை, எவ்வளவு தூரத்தில் இருக்கின்றன என்பதையெல்லாம் கடந்த 350 ஆண்டுகளாகத்தான் மனிதர்கள் புரிந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். பிரமிப்பூட்டுகிற நம் பிரபஞ்சத்தில் இயங்குகிற இந்தப் பிரமாண்டமான சக்திகளைப் பற்றி நாம் கடுகளவுதான் தெரிந்திருக்கிறோம்.

நட்சத்திரங்களும் கிரகங்களும் வானவீதியில் துல்லியமாக இயங்குவதையும், அவை இடம் மாறுவதையும் பூர்வ காலத்திலிருந்தே மனிதர்கள் உன்னிப்பாகக் கவனித்து வந்திருக்கிறார்கள். சுமார் 3000 வருடங்களுக்கு முன்பு தாவீது ராஜா இவ்வாறு எழுதினார்: “உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது, மனுஷனை நீர் நினைக்கிறதற்கு, . . . அவன் எம்மாத்திரம்”? இன்றும்கூட, அநேகர் அவரைப் போலவே உணர்ந்திருக்கிறார்கள்.—சங்கீதம் 8:3, 4.

நாம் அறிந்திருக்கிறோமோ இல்லையோ, நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் இயக்கங்கள் நேரடியாகவே நம்மைப் பாதிக்கின்றன. முதலில் நமக்கு அருகிலுள்ள நட்சத்திரமான சூரியனை எடுத்துக்கொள்வோம்; நம் பூமி சூரியனைச் சுற்றி வருகிறது; சூரியனை வைத்துத்தான் நம்முடைய நாள், வருடம் ஆகியவை கணக்கிடப்படுகின்றன. அடுத்து சந்திரன்; இது, “காலக் குறிப்புகளுக்காக” அல்லது ‘பருவ காலங்களைக் குறிப்பதற்காக’ படைக்கப்பட்டது. (சங்கீதம் 104:19; ஆதியாகமம் 1:14, கத்தோலிக்க பைபிள்) அதுபோல நட்சத்திரங்கள், கடற்பயணத்தில் துல்லியமாக வழிகாட்டவும் விண்வெளி வீரர்கள் விண்கலங்களைச் செலுத்தவும் உதவுகின்றன. இதனால்தான், காலத்தைக் கணிக்கவும், கடவுளுடைய படைப்புகளைப் போற்றிப் புகழவும் மட்டுமல்ல, வேறு விதத்திலும் நட்சத்திரங்கள் நமக்கு உதவுவதாக அநேகர் நம்புகிறார்கள். அப்படியானால், அவை நம்முடைய எதிர்காலத்தை முன்னறிவிக்குமா, நமக்கு வரக்கூடிய ஆபத்துகளை எச்சரிக்குமா?

சோதிடத்தின் ஆரம்பமும், நோக்கமும்

ஒரு காரியத்தைச் செய்வதா வேண்டாமா என்பதைத் தீர்மானிப்பதற்கு வானத்தைப் பார்த்து சகுனம் சொல்லும் பழக்கம் கி.மு. மூன்றாயிரம் ஆண்டு வாக்கில் பண்டைய மெசொப்பொத்தாமியாவில் தோன்றியது. பூர்வகால சோதிடர்கள் வானத்தை உன்னிப்பாகக் கவனித்தார்கள். நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் இடப்பெயர்ச்சியை வரைபடமிட, நட்சத்திரங்களின் நிலையைப் பட்டியலிட, நாள்காட்டிகளை உருவாக்கிட, கிரகணங்களை முன்னறிவித்திட அவர்கள் எடுத்த முயற்சியால் வானவியல் உருவானது. ஆனால், நம்முடைய பால்வீதி மண்டலத்திலுள்ள சூரியனும் சந்திரனும் இயற்கையாகவே இப்படி நம்மீது செல்வாக்கு செலுத்துவதைக் கவனிப்பது மட்டுமே சோதிடவியலில் உட்பட்டில்லை; அதில் இன்னும் சில விஷயங்கள் உட்பட்டிருக்கின்றன. ஆம், உலகத்திலும் சரி ஒருவருடைய வாழ்க்கையிலும் சரி, முக்கியமான சம்பவங்கள் நடப்பதற்குக் காரணம் சூரியன், சந்திரன், கிரகங்கள், நட்சத்திரங்கள், விண்மீன் கூட்டங்கள் ஆகியவை அமைந்திருக்கிற இடமும் வரிசையும்தான் எனச் சோதிடம் சொல்கிறது. எப்படி?

எதிர்காலத்தைக் குறித்த முன்னெச்சரிப்புகளுக்காக அல்லது அறிகுறிகளுக்காகச் சோதிடத்தைப் பயன்படுத்தி நட்சத்திரங்களையும் கோள்களையும் சிலர் பார்க்கிறார்கள்; இத்தகைய அறிகுறிகளைப் பற்றித் தெரிந்தவர்கள் பல்வேறு வழிகளில் அதைப் பயன்படுத்துவதற்காகவும் அதிலிருந்து பயனடைவதற்காகவும் அப்படிப் பார்க்கிறார்கள். வேறு சிலரோ, ஒருவருடைய தலையெழுத்தை அறிந்துகொள்ள.. குறிப்பிட்ட சில காரியங்களில் ஈடுபடுவதற்கு அல்லது ஒரு வேலையைத் தொடங்குவதற்கு நல்ல நேரத்தைத் தீர்மானிக்க.. சோதிடம் கைகொடுக்கிறது என நினைக்கிறார்கள். முக்கிய கிரகங்களின் வரிசையைக் கவனித்தும், அந்தக் கிரகங்கள் மற்ற கிரகங்களையும் பூமியையும் எப்படிப் பாதிக்கின்றன என்பதை “கணக்கிட்டும்” இந்தத் தகவலைப் பெறுவதாக அவர்கள் சொல்கிறார்கள். ஒருவர் பிறந்த நேரத்தில் இந்தக் கிரகங்கள் இருந்த இடத்தைப் பொறுத்து அவருடைய வாழ்க்கையில் அவை ஆதிக்கம் செலுத்துவதாகவும் சொல்கிறார்கள்.

பூமியே பிரபஞ்சத்தின் மையம் என்றும், பூமியைச் சுற்றி வந்த, ஒன்றைவிட ஒன்று பெரியதாக இருந்த கோளங்களில் கிரகங்களும் நட்சத்திரங்களும் ஒட்டிக்கொண்டிருந்தன என்றும் முற்காலச் சோதிடர்கள் நம்பினார்கள். அதோடு, சூரியன் மற்ற நட்சத்திரங்களோடும் விண்மீன் கூட்டத்தோடும் சேர்ந்து, வருடத்திற்கு ஒருமுறை குறிப்பிட்ட பாதையில் பயணிக்கிறது என்றும் நம்பினார்கள். சூரியன் இப்படிப் பயணித்த பாதையைச் சூரிய வீதி என்று அழைத்தார்கள்; அதை 12 மண்டலங்களாகப் பிரித்தார்கள். சூரியன் எந்த விண்மீண் கூட்டத்தின் வழியாகச் சென்றதோ அதன் பெயர் இந்த ஒவ்வொரு மண்டலத்திற்கும் வைக்கப்பட்டது. இவ்வாறே 12 ராசிச் சின்னங்களும் தோன்றின. இந்த மண்டலங்கள் அல்லது “வானத்தின் வீடுகள்,” குறிப்பிட்ட தெய்வங்களின் உறைவிடமாகக் கருதப்பட்டன. ஆனால், சூரியன் பூமியைச் சுற்றி வரவில்லை, பூமியே சூரியனைச் சுற்றி வருகிறது என விஞ்ஞானிகள் காலப்போக்கில் கண்டுபிடித்தார்கள். இந்தக் கண்டுபிடிப்பு அறிவியல் ரீதியில் சோதிடத்திற்கு ஒரு மரண அடியைக் கொடுத்தது.

சோதிடவியல் மெசொப்பொத்தாமியாவிலிருந்து உலகின் மூலைமுடுக்கெல்லாம் பரவியது; பெரிய நாகரிகங்கள் எல்லாவற்றிலும் பலவிதங்களில் வேர்பிடித்தது. பெர்சியர்கள் பாபிலோனைக் கைப்பற்றிய பிறகு, அது எகிப்து, கிரேக்கு, இந்தியா ஆகிய நாடுகளுக்குப் பரவியது. புத்த மத மிஷனரிகள், இந்தியாவிலிருந்து மத்திய ஆசியா, சீனா, திபெத், ஜப்பான் மற்றும் தெற்காசிய நாடுகளுக்கு அதைக் கொண்டுச் சென்றார்கள். மாயா நாகரிகத்திற்குள் சோதிடம் எப்படிப் புகுந்தது எனச் சரியாகத் தெரியவில்லை; என்றாலும், பாபிலோனியர்களைப் போலவே இந்த மக்களும் சோதிட முறைகளைப் பெருமளவு பயன்படுத்தினார்கள். சோதிடத்தின் “நவீன” முறை கிரேக்க மயமாக்கப்பட்ட எகிப்தில் தோன்றியிருப்பதாகத் தெரிகிறது; யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதத்தவர் மீது பலமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இஸ்ரவேல் தேசம் கி.மு. ஏழாம் நூற்றாண்டில் பாபிலோனுக்கு நாடுகடத்தப்படுவதற்கு முன்பே சோதிடத்தின் வலையில் சிக்கிக்கொண்டது. ‘சூரியனுக்கும் சந்திரனுக்கும் கிரகங்களுக்கும் வானத்தின் சகல சேனைகளுக்கும் தூபங்காட்டும்’ பழக்கத்தில் ஈடுபட்டவர்களை மக்கள் மத்தியிலிருந்து யோசியா ராஜா நீக்கினார் என பைபிள் சொல்கிறது.2 இராஜாக்கள் 23:5.

சோதிடத்தின் ஆதாரம்

பிரபஞ்சத்தின் அமைப்பையும் இயக்கத்தையும் பற்றிய அப்பட்டமான பொய்யைச் சோதிடம் ஆதாரமாகக் கொண்டுள்ளது. எனவே, கண்டிப்பாக இது கடவுளிடமிருந்து வரவில்லை. சோதிடம் பொய்யை அஸ்திவாரமாகக் கொண்டிருப்பதால், எதிர்காலத்தைப் பற்றிய திருத்தமான தகவல்களை அது தர முடியாது. சுவாரஸ்யமான இரண்டு சரித்திரச் சம்பவங்கள் அதன் தோல்வியைப் படம்பிடித்துக் காட்டுகின்றன.

ஒரு சம்பவம் பாபிலோனின் ராஜா நேபுகாத்நேச்சாரைப் பற்றியது. ஓர் இரவு அவர் ஒரு கனவு கண்டார்; அதன் அர்த்தத்தை அங்கிருந்த பூசாரிகளாலும் சோதிடர்களாலும் சொல்ல முடியவில்லை. உண்மைக் கடவுளாகிய யெகோவாவின் தீர்க்கதரிசி தானியேல் அதற்கான காரணத்தைச் சொன்னார்: “ராஜா கேட்கிற மறை பொருளை ராஜாவுக்குத் தெரிவிக்க ஞானிகளாலும், ஜோசியராலும், சாஸ்திரிகளாலும், குறிசோல்லுகிறவர்களாலும் கூடாது. மறைபொருள்களை வெளிப்படுத்துகிற பரலோகத்திலிருக்கிற தேவன் கடைசி நாட்களில் சம்பவிப்பதை ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருக்குத் தெரிவித்திருக்கிறார்.” (தானியேல் 2:27, 28) ஆம், ராஜாவின் கனவிற்கான அர்த்தத்தைத் தெரிந்துகொள்ள தானியேல் சூரியனையோ, சந்திரனையோ, நட்சத்திரங்களையோ நாடவில்லை; “மறைபொருள்களை வெளிப்படுத்துகிற” தேவனையே நாடினார், ராஜாவுக்குச் சரியான விளக்கத்தையும் தந்தார்.தானியேல் 2:36-45.

அடுத்த சம்பவம் மாயா இனத்தவரைப் பற்றியது; அவர்களுடைய மிகத் துல்லியமான சோதிடக் கணிப்பு, கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் அந்த நாகரிகத்தை அழிவிலிருந்து காக்கவில்லை. சோதிடம் என்பது ஒரு பித்தலாட்டம், சோதிடத்தால் எதையுமே துல்லியமாக முன்னறிவிக்க முடியாது என்பதை இந்த இரண்டு சம்பவங்களும் காட்டுகின்றன. அதோடு, சோதிடத்தின் உள்நோக்கத்தையும் அம்பலப்படுத்துகின்றன; எதிர்காலத்தைப் பற்றிய திருத்தமான தகவலைத் தெரிந்துகொள்ள கடவுளிடம் செல்லாதபடி மக்களைத் தடுப்பதே அதன் உள்நோக்கம்.

சோதிடம் பொய்யை ஆதாரமாகக் கொண்டுள்ளது என்ற உண்மை சோதிடத்தின் மூலகாரணனை அடையாளம் காண உதவுகிறது. பிசாசைப் பற்றி இயேசு இவ்வாறு சொன்னார்: “சத்தியம் அவனுக்குள் இல்லாததால் சத்தியத்தில் அவன் நிலைத்திருக்கவில்லை. தன் சுபாவத்தின்படியே அவன் பொய் பேசுகிறான்; ஏனென்றால், அவன் பொய்யனும் பொய்க்குத் தகப்பனுமாக இருக்கிறான்.” (யோவான் 8:44) சாத்தான் “ஒளியின் தூதனை” போல நடிக்கிறான், அவனுடைய கெட்ட தூதர்களும் “நீதியின் ஊழியர்களை” போல நடிக்கிறார்கள். நிஜத்திலோ, இவர்கள் மக்களை ஏமாற்றி, வஞ்சக வலையில் சிக்க வைப்பதில் குறியாக இருக்கிறார்கள். (2 கொரிந்தியர் 11:14, 15) “வல்லமைமிக்க செயல்களும், பொய்யான அடையாளங்களும் அற்புதங்களும்” சாத்தானுடைய செல்வாக்கினால் நடக்கின்றன என்பதை பைபிள் தெளிவாகக் காட்டுகிறது.—2 தெசலோனிக்கேயர் 2:9.

சோதிடத்தை ஏன் வெறுத்தொதுக்க வேண்டும்?

சோதிடம் பொய்யை ஆதாரமாகக் கொண்டிருப்பதால் சத்தியபரரான யெகோவா அதை வெறுக்கிறார். (சங்கீதம் 31:5) அதனால்தான், சோதிடம் பார்ப்பதை பைபிள் கண்டனம் செய்கிறது, சோதிடத்துடன் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்துகிறது. உபாகமம் 18:10-12-ல் (பொது மொழிபெயர்ப்பு) கடவுள் இவ்வாறு கட்டளையிட்டார்: “சகுனங்களை நம்புகிறவனும், சூனியக்காரனும், . . . ஏவிவிடுகிறவனும், மாயவித்தைக்காரனும், இறந்தவர்களிடத்தில் குறிகேட்கிறவனும் உங்களிடத்தில் இருக்கலாகாது. ஏனெனில், இவற்றையெல்லாம் செய்கிறவன் ஆண்டவருக்கு அருவருப்பானவன்.”

சோதிடத்திற்குப் பின்னால் இருக்கும் சக்திகள் சாத்தானும் அவனுடைய கெட்ட தூதர்களுமே; எனவே, ஒருவர் அதில் மேலோட்டமாக ஈடுபட்டாலும்கூட அவர்களுடைய கண்ணியில் சிக்கிக்கொள்வார். போதைப் பொருளை உபயோகிக்கும் ஒருவர் போதை வியாபாரியின் பிடியில் எப்படிச் சிக்கிவிடுவாரோ, அப்படியே சோதிடம் பார்ப்பவரும் மோசடி மன்னனாகிய சாத்தானின் பிடியில் சிக்கிவிடுவார். அதனால், கடவுளையும் சத்தியத்தையும் நேசிக்கிறவர்கள் சோதிடத்தை அறவே வெறுத்தொதுக்க வேண்டும்; அதோடு, ‘நீங்கள் தீமையை வெறுத்து, நன்மையை விரும்புங்கள்’ என்ற பைபிளின் அறிவுரைக்குக் கீழ்ப்படியவும் வேண்டும்.ஆமோஸ் 5:15.

எதிர்காலத்தைப் பற்றி எப்படியாவது தெரிந்துகொள்ள வேண்டுமென்ற மக்களின் ஆசையால்தான் சோதிடம் வெற்றி நடைபோடுகிறது. ஆனால், எதிர்காலத்தைப் பற்றி நம்மால் உண்மையிலேயே தெரிந்துகொள்ள முடியுமா? முடியுமென்றால், எப்படி? நாளைக்கோ, அடுத்த மாதமோ, அடுத்த வருடமோ நமக்கு என்ன நடக்குமென்று நம்மால் தெரிந்துகொள்ள முடியாது என பைபிள் சொல்கிறது. (யாக்கோபு 4:14) இருந்தாலும், சீக்கிரத்தில் இந்த முழு மனிதகுலத்துக்கே என்ன சம்பவிக்கப் போகிறதென்று அது சொல்கிறது. இயேசு சொல்லிக்கொடுத்தபடி, எந்த அரசாங்கம் வர வேண்டுமென்று நாம் இடைவிடாமல் ஜெபிக்கிறோமோ, அந்த அரசாங்கம் வெகு விரைவில் வரவிருக்கிறது என்று அது கற்பிக்கிறது. (தானியேல் 2:44; மத்தேயு 6:9,10) நம்முடைய துன்பதுயரங்கள் எல்லாம் வெகு விரைவில் முடிவுக்கு வரும், இனி அப்படிப்பட்ட துயரங்கள் நமக்கு வரவே வராது என்றெல்லாம்கூட அது கற்பிக்கிறது. (ஏசாயா 65:17; வெளிப்படுத்துதல் 21:4) மனிதர்களின் வாழ்க்கையைக் கடவுள் முன் விதிப்பது கிடையாது; மாறாக, அவரைப் பற்றியும் மக்களின் நன்மைக்காக அவர் என்னென்ன செய்யப் போகிறார் என்பதைப் பற்றியும் தெரிந்துகொள்ளும்படி எல்லாருக்கும் அவர் அழைப்பு விடுக்கிறார். இது நமக்கு எப்படித் தெரியும்? ‘பலதரப்பட்ட ஆட்களும் சத்தியத்தைப் பற்றிய திருத்தமான அறிவை அடைய வேண்டும், மீட்புப் பெற வேண்டும்’ என்பதே கடவுளுடைய சித்தம் என்று பைபிள் தெளிவாக விளக்குகிறது.—1 தீமோத்தேயு 2:4.

பரந்துவிரிந்த வானமும் அதில் இருப்பவையும் நமது வாழ்வைக் கட்டுப்படுத்துவதற்காகப் படைக்கப்படவில்லை. அவை யெகோவாவின் வல்லமையையும் கடவுள்தன்மையையும் பறைசாற்றுகின்றன. (ரோமர் 1:20) பொய்யை வெறுத்தொதுக்க மட்டுமல்லாமல், வெற்றிகரமான வாழ்க்கைக்கு நம்பத்தக்க வழிகாட்டுதலைப் பெற கடவுளையும் அவருடைய வார்த்தையான பைபிளையும் சார்ந்திருக்கக்கூட அவை நம்மைத் தூண்டுகின்றன. “உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.”—நீதிமொழிகள் 3:5, 6.  (w10-E 06/01)

[பக்கம் 23-ன் சிறுகுறிப்பு]

மாயா இனத்தவர் சோதிடத்தைப் பெருமளவு பயன்படுத்தினார்கள்

[பக்கம் 24-ன் சிறுகுறிப்பு]

“மறைபொருள்களை வெளிப்படுத்துகிற பரலோகத்திலிருக்கிற தேவன் கடைசி நாட்களில் சம்பவிப்பதை . . . தெரிவித்திருக்கிறார்”

[பக்கம் 24-ன் சிறுகுறிப்பு]

மாயா இனத்தவரின் மிகத் துல்லியமான சோதிடக் கணிப்பு, அந்த நாகரிகத்தை அழிவிலிருந்து காக்கவில்லை

[பக்கம் 23-ன் படம்]

எல் கராகோல் ஆய்வுக்கூடம், சிச்சென் இட்ஸா, யுகாட்டன், மெக்சிகோ, கி.பி. 750-900

[பக்கம் 23-ன் படங்களுக்கான நன்றி]

பக்கங்கள் 18 மற்றும் 19, இடமிருந்து வலம்: நட்சத்திரங்கள்: NASA, ESA, and A. Nota (STScI); மாயா நாள்காட்டி: © Lynx/Iconotec com/age fotostock; மாயா சோதிட வல்லுநர்: © Albert J. Copley/age fotostock; மாயா ஆய்வுக்கூடம்: El Caracol (The Great Conch) (photo), Mayan/Chichen Itza, Yucatan, Mexico/Giraudon/The Bridgeman Art Library