Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாசகரின் கேள்வி

கடவுளை அறிந்துகொள்ள எல்லாருக்கும் சம வாய்ப்பு கிடைக்கிறதா?

கடவுளை அறிந்துகொள்ள எல்லாருக்கும் சம வாய்ப்பு கிடைக்கிறதா?

எது தலைசிறந்த கட்டளை என்று இயேசுவிடம் ஒருவர் கேட்டார். அதற்கு அவர், “உன் கடவுளாகிய யெகோவாமீது உன் முழு இருதயத்தோடும் உன் முழு மூச்சோடும் உன் முழு மனதோடும் அன்பு காட்ட வேண்டும்” என்றார். (மத்தேயு 22:37) ஆனால், கடவுள்மீது மக்கள் அன்பு காட்ட வேண்டுமென்றால் முதலாவது அவரைப் பற்றி திருத்தமாக அறிந்துகொள்ள வேண்டும். (யோவான் 17:3) அப்படியென்றால், அவரை அறிந்துகொள்ள எல்லா மக்களுக்கும் ஒரேமாதிரியான வாய்ப்பு கிடைக்குமா?

கடவுளைப் பற்றிய அறிவைப் பெற உதவும் முக்கிய நூல் பைபிள். (2 தீமோத்தேயு 3:16) இன்று அநேகருக்கு பைபிள் சுலபமாகக் கிடைக்கிறது. அதோடு, கடவுளைப் பற்றித் திருத்தமாக அறிந்துகொள்ள, அதாவது பைபிளைப் பற்றி கற்றுக்கொள்ள, அவர்கள் ஒவ்வொருவருக்கும் அடிக்கடி உதவி கிடைக்கலாம். (மத்தேயு 28:19) இன்னும் சிலருக்கு அன்பான கிறிஸ்தவ பெற்றோரால் கடவுளைப் பற்றி அறிந்துகொள்ள தினமும் வாய்ப்பு கிடைக்கிறது.—உபாகமம் 6:6, 7; எபேசியர் 6:4.

என்றாலும், சிலருக்கு இப்படிப்பட்ட சாதகமான சூழல் அமைவதில்லை. உதாரணமாக, சிலர் துளியும் அன்பின் வாசம் இல்லாத வீடுகளில் வளர்ந்திருக்கலாம், ஆம் பெற்றோரின் பந்தபாசத்தையே பெறாமல் இருந்திருக்கலாம். (2 தீமோத்தேயு 3:1-5) இதுபோன்ற சூழலில் வளர்ந்தவர்களுக்கு கடவுளை ஓர் அன்புள்ள தகப்பனாக பார்ப்பது கடினமாக இருக்கலாம். இன்னும் அநேகருக்குப் போதுமான கல்வியறிவு கிடைக்காததால் பைபிளை வாசிக்க முடியாமல் போகலாம். இன்னும் சிலர் பொய் மதத்தினால் கடவுளைப் பற்றி தவறாகக் கற்பிக்கப்பட்டிருக்கலாம்; அல்லது பைபிள் போதனைகளை ஏற்றுக்கொள்ளாத குடும்பத்திலோ சமுதாயத்திலோ நாட்டிலோ அவர்கள் பிறந்திருக்கலாம். (2 கொரிந்தியர் 4:4) கடவுளைப் பற்றி அறிந்துகொள்வதற்கும் அவர்மீது அன்பு காட்டுவதற்கும் இவையெல்லாம் தடைக்கற்களா?

கடவுளை நேசிப்பதற்கும் அவருக்குக் கீழ்ப்படிந்து நடப்பதற்கும் சிலருடைய சூழ்நிலைகள் தடையாக இருக்கலாம் என்பதை இயேசுவும் ஒத்துக்கொண்டார். (மத்தேயு 19:23, 24) ஆனால், சில தடைகள் மனித பார்வையில் மலைபோல் தோன்றினாலும் “கடவுளால் எல்லாமே முடியும்” என்றும் தம் சீடர்களுக்கு நினைப்பூட்டினார்.—மத்தேயு 19:25, 26.

இதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்: உலகில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் எல்லாருக்கும் பைபிள் கிடைக்க யெகோவா தேவன் ஏற்பாடு செய்திருக்கிறார். கடவுளைப் பற்றி... சீக்கிரத்தில் பூமியைப் பூஞ்சோலையாக அவர் மாற்றப்போவதைப் பற்றி... “உலகெங்கும்” உள்ள மக்களுக்கு அறிவிக்கப்படும் என்று பைபிள் முன்பே சொல்லியிருக்கிறது. (மத்தேயு 24:14) மனதுக்கு இதமளிக்கும் இந்தச் செய்தியை இன்று 230-க்கும் அதிகமான நாடுகளில் யெகோவாவின் சாட்சிகள் அறிவித்து வருகிறார்கள்; அதோடு, சுமார் 500 மொழிகளில் பைபிள் அடிப்படையிலான புத்தகங்களையும் வெளியிடுகிறார்கள். பைபிளை வாசிக்க முடியாதவர்களும்கூட உண்மை கடவுளைப் பற்றி அறிந்துகொள்ள முடியும். எப்படி? கடவுளுடைய படைப்புகளை கண்ணார காண்பதன் மூலம்.—ரோமர் 1:20.

அதுமட்டுமல்ல, ‘யெகோவாவுக்கு ஒவ்வொருவரின் மனதில் என்ன இருக்கிறது என்பது தெரியும். நீ நினைக்கிற அனைத்தையும் யெகோவா புரிந்துகொள்வார். நீ உதவிக்கு யெகோவாவிடம் போனால், அவர் பதில் தருவார்’ என்று கடவுளுடைய வார்த்தை சொல்கிறது. (1 நாளாகமம் 28:9, ஈஸி டு ரீட் வர்ஷன்) எனவே, தம்மைப் பற்றி அறிந்துகொள்ள ஒவ்வொருவருக்கும் யெகோவா ஒரேமாதிரியான வாய்ப்பை அளிப்பதாக வாக்குறுதி அளிக்கவில்லை; ஆனால் நல்ல இதயம் படைத்தவர்களுக்கு நிச்சயம் ஒரு வாய்ப்பு கிடைக்கும்படி செய்வதாக உறுதியளிக்கிறார். அதுமட்டுமா, தம்மைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் இறந்துபோனவர்களுக்கும்கூட யெகோவா வாய்ப்பு அளிப்பார்; ஆம், நீதி தவழும் புதிய உலகில் அவர்களை உயிரோடு எழுப்பி தம்மைப் பற்றி அறிந்துகொள்ள வாய்ப்பு கொடுப்பார்.—அப்போஸ்தலர் 24:15. (w10-E 08/01)