Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இயற்கைப் பேரழிவுகள் ஏன் இத்தனை இத்தனை?

இயற்கைப் பேரழிவுகள் ஏன் இத்தனை இத்தனை?

இன்றைய செய்திகளில் பெரிதும் அடிபடும் விஷயம் இயற்கைப் பேரழிவுகள்தான். இதுவரையில்லாத அளவுக்கு இன்று மக்கள் இயற்கைப் பேரழிவுக்கு இரையாகிறார்கள். பெல்ஜியத்தில், பேரழிவுகளால் வரும் கொள்ளைநோய்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் ஓர் அமைப்பு வெளியிட்ட அறிக்கையின்படி 2010-ல் மட்டும் 373 பேரழிவுகள் ஏற்பட்டிருக்கின்றன; அவற்றால் குறைந்தபட்சம் 2,96,000 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

சமீப காலமாகப் பேரழிவுகள் கிடுகிடுவென அதிகரித்து வருவதாக அறிக்கைகள் காட்டுகின்றன. உதாரணத்திற்கு, 1975 முதல் 1999 வரை ஒரு வருடத்திற்கு 300-க்கும் குறைவான பேரழிவுகள்தான் ஏற்பட்டன. ஆனால், 2000 முதல் 2010 வரை அவை கிட்டத்தட்ட 400-ஆக அதிகரித்திருக்கின்றன. ‘இப்போது மட்டும் ஏன் இத்தனை இயற்கைப் பேரழிவுகள் ஏற்படுகின்றன?’ என்று ஒருவேளை நீங்களும் யோசிக்கலாம்.

இத்தகைய பேரழிவுகளை மக்கள் “தெய்வச் செயல்” என்று சொல்கிறார்கள்; ஆனால், கடவுளைக் குற்றம் சாட்டுவது சரியில்லை. ஏனென்றால், இன்று ஏராளமானோரின் உயிரைக் காவு கொள்ளும் பேரழிவுகளுக்குக் கடவுள் காரணம் இல்லை. இருந்தாலும், நம் காலத்தில் பேரழிவுகள் ஏற்படும் என்று தம்முடைய புத்தகமான பைபிளில் முன்கூட்டியே பதிவு செய்திருக்கிறார். உதாரணத்திற்கு, மத்தேயு 24:7, 8-ல் ‘பஞ்சங்கள் உண்டாகும், அடுத்தடுத்து பல இடங்களில் பூகம்பங்கள் ஏற்படும். இவையெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம்’ என்று கடவுளுடைய மகனான இயேசு சொன்னார். இயேசு ஏன் அப்படிச் சொன்னார், அதை நாம் தெரிந்துகொள்வது ஏன் முக்கியம்?

‘இந்தச் சகாப்தத்தின் இறுதிக்கட்டத்திற்கு அடையாளம் என்ன?’ என்று சீடர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கவே இயேசு அப்படிச் சொன்னார். (மத்தேயு 24:3) பேரழிவுகள் உட்பட நிறைய சம்பவங்களைப் பற்றிச் சொன்னார். கடைசியாக, ஒரு முக்கியமான விஷயத்தையும் சொன்னார்: “இவற்றை நீங்கள் பார்க்கும்போது, கடவுளுடைய அரசாங்கம் நெருங்கிவிட்டதென்று அறிந்துகொள்ளுங்கள்.” (லூக்கா 21:31) ஆம், இந்த இயற்கைப் பேரழிவுகள் நமக்கு ஓர் அடையாளமாக இருக்கின்றன; சீக்கிரத்தில் ஒரு பெரிய மாற்றம் ஏற்படப்போகிறது என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன.

பேரழிவுகளுக்குக் காரணம்

ஆனால், அநேகர் இன்னொரு கேள்வியைக் கேட்கிறார்கள்: இயற்கைப் பேரழிவுகளுக்குக் கடவுள் காரணம் இல்லையென்றால் வேறு யார் காரணம் அல்லது எது காரணம்? இந்தக் கேள்விக்குப் பதில் கண்டுபிடிக்க, பைபிள் சொல்லும் ஒரு முக்கியமான உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும். “இந்த உலகம் முழுவதும் பொல்லாதவனுடைய கைக்குள் கிடக்கிறது” என்று பைபிள் சொல்கிறது. (1 யோவான் 5:19) இதிலிருந்து என்ன தெரிகிறது? நாம் அனுபவிக்கும் பெரும்பாலான துன்பங்களுக்குக் கடவுளுடைய எதிரியான “பொல்லாதவன்”தான் காரணம். பைபிள் அவனை “பிசாசு” என்றும் அழைக்கிறது.—வெளிப்படுத்துதல் 12:9, 12.

கடவுளுடைய எதிரியான பிசாசு ஒரு சுயநலக்காரன், மனிதர்களை ஒரு புழுவைப் போல பார்க்கிறான், அவர்களைச் சுலபமாக நசுக்கிவிடலாம் என நினைக்கிறான். உலகம் முழுவதும் அவனுடைய கையில் இருப்பதால் மக்கள் மனதிலும் இந்த எண்ணத்தை விதைத்திருக்கிறான். “கடைசி நாட்களில் . . . மனிதர்கள் சுயநலக்காரர்களாக, பண ஆசைபிடித்தவர்களாக, ஆணவமுள்ளவர்களாக, கர்வமுள்ளவர்களாக” இருப்பார்கள் என்று பைபிளும் சொல்கிறது. (2 தீமோத்தேயு 3:1, 2) ஆகவே, சாத்தானுடைய ஆதிக்கத்தில் இருக்கும் இந்த உலகில் எந்தப் பக்கம் திரும்பினாலும் இதுபோன்ற குணங்களை மக்கள் வெளிக்காட்டுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. இப்படிப்பட்டவர்கள், சுயநலத்தோடும் பேராசையோடும் இயற்கை வளங்களைச் சுரண்டிப் பிழைக்கிறார்கள். இதனால் பல சந்தர்ப்பங்களில் மக்கள் ஆபத்தில் சிக்கிக்கொள்கிறார்கள்.

ஆனால், பேராசைப்பிடித்த இந்த மனித சமுதாயம் இயற்கைப் பேரழிவுகளுக்கு எப்படிக் காரணமாக இருக்கிறது? உலகளாவிய பேரழிவுகளைப் பற்றி ஐ.நா. சபை கொடுத்த அறிக்கையைப் பாருங்கள்: “வெள்ள அபாயமுள்ள இடங்களில் மக்கள் நெருக்கமாகக் குடியிருக்கிறார்கள். அதோடு, காடுகளும் சதுப்புநிலங்களும் அழிக்கப்படுவதால், பேரழிவுகளைத் தாக்குப்பிடிக்க முடியாமல் நமது சுற்றுச்சூழல் திணறுகிறது. இதைவிடக் கொடுமை, மனிதர்களின் சுயநல செயல்களால், வளிமண்டலத்தில் கெட்ட வாயுக்கள் பெருமளவில் கலந்துவிட்டிருக்கின்றன [அதாவது, பசுமை-இல்ல விளைவு ஏற்பட்டிருக்கிறது]. இதனால், புவிச்சூடு... சீதோஷ்ணத்தில் தலைகீழ் மாற்றங்கள்... கடல்நீர் மட்டம் அதிகரிப்பு... ஆகியவை வரிசைக்கட்டியிருக்கின்றன.” ‘மனிதர்களின் செயல்கள்’ எல்லாம் பொருளாதார முன்னேற்றத்திற்குத்தான் என்று மேற்பூச்சு பூசப்பட்டாலும், அவற்றிற்குப் பின்னால் இருப்பது உலகெங்கும் நிறைந்திருக்கிற சுயநலமும் பேராசையும்தான்.

பேரழிவுகளால் இத்தனை அதிக பாதிப்பு ஏற்படுவதற்கு மனிதர்களுடைய முன்யோசனையற்ற செயல்கள்தான் காரணம் எனப் பல நிபுணர்கள் இப்போது ஒத்துக்கொள்கிறார்கள். உண்மையில், மனிதர்கள் பிசாசின் கைப்பாவைகளாகச் செயல்படுவதால்தான் இன்று பேரழிவுகள் அதிகரித்து வருகின்றன.

எனவே, அநேக பேரழிவுகள் ஏற்படுவதற்குக் காரணம் மனிதர்களுடைய அலட்சியப் போக்குதான். இயற்கைப் பேரழிவுகளால் ஏற்படும் பாதிப்பு குறைவதும் அதிகமாவதும், அது ஏற்படுகிற இடத்தைப் பொறுத்ததே. உதாரணமாக, சமுதாய மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வின் காரணமாக மக்கள் அபாயகரமான இடங்களில் வாழ வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள். அதோடு, பழிபாவத்திற்கு அஞ்சாத ஆட்கள் முறைகேடான செயல்களில் ஈடுபடுகிறார்கள். இதனால், பேரழிவுகளின் பாதிப்புகள் படுநாசகரமாக இருக்கின்றன. என்றாலும், சிலர் பேரழிவுகளில் பாதிக்கப்படுவதற்குக் காரணம், தனி மனிதனின் தவறோ கவனக்குறைவோ அல்ல, ‘எதிர்பாராத வேளைகளில் அசம்பாவிதங்கள் எல்லாருக்கும் ஏற்படுவதாலேயே.’—பிரசங்கி 9:11, NW.

பேரழிவுகள் ஏற்படுவதற்கு எது வேண்டுமானாலும் காரணமாக இருக்கட்டும், ஆனால் அவை வருவதற்கு முன்பு அல்லது வந்த பின்பு நீங்கள் என்ன செய்யலாம்? சில நடைமுறையான ஆலோசனைகளை அடுத்த கட்டுரையில் அலசலாம். (w11-E 12/01)