Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

குடும்ப மகிழ்ச்சிக்கு

தம்பதியரே—ஆன்மீகச் சிந்தையை வளர்த்துக்கொள்ளுங்கள்

தம்பதியரே—ஆன்மீகச் சிந்தையை வளர்த்துக்கொள்ளுங்கள்

பிரதாப் *: “எங்களுக்கு கல்யாணம் ஆன புதுசுல, ரெண்டு பேரும் ஒன்னா உக்கார்ந்து பைபிள் படிக்கனும்றதுல நான் ரொம்ப கறாரா இருந்தேன். அப்படி படிக்கிறப்போ, ஒழுங்கா கவனினு அவகிட்ட சொல்லிட்டே இருப்பேன். ஆனா, என் மனைவி லலிதா சரியா கவனிக்கமாட்டா. ஏதாவது கேள்வி கேட்டா, ‘ஆமா’, ‘இல்ல’னு ஒரே வார்த்தையில பதில் சொல்லி முடிச்சிடுவா. குடும்ப படிப்பு எப்படி இருக்கணும்னு நான் நெனச்சேனோ அதுக்கு எதிர்மாறா அவ நடந்துகிட்டா.”

லலிதா: “எனக்கு கல்யாணம் ஆனப்ப 18 வயசுதான். நாங்க ரெண்டுபேரும் சேர்ந்து ஒழுங்கா பைபிள் படிப்போம். ஆனா, அப்படி படிக்கும்போதெல்லாம் அவர் என்கிட்ட இருக்கிற குறைகளையே குத்திக்காட்டுவாரு. பொண்டாட்டின்னா, இப்படி இருக்கனும், அப்படி இருக்கனும்னு சொல்லுவாரு. அப்போ எனக்கு வெறுப்பா இருக்கும். மனசுக்கு கஷ்டமா இருக்கும்.”

பிரதாப்புக்கும் லலிதாவுக்கும் இடையே என்ன பிரச்சினை என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? அவர்களுடைய உள்ளெண்ணத்தில் தவறு இல்லை. அவர்கள் இரண்டு பேரும் கடவுளை நேசித்தார்கள். சேர்ந்து பைபிள் படிப்பது முக்கியம் என்பதையும் புரிந்திருந்தார்கள். இது அவர்கள் இல்லற பிணைப்பை இன்னும் இறுக்கியிருக்க வேண்டும். ஆனால், நடந்ததோ வேறு. இது அவர்களை எதிரெதிர் துருவங்களாக மாற்றிவிட்டது. அதற்குக் காரணம்? அவர்கள் இருவரும் சேர்ந்து பைபிளை படித்த போதிலும் ஆன்மீகச் சிந்தையை வளர்த்துக்கொள்ளவில்லை.

சரி, ஆன்மீகச் சிந்தை என்றால் என்ன? தம்பதியர் அதை ஏன் வளர்த்துக்கொள்ள வேண்டும்? எவையெல்லாம் அதற்குத் தடைக்கற்களாக இருக்கலாம்? அவற்றை அவர்கள் எப்படித் தகர்த்தெறியலாம்? என்பதை இப்போது பார்க்கலாம்.

ஆன்மீகச் சிந்தை என்றால் என்ன?

“ஆன்மீகச் சிந்தை” என பைபிள் குறிப்பிடுவது வாழ்க்கையைப் பற்றி ஒருவர் வைத்திருக்கிற கண்ணோட்டத்தைக் குறிக்கிறது. (யூதா 18, 19) உதாரணமாக பைபிள் எழுத்தாளரான பவுல், ஆன்மீகச் சிந்தையுள்ளவருக்கும் உலகச் சிந்தையுள்ளவருக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப் பற்றி விளக்கினார். உலகச் சிந்தையுள்ளவர்கள் தங்கள் காரியத்திலேயே குறியாய் இருப்பார்கள், மற்றவர்களைப் பற்றித் துளியும் கவலைப்பட மாட்டார்கள். தங்கள் மனதுக்குச் சரியென பட்டதைச் செய்வார்கள். கடவுளுடைய நெறிமுறைகளின்படி வாழமாட்டார்கள்.—1 கொரிந்தியர் 2:14; கலாத்தியர் 5:19, 20.

ஆனால், ஆன்மீகச் சிந்தையுள்ளவர்களோ, கடவுளுடைய நெறிமுறைகளை உயர்வாய் மதிப்பார்கள். யெகோவா தேவனைத் தங்களுடைய நண்பராய்ப் பார்ப்பார்கள், அவருடைய சுபாவத்தைப் பின்பற்ற பெருமுயற்சி செய்வார்கள். (எபேசியர் 5:1) அதனால், மற்றவர்களிடம் அன்பாக, கனிவாக, சாந்தமாக நடந்துகொள்வார்கள். (யாத்திராகமம் 34:6) கஷ்டமோ நஷ்டமோ எதுவந்தாலும் சரி, கடவுளுக்குக் கீழ்ப்படிவார்கள். (சங்கீதம் 15:1, 4) கனடாவில் வசிக்கும் டேரன்னுக்கு திருமணமாகி 35 வருடங்கள் ஆகிவிட்டது. அவர் சொல்கிறார்: “என்னை பொறுத்தவர, ஆன்மீகச் சிந்தையுள்ள ஒருத்தர், தன்னோட பேச்சிலயும் செயல்லயும் கவனமா இருப்பாரு. கடவுளுக்கும் தனக்கும் உள்ள நட்பை அது பாதிக்காதபடி பார்த்துபாரு.” அவர் மனைவி ஜேன் சொல்கிறார்: “ஒரு பெண் ஆன்மீகச் சிந்தையுள்ளவளா இருந்தா, கடவுளுடைய குணங்களை காட்ட ஒவ்வொரு நாளும் ரொம்பவே முயற்சி செய்வா.”—கலாத்தியர் 5:22, 23.

ஆன்மீகச் சிந்தையை வளர்த்துக்கொள்ள ஒரு நபர் திருமணமானவராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. சொல்லப்போனால், நாம் ஒவ்வொருவருமே கடவுளைப் பற்றித் தெரிந்துகொண்டு அவரைப் பின்பற்ற வேண்டும் என பைபிள் சொல்கிறது.—அப்போஸ்தலர் 17:26, 27.

தம்பதியர் ஆன்மீகச் சிந்தையை ஏன் வளர்த்துக்கொள்ள வேண்டும்?

தம்பதியர் ஏன் ஒன்றுசேர்ந்து ஆன்மீகச் சிந்தையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்கு இந்த உதாரணத்தைக் கவனியுங்கள்: இரண்டு பேர் கூட்டாக ஒரு தோட்டத்தை வாங்குகிறார்கள். அதில் காய்கறிகள் பயிரிட விரும்புகிறார்கள். ஆனால் இருவருடைய எண்ணங்களும் வித்தியாசமாக இருக்கின்றன: ஒருவர், ‘இந்த மாதம் விதைக்கலாம்’ என்று சொல்கிறார். மற்றவரோ ‘இன்னும் கொஞ்சம் நாள் கழித்து விதைக்கலாம்’ என்கிறார். அதேபோல், ஒரு குறிப்பிட்ட உரத்தைப் பயன்படுத்த ஒருவர் விரும்புகிறார்; மற்றவரோ, ‘எந்த உரமும் போட வேண்டிய அவசியமில்லை’ எனக் கறாராகச் சொல்கிறார். தினமும் தோட்டத்தில் பாடுபட வேண்டுமென ஒருவர் நினைக்கிறார். மற்றவரோ சும்மா கையைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்க்க விரும்புகிறார். இப்படிச் செய்தால், அந்தத் தோட்டத்தில் ஓரளவுதான் பலன் கிடைக்கும். ஆனால், என்ன செய்வது, ஏது செய்வது என இரண்டு பேரும் ஒற்றுமையாய்த் தீர்மானித்து, அதற்காகச் சேர்ந்து பாடுபட்டால் அமோக பலன் கிடைக்கும், அல்லவா?

கணவனும் மனைவியும் இந்தத் தோட்டக்காரர்களைப் போல இருக்கிறார்கள். ஒருவர் மட்டுமே ஆன்மீகச் சிந்தையை வளர்த்துக்கொண்டால், அவர்களுடைய உறவு ஓரளவு சுமூகமாக இருக்கலாம். (1 பேதுரு 3:1, 2) ஆனால், கடவுளுடைய நெறிமுறைகளின்படி வாழ இருவருமே முயற்சி செய்தால்... கடவுளை வழிபட ஒன்றுசேர்ந்து உழைத்தால்... அவர்களுடைய வாழ்க்கை இன்னும் இனிமையாய் இருக்கும். “தனி மனிதராய் இருப்பதைவிட இருவராய் இருப்பது மேல்” என்று எழுதினார், ஞானமுள்ள ராஜா சாலொமோன். அதற்குக் காரணம், “அவர்கள் சேர்ந்து உழைப்பதால், அவர்களுக்கு மிகுந்த பயன் கிடைக்கும். ஒருவர் விழுந்தால், அடுத்தவர் அவரைத் தூக்கி விடுவார். தனி மனிதராய் இருப்பவர் விழுந்தால், அவரது நிலைமை வருந்தத்தக்கதாகும்.”—பிரசங்கி [சபை உரையாளர்] 4:9, 10, பொது மொழிபெயர்ப்பு.

மணத்துணையோடு சேர்ந்து ஆன்மீகச் சிந்தையை வளர்த்துக்கொள்ள நீங்கள் ஆசைப்படுகிறீர்களா? ஆனால், தோட்டக்காரரின் உதாரணத்தில் பார்த்ததைப் போல, பலன் கிடைப்பதற்கு ஆசை இருந்தால் மட்டுமே போதாது, முயற்சியும் தேவை. அதற்குச் சவாலாக இருக்கும் இரண்டு தடைக்கற்களைப் பற்றியும் அவற்றை எப்படித் தகர்த்தெறியலாம் என்பதைப் பற்றியும் இப்போது அலசலாம்.

தடைக்கல் 1: எங்களுக்கு நேரமே இல்லை.

திருமணமாகி சில காலமே ஆன சுஜா சொல்கிறார்: “என்னை ஆபீஸுலருந்து கூட்டிட்டு வர்றதுக்கு என் வீட்டுக்காரர் சாயங்காலம் ஏழு மணிக்குத்தான் வருவார். வீட்டுக்கு வந்தா, தலைக்கு மேல வேல இருக்கும். அப்ப, ரெண்டு பேருமா உக்கார்ந்து கடவுளைப் பற்றி படிக்கணும்னு எங்க மனசு சொல்லும். ஆனா, கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கச் சொல்லி எங்க உடம்பு கெஞ்சும். அந்த நேரத்தில மனசு சொல்றத கேக்கறதா, உடம்பு சொல்றத கேக்கறதானு ஒரே போராட்டமா இருக்கும்.”

ஒரு சின்ன யோசனை: சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் வளைந்துகொடுங்கள்; ஒத்துழையுங்கள். சுஜா சொல்கிறார்: “நாங்க ரெண்டு பேரும் காலையில சீக்கிரமா எழுந்திரிச்சு, வேலைக்குப் போறதுக்கு முன்னாடியே பைபிள வாசிச்சு கலந்துபேச முடிவு பண்ணினோம். அதோட, அவரும் நானும் நேரம் செலவிடறதுக்காக வீட்டு வேலைகள்ல அவரும் எனக்கு கூடமாட உதவி செய்றார்.” இப்படிச் சிரமம் பார்க்காமல் முயற்சிக்கு செய்ததால் கிடைத்த பலன்? சுஜாவின் கணவர் எட்வின் சொல்கிறார்: “பைபிள் விஷயங்கள நாங்க ஒழுங்கா கலந்து பேசுறதுனால, எங்களுக்கு வர பிரச்சினைகள நல்லா சமாளிக்க முடியுது, கவலைகளைக் குறைக்க முடியுது.”

இருவரும் பரஸ்பரம் மனம்விட்டுப் பேசுவதோடுகூட, கடவுளிடம் பேசுவதற்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குவது முக்கியம். அதனால் என்ன பலன்? ராகேஷை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் மணவாழ்வில் அடியெடுத்து வைத்து 16 வருடங்கள் ஆகிவிட்டன. அவர் சொல்கிறார்: “கொஞ்ச நாளைக்கு முன்பு எங்க ரெண்டு பேருக்குள்ள பெரிய பிரச்சனை இருந்தது. ஆனா, தினமும் கொஞ்சம் நேரம் ஒதுக்கி நாங்க ஒண்ணா ஜெபம் செஞ்சோம், எங்களோட மனக்குறைகள எல்லாம் கடவுள்கிட்ட கொட்டினோம். அப்படி செஞ்சதுதான் எங்க பிரச்சனைகள தீர்க்கறதுக்கும் மறுபடியும் சந்தோஷமா இருக்குறதுக்கும் உதவிச்சு.”

இப்படிச் செய்து பாருங்கள்: ஒவ்வொரு நாள் இரவும் ஒருசில நிமிடங்களை ஒதுக்குங்கள்; அன்று நடந்த நல்ல விஷயங்களைப் பற்றி... கடவுளுக்கு நீங்கள் நன்றி சொல்ல வேண்டிய விஷயங்களைப் பற்றி... பேசுங்கள். அதோடு, உங்களுடைய பிரச்சினைகளைப் பற்றியும் குறிப்பாக, கடவுளுடைய உதவியோடு நீங்கள் சமாளிக்க வேண்டிய பிரச்சினைகளைப் பற்றியும் பேசுங்கள். ஆனால் ஓர் எச்சரிக்கை: அந்தச் சமயத்தில் உங்கள் துணையின் குறைகளைப் பட்டியல் போட்டுக்கொண்டிருக்காதீர்கள். அதற்குப் பதிலாக நீங்கள் சேர்ந்து ஜெபம் செய்யும்போது, இருவருமாக சரிசெய்ய வேண்டிய விஷயங்களைப் பற்றி மட்டுமே சொல்லுங்கள். அடுத்த நாள், எந்த விஷயத்துக்காக ஜெபம் செய்தீர்களோ அதன்படி நடக்க முயலுங்கள்.

தடைக்கல் 2: எங்களுடைய திறமைகள் வேறுபடுகின்றன.

“கையில புஸ்தகம் எடுத்து உக்கார்ந்து வாசிக்கிற பழக்கமே எனக்குக் கிடையாது” என்கிறார் பிரகாஷ். ஆனால் அவருடைய மனைவி நீனாவோ, “புத்தகங்களை வாசிக்கிறதுனா எனக்கு உயிர், வாசிச்சத பற்றி மணிக்கணக்கா பேசறதும் எனக்கு ரொம்ப பிடிக்கும். சில சமயம், பைபிள் விஷயங்கள பற்றி என்கூட கலந்துபேச பிரகாஷ் தயங்கற மாதிரி எனக்குத் தோணும்” என்கிறாள்.

ஒரு சின்ன யோசனை: ஆதரவாக இருங்கள்; போட்டி போடாதீர்கள், குறை சொல்லாதீர்கள். உங்கள் துணையிடம் உள்ள நிறைகளைப் பாராட்டுங்கள், உற்சாகமூட்டுங்கள். பிரகாஷ் சொல்கிறார்: “சில சமயம் பைபிள் விஷயங்கள பற்றி என் மனைவி ரொம்ப சுவாரஸ்யமா பேசும்போது, ‘எனக்கு இந்தளவு தெரியலையே’னு கொஞ்சம் வெட்கமா இருக்கும். அதனால பைபிள் விஷயங்கள பற்றி அவகூட பேசவே எனக்குப் பிடிக்காது. ஆனா, நீனா என்னை புரிஞ்சுகிட்டு அனுசரணையா நடந்துகிட்டா. இப்பெல்லாம் பைபிள் விஷயங்கள பற்றி நாங்க ஒழுங்கா கலந்துபேசறோம், என்னோட பயம் எல்லாம் பறந்துபோச்சு. சொல்லப்போனா, பைபிள விஷயங்கள பற்றி நானும் ஆர்வமா அவகிட்ட பேசறேன். இப்ப எங்களுக்குள்ள டென்ஷன் இல்லாம சந்தோஷமா இருக்கறோம்.”

வாரா வாரம் ஒரு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி பைபிளைக் கருத்தூன்றிப் படிக்கும்போது மணவாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக அநேக தம்பதியர் உணர்ந்திருக்கிறார்கள். என்றாலும் ஓர் எச்சரிக்கை: பைபிளைப் படிக்கும்போது, அதிலுள்ள ஆலோசனைகளை உங்கள் துணை எப்படிக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சொல்லாமல், நீங்கள் எப்படிக் கடைப்பிடிப்பீர்கள் என்று சொல்லுங்கள். (கலாத்தியர் 6:4) காரசாரமான குடும்பப் பிரச்சினைகளை வேறொரு நேரத்தில் கலந்துபேசுங்கள், படிக்கும்போது பேசாதீர்கள். ஏன்?

ஓர் உதாரணத்தைக் கவனியுங்கள்: குடும்பமாக எல்லாரும் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அந்த நேரம் பார்த்து, சீழ்பிடித்திருக்கும் புண்ணைச் சுத்தப்படுத்தி அதற்குக் கட்டுப்போடுவீர்களா? மாட்டீர்கள். அதைப் பார்த்தால் யாருக்கும் சாப்பிட பிடிக்காது. கடவுளைப் பற்றிக் கற்றுக்கொள்வதையும் அவருடைய சித்தத்தைச் செய்வதையும் இயேசு உணவு சாப்பிடுவதற்கு ஒப்பிட்டார். (மத்தேயு 4:4; யோவான் 4:34) ஒவ்வொரு முறையும் நீங்கள் இருவருமாக பைபிளைப் படிக்கும்போது உங்கள் மனக்காயங்களைப் பற்றியே பேசினீர்கள் என்றால், உங்கள் துணைக்கும் ஆன்மீக உணவைச் சாப்பிடவே பிடிக்காமல் போய்விடும், அல்லவா? அதற்காக, பிரச்சினைகளைப் பற்றி பேசவே கூடாது என்று அர்த்தமில்லை. அதற்கென்று நேரம் ஒதுக்கி, அதைப் பற்றி பேசுவதே நல்லது.—நீதிமொழிகள் 10:19; 15:23.

இப்படிச் செய்து பாருங்கள். உங்கள் துணையிடம் உங்களுக்கு மிகவும் பிடித்த சில குணங்களை எழுதுங்கள். அடுத்த முறை அந்தக் குணங்களோடு சம்பந்தப்பட்ட ஏதாவது பைபிள் விஷயங்களைப் பற்றி பேசும்போது, ‘உனக்கும்கூட/உங்களுக்கும்கூட இந்த குணம் இருக்கு’ என்று சொல்லி பாராட்டுங்கள்.

எதை விதைத்தீர்களோ அதையே அறுவடை செய்வீர்கள்

தம்பதியாக நீங்கள் ஆன்மீகச் சிந்தையை வளர்த்துக்கொண்டால், போகப்போக உங்கள் மணவாழ்க்கையில் வசந்தம் வீசும், இனிமை மலரும். சொல்லப்போனால், “ஒருவன் எதை விதைக்கிறானோ அதையே அறுவடை செய்வான்” என்று பைபிள் உறுதியளிக்கிறது.—கலாத்தியர் 6:7.

இந்த பைபிள் வார்த்தைகள் எவ்வளவு உண்மை என்பதை இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட பிரதாப்பும் லலிதாவும் அனுபவத்தில் தெரிந்துகொண்டார்கள். ஆன்மீகச் சிந்தையை வளர்த்துக்கொள்ள விடா முயற்சி செய்தால் பலன் நிச்சயம் என்பதை தங்களுடைய 45 ஆண்டுகால இல்லற வாழ்க்கையில் உணர்ந்திருக்கிறார்கள். பிரதாப் சொல்கிறார்: “முன்னெல்லாம் என் மனைவிகிட்ட, ‘நீ எங்கிட்ட சரியா பேசறதில்ல’ன்னு திட்டுவேன். ஆனா, நானும் அதுக்கு காரணமா இருந்திருக்கேன்னு போகப் போக புரிஞ்சிகிட்டேன்.” லலிதா சொல்கிறார்: “பிரச்சினை வந்தப்போ எல்லாம் அத சகிச்சுக்க எங்களுக்கு உதவியது, யெகோவா தேவன் மேல நாங்க வெச்சிருந்த அன்புதான். இத்தனை காலமா, நாங்க ஒழுங்கா பைபிள படிச்சோம், சேர்ந்து ஜெபம் செஞ்சோம். கடவுளுக்குப் பிடிச்ச குணங்கள காட்டுறதுக்கு பிரதாப் முயற்சி செய்றத நான் பார்க்கும்போது அவர் மேல நான் வெச்சிருக்கிற அன்பும் ஜாஸ்தியாகுது.” (w11-E 11/01)

^ பாரா. 3 பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்...

  • கடைசியாக நாங்கள் ஒன்றுசேர்ந்து ஜெபம் செய்தது எப்போது?

  • பைபிள் விஷயங்களை என்னோடு கலந்துபேசுவதற்காக என் துணையை நான் எப்படி ஊக்கப்படுத்தலாம்?