Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

குடும்ப மகிழ்ச்சிக்கு

பிள்ளைகளின் வரவு—திருமண வாழ்வின் திருப்புமுனை

பிள்ளைகளின் வரவு—திருமண வாழ்வின் திருப்புமுனை

சார்லஸ்: a “எங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தப்போ எனக்கும் மேரிக்கும் சந்தோஷம் தாங்க முடியல. ஆனா, அவ பிறந்து சில மாசத்துக்கு எனக்குச் சரியான தூக்கமே இல்லை. அதுமட்டும் இல்ல, அவளை எப்படி வளர்க்கணும் எப்படிப் பார்த்துக்கணும்னு நாங்க நிறைய ‘ப்ளான்’ போட்டிருந்தோம். ஆனால் நாங்க நினைச்ச மாதிரி எதுவுமே நடக்கல.”

மேரி: “எங்க பாப்பா பிறந்த பிறகு, எல்லாம் தலைகீழா மாறிடுச்சு. என் உலகமே அவதான்னு ஆயிடுச்சு. அவளுக்கு பால் கொடுக்கணும்... ஈரத்துணிய மாத்தணும்... அழும்போது உடனே சமாதானப்படுத்தணும்னு... எப்பவும் இதுதான் என் மனசுல ஓடிட்டு இருந்துச்சு. இதுக்கு தகுந்தமாதிரி என்னை மாத்திக்கிறது எனக்குக் கஷ்டமா இருந்தது. நானும் என் கணவரும் முன்னமாதிரி அன்னியோன்னியமா ஆகறதுக்கு கொஞ்ச காலம் எடுத்துச்சு.”

ஒரு மழலை மலரும்போது குடும்பமே மகிழ்ச்சியில் மூழ்கிவிடும் என்பதை அநேகர் ஒத்துக்கொள்வார்கள். பிள்ளைகள் கடவுள் தந்த ‘பரிசு’ என பைபிள் சொல்கிறது. (சங்கீதம் 127:4, பொது மொழிபெயர்ப்பு) அதேசமயத்தில், ஒரு குழந்தை பிறக்கும்போது வாழ்க்கை அடியோடு மாறிவிடும் என்பதையும் சார்லஸ்-மேரி போன்ற பல பெற்றோர் அறிந்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு, ஒரு பெண் அம்மாவாகும்போது தன் குழந்தை மீதே எப்போதும் கண்ணாக இருக்கலாம்; அது லேசாகச் சிணுங்கினால்கூட தன் மனம் துடிப்பதைப் பார்த்து அவள் ஆச்சரியப்படலாம். அதேபோல் ஓர் ஆண் அப்பாவாகும்போது தன் மனைவிக்கும் குழந்தைக்கும் இடையிலிருக்கிற பாசப்பிணைப்பைப் பார்த்து அதிசயப்படலாம்; ஆனால் திடீரென்று தான் அம்போவென விடப்பட்டதாக உணரலாம்.

முதல் குழந்தையின் வரவு மண வாழ்வில் சில பிரச்சினைகள் முளைப்பதற்குக் காரணமாக இருக்கலாம். ஏனென்றால், ஏற்கெனவே அவர்கள் இருவருடைய மனதிலும் இனம்புரியாத பயங்கள் இருந்திருக்கலாம், தம்பதிகளாக அவர்களிடையே தீர்க்கப்படாத பிரச்சினைகள் இருந்திருக்கலாம். இப்போது பெற்றோர் என்ற புதிய பொறுப்பு அவர்களைத் திணறடிக்கும்போது அவை எல்லாம் வெடித்துக் கிளம்ப வாய்ப்பிருக்கிறது.

முதல் சில மாதங்களில் குழந்தைக்கே முழு கவனமும் கொடுக்க வேண்டியிருப்பதால், புதிய பெற்றோர் அதற்கேற்றாற்போல் எப்படித் தங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொள்ளலாம்? தங்களுக்குள் இருக்கும் அன்னியோன்னியத்தைத் தொலைத்துவிடாமல் இருக்க என்ன செய்யலாம்? குழந்தை வளர்ப்பு சம்பந்தமாக அவர்களுக்குள் ஏதாவது பிரச்சினைகள் வந்தால் எப்படிச் சமாளிக்கலாம்? இப்போது இந்தச் சவால்களை ஒவ்வொன்றாக அலசி, அவற்றைச் சமாளிக்க பைபிள் நியமங்கள் எப்படி உதவும் என்பதைப் பார்ப்போம்.

சவால் 1: குழந்தையே உலகமாகும்போது...

ஒரு தாய் தன் பச்சிளம் குழந்தைக்கே நேரத்தையெல்லாம் அர்ப்பணித்துவிடுவாள்; 24 மணிநேரமும் தன் குழந்தையின் நினைவாகவே இருப்பாள். இதில் அவளுக்கு ஆத்ம திருப்தி கிடைக்கிறது. ஆனால், அவளுடைய கணவரோ ஒதுக்கப்பட்டதுபோல் உணரலாம். பிரேசிலில் வசிக்கும் மோசஸ் சொல்கிறார்: “என் மனைவி என்ன விட்டுட்டு எப்போதும் குழந்தை கூடவே இருக்குறத என்னால தாங்கிக்கவே முடியல. முன்னாடி நானும் என் மனைவியும் ‘உனக்கு-நான், எனக்கு-நீ’ன்னு இருந்தோம், ஆனா இப்போ என் இடத்த என் குழந்த பறிச்சுக்கிட்ட மாதிரி இருக்கு.” இதுபோன்ற சவாலை நீங்கள் எப்படிச் சமாளிக்கலாம்?

வெற்றிக்கு வழி: பொறுமை.

“அன்பு நீடிய பொறுமையும் கருணையும் உள்ளது. . . . சொந்த விருப்பங்களை நாடாது, எரிச்சல் அடையாது” என்று பைபிள் சொல்கிறது. (1 கொரிந்தியர் 13:4, 5) ஒரு குழந்தை பிறக்கும்போது கணவனும் மனைவியும் இந்த அறிவுரையை எப்படிப் பின்பற்றலாம்?

பிரசவத்துக்குப் பிறகு தன் மனைவி உடலாலும் உணர்ச்சியாலும் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறாள் என்பதை ஓர் அன்புள்ள கணவர் தெரிந்துகொள்ள முயற்சி செய்வார். அப்படி அவர் செய்தால் தன் மனைவியின் ‘மூட்’ (mood) ஏன் திடீர் திடீரென மாறுகிறது என்று புரிந்துகொள்வார். b பிரான்சில் வசிக்கும் ஆல்பர்ட் (11 மாத பெண்குழந்தையின் அப்பா) சொல்கிறார்: “என் மனைவிக்கு ஏன் திடீரென ‘மூட்’ மாறிடுதுன்னு சில நேரத்துல என்னால புரிஞ்சுக்க முடியல, அத என்னால பொறுத்துக்கவும் முடியல. ஆனா, என் மேல உள்ள வெறுப்புனால இப்படியெல்லாம் நடந்துக்கல, புது சூழ்நிலைய சமாளிக்கிறதுனால ஏற்படுற மன அழுத்தந்தான் அவள இப்படியெல்லாம் செய்ய வைக்குதுன்னு அடிக்கடி ஞாபகப்படுத்திப்பேன்.”

நீங்கள் உதவி செய்ய முயற்சிக்கும்போது உங்கள் மனைவி அதைத் தவறாக எடுத்துக்கொள்கிறாரா? அப்படியென்றால், உடனே புண்பட்டுவிடாதீர்கள். (பிரசங்கி 7:9) அதுபோன்ற நேரங்களில், உங்களைப் பற்றியே யோசிக்காமல் பொறுமையோடு அவளுடைய உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். அப்படிச் செய்தால் சோர்ந்து போகமாட்டீர்கள்.—நீதிமொழிகள் 14:29.

அதேபோல் ஞானமுள்ள ஒரு மனைவி, ‘அப்பா’ என்ற பொறுப்பைத் தன் கணவர் சரிவர செய்வதற்கு அவரை ஊக்கப்படுத்துவாள். குழந்தையைக் கவனித்துக்கொள்வதில் கணவரையும் உட்படுத்துவாள்; பால்புட்டியில் பாலை ஊற்றிக் கொடுக்க... ஈரத்துணியை மாற்ற... கணவருக்குச் சொல்லிக் கொடுப்பாள். ஆரம்பத்தில் அவர் தப்பும்தவறுமாகச் செய்தாலும், பொறுமையோடு சொல்லிக் கொடுப்பாள்.

26 வயது அம்மாவான அனிதா, தன் கணவரிடம் நடந்துகொள்ளும் விதத்தில் மாற்றம் செய்ய வேண்டுமென்பதைப் புரிந்துகொண்டாள். அவள் சொல்கிறாள்: “என் குழந்தைக்கு எல்லாம் நானே செய்யணும்ன்ற எண்ணத்தை நான் மாத்திக்க வேண்டியிருந்தது. நான் சொல்லித்தந்த மாதிரி என் கணவர் செய்யாதப்போ சலிச்சிக்கக்கூடாதுன்னு எனக்கு நானே சொல்லிக்குவேன்.”

இப்படிச் செய்து பாருங்கள்: மனைவிகளே... குழந்தையைக் கவனித்துக்கொள்வதில் உங்கள் கணவர் சில விஷயங்களை வித்தியாசமாகச் செய்தால் கேலி செய்யாதீர்கள்; அவர் செய்த வேலையைத் திரும்பவும் செய்யாதீர்கள். மாறாக, அவர் ஓரளவுக்கு நன்றாகச் செய்தால்கூட பாராட்டுங்கள்; அப்படிச் செய்தால், தன்னால் நன்றாகச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை அவருக்கு வரும், உங்களுக்கு உதவி தேவைப்படும்போது உதவவும் முன்வருவார். கணவர்களே... குழந்தை பிறந்த முதல் சில மாதங்களில் உங்கள் மனைவிக்கு அதிக உதவி தேவைப்படும் என்பதால், அநாவசியமான காரியங்களுக்கு நேரம் செலவிடுவதைத் தவிருங்கள்.

சவால் 2: அன்னியோன்னியம் குறையும்போது...

இரவு நேரங்களில் சரியான தூக்கம் இல்லாததாலும், எதிர்பாராத பிரச்சினைகளைச் சந்திப்பதாலும் புதிய பெற்றோர் துவண்டுவிடலாம்; இதனால் தங்கள் மத்தியில் அன்னியோன்னியத்தைக் காத்துக்கொள்ள சிரமப்படலாம். பிரான்சு நாட்டைச் சேர்ந்த விவியான் (இரண்டு குழந்தைகளுக்கு அம்மா) சொல்கிறாள்: “ஆரம்பத்தில குழந்தையை கவனிப்பதிலேயே மூழ்கிட்டதால நான் ஒரு மனைவின்றதையே மறந்திட்டேன்.”

மறுபட்சத்தில் ஒரு கணவர், குழந்தையைச் சுமந்து பெற்றெடுக்கும்போது தன் மனைவி உடலாலும் உணர்ச்சியாலும் பாதிக்கப்படுகிறாள் என்பதை புரிந்துகொள்ளாமல் போகலாம். அதோடு, உடலளவிலும் மனதளவிலும் நெருக்கமாக இருக்க முடியாத அளவுக்கு உங்கள் இருவருடைய நேரமும், சக்தியும் குழந்தையைக் கவனிப்பதிலேயே போய்விட்டிருக்கலாம். அப்படியென்றால், ஒன்றுமறியாத அந்தப் பிஞ்சுக் குழந்தை உங்களை இணைக்கும் பாலமாக இருப்பதற்குப் பதிலாகப் பிரிக்கும் மதிலாக ஆகிவிடாமல் இருப்பதற்கு நீங்கள் என்ன செய்யலாம்?

வெற்றிக்கு வழி: உங்கள் அன்பை வெளிப்படுத்துங்கள்.

“புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்” c என்று மணவாழ்வைப் பற்றி பைபிள் விவரிக்கிறது. (ஆதியாகமம் 2:24) தங்களுக்கென்று ஒரு குடும்பம் வரும்போது பிள்ளைகள் பெற்றோரை விட்டு பிரிந்து விடுவார்கள் என்று யெகோவா சொல்கிறார். ஆனால், கணவனும் மனைவியும் ஒரே உடலாய் காலம் முழுக்க இணைபிரியாமல் இருக்க வேண்டுமென அவர் எதிர்பார்க்கிறார். (மத்தேயு 19:3-9) இந்த உண்மையை மனதில் வைத்து, எதற்கு முதலிடம் கொடுப்பதெனப் புதிய பெற்றோர் எப்படித் தீர்மானிக்கலாம்?

முன்பு குறிப்பிட்ட விவியான் சொல்கிறாள்: “ஆதியாகமம் 2:24-ஐப் பத்தி நான் யோசிச்சு பார்த்தேன். நானும் என் கணவருந்தான் ஒரே உடலா இருக்கறோமே தவிர, நானும் என் குழந்தையும் இல்லன்றத புரிஞ்சுக்க அது எனக்கு உதவுச்சு. அதனால, எங்க மணவாழ்வைப் பலப்படுத்துறது முக்கியம்னு புரிஞ்சுக்கிட்டேன்.” இரண்டு வயது பெண்குழந்தையின் அம்மா தெரசா சொல்கிறாள்: “என் கணவரோட இருக்கிற நெருக்கம் குறையற மாதிரி தோனும்போது, உடனே அவருக்கு என்னோட முழு கவனத்தையும் கொடுக்க பார்ப்பேன். தினமும் கொஞ்ச நேரமாவது அவர் கூடவே இருக்க முயற்சி பண்ணுவேன்.”

நீங்கள் ஒரு கணவராக இருந்தால், திருமண பந்தத்தைப் பலப்படுத்த என்ன செய்யலாம்? உங்கள் மனைவியின்மேல் நீங்கள் வைத்திருக்கும் அன்பை வாய்விட்டுச் சொல்லுங்கள். சொல்வதோடு நிறுத்திக்கொள்ளாமல் அவளிடம் கனிவாக நடந்துகொள்ளுங்கள். நீங்கள் அவள்மீது வைத்திருக்கிற அன்பு குறைந்துவிட்டதோ என்று அவள் பயந்தால், அதைப் போக்க உங்களால் முடிந்தளவு முயற்சி எடுங்கள். 30 வயது தாயான சௌமியா சொல்கிறாள்: “ஒரு பெண்ணுக்குப் பிரசவத்திற்கு அப்பறம் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், கணவர் இன்னமும் அவளைக் நேசிக்கிறார், மதிக்கிறார் என்பத அவ உணரணும்.” ஜெர்மனியில் வசிக்கும் ஆலென் (இரண்டு பையன்களுக்கு அப்பா) உணர்ச்சி ரீதியாக தன் மனைவியைத் தாங்கிப் பிடிக்கும் தூணாக இருக்க வேண்டுமென உணர்ந்தார். அவர் சொல்கிறார்: “என் மனைவி அழனுன்னு நினைக்கும்போதெல்லாம், அவ சாஞ்சு அழறதுக்கு நான் தோளா இருக்க முயற்சி செய்றேன்.”

ஒரு குழந்தை பிறக்கும்போது தம்பதிகளின் தாம்பத்திய உறவுக்குத் தடங்கல் ஏற்படுவது இயல்புதான். எனவே, கணவனும் மனைவியும் இதைப் பற்றி கலந்து பேச வேண்டும். “இருவரும் ஒத்துக்கொண்டால் மட்டுமே” தாம்பத்திய உறவில் ஈடுபடாமல் இருக்கலாம் என பைபிள் சொல்கிறது. (1 கொரிந்தியர் 7:1-5) அதற்குப் பேச்சுத்தொடர்பு முக்கியம். ஒருவேளை நீங்கள் வளர்ந்த சூழ்நிலை அல்லது கலாச்சாரத்தின் காரணமாக, உங்கள் துணையிடம் இதைப் பற்றிப் பேசுவதற்குத் தயங்கலாம். இருந்தாலும், பிள்ளையின் வரவால் உங்கள் அன்றாட வாழ்க்கை மாறியிருப்பதால், இதைப் பற்றி நீங்கள் பேசியே ஆக வேண்டும். அப்போது, உங்கள் துணையின் உணர்ச்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுங்கள், பொறுமையைக் காட்டுங்கள், மனந்திறந்து பேசுங்கள். (1 கொரிந்தியர் 10:24) அப்போது, கருத்து வேறுபாடுகளை நீங்கள் தவிர்க்கலாம், உங்கள் இருவருக்கும் இடையேயான அன்பு ஆழமாகும்.—1 பேதுரு 3:7, 8.

ஒருவரையொருவர் பாராட்டுவதும் உங்கள் அன்பை இன்னும் ஆழமாக்க உதவும். ஒரு குழந்தையைக் கவனித்துக்கொள்வது மற்றவர்கள் கண்ணுக்கு லேசுப்பட்ட விஷயமாக இருக்கலாம். ஆனால் ஞானமுள்ள கணவர், தன் மனைவிக்கு எக்கச்சக்கமான வேலை இருக்கும் என்பதை உணர்ந்து அதைப் பாராட்டோடும் பிரமிப்போடும் அவளுக்கு உணர்த்துவார். விவியான் சொல்கிறாள்: “நாள் முழுக்க நான் குழந்தைய கவனிச்சுக்கிட்டாலும் ஒரு வேலையும் செய்யாத மாதிரி தோணும்!” ஒரு ஞானமுள்ள மனைவி, தனக்கு தலைக்குமேல் வேலையிருந்தாலும் குடும்பத்துக்காகத் தன் கணவர் செய்யும் வேலைகளைத் துச்சமாக நினைக்க மாட்டாள்.—நீதிமொழிகள் 17:17.

இப்படிச் செய்து பாருங்கள்: அம்மாமார்களே... உங்கள் குழந்தை தூங்கும்போது முடிந்தால் நீங்களும் ஒரு குட்டித்தூக்கம் போடுங்கள். இப்படிச் செய்தால் “உங்கள் பேட்டரி ரீசார்ஜ் ஆனதுபோல்” இருக்கும். கணவரோடு நேரம் செலவழிக்க உங்களுக்குத் தெம்பும் இருக்கும். அப்பாமார்களே... இரவு நேரங்களில் குழந்தை பசிக்கு அழுதாலோ, அதன் ஈரத்துணியை மாற்ற வேண்டியிருந்தாலோ முடிந்தவரை நீங்கள் எழுந்து குழந்தைக்கு வேண்டியதைச் செய்யுங்கள்; அப்போது உங்கள் மனைவிக்குக் கொஞ்சம் ஓய்வு கிடைக்கும். மனைவியைப் புகழ்ந்து சிறு சிறு குறிப்புகளை எழுதி வைத்து விட்டுச் செல்வது... மெசேஜ் அனுப்புவது... அவ்வப்போது ஃபோனில் பேசுவது... என உங்கள் அன்பைத் தெரியப்படுத்துங்கள். தம்பதிகளே... நீங்கள் தனிமையில் பேசிக்கொள்ள நேரம் ஒதுக்குங்கள். குழந்தையைப் பற்றி மட்டுமல்ல, உங்கள் இருவரைப் பற்றியும் பேசுங்கள். உங்கள் துணையோடு நெருங்கிய நண்பராகுங்கள், பெற்றோராக நீங்கள் சந்திக்கும் சவால்களைச் சமாளிக்க இது உதவும்.

சவால் 3: குழந்தை வளர்ப்பில் கருத்து வேறுபாடுகள் வரும்போது...

நீங்கள் இருவரும் வித்தியாசமான சூழலில் வளர்ந்ததால் உங்களுக்குள் கருத்து வேறுபாடு வரலாம். ஜப்பானில் வசிக்கும் அஸ்மியும் அவரது கணவர் கட்சூராவும் இதே சவாலை எதிர்ப்பட்டார்கள். அஸ்மி சொல்கிறாள்: “எங்க மகளுக்கு அவரு ரொம்ப செல்லம் குடுக்குறார்னு நான் நெனச்சேன், ஆனா நான் ரொம்ப கண்டிக்கிறேன்னு அவரு நெனச்சாரு.” குழந்தை வளர்ப்பில் நீங்கள் இருவரும் ஒத்துப்போக என்ன செய்யலாம்?

வெற்றிக்கு வழி: பேச்சுத்தொடர்பு வைத்துக்கொள்ளுங்கள்,

ஒருவருக்கொருவர் பக்கபலமாக இருங்கள். “அகந்தையினால் மாத்திரம் வாது [அதாவது, வாக்குவாதம்] பிறக்கும்; ஆலோசனையைக் கேட்கிறவர்களிடத்திலோ ஞானம் உண்டு” என்று ஞானமுள்ள ராஜா சாலொமோன் சொன்னார். (நீதிமொழிகள் 13:10) குழந்தை வளர்ப்பைப் பற்றி உங்கள் துணையின் கண்ணோட்டத்தை நீங்கள் தெரிந்து வைத்திருக்கிறீர்களா? குழந்தை வளர்ப்பு பற்றி குழந்தை பிறந்த பிறகு பேசிக்கொள்ளலாம் என நினைக்காதீர்கள்; அப்படி நினைத்தால், பின்னால் ஒரு பிரச்சினை வரும்போது அதை எப்படித் தீர்ப்பதென யோசிப்பதற்குப் பதிலாக, உங்கள் தனிப்பட்ட கருத்தைப் பிடித்துக்கொண்டு சண்டைப்போட்டுக் கொண்டிருப்பீர்கள்.

உதாரணமாக, பின்வரும் விஷயங்களில் நீங்கள் இருவரும் சேர்ந்து எடுத்திருக்கும் முடிவு என்ன: “நேரத்திற்குச் சாப்பிடவும் தூங்கவும் எங்கள் குழந்தைக்கு எப்படிச் சொல்லிக்கொடுப்போம்? தூக்கத்தில் குழந்தை அழுதால் எப்போதுமே அதைத் தூக்கிக்கொள்ள வேண்டுமா? மலம் கழிப்பது சம்பந்தமான பயிற்சியை எப்படிக் கொடுப்போம்?” நீங்கள் எடுத்திருக்கும் முடிவுகள், மற்ற தம்பதிகள் எடுக்கிற முடிவிலிருந்து வித்தியாசப்படலாம். இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவான கிரண் சொல்கிறார்: “எந்த விஷயத்திலயும் நீங்க ரெண்டுபேரும் ஒத்துப்போகணும்னா, உங்களுக்குள்ள பேச்சுத்தொடர்பு ரொம்ப ரொம்ப முக்கியம். அப்பத்தான் ரெண்டுபேரும் சேந்து குழந்தைக்குத் தேவையானத செய்ய முடியும்.”

இப்படிச் செய்து பாருங்கள்: உங்கள் பெற்றோர் உங்களை எப்படி வளர்த்தார்கள் என்பதை யோசித்துப் பாருங்கள். எந்த விஷயத்தில் அவர்களைப் போல் நடந்துகொள்ள விரும்புகிறீர்கள் என்பதைத் தீர்மானியுங்கள். அதேசமயம், எந்த விஷயத்தில் அவர்களைப் பின்பற்றக் கூடாது என்பதையும் தீர்மானித்து விடுங்கள். இதைப் பற்றி உங்கள் துணையோடு கலந்துபேசுங்கள்.

பிள்ளையின் வரவால் மணவாழ்வில் மகிழ்ச்சி பூக்கும்

அதிக அனுபவம் இல்லாத இரண்டு சர்க்கஸ் கலைஞர்கள் லாவகமாகச் சாகசங்களைச் செய்வதற்கு, நேரமெடுத்து பொறுமையாகப் பயிற்சி செய்ய வேண்டும். அதேபோல், புதிய பெற்றோராக உங்கள் பொறுப்புகளைப் புரிந்துகொண்டு அதைச் சரிவர நிறைவேற்ற கொஞ்ச காலமெடுக்கும். இருந்தாலும், போகப்போக அதைச் சிறப்பாகச் செய்ய ஆரம்பிப்பீர்கள்.

திருமண உறுதிமொழிக்கு நீங்கள் எந்தளவு உண்மையாக இருக்கிறீர்கள் என்பதற்கு பிள்ளை வளர்ப்பு ஒரு உறைகல்லாய் இருக்கும்; உங்கள் இருவருக்கும் இடையே இருக்கும் உறவை அது பாதிக்கும். நீங்கள் இருவரும் நல்ல நல்ல குணங்களை வளர்த்துக்கொள்ள இது ஒரு வாய்ப்பாக அமையும். பைபிள் தரும் ஞானமான அறிவுரையைப் பின்பற்றினால் ராஜூ என்ற அப்பா சொல்வதைப் போலவே நீங்களும் சொல்வீர்கள்: “எங்க குழந்தையை வளர்த்தது எனக்கும் என் மனைவிக்கும் சந்தோஷமான அனுபவமா இருந்துச்சு. இப்பெல்லாம் ‘நான்,’ ‘எனக்கு’ன்னு யோசிக்கிறதுக்குப் பதிலா ‘நாங்க,’ ‘நமக்கு’ன்னு யோசிக்கிறோம். ஒருத்தரையொருத்தர் நல்லா புரிஞ்சுகிட்டு அன்பு காட்றோம்.” இதுபோன்ற மாற்றங்கள் இல்லறத்தை நல்லறமாக்கும். (w11-E 05/01)

a இந்தக் கட்டுரையில் வரும் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

b குழந்தை பிறந்து சில வாரங்களுக்கு நிறைய தாய்மார்கள் லேசான மனச்சோர்வால் அவதிப்படுவார்கள். சிலருக்கு அது தீவிரமடைகிறது; இதற்கு “பிரசவத்திற்குப் பின்னான மனச்சோர்வு” (Postpartum Depression) என்று பெயர். இதைப் பற்றிக் கூடுதலாகத் தெரிந்துகொள்ள செப்டம்பர் 8, 2002 தேதியிட்ட விழித்தெழு! இதழில் “போஸ்ட்பார்ட்டம் டிப்ரஷனை சமாளித்தேன்” என்ற கட்டுரையையும், ஜூன் 8, 2003 தேதியிட்ட ஆங்கில விழித்தெழு! இதழில் “போஸ்ட்பார்ட்டம் டிப்ரஷனை புரிந்துகொள்ளுதல்” என்ற கட்டுரையையும் பாருங்கள். இவை யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டவை.

c ஆதியாகமம் 2:24-ல் உள்ள “இசைந்திரு” என்பதற்கான எபிரெய வார்த்தை, ‘ஒருவரிடம் பாசத்தோடும் உண்மையோடும் ஒட்டிக்கொண்டிருப்பதைக் குறிக்கிறது’ என ஓர் ஆய்வு புத்தகம் சொல்கிறது.

உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்...

  • கடந்த வாரத்தில்... குடும்பத்துக்காக என்னவர்/என்னவள் செய்த வேலைகளை நான் வாயாரப் பாராட்டினேனா?

  • குழந்தை வளர்ப்பைப் பற்றி பேசாமல், எங்கள் இருவரைப் பற்றி மனம் விட்டு பேசுவதற்கு கடைசியாக எப்போது நேரம் ஒதுக்கினேன்?