Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அற்புத சுகமளித்தல்—யெகோவாவின் சாட்சிகளுடைய சபையில் நடக்கிறதா?

அற்புத சுகமளித்தல்—யெகோவாவின் சாட்சிகளுடைய சபையில் நடக்கிறதா?

வாசகரின் கேள்வி

அற்புத சுகமளித்தல்—யெகோவாவின் சாட்சிகளுடைய சபையில் நடக்கிறதா?

▪ யெகோவாவின் சாட்சிகளுடைய சபையில் அற்புத சுகமளித்தல் நடந்ததாகச் சரித்திரமே இல்லை. இயேசுவைப் போல கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியை அறிவிப்பதே தங்கள் தலையாய பொறுப்பு என அவர்கள் நினைக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை... உண்மைக் கிறிஸ்தவர்களை அடையாளம் காட்டுவது அற்புத சுகமளித்தல் அல்ல, அதைவிட முக்கியமான ஒன்று!

உண்மைதான், கி.பி. முதல் நூற்றாண்டில்... மக்கள்மீது இரக்கப்பட்டு இயேசு அவர்களை அற்புதமாகக் குணப்படுத்தினார்; ஆனால், அந்த அற்புதங்கள் நம் அனைவருக்குமே ஒரு முக்கியமான விஷயத்தைத் தெரியப்படுத்துகின்றன. அதாவது, கடவுளுடைய அரசாங்கத்தில் இயேசு அரசராக ஆட்சி செய்யும்போது, ‘வியாதிப்பட்டிருப்பதாக நகரவாசிகள் சொல்ல மாட்டார்கள்’ என்பதை நமக்குத் தெரியப்படுத்துகின்றன.—ஏசாயா 33:24.

சரி, இப்போது நம்முடைய காலத்திற்கு வருவோம். கிறிஸ்தவர்களெனச் சொல்லிக்கொள்பவர்களும் சரி பிற மதத்தவரும் சரி, ‘அற்புத சுகமளித்தல்’ செய்வதாகச் சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால், தம்முடைய பெயரில் ‘எத்தனையோ அற்புதங்களைச் செய்ததாக’ சொல்பவர்களைக் குறித்து இயேசு கடுமையாக எச்சரித்தார். “நீங்கள் யாரென்றே எனக்குத் தெரியாது! அக்கிரமக்காரர்களே, என்னைவிட்டுப் போய்விடுங்கள்” என்று சொல்லப்போவதாகத் தெரிவித்தார். (மத்தேயு 7:22, 23) அப்படியானால், இன்று ‘அற்புதமாய்ச் சுகமளிக்கிறோம்’ என்று சொல்கிறவர்களுக்கு உண்மையிலேயே கடவுளுடைய அங்கீகாரமும் ஆசீர்வாதமும் இருக்கிறதென்று சொல்ல முடியுமா?

சரி... இயேசு செய்த சுகமளித்தலைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்பதைக் கவனியுங்கள். இயேசு செய்த சுகமளித்தலோடு ஒப்பிட்டுப்பார்த்தால்... இன்றைய சுகமளித்தல் உண்மையிலேயே கடவுளுடைய உதவியால் செய்யப்படுகிறதா என்பதை நீங்களே புரிந்துகொள்வீர்கள்.

இயேசு ஒருபோதும் தம்முடைய சீடர்களைக் கவருவதற்காகவோ, மிகப் பெரிய கூட்டத்தாரை வசீகரிப்பதற்காகவோ நோயாளிகளைச் சுகப்படுத்தவில்லை. அதற்கு நேர்மாறாக, பொது மக்கள் பார்வையில் படாதவாறுதான் பெரும்பாலோரைச் சுகப்படுத்தினார். அதுமட்டுமல்ல, அப்படிச் சுகப்படுத்திய பிறகு... யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றே சொல்லி அனுப்பினார்.—லூக்கா 5:13, 14.

தாம் செய்த அற்புதங்களுக்காக இயேசு யாரிடமும் பணம் வசூலிக்கவில்லை. (மத்தேயு 10:8) ‘அவரிடம் செல்கிற மக்கள் நிச்சயம் குணமடைவார்கள்’ என்ற நற்பெயரையும் இயேசு பெற்றிருந்தார். தம்மிடம் வந்த எல்லா நோயாளிகளையுமே அவர் பூரணமாகக் குணப்படுத்தினார்; அவர்களுக்கு விசுவாசம் குறைவாக இருக்கிறது என்று சொல்லி யாரையும் திருப்பி அனுப்பவில்லை. (லூக்கா 6:19; யோவான் 5:5-9, 13) ஏன், இறந்தவர்களையும்கூட உயிரோடு எழுப்பினார்!—லூக்கா 7:11-17; 8:40-56; யோவான் 11:38-44.

இருந்தாலும், உணர்ச்சிகளைத் தூண்டும் அற்புதங்களைச் செய்து மக்களைத் தம்மிடம் இழுக்க இயேசு நினைக்கவில்லை. மாறாக, கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியை அறிவிப்பதிலேயே குறியாக இருந்தார். சீடராக்கும் வேலையில் ஈடுபடும்படி தம்மைப் பின்பற்றியவர்களுக்கும் கட்டளையிட்டார். ஆம், கடவுளுடைய அரசாங்கத்தில் மக்கள் பூரண சுகத்தை அடைவார்கள் என்ற செய்தியை அனைவருக்கும் அறிவிக்கும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார்.—மத்தேயு 28:19, 20.

முதல் நூற்றாண்டில் இயேசுவின் சீடர்களாயிருந்த சிலர், வியாதியஸ்தரைச் சுகப்படுத்தும் வரத்தைப் பெற்றிருந்தார்கள் என்பது உண்மைதான்; என்றாலும், ஒரு குறிப்பிட்ட காலம் வரைதான் பெற்றிருந்தார்கள்! (1 கொரிந்தியர் 12:29, 30; 13:8, 13) இன்று உண்மைக் கிறிஸ்தவர்களை அடையாளம் காட்டுவது, அற்புத சுகமளித்தல் அல்ல; அவர்கள் மத்தியில் உள்ள சுயதியாக அன்பே! (யோவான் 13:35) இன்றைய அற்புத சுகமளித்தல்... எல்லாவித இனங்களையும் பின்னணிகளையும் சேர்ந்த மக்களை அன்பினால் பிணைத்ததாகவோ ஒற்றுமையான கிறிஸ்தவ சமுதாயத்தை உருவாக்கியதாகவோ சரித்திரமே இல்லை!

மறுபட்சத்தில், ஒரேவொரு கிறிஸ்தவத் தொகுதியினர் மட்டும் அன்பெனும் பந்தத்தால் பலமாகப் பிணைக்கப்பட்டிருக்கிறார்கள். அதனால், கடும் யுத்தமே நடந்தாலும் அவர்கள் யாருக்குமே தீங்கிழைப்பதில்லை—தங்கள் மத்தியிலும் சரி மற்றவர்களுக்கும் சரி! அவர்கள் யார்? யெகோவாவின் சாட்சிகள்! அவர்கள், கிறிஸ்து காட்டியதைப் போன்ற அன்பை வெளிக்காட்டுகிறார்கள்; இது உலகறிந்த விஷயம். பல்வேறு இன, குல, தேச, கலாச்சாரப் பின்னணியைச் சேர்ந்த மக்களை ஒன்றுபடுத்துவதும் ஓர் அற்புதம்தானே! இது கடவுளுடைய சக்தியால் மட்டுமே நடக்கிற விஷயமாகும். ஆகவே, அவர்களுடைய கூட்டங்கள் ஒன்றுக்குப் போய், இதெல்லாம் உண்மைதானா என்பதை நீங்கள் கண்கூடாகப் பார்க்கலாம், அல்லவா? (w10-E 10/01)

[பக்கம் 27-ன் படம்]

(வலது பக்கத்தில் காட்டப்பட்டுள்ளபடி) இன்று அற்புத சுகமளிப்போருக்கு உண்மையிலேயே கடவுளுடைய ஆதரவு இருக்கிறதா?