Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

குடும்ப மகிழ்ச்சிக்கு

செக்ஸ் பற்றி உங்கள் பிள்ளைகளிடம் பேசுங்கள்

செக்ஸ் பற்றி உங்கள் பிள்ளைகளிடம் பேசுங்கள்

ஆலிஸ்யா a என்ற பருவவயதுப் பெண் சொல்கிறாள்: “சில சமயங்களில் செக்ஸ் பற்றிய விஷயங்களைத் தெரிந்துகொள்ள எனக்கு ஆர்வமாக இருக்கும். ஆனால், அதைப் பற்றி என் பெற்றோரிடம் கேட்டால் நான் ஏதோ தப்பு செய்கிறேன் என்று நினைத்துவிடுவார்களோ எனப் பயமாகவும் இருக்கும்.”

ஆலிஸ்யாவின் அம்மா ஈனெஸ் சொல்கிறார்: “செக்ஸ் பற்றி என் மகளிடம் பேச வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். ஆனால், அவள் எப்போதும் பிஸியாகவே இருக்கிறாள். உட்கார்ந்து பேச அவளுக்கு எங்கே நேரம்?”

இன்று டிவி, சினிமா, விளம்பரம் என எங்கு பார்த்தாலும் செக்ஸ்மயம்தான். ஆனால், பெற்றோர்-பிள்ளைகள் இதைப் பற்றிப் பேசுவது மட்டும் தவறாகக் கருதப்படுகிறது. “எங்களுடைய பெற்றோர் ஒன்றைப் புரிந்துகொண்டால் நன்றாக இருக்கும்: செக்ஸ் பற்றி அவர்களிடம் பேச எங்களுக்கு ரொம்ப பயமாகவும் கூச்சமாகவும் இருக்கிறது; ஒரு நண்பரிடம் பேசுவதோ எளிதாக இருக்கிறது” என்று கனடாவைச் சேர்ந்த மைக்கேல் என்ற இளைஞன் சொல்கிறான்.

பெரும்பாலும், பிள்ளைகளைப் போலவே பெற்றோர்களும் இந்த விஷயத்தைப் பற்றிப் பேசத் தயங்குகிறார்கள். பியான்ட் த பிக் டாக் என்ற புத்தகத்தில் சுகாதாரக் கல்வி ஆசிரியரான டெப்ரா டபிள்யூ. ஹாஃப்னர் இவ்வாறு எழுதுகிறார்: “‘பாலுறவு அல்லது பருவமடைவது பற்றிய புத்தகத்தைப் பிள்ளையின் அறையில் வைத்துவிடுவோமே தவிர, அதைப் பற்றிப் பேசவெல்லாம் மாட்டோம்’ என்று நிறையப் பெற்றோர் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள்.” ஆகவே, ஹாஃப்னரின் கருத்துப்படி, பெற்றோர் தங்கள் பிள்ளைகளிடம் சொல்லவரும் செய்தி இதுதான்: “உங்களுடைய உடலைப் பற்றியும் செக்ஸைப் பற்றியும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்; ஆனால், அதைப் பற்றி உங்களிடம் பேச மட்டும் எங்களுக்கு விருப்பமில்லை.”

நீங்கள் ஒரு பெற்றோர் என்றால், இந்த விஷயத்தில் உங்களுக்கு வித்தியாசமான கண்ணோட்டம் இருப்பது அவசியம். சொல்லப்போனால், பிள்ளைகளிடம் செக்ஸ் பற்றி நீங்கள் நேருக்குநேர் பேசுவது மிக முக்கியம். அதற்கான மூன்று காரணங்களைக் கவனியுங்கள்:

  1. இன்றைய உலகில் செக்ஸ் என்ற வார்த்தைக்கான அர்த்தம் மாறிவிட்டது. “செக்ஸ் என்பது கணவன் மனைவிக்கு இடையே உள்ள உடலுறவு மட்டும்தான் என்று மக்கள் நினைத்த காலம் மலையேறிவிட்டது. இப்போது வாய்வழி செக்ஸ், ஆசனவழி செக்ஸ், இன்டர்நெட் செக்ஸ், டெலிபோன் செக்ஸ் எனப் பலவகை இருக்கிறது” என்று 20 வயது ஜேம்ஸ் சொல்கிறான்.

  2. உங்கள் பிள்ளைகள் சின்னஞ்சிறு வயதிலேயே தவறான தகவல்களைப் பெற வாய்ப்பிருக்கிறது. ஷீலா என்ற தாய் இப்படிச் சொல்கிறார்: “ஸ்கூலுக்குப் போக ஆரம்பித்தவுடனேயே பிள்ளைகள் செக்ஸ் பற்றிக் கேள்விப்படுவார்கள். ஆனால், செக்ஸ் பற்றித் தெரிந்திருக்க வேண்டிய சரியான விஷயங்களைத் தெரிந்திருக்க மாட்டார்கள்.”

  3. செக்ஸ் சம்பந்தமான கேள்விகள் இருந்தாலும் உங்களிடம் அவற்றைக் கேட்க பிள்ளைகள் முன்வர மாட்டார்கள். “உண்மையைச் சொன்னால், என் பெற்றோரிடம் செக்ஸைப் பற்றி எப்படிப் பேச்செடுப்பதென்றே எனக்குத் தெரியவில்லை” என்று பிரேசிலைச் சேர்ந்த 15 வயது ஆனா சொல்கிறாள்.

பெற்றோர்களே, செக்ஸ் பற்றிப் பிள்ளைகளிடம் பேசுவது கடவுள் உங்களுக்குத் தந்திருக்கும் பொறுப்புகளில் ஒன்று. (எபேசியர் 6:4) ஆனால், அது அவர்களுக்கும் சரி உங்களுக்கும் சரி, தர்மசங்கடமாக இருக்கலாம். என்றாலும், 14 வயது டேன்யெல் சொல்வதைக் கேளுங்கள்: “செக்ஸ் குறித்து ஏதோவொரு டீச்சரிடமிருந்தோ டிவி நிகழ்ச்சியிலிருந்தோ அல்ல, எங்கள் பெற்றோரிடமிருந்து கற்றுக்கொள்ளவே நாங்கள் விரும்புகிறோம்.” நிறைய இளைஞர்களும் இதை ஆமோதிக்கிறார்கள். அப்படியிருக்க, இந்த முக்கியமான... ஆனால் தர்மசங்கடமான விஷயத்தைப் பற்றி உங்கள் பிள்ளைகளிடம் எப்படிப் பேசலாம்?

வயதுக்கேற்றபடி...

பிள்ளைகள் வெளி உலகத்தோடு தொடர்புகொள்வதை அறவே தவிர்க்க முடிவதில்லை; அதனால்தான் அவர்கள் சின்னஞ்சிறு வயதிலேயே செக்ஸ் பற்றிக் கேள்விப்படுகிறார்கள். பீதியளிக்கும் இன்னொரு உண்மை என்னவென்றால், இந்தக் “கடைசி நாட்களில்” பொல்லாதவர்கள் ‘மேன்மேலும் மோசமாகி’ வருகிறார்கள். (2 தீமோத்தேயு 3:1, 13) வக்கிர புத்தியுள்ள அவர்கள், தங்களுடைய ஆசையைத் தீர்த்துக்கொள்ள ஏராளமான பிள்ளைகளைப் பலிகடா ஆக்கியிருக்கிறார்கள்; இது வருத்தமான விஷயம்.

எனவே, செக்ஸ் பற்றி உங்கள் பிள்ளைகளுக்குச் சிறு வயதிலேயே கற்றுக்கொடுக்க ஆரம்பித்துவிடுவது முக்கியம். “பருவ வயது வரட்டும் என விட்டுவிட்டீர்கள் என்றால், அந்த வயதுக்கே உரிய கூச்சத்தின் காரணமாக அதைப் பற்றி வெளிப்படையாகப் பேச அவர்கள் விரும்ப மாட்டார்கள்” என்று ஜெர்மனியைச் சேர்ந்த ரெனாட்டே என்ற தாய் சொல்கிறார். ஆகவே, பிள்ளைகள் தெரிந்திருக்க வேண்டிய விஷயங்களை அந்தந்த வயதுவரும்போது தெரிவித்துவிட வேண்டும்.

இன்னும் பள்ளிக்குச் செல்லாத பிள்ளைகளுக்கு:

பிறப்புறுப்புகளின் பெயர்களைக் கற்றுக்கொடுங்கள்; இந்த உறுப்புகளைத் தொட யாரையும் அனுமதிக்கக் கூடாது என்பதை அவர்களுடைய மனதில் நன்றாகப் பதிய வையுங்கள். மெக்சிகோவைச் சேர்ந்த ஜூலியா என்ற தாய் இவ்வாறு சொல்கிறார்: “என்னுடைய பையனுக்கு மூன்று வயதானதுமே நான் இதைப் பற்றிச் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்துவிட்டேன். ஆசிரியர்களோ ஆயாக்களோ பெரிய பிள்ளைகளோ அவனிடம் தவறாக நடந்துகொள்ள வாய்ப்பிருந்தது. அதனால், தன்னை எப்படித் தற்காத்துக்கொள்வது என்பதை அவனுக்கு நான் கற்றுக்கொடுக்க வேண்டியிருந்தது.”

இப்படிச் செய்துபாருங்கள்: தன்னுடைய பிறப்புறுப்புகளைத் தொட்டு விளையாட யாரையும் அனுமதிக்கக் கூடாது என்பதைப் பிள்ளையின் மனதில் நன்றாகப் பதிய வையுங்கள். உதாரணத்திற்கு, ஒரு நபர் அப்படிச் செய்ய முயலும்போது, “தொடாதே! அப்பா அம்மாவிடம் சொல்லிக்கொடுத்துவிடுவேன்!” என்று கூச்சலிடுவதற்குக் கற்றுக்கொடுங்கள். அந்த நபர் நல்ல நல்ல பரிசுகளைக் கொடுப்பதாக ஆசைகாட்டினாலும் சரி, எதையாவது சொல்லி மிரட்டினாலும் சரி, உடனடியாகப் புகார் செய்வதுதான் சரியானது என்பதைப் பிள்ளைக்குப் புரிய வையுங்கள். b

தொடக்கப் பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளுக்கு:

இப்பருவத்தில் இந்த விஷயத்தைப் பற்றி உங்கள் பிள்ளைக்குப் படிப்படியாகச் சொல்லித் தர வாய்ப்பிருக்கிறது; எனவே, அதை நன்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள். பீட்டர் என்ற தகப்பன் சொல்கிற ஆலோசனையைக் கவனியுங்கள்: “பிள்ளைகளுடன் பேசுவதற்குமுன், அவர்களுக்கு ஏற்கெனவே என்ன விஷயங்கள் தெரியும் என்பதையும், இன்னும் தெரிந்துகொள்ள விரும்புகிறார்களா என்பதையும் அறிந்து வைத்திருங்கள். கஷ்டப்பட்டு இந்தப் பேச்சை ஆரம்பிக்க முயலாதீர்கள். வழக்கமாகவே உங்கள் பிள்ளைகளோடு நன்றாகப் பேசிவந்தீர்களென்றால் இந்த விஷயத்தைப் பற்றியும் உங்களால் சகஜமாகப் பேச முடியும்.”

இப்படிச் செய்துபாருங்கள்: ஒரே சமயத்தில் மணிக்கணக்காக உட்கார்ந்து பேசுவதற்குப் பதிலாக அடிக்கடி கொஞ்ச நேரம் பேசுங்கள். (உபாகமம் 6:6-9) இப்படிச் செய்யும்போது அளவுக்குமீறிய விஷயங்களைத் தங்கள்மீது திணிப்பதுபோல் அவர்கள் உணர மாட்டார்கள். அதோடு, வளர வளர, தங்கள் பருவத்திற்கேற்ப எந்தளவு தெரிந்துகொள்ள வேண்டுமோ அந்தளவு தெரிந்துகொள்வார்கள்.

பருவவயது பிள்ளைகளுக்கு:

செக்ஸ் பற்றிய உடல் ரீதியான, உணர்ச்சி ரீதியான, ஒழுக்க ரீதியான விஷயங்களை உங்கள் பிள்ளை போதியளவுக்குத் தெரிந்து வைத்திருக்கிறதா என்பதை உறுதிசெய்ய வேண்டிய பருவம் இது. முன்பு குறிப்பிடப்பட்ட 15 வயது ஆனா இவ்வாறு சொல்கிறாள்: “என்னோடு படிக்கிற பிள்ளைகள் இந்த வயதிலேயே செக்ஸ் வைத்துக்கொள்கிறார்கள். நான் ஒரு கிறிஸ்தவப் பெண்ணாக இருப்பதால், செக்ஸ் பற்றி போதியளவுக்குத் தெரிந்துவைத்திருக்க வேண்டுமென நினைக்கிறேன். அப்பா-அம்மா இதைப் பற்றி என்னிடம் பேசுவது ரொம்ப தர்மசங்கடமான விஷயம்தான், ஆனாலும் இது நான் தெரிந்திருக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம்!” c

ஓர் எச்சரிக்கை: பருவவயது பிள்ளைகள் தங்களுடைய பெற்றோரிடம் செக்ஸ் பற்றிக் கேள்விகள் கேட்கத் தயங்கலாம்; அப்படிக் கேட்டால் தாங்கள் ஏதோ தப்பு செய்திருப்பதாகப் பெற்றோர் நினைத்துவிடுவார்களோ என்று பயப்படலாம். தன் மகனுடைய விஷயத்தில் இதுதான் நடந்ததென ஸ்டீவன் என்ற ஒரு தகப்பன் சொல்கிறார்: “எங்கள் பையன் எங்களோடு செக்ஸ் பற்றிப் பேசத் தயங்கினான். தன்னுடைய நடத்தையில் நாங்கள் சந்தேகப்படுவோமோ என்று நினைத்து அவன் பயப்பட்டிருக்கிறான் என்பது பிற்பாடுதான் எங்களுக்குத் தெரியவந்தது. அதனால், அவன்மீது சந்தேகப்பட்டு இந்த விஷயங்களை நாங்கள் அவனிடம் பேசவில்லை என்பதை அவனுக்குத் தெளிவுபடுத்தினோம்; காலம் கெட்டுக் கிடப்பதால் அவன் தன்னைத் தற்காத்துக்கொள்ளத் தயார்நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காகப் பேசுகிறோம் என்பதையும் தெளிவுபடுத்தினோம்.”

இப்படிச் செய்துபாருங்கள்: செக்ஸ் பற்றிய சில விஷயங்களைக் குறித்து உங்கள் பருவவயது பிள்ளை என்ன நினைக்கிறான்(ள்) என்று நேரடியாய்க் கேட்பதற்குப் பதிலாக, அவனு(ளு)டைய வகுப்பு மாணவர்கள் அதைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் எனக் கேளுங்கள். உதாரணத்திற்கு, “வாய்வழி செக்ஸ் உண்மையில் செக்ஸ் இல்லையென்று நிறையப் பேர் நினைக்கிறார்கள். உன்னுடன் படிக்கிற பிள்ளைகளும் அப்படித்தான் நினைக்கிறார்களா?” என்று கேட்கலாம். இப்படி மறைமுகமாகக் கேள்விகள் கேட்டால் உங்கள் பிள்ளை மனந்திறந்து தன்னுடைய கருத்துகளைச் சொல்ல ஆரம்பிக்கலாம்.

தர்மசங்கடத்தை மேற்கொள்ளுதல்

பெற்றோராக நீங்கள் செய்ய வேண்டிய கடமைகளிலேயே மிகத் தர்மசங்கடமான ஒன்று பிள்ளைகளிடம் செக்ஸ் பற்றிப் பேசுவதுதான். ஆனால், உங்கள் முயற்சிக்குப் பலன் கிடைப்பது உறுதி. “செக்ஸ் பற்றிப் பேசுவது காலப்போக்கில் உங்களுக்குத் தர்மசங்கடமாக இருக்காது; அதோடு, பிள்ளையிடம் உங்களுக்குள்ள பந்தமும் பலமாகும்” என டையன் என்ற தாய் சொல்கிறார். முன்பு குறிப்பிடப்பட்ட ஸ்டீவனும் இதை ஆமோதிக்கிறார்: “குடும்பத்தில் எந்தவொரு விஷயத்தைப் பற்றியும் மனந்திறந்து பேசுவதைப் பழக்கமாக்கிக் கொண்டீர்கள் என்றால் செக்ஸ் போன்ற தர்மசங்கடமான விஷயங்களையும் எளிதில் பேச முடியும். என்றாலும், தர்மசங்கட உணர்வு மாயமாய் மறைந்துவிடும் எனச் சொல்ல முடியாது; ஆனால், மனந்திறந்து பேசுவது கிறிஸ்தவக் குடும்பத்தின் சந்தோஷத்திற்கு ரொம்பவே அத்தியாவசியம்.” (w10-E 11/01)

a இந்தக் கட்டுரையில் வரும் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

b யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட, பெரிய போதகரிடம் கற்றுக்கொள் என்ற புத்தகத்தில் பக்கம் 171-ல் சொல்லப்பட்டுள்ள தகவலின் அடிப்படையிலானது.

c செக்ஸ் பற்றி உங்களுடைய பருவவயது பிள்ளைகளிடம் பேசுவதற்கு, யெகோவாவின் சாட்சிகளால் ஆங்கிலத்தில் பிரசுரிக்கப்பட்ட, இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள், தொகுதி 2-ல் அதிகாரங்கள் 1-5, 28, 29, 33 ஆகியவற்றைப் பயன்படுத்துங்கள்.

உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்...

பெற்றோருக்கு: உலகெங்கும் உள்ள இளைஞர்களிடமிருந்து வந்துள்ள இந்தக் குறிப்புகளை வாசித்துவிட்டு, கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளை உங்களிடமே கேட்டுக்கொள்ளுங்கள்.

“என் பெற்றோர் செக்ஸ் பற்றிய கட்டுரைகளைப் படித்துப் பார்க்கச் சொல்வார்கள், அது சம்பந்தமாக ஏதாவது கேள்விகள் இருந்தால் தங்களிடம் வந்து கேட்கச் சொல்வார்கள். ஆனால், அவர்கள் என்னிடம் அதைப் பற்றி நிறையப் பேச வேண்டுமென்பதுதான் என்னுடைய ஆசை.”—ஆனா, பிரேசில்.

செக்ஸ் பற்றிய புத்தகத்தை உங்கள் பிள்ளையிடம் கொடுத்தால் மட்டும் போதாதென ஏன் நினைக்கிறீர்கள்?

“செக்ஸ் பற்றிய எக்குத்தப்பான விஷயங்கள் எத்தனையோ எனக்குத் தெரியும்; ஆனால், என் அப்பாவுக்கு அதெல்லாம் சுத்தமாகத் தெரியாதென நினைக்கிறேன். அது சம்பந்தமாக நான் ஏதாவது அவரிடம் கேட்டால் அவ்வளவுதான், அவருக்கு அதிர்ச்சியாக இருக்கும்.”—கென், கனடா.

உங்கள் பிள்ளை தன் மனதிலுள்ள விஷயங்களை உங்களிடம் பேச பயப்படுவதற்கான காரணங்கள் என்னவாக இருக்கலாம்?

“தயங்கித் தயங்கி, கடைசியில் ஒருவழியாக என் பெற்றோரிடம் செக்ஸ் பற்றி ஒரு கேள்வி கேட்டேன்; அதற்கு அவர்கள் பட்டென்று, ‘ஏன் அதைப் பற்றிக் கேட்கிறாய்? ஏதாவது நடந்துவிட்டதா?’ என ஒரு குற்றவாளியிடம் கேட்பதுபோல் கேட்டார்கள்.”—மாசாமி, ஜப்பான்.

செக்ஸ் பற்றி உங்கள் பிள்ளைகள் கேட்கும் கேள்விக்கு நீங்கள் பதிலளிக்கிற விதம், எதிர்காலத்தில் அவர்களை வாய்திறந்து பேச வைக்கும் அல்லது வாய்மூட வைத்துவிடும் என எப்படிச் சொல்லலாம்?

“‘உன்னுடைய வயதில் நீ கேட்கிற அதே கேள்விகளை நாங்களும் கேட்டோம்; உன் வயதுப் பிள்ளைகள் இப்படிக் கேட்பது சகஜம்தான்’ என என்னுடைய பெற்றோர் சொன்னால் எவ்வளவு நன்றாக இருக்கும்.”—லெஸெட், பிரான்சு.

செக்ஸ் பற்றி உங்கள் பிள்ளை உங்களிடம் தயக்கமில்லாமல் பேசுவதற்கு நீங்கள் என்ன செய்யலாம்?

“செக்ஸ் பற்றி என் அம்மா என்னிடம் கேள்வி கேட்பார்கள், ஆனால் இனிய குரலில் கேட்பார்கள். இது ரொம்ப முக்கியமென நினைக்கிறேன், அப்போதுதான் பிள்ளைகள் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டதுபோல் உணர மாட்டார்கள்.” —ஜெரால்ட், பிரான்சு.

செக்ஸ் பற்றி உங்கள் பிள்ளையிடம் பேசும்போது, என்ன குரலில் பேசுகிறீர்கள்? இந்த விஷயத்தில் நீங்கள் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டியிருக்கிறதா?