Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுள் ஏன் தீமையையும் துன்பத்தையும் விட்டுவைத்திருக்கிறார்?

கடவுள் ஏன் தீமையையும் துன்பத்தையும் விட்டுவைத்திருக்கிறார்?

பைபிளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்

கடவுள் ஏன் தீமையையும் துன்பத்தையும் விட்டுவைத்திருக்கிறார்?

இந்தக் கட்டுரையில் சில கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. ஒருவேளை இந்தக் கேள்விகள் உங்களுக்கும் வந்திருக்கலாம். பதில்களைத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? அப்படியானால், இந்தக் கட்டுரையை வாசியுங்கள். பதில்களை பைபிளிலிருந்தே தெரிந்துகொள்வீர்கள். இதைப் பற்றி இன்னும் விளக்கமாக உங்களிடம் பேச யெகோவாவின் சாட்சிகள் ஆவலாக இருக்கிறார்கள்.

1. தீமை எப்படி ஆரம்பமானது?

பூமியில் தீமை ஆரம்பிக்கக் காரணமே சாத்தான் சொன்ன முதல் பொய்தான். சாத்தானைக் கடவுள் படைத்தபோது அவன் கெட்டவனாக இருக்கவில்லை; அவன் ஒரு பரிபூரண தூதனாக இருந்தான். ஆனால், ‘சத்தியத்தில் அவன் நிலைத்திருக்கவில்லை.’ (யோவான் 8:44) கடவுளுக்கு மட்டுமே சொந்தமான வணக்கத்தைப் பறித்துக்கொள்ள வேண்டுமெனச் சாத்தான் துடித்தான். முதல் மனுஷியாகிய ஏவாளிடம் பொய் சொன்னான். கடவுளுக்குப் பதிலாகத் தனக்குக் கீழ்ப்படியும்படி அவளைத் தூண்டினான். ஏவாளுடன் சேர்ந்துகொண்ட ஆதாமும் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போனான். ஆதாம் செய்த இந்தக் காரியத்தால், தீமையும் மரணமும் உலகத்தில் வந்தன.—ஆதியாகமம் 3:1-6, 17-19-ஐ வாசியுங்கள்.

கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போகும்படி ஏவாளைச் சாத்தான் தூண்டியபோது, கடவுளுடைய பேரரசாட்சிக்கு எதிராக ஒரு கலகத்தை முடுக்கிவிட்டான். பெரும்பாலான மனிதர்கள் சாத்தானோடு கைகோர்த்துக்கொண்டு கடவுளை தங்களுடைய ராஜாவாக ஏற்றுக்கொள்ள மறுத்திருக்கிறார்கள். அதனால்தான் சாத்தானை, “இந்த உலகத்தை ஆளுகிறவன்” என பைபிள் அழைக்கிறது.யோவான் 14:30-ஐயும் வெளிப்படுத்துதல் 12:9-ஐயும் வாசியுங்கள்.

2. கடவுள் படைத்த விதத்தில் ஏதாவது குறை இருந்ததா?

தம்முடைய சட்டதிட்டங்களுக்கு முழுமையாகக் கீழ்ப்படியும் விதத்தில்தான் மனிதர்களையும் தேவதூதர்களையும் கடவுள் படைத்தார். (உபாகமம் 32:4, 5) நல்லது கெட்டதைத் தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திரத்தை நமக்குக் கொடுத்திருக்கிறார். இந்தச் சுதந்திரம், கடவுள்மீது நமக்குள்ள அன்பைக் காட்ட வாய்ப்பளிக்கிறது.யாக்கோபு 1:13-15-ஐயும் 1 யோவான் 5:3-ஐயும் வாசியுங்கள்.

3. கடவுள் ஏன் துன்பத்தை விட்டுவைத்திருக்கிறார்?

சாத்தானும் மனிதர்களும் தம்முடைய பேரரசாட்சிக்கு எதிராக செய்த கலகத்தை யெகோவா தேவன் இத்தனை காலமாகப் பொறுத்து வந்திருக்கிறார். ஏன்? அவருடைய உதவியில்லாமல் மனிதர்கள் தங்களைத் தாங்களே ஆட்சி செய்தால், அது தோல்வியில்தான் முடியும் என்பதைக் காட்டுவதற்காகவே. (எரேமியா 10:23) அது உண்மை என்பதை இந்த 6,000 வருட மனித சரித்திரம் நிரூபித்திருக்கிறது. போர், குற்றச்செயல், அநீதி, நோய் போன்றவற்றை மனிதத் தலைவர்களால் ஒழிக்கவே முடியவில்லை என்பது ஊர்ஜிதமாகிவிட்டது.பிரசங்கி 7:29; 8:9-ஐயும் ரோமர் 9:17-ஐயும் வாசியுங்கள்.

ஆனால், கடவுளைத் தங்களுடைய ராஜாவாக ஏற்றுக்கொள்கிறவர்கள் நன்மை அடைவார்கள். (ஏசாயா 48:17, 18) சீக்கிரத்தில், மனித அரசாங்கங்கள் அனைத்தையும் கடவுள் அழித்துவிடுவார். கடவுளுடைய ஆட்சியை ஏற்றுக்கொள்கிறவர்கள் மட்டுமே இந்தப் பூமியில் வாழ்வார்கள்.—ஏசாயா 2:3, 4; 11:9; தானியேல் 2:44-ஐ வாசியுங்கள்.

4. கடவுள் பொறுமையாக இருப்பதால் நமக்கு என்ன வாய்ப்பு கிடைத்திருக்கிறது?

கஷ்டங்கள் வந்தால் மனிதர்கள் யாருமே யெகோவாவுக்கு உண்மையாக இருக்கமாட்டார்கள், அவருக்குக் கீழ்ப்படியமாட்டார்கள் என்று சாத்தான் சவால்விட்டான். கடவுள் இவ்வளவு காலம் பொறுமையாக இருப்பதால், நாம் அவருடைய ஆட்சியை ஆதரிக்கிறோமா அல்லது மனித ஆட்சியை ஆதரிக்கிறோமா என்பதைக் காட்ட நமக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. எனவே, எந்த ஆட்சியை ஆதரிக்கிறோம் என்பதை நாம் வாழும் விதத்தின் மூலம் காட்டலாம்.யோபு 1:8-11; நீதிமொழிகள் 27:11-ஐ வாசியுங்கள்.

5. கடவுளை ராஜாவாக ஏற்றுக்கொண்டிருப்பதை நாம் எப்படிக் காட்டலாம்?

கடவுளுடைய புத்தகமாகிய பைபிளைப் படித்து உண்மை வணக்கத்தைக் கண்டுபிடித்து, அதன்படி கடவுளை வழிபட வேண்டும்; அப்போதுதான், கடவுளை ராஜாவாக ஏற்றுக்கொண்டிருக்கிறோம் என்பதைக் காட்டுவோம். (யோவான் 4:23) அதோடு, இயேசு செய்ததைப் போல, அரசியலிலும் போரிலும் தலையிடுவதைத் தவிர்ப்போம்.யோவான் 17:14-ஐ வாசியுங்கள்.

சாத்தான் தனது சக்தியைப் பயன்படுத்தி ஒழுக்கங்கெட்ட, மோசமான பழக்கங்களைத் தூண்டிவிடுகிறான். அப்படிப்பட்ட பழக்கங்களை நாம் வெறுத்து ஒதுக்கும்போது, நம்முடைய நண்பர்களோ, உறவினர்களோ நம்மை கேலி செய்யலாம் அல்லது எதிர்க்கலாம். (1 பேதுரு 4:3, 4) எனவே, யாரை ஆதரிப்போம் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும். கடவுளை நேசிக்கிற மக்களோடு நாம் நெருங்கிப் பழகுவோமா? அவருடைய ஞானமான, அன்பான சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்து நடப்போமா? அப்படிச் செய்தால், சாத்தான் சொன்னது பொய் என்று நிரூபிப்போம்; ஆம், கடவுளுக்கு யாரும் கீழ்ப்படியமாட்டார்கள் என்று சாத்தான் சொன்னது பொய் என நிரூபிப்போம்.1 கொரிந்தியர் 6:9, 10; 15:33-ஐ வாசியுங்கள். (w11-E 05/01)

கூடுதல் தகவல்களுக்கு யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற இந்தப் புத்தகத்தின் 11-ஆம் அதிகாரத்தைப் பார்க்கவும்.

[பக்கம் 18-ன் படம்]

ஆதாம் மிக மோசமான தீர்மானத்தை எடுத்தான்

[பக்கம் 19-ன் படம்]

கடவுளை ராஜாவாக ஏற்றுக்கொண்டிருக்கிறோமா இல்லையா என்பதை நாம் எடுக்கும் தீர்மானங்கள் காட்டுகின்றன