Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இயேசு ஏன் இறந்தார்?

இயேசு ஏன் இறந்தார்?

‘மனிதகுமாரன் . . . அநேகருக்காகத் தம்முடைய உயிரை மீட்புவிலையாய்க் கொடுப்பதற்காக வந்தார்.’—மாற்கு 10:45.

தம்முடைய வாழ்க்கையில் என்னவெல்லாம் சம்பவிக்கும் என இயேசுவுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. தாம் நிம்மதியான, ரம்மியமான வாழ்க்கை வாழப்போவதில்லை; ஆனால், 30-களில் அடியெடுத்து வைத்த சில வருடங்களிலேயே தம்முடைய உயிர் அநியாயமாகப் பறிக்கப்படும் என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. எனவே, தம்முடைய மரணத்தை எதிர்கொள்ள அவர் தயாராக இருந்தார்.

இயேசுவின் மரணத்திற்கு பைபிள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம், அதாவது புதிய ஏற்பாடு, இயேசுவின் மரணத்தைப் பற்றி கிட்டத்தட்ட 175 தடவை நேரடியாகக் குறிப்பிடுவதாய் ஒரு புத்தகம் சொல்கிறது. ஆனால், இயேசு ஏன் பாடுபட்டு சாக வேண்டியிருந்தது? இந்தக் கேள்விக்கான பதிலை நாம் கண்டிப்பாகத் தெரிந்துகொள்ள வேண்டும்; ஏனென்றால், இயேசு இறந்ததால் நம் வாழ்க்கையில் பெருமளவு மாற்றம் ஏற்படப்போகிறது.

இயேசு எதை எதிர்பார்த்தார்

இயேசு இந்தப் பூமியில் வாழ்ந்த கடைசி வருடத்தில், தாம் அனுபவிக்கப்போகிற பாடுகளையும் மரணத்தையும் பற்றி தமது சீடர்களிடம் பல முறை சொன்னார். கடைசி பஸ்காவைக் கொண்டாடுவதற்காக எருசலேமுக்குச் செல்லும் வழியில், தம்முடைய 12 சீடர்களிடம் அவர் இவ்வாறு சொன்னார்: “மனிதகுமாரன் பிரதான குருமார்களிடமும் வேத அறிஞர்களிடமும் ஒப்படைக்கப்படுவார்; அவர்கள் அவருக்கு மரணத் தீர்ப்பளித்து புறதேசத்தாரிடம் அவரை ஒப்படைத்துவிடுவார்கள். புறதேசத்தார் அவரைக் கேலி செய்து, அவர்மீது துப்பி, அவரை முள் சாட்டையால் அடித்து, பின்பு கொலை செய்வார்கள்.” a (மாற்கு 10:33, 34) தமக்கு என்னவெல்லாம் நேரிடும் என்பதைப் பற்றி எப்படி அவரால் இவ்வளவு உறுதியாகச் சொல்ல முடிந்தது?

தமக்கு எப்படிப்பட்ட மரணம் வரும் என்பதைப் பற்றி எபிரெய வேதாகமத்தில் முன்னுரைக்கப்பட்டிருந்த பல தீர்க்கதரிசனங்களை இயேசு நன்கு அறிந்திருந்தார். (லூக்கா 18:31-33) அவற்றில் சில தீர்க்கதரிசனங்களும் அவை எப்படி நிறைவேறின என்பதைக் காட்டுகிற பைபிள் வசனங்களும் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன.

மேசியா . . .

இவற்றையும் இன்னும் பல தீர்க்கதரிசனங்களையும் இயேசு நிறைவேற்றினார். என்றாலும், இவற்றை இயேசு தாமாகவே நிறைவேற்றியிருக்க முடியாது. இந்தத் தீர்க்கதரிசனங்களெல்லாம் இயேசுவின் வாழ்க்கையில் நிறைவேறியதிலிருந்து, அவர் நிஜமாகவே கடவுளால் அனுப்பப்பட்டவர் என்பது நிரூபணமாகிறது. b

ஆனால், இயேசு ஏன் துடிதுடித்துச் சாக வேண்டியிருந்தது?

முக்கியமான விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இயேசு இறந்தார்

சர்வலோகத்தையும் பாதிக்கிற முக்கியமான விவாதங்கள் ஏதேன் தோட்டத்தில் எழுப்பப்பட்டதை இயேசு அறிந்திருந்தார். ஒரு கலகக்கார தூதனின் கைப்பாவைகளாக மாறிய ஆதாமும் ஏவாளும் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போனார்கள். இவர்களுடைய கலகத்தால், கடவுளின் பேரரசாட்சி அல்லது அவர் ஆட்சி செய்யும் விதம் சரியானதா என்ற கேள்வி எழும்பியது. அதோடு, சோதனைகள் வந்தால் மனிதர்கள் கடவுளுக்கு உண்மையுள்ளவர்களாக இருப்பார்களா என்ற கேள்வியும் எழும்பியது.—ஆதியாகமம் 3:1-6; யோபு 2:1-5.

யெகோவாவின் பேரரசாட்சி மற்றும் மனிதனின் உத்தமத்தன்மை சம்பந்தப்பட்ட இரண்டு விவாதங்களுக்கும் இயேசு சரியான பதிலடி தந்தார். “கழுமரத்தில் சாகுமளவுக்கு” முழுமையாய்க் கீழ்ப்படிந்ததன் மூலம் அவர் கடவுளுடைய பேரரசாட்சியை ஆதரித்தார். (பிலிப்பியர் 2:8) கடுமையான சோதனைகள் வந்தாலும் ஒரு பரிபூரண மனிதனால் யெகோவாவுக்கு உண்மையாய் இருக்க முடியும் என்பதையும் அவர் நிரூபித்தார்.

மனிதகுலத்தை விடுவிப்பதற்காகவே இயேசு மரித்தார்

வாக்குப்பண்ணப்பட்ட மேசியா பாடுபட்டு இறப்பதன் மூலம் மனிதர்களுடைய பாவத்திற்குப் பிராயச்சித்தம் கிடைக்கும் என்று ஏசாயா தீர்க்கதரிசி முன்னுரைத்தார். (ஏசாயா 53:5, 10) இயேசுவுக்கு இது நன்றாகத் தெரியும்; அதனால்தான், “அநேகருக்காகத் தம்முடைய உயிரை மீட்புவிலையாய்” மனமுவந்து கொடுத்தார். (மத்தேயு 20:28) அபூரண மனிதர்கள் யெகோவாவோடு நல்லுறவை வளர்த்துக்கொள்ளவும், பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுபடவும் அவருடைய தியாக மரணம் வழிவகுத்தது. ஆதாமும் ஏவாளும் இழந்த அருமையான வாய்ப்பை, அதாவது இந்தப் பூமியில் பரிபூரண சூழ்நிலைமையில் என்றென்றும் வாழும் வாய்ப்பை, நாம் பெற அவருடைய மரணம் வழியைத் திறந்து வைத்திருக்கிறது. cவெளிப்படுத்துதல் 21:3, 4.

நீங்கள் என்ன செய்ய வேண்டும்

இயேசுவைப் பற்றி பைபிள் சொல்லும் விஷயங்களை, அதாவது அவர் எங்கிருந்து வந்தார், எப்படி வாழ்ந்தார், ஏன் இறந்தார் என்ற விஷயங்களை, இந்தத் தொடர்கட்டுரைகளில் நாம் சிந்தித்தோம். இயேசுவைப் பற்றிய உண்மைகளை அறிந்துகொண்டால் அவரைப் பற்றிய தப்பெண்ணங்களை களைந்துவிடுவோம்; அதுமட்டுமல்ல, அதற்கிசைவாக நடக்கும்போது இன்றே சிறப்பான வாழ்க்கை வாழ்வோம், எதிர்காலத்தில் முடிவில்லா வாழ்வைப் பெறுவோம். இப்படிப்பட்ட அருமையான ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டுமென்று பைபிள் சொல்கிறது:

  • இயேசு கிறிஸ்துவைப் பற்றியும் யெகோவாவின் நோக்கத்தில் அவர் வகிக்கிற பங்கைப் பற்றியும் கற்றுக்கொள்ளுங்கள்.—யோவான் 17:3.

  • இயேசுமீது விசுவாசம் வைத்திருக்கிறீர்கள், அவரை உங்களுடைய மீட்பராக ஏற்றுக்கொண்டிருக்கிறீர்கள் என்பதை உங்கள் வாழ்க்கை முறையால் காட்டுங்கள்.—யோவான் 3:36; அப்போஸ்தலர் 5:31.

‘கடவுளுடைய ஒரே மகனான’ இயேசு கிறிஸ்துவின் மூலம்தான் நாம் ‘முடிவில்லா வாழ்வு’ எனும் பரிசைப் பெற முடியும். (யோவான் 3:16) அவரைப் பற்றி நீங்கள் அதிகமாகக் கற்றுக்கொள்ள விரும்பினால், உங்களுக்கு உதவ யெகோவாவின் சாட்சிகள் ஆர்வமாய் இருக்கிறார்கள். (w11-E 04/01)

a இயேசு அடிக்கடி தம்மை ‘மனிதகுமாரன்’ என அழைத்தார். (மத்தேயு 8:20) அவர் கடவுளின் அவதாரமாக அல்ல ஆனால், நிஜமாகவே ஒரு மனிதராக இருந்தார் என்பதை இந்தப் பதம் சுட்டிக்காட்டியது. அதுமட்டுமல்ல, பைபிள் தீர்க்கதரிசனத்தில் குறிப்பிடப்பட்ட ‘மனிதகுமாரன்’ இவர்தான் என்பதையும் சுட்டிக்காட்டியது.—தானியேல் 7:13, 14.

b இயேசுவின் வாழ்க்கையில் நிறைவேறிய தீர்க்கதரிசனங்களைப் பற்றி கூடுதலாகத் தெரிந்துகொள்ள, பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகத்தில் “இயேசு கிறிஸ்து—வாக்குப்பண்ணப்பட்ட மேசியா” என்ற தலைப்பில் உள்ள பிற்சேர்க்கையைப் பாருங்கள். இது யெகோவாவின் சாட்சிகளால் வெளியிடப்பட்டது.

c இயேசுவுடைய தியாக மரணத்தின் மதிப்பைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ள பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகத்தில் “மீட்கும்பொருள்—கடவுள் தந்த மாபெரும் பரிசு” என்ற தலைப்பிலுள்ள 5-ஆம் அதிகாரத்தைப் பாருங்கள்.