மண(ன) முறிவு ஏன்?
மண(ன) முறிவு ஏன்?
“பரிசேயர்கள் [இயேசுவை] சோதிக்கும் நோக்கத்துடன் அவரிடம் வந்து, ‘ஒருவன் தன் மனைவியை எந்தவொரு காரணத்திற்காகவும் விவாகரத்து செய்வது முறையா?’ என்று கேட்டார்கள்.”—மத்தேயு 19:3.
திருமண பந்தம் கடைசி வரை நிலைத்திருக்க முடியுமா அல்லது நிலைத்திருக்க வேண்டுமா என்ற கேள்வி இயேசுவின் காலத்திலிருந்த சிலருக்கு இருந்தது. அவர்களுக்கு இயேசு இவ்வாறு பதில் சொன்னார்: “கடவுள் ஆரம்பத்தில் மனிதர்களைப் படைத்தபோது அவர்களை ஆணாகவும் பெண்ணாகவும் படைத்தார் என்பதை நீங்கள் வாசிக்கவில்லையா? ‘இதன் காரணமாக, ஒருவன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டுத் தன் மனைவியோடு சேர்ந்திருப்பான், அவர்கள் இருவராக அல்ல ஒரே உடலாக இருப்பார்கள்’ என்று அவர் சொன்னதையும் நீங்கள் வாசிக்கவில்லையா? அதனால், அவர்கள் இருவராக அல்ல, ஒரே உடலாக இருப்பார்கள். எனவே, கடவுள் இணைத்திருப்பதை எந்த மனிதனும் பிரிக்காதிருக்கட்டும்.” a (மத்தேயு 19:4-6) ஆம், கணவனும் மனைவியும் ஆயுள்வரை இணைபிரியாமல் வாழ வேண்டுமென்பதே கடவுளின் நோக்கம்.
இன்று நிறைய நாடுகளில், கிட்டத்தட்ட 40 சதவீதத்துக்கும் அதிகமான திருமண தம்பதிகள் விவாகரத்து செய்துகொண்டு ‘பிரிந்துவிடுகிறார்கள்.’ அப்படியானால், திருமண வாழ்வுக்கு பைபிள் தருகிற அறிவுரைகள் பழம்பாணியாகிவிட்டதா? திருமணம் என்ற ஏற்பாடே சரியில்லை என்பதால்தான் திருமணங்கள் தோல்வியைத் தழுவுகின்றனவா?
இந்த உதாரணத்தைக் கவனியுங்கள்: இரண்டு தம்பதிகள் ஒரே மாடல் கார்களை வாங்குகிறார்கள். ஒரு தம்பதி அதை நன்கு பராமரிக்கிறார்கள், கவனமாக ஓட்டுகிறார்கள். அவர்களுடைய கார் எந்தக் கோளாறுமில்லாமல் நன்றாக ஓடுகிறது. மற்றொரு தம்பதி தங்களுடைய காரைப் பற்றிக் கொஞ்சம்கூட கவலைப்படுவதில்லை; அதைச் சுத்தம் செய்யவோ பராமரிக்கவோ நேரம் ஒதுக்குவதில்லை. அதைக் கண்மண் தெரியாமல் ஓட்டுகிறார்கள். அந்தக் கார் பழுதடைந்து காயலான் கடையில் போடும் நிலையில் இருக்கிறது. இப்போது சொல்லுங்கள்: இந்தக் கார் பழுதடைந்ததற்குக் காரணம்... காரா அல்லது காரின் சொந்தக்காரரா? பதில் உங்களுக்கே வெளிச்சம்.
அதுபோலவே, நிறையத் திருமணங்கள் தோல்வியைத் தழுவுவதால் திருமண ஏற்பாடே சரியில்லை எனச் சொல்லிவிட முடியாது. ஏனென்றால், லட்சக்கணக்கானோர் வெற்றிகரமான குடும்ப வாழ்க்கையை அனுபவித்து வருகிறார்கள். இப்படிப்பட்ட மண வாழ்க்கை அந்தத் தனி நபர்களுக்கும் சரி, குடும்பங்களுக்கும் சரி, சமுதாயங்களுக்கும் சரி, சந்தோஷத்தை அள்ளித்தந்திருக்கிறது; உறவுகள் உறுதியாய் இருக்க உதவியிருக்கிறது. சாதாரண காருக்கே நல்ல பராமரிப்பு தேவைப்படுகிறது என்றால், ஆயிரம் காலத்துப் பயிராக இருக்கிற திருமண பந்தத்தைப் பற்றிச் சொல்லவா வேண்டும்!
உங்களுக்குக் கல்யாணமாகி சில நாட்கள் ஆகியிருந்தாலும் சரி சில வருடங்கள் ஆகியிருந்தாலும் சரி, திருமண பந்தத்தைப் பலப்படுத்தவும் கட்டிக்காக்கவும் பைபிள் தரும் ஆலோசனைகள் இன்றும் பயனுள்ளவை. அவற்றில் சிலவற்றைத் தெரிந்துகொள்ள அடுத்தப் பக்கத்தைப் புரட்டுங்கள். (w11-E 02/01)
[அடிக்குறிப்பு]
a பாலியல் முறைகேட்டைத் தவிர வேறெந்த காரணத்துக்காகவும் துணையை விவாகரத்து செய்யக் கூடாது என பைபிள் சொல்கிறது.—மத்தேயு 19:9.