பேரழிவுகள் பேர் தெரியாமல் போய்விடும்!
“இனிமே பேரழிவுகளே வராது.” இப்படி யாராவது உங்களிடம் சொன்னால் நீங்கள் என்ன சொல்வீர்கள்? “ஏதாவது கனவு கண்டீங்களா? பேரழிவெல்லாம் இயற்கைதான். அத யாராலயும் தடுக்க முடியாது” என்று ஒருவேளை நீங்கள் சொல்லலாம். அல்லது, “இதெல்லாம் நடக்கிற விஷயமா?” என்று நீங்கள் யோசிக்கலாம்.
பேரழிவுகள் இயற்கைதான் என்று நாம் நினைத்தாலும், பேரழிவுகளே ஏற்படாத காலம் நிச்சயம் வரப்போகிறது! இதை நம்புவதற்கு ஆதாரமும் இருக்கிறது. ஆனால், மனிதர்களால் அதைச் செய்ய முடியாது. ஏனென்றால், இயற்கையில் சில விஷயங்கள் ஏன் நடக்கிறது, எப்படி நடக்கிறது என்பதையே முதலில் மனிதர்களால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை; அப்படியிருக்கும்போது அதை எப்படி அவர்களால் கட்டுப்படுத்த முடியும். ஞானமும் புத்திக்கூர்மையும் உள்ளவர் என்று பேர்பெற்ற பூர்வ இஸ்ரவேலின் சாலொமோன் ராஜா சரியாகத்தான் சொன்னார்: ‘கடவுளின் செயலை ஒருவராலும் புரிந்துகொள்ள இயலாது. மனிதர் எத்துணை முயன்றாலும் அவரால் அதைக் கண்டுகொள்ள இயலாது. ஞானமுள்ளவர்கள் அது தங்களுக்குத் தெரியும் என்று சொல்லிக்கொள்ளலாம். ஆனால் அவர்களுக்கும் அது தெரியாது.’—பிரசங்கி [சபை உரையாளர்] 8:17, பொது மொழிபெயர்ப்பு.
சரி, மனிதர்களால் முடியாது என்றால், வேறு யாரால் முடியும்? நம்மைப் படைத்த கடவுளால் மட்டும்தான் முடியும் என்று பைபிள் சொல்கிறது. பூமியின் சூழியல் மண்டலத்தை வடிவமைத்தவர் அவர்தானே. நீர் சுழற்சியை அதற்கு ஓர் உதாரணமாகச் சொல்லலாம். (பிரசங்கி 1:7) மனிதர்களால் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு எல்லையில்லா வல்லமை கடவுளுக்கு இருக்கிறது. எரேமியா தீர்க்கதரிசி இந்த உண்மையை விளக்கினார்: “யெகோவாவாகிய ஆண்டவரே, இதோ, தேவரீர் உமது மகாவல்லமையினாலும், நீட்டிய உமது புயத்தினாலும், வானத்தையும் பூமியையும் படைத்தீர். உம்மாலே ஆகாத காரியம் ஒன்றுமில்லை.” (எரேமியா 32:17, திருத்திய மொழிபெயர்ப்பு) பூமியையும் இயற்கைச் சக்திகளையும் படைத்தவருக்கு அவற்றை எப்படிக் கட்டுப்படுத்துவதென தெரியாதா என்ன? ஆம், மக்கள் பயமின்றி பாதுகாப்பாக வாழ, சர்வ சக்தி படைத்த கடவுளால் மட்டுமே வழி செய்ய முடியும்.—சங்கீதம் 37:11; 115:16.
அப்படியானால், கடவுள் இதை எப்படிச் செய்வார்? இரண்டாவது கட்டுரையில் படித்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? இன்று நடக்கும் பயங்கரமான சம்பவங்கள் எல்லாம் ‘இந்தச் சகாப்தத்தின் இறுதிக்கட்டத்திற்கு அடையாளம்’ என்று நாம் படித்தோம். “இவற்றை நீங்கள் பார்க்கும்போது, கடவுளுடைய அரசாங்கம் நெருங்கிவிட்டதென்று அறிந்துகொள்ளுங்கள்” என இயேசு சொன்னார். (மத்தேயு 24:3; லூக்கா 21:31) கடவுளுடைய பரலோக அரசாங்கம் இந்த உலகத்தில் மாபெரும் மாற்றங்களைச் செய்யப்போகிறது. இயற்கைச் சக்திகளையும் கட்டுக்குள் கொண்டுவரப்போகிறது. இதைச் செய்வதற்கு யெகோவா தேவனுக்கு வல்லமை இருந்தாலும், இந்தப் பொறுப்பைத் தம் மகன் கையில் ஒப்படைத்திருக்கிறார். “சகல ஜனங்களும் ஜாதியாரும் பாஷைக்காரரும் அவரையே சேவிக்கும்படி, அவருக்கு ஆளுகையும் மகிமையும் ராஜ்யமும் கொடுக்கப்பட்டன” என்று தானியேல் தீர்க்கதரிசி கடவுளுடைய மகனைப் பற்றிச் சொன்னார்.—தானியேல் 7:14, தி.மொ.
இந்த உலகத்தை நிம்மதிப் பூங்காவாக மாற்றுவதற்கு எதையெல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்வதற்குத் தேவையான சக்தியை கடவுள் தம் மகனாகிய இயேசுவுக்குக் கொடுத்திருக்கிறார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இயேசு இந்தப் பூமியில் வாழ்ந்தபோது, இயற்கைச் சக்திகளைத் தம்மால் அடக்க முடியும் என்பதைச் சிறிய அளவில் நிரூபித்துக் காட்டினார். ஒருசமயம், கலிலேயா கடலில் இயேசுவும் அவருடைய சீடர்களும் படகில் போய்க்கொண்டிருந்தார்கள். “அப்போது, பலத்த புயல்காற்று வீச ஆரம்பித்தது; அலைகள் எழும்பி படகை மோதிக்கொண்டிருந்தன, படகு தண்ணீரால் நிறைந்துகொண்டே வந்தது.” சீடர்கள் பயத்தில் நடுநடுங்கினார்கள், தங்களைக் காப்பாற்றும்படி இயேசுவிடம் கேட்டார்கள். அவர் என்ன செய்தார்? “அவர் எழுந்து காற்றை அதட்டினார்; கடலை நோக்கி, ‘உஷ்! அமைதியாக இரு!’ என்றார்.” அவ்வளவுதான், “காற்று அடங்கி, மிகுந்த அமைதி உண்டானது.” சீடர்களுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. “இவர் உண்மையில் யார்? காற்றும் கடலும் இவருக்கு அடங்கிவிடுகின்றனவே” என்று ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டார்கள்.—மாற்கு 4:37-41.
இயேசு பரலோகத்திற்குச் சென்ற பிறகு, அவருக்கு இன்னுமதிக அதிகாரமும் சக்தியும் கொடுக்கப்பட்டது. அவர் கடவுளுடைய அரசாங்கத்தின் ராஜாவாக இருப்பதால், தம் குடிமக்களை நிம்மதியாக, பாதுகாப்பாக வாழ வைக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு இருக்கிறது, அதற்கான சக்தியும் இருக்கிறது.
நாம் ஏற்கெனவே பார்த்தபடி, அநேக பேரழிவுகளும் துன்பங்களும் மனிதர்களால்தான் ஏற்படுகின்றன. அதுவும், அவர்கள் சுயநலத்தோடும் பேராசையோடும் இயற்கை வளங்களைச் சுரண்டிப் பிழைப்பதால்தான் நாசகரமான விளைவுகள் ஏற்படுகின்றன. அவர்கள் இந்தக் கெட்ட வழியிலேயே ஊறிப்போயிருந்தால் கடவுளுடைய அரசாங்கம் அவர்களை என்ன செய்யும்? “நம் எஜமானராகிய இயேசு ஜுவாலித்து எரிகிற நெருப்புடன் தமது வல்லமைமிக்க தேவதூதர்களோடு பரலோகத்திலிருந்து” வரும்போது, “கடவுளை அறியாதவர்களையும் நம் எஜமானராகிய இயேசுவைப் பற்றிய நற்செய்திக்குக் கீழ்ப்படியாதவர்களையும் அவர் பழிவாங்குவார்” என்று பைபிள் சொல்கிறது. ஆம், அவர் இந்த ‘பூமியை நாசமாக்குபவர்களை நாசமாக்குவார்.’—2 தெசலோனிக்கேயர் 1:7, 8; வெளிப்படுத்துதல் 11:18.
‘ராஜாக்களுக்கெல்லாம் ராஜாவான’ இயேசு கிறிஸ்து, அதற்குப்பின் இயற்கைச் சக்திகளை முழுமையாகத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பார். (வெளிப்படுத்துதல் 19:16) எந்தப் பேரழிவும் துன்பமும் தம் குடிமக்களைத் தாக்காமல் பார்த்துக்கொள்வார். தம் சக்தியைப் பயன்படுத்தி வானிலை மாற்றங்களைச் சீராக்குவார்; அதனால், சீதோஷ்ண மாற்றங்களும் பருவகால சுழற்சிகளும் முறையாக நடக்கும், மனிதகுலமே மகிழ்ச்சியில் திளைக்கும். அப்போது, பூர்வ காலத்தில் தம் மக்களுக்கு யெகோவா தேவன் கொடுத்த வாக்குறுதி முழுமையாக நிறைவேறும்: “நான் ஏற்ற காலத்தில் உங்களுக்கு மழை பெய்யப்பண்ணுவேன்; பூமி தன் பலனையும், வெளியிலுள்ள மரங்கள் தங்கள் கனியையும் கொடுக்கும்.” (லேவியராகமம் 26:4) பேரழிவுகள் வந்து நம் வீடுவாசலை நாசமாக்கிவிடுமோ என்ற பயமே இருக்காது, “வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள், திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைப் புசிப்பார்கள்.”—ஏசாயா 65:21.
நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
பேரழிவுகள் பேர் தெரியாமல் போய்விடும் ஒரு உலகத்தில் வாழ யார்தான் ஆசைப்பட மாட்டார்கள்? நீங்களும் ஆசைப்படுவீர்கள்தானே? அப்படியென்றால், அதில் வாழ நீங்கள் என்ன செய்ய வேண்டும்? ‘கடவுளை அறியாதவர்களும் நம் எஜமானராகிய இயேசுவைப் பற்றிய நற்செய்திக்குக் கீழ்ப்படியாதவர்களும்’ அங்கு வாழ கடவுள் அனுமதிக்க மாட்டார். எனவே, கடவுளைப் பற்றித் தெரிந்துகொண்டு, அவருடைய அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுக்கிறவர்கள் மட்டுமே அதில் வாழ முடியும். ஆம், கடவுள் நம்மிடம் கேட்பதெல்லாம், அவரைப் பற்றித் தெரிந்துகொண்டு, இயேசுவை ராஜாவாகக் கொண்ட அவருடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியைக் கேட்டு அதற்கேற்ப வாழ வேண்டும் என்பதுதான்.
இதையெல்லாம் தெரிந்துகொள்வதற்கு ஒரே வழி பைபிளை ஆழமாகப் படிப்பதே. கடவுளுடைய அரசாங்கத்தில் பாதுகாப்பான சூழலில் வாழ விரும்பும் மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி அது விளக்கமாகச் சொல்கிறது. யெகோவாவின் சாட்சிகள் இதைப் பற்றி உங்களுக்கு விளக்க ஆவலாய் இருக்கிறார்கள். அவர்களைத் தொடர்புகொள்ள பக்கம் 4-ல் உள்ள பொருத்தமான விலாசத்திற்கு எழுதுங்கள். கடவுளைப் பற்றித் தெரிந்துகொண்டு நற்செய்திக்குக் கீழ்ப்படிய நீங்கள் முயற்சி செய்தால் நீதிமொழிகள் 1:33 உங்கள் வாழ்வில் நிச்சயம் நிஜமாகும்: “எனக்குச் செவிகொடுக்கிறவன் எவனோ, அவன் விக்கினமின்றி [பாதுகாப்பாய், NW] வாசம்பண்ணி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பான்.” (w11-E 12/01)