யெப்தாவின் மகள் என் ரோல்மாடல்
யெப்தாவின் மகள் என் ரோல்மாடல்
ஜோயன்னா சோன்ஸ் சொன்னபடி
யெப்தாவின் மகளைப் போல் ஆக வேண்டும் என்ற ஆசை, டீனேஜில் இருந்தபோதே எனக்குள் ஆழமாக வேர்விட ஆரம்பித்தது. சரி, அந்த ஆசை எப்படித் துளிர்விட்டது, எப்படி என் வாழ்க்கையில் நிஜமானது என்றெல்லாம் உங்களுக்குச் சொல்கிறேன்.
அது 1956-ஆம் வருடம். இந்தியாவிலுள்ள பம்பாயில் (இப்போது மும்பையில்) நடந்த யெகோவாவின் சாட்சிகளுடைய மாநாட்டில் நான் முதல் முறையாகக் கலந்துகொண்டேன். அதுதான் என் வாழ்க்கைக்குத் திசை காட்டிய மாநாடு. அங்கே ஒரு சொற்பொழிவில் யெப்தாவின் மகளைப் பற்றிக் கேட்டேன். அப்போதே என் மனதில் ஒரு பெரிய சிம்மாசனம் போட்டு அவரை உட்கார வைத்துவிட்டேன்.
நீங்கள்கூட யெப்தாவின் மகளைப் பற்றி பைபிளில் படித்திருக்கலாம். அவர் இளம் வயதிலேயே கல்யாணம் செய்யாமல் இருக்க ஒத்துக்கொண்டார். அப்போது அவர் டீனேஜராக இருந்திருக்கலாம். தன் அப்பா கொடுத்த வாக்கைக் காப்பாற்றத்தான் அப்படி ஒத்துக்கொண்டார். எனவே, யெப்தாவின் மகள் தன் வாழ்நாள் முழுவதும் யெகோவாவுடைய வீட்டில், அதாவது ஆசரிப்பு கூடாரத்தில், சேவை செய்தார், அதுவும் திருமணம் செய்யாமலேயே. என்னே ஒரு தியாக உள்ளம்!—நியாயாதிபதிகள் 11:28-40.
அதைக் கேட்டதும் நானும் அவரைப் போல் இருக்க வேண்டும் என்ற ஆசையை உடனே மனதில் விதைத்தேன். ஆனால், இந்த விதை விருட்சம் ஆகுமா? திருமணம் செய்யாமல் வாழ்வதை இந்திய கலாச்சாரம் ஏற்றுக்கொள்ளாதே!
என் குடும்பம்
என் அப்பா பெயர் பென்ஜமின் சோன்ஸ், அம்மா மார்செல்லீனா சோன்ஸ். நான் இந்தியாவின் மேற்கு கரையோரப் பகுதியிலுள்ள உடுப்பியில் பிறந்தேன். ஆறு பிள்ளைகளில் நான் ஐந்தாவது பிள்ளை. என்னுடைய தாய்மொழி துளு. கிட்டத்தட்ட 20 லட்சம் ஜனங்கள் பேசும் மொழி இது. துளு தாய்மொழியாக இருந்தாலும் நாங்கள் படித்ததென்னவோ கன்னடம்தான். உடுப்பியில் உள்ள மக்கள் நிறையப் பேர் அப்படித்தான்.
கல்யாணம், பிள்ளைகுட்டிகள் இல்லாத வாழ்க்கையை எங்கள் ஊரில் இருந்தவர்களால் நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஏன், “மணமாகாமல் வாழ்வது,” “தனிமை,” “வீட்டு ஞாபகம்” போன்ற வார்த்தைகளுக்கு துளுவில் என்ன சொல்வார்கள் என்றே எனக்கு வளர்ந்து பெரியவள் ஆகும் வரை தெரியாது. அந்த மாதிரி யாராவது இருந்தால்தானே அதைக் கேள்விப்படுவதற்கு! சொல்லப்போனால் தாத்தா, பாட்டி, அத்தை, மாமா, சித்தி, சித்தப்பா, பெரியம்மா, பெரியப்பா, அவர்களுடைய பிள்ளைகள் என ஒரு பெரிய கூட்டுக் குடும்பத்தில் நான் வளர்ந்தேன்.
பொதுவாக எங்கள் கலாச்சாரத்தில் மகளுடைய பிள்ளைகளைத்தான் வாரிசு என்று சொல்வார்கள். சொத்து பிரித்து கொடுக்கும்போது பெண் பிள்ளைகளுக்கு அதிகப் பங்கு கொடுப்பார்கள். சொல்லப்போனால், துளு கலாச்சாரத்தில் சில இடங்களில் கல்யாணம் ஆன பிறகு பெண்கள் தாய் வீட்டிலேயே இருந்துவிடுவார்கள். கணவர்தான் வீட்டோடு மாப்பிள்ளையாக வருவார்.
எங்கள் குடும்பம் கிறிஸ்தவர்களாக மாறியிருந்ததால் நாங்கள் சர்ச்சுக்குப் போய்க்கொண்டிருந்தோம். சில காரியங்களை வழக்கமாக செய்து வந்தோம். ஒவ்வொரு நாள் சாயங்காலமும் எங்கள் குடும்பத்தில் எல்லாரும் வந்தபிறகு தாத்தா ஜெபம் செய்வார். அப்போது தன்னுடைய துளு பைபிளிலிருந்து சத்தமாக வாசிப்பார். அவருடைய கிழிந்த பைபிளை அவர் திறக்கும்போதெல்லாம் தங்கம், வைரம் எல்லாம் இருக்கிற நகைப் பெட்டியைத் திறப்பதுபோல் இருக்கும். அந்தத் தருணங்கள் எனக்கு ரொம்ப குதூகலமா இருக்கும்! ஆனால், சங்கீதம் 23:1-ல் (திருத்திய மொழிபெயர்ப்பு) “யெகோவா என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன்” என்று வாசிக்கும்போதெல்லாம் ‘யெகோவா யாரு? அவரை ஏன் மேய்ப்பர் என்று பைபிள் சொல்கிறது’ என்ற கேள்வி மட்டும் என் மனதை அரித்துக்கொண்டே இருக்கும்.
என் கண்களிலிருந்து “செதில்கள்” விழுந்தன
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக நாங்கள் 900 கி.மீ. தூரத்தில் இருந்த பம்பாய்க்குக் குடிமாறிச் சென்றோம். 1945-ல் அங்கே இரண்டு யெகோவாவின் சாட்சிகள் என் அப்பாவைப் பார்த்து ஒரு பைபிள் பிரசுரத்தைக் கொடுத்தார்கள். வறண்ட நிலம் மழைநீரை உறிஞ்சிக் குடிப்பது போல் எங்கள் அப்பா அந்தப் புத்தகத்தைக் கரைத்துக் குடித்தார். அதுமட்டுமல்ல, கன்னடம் பேசுகிற மற்ற ஆட்களிடமும் படித்த விஷயங்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தார். நாங்கள்
எல்லாரும் ஒரு சிறு தொகுதியாகச் சேர்ந்து பைபிள் கூட்டங்களை நடத்தினோம். 1950-களின் ஆரம்பத்தில் எங்களுடைய சிறு தொகுதி, பம்பாயில் முதல் கன்னட மொழி சபையாக மாறியது.பைபிளைக் கருத்தூன்றிப் படிக்கவும் மற்றவர்களுக்கு நன்கு சொல்லிக்கொடுக்கவும் எங்கள் அப்பா-அம்மா எங்களுக்குக் கற்றுக்கொடுத்தார்கள். நாள் தவறாமல் எங்களோடு சேர்ந்து ஜெபம் செய்யவும், பைபிள் படிக்கவும் நேரம் ஒதுக்கினார்கள். (உபாகமம் 6:6, 7; 2 தீமோத்தேயு 3:14-16) ஒருநாள் நான் பைபிள் படித்துக்கொண்டிருந்தபோது என் கண்ணிலிருந்து “செதில்கள்” விழுந்த மாதிரி இருந்தது. (அப்போஸ்தலர் 9:18) ஆம், இத்தனை நாள் புரியாமல் இருந்த விஷயம் அப்போது புரிய ஆரம்பித்தது. யெகோவா தேவனை மேய்ப்பன் என்று பைபிள் சொல்வதற்குக் காரணம், அவர் தம்முடைய மக்களை வழிநடத்தி, ஆன்மீக உணவு கொடுத்து, பத்திரமாகக் காப்பாற்றுவதால்தான் என்று புரிந்துகொண்டேன்.—சங்கீதம் 23:1-6; 83:17.
ஒரு குழந்தையைப் போல யெகோவா என்னைக் கைப்பிடித்து நடத்தினார்
பம்பாயில் 1956-ல் நடந்த அந்த மறக்க முடியாத மாநாட்டுக்குப் பிறகு நான் ஞானஸ்நானம் எடுத்தேன். ஆறு மாதம் கழித்து என் அண்ணன் பிரபாகரைப் போல் நானும் பயனியரானேன், அதாவது, முழுநேரமாக கடவுளுக்கு ஊழியம் செய்ய ஆரம்பித்தேன். மற்றவர்களிடம் பைபிள் பற்றிப் பேச எனக்குக் கொள்ளை ஆசை, ஆனால் பேசும்போது திக்கும், திணறும், தொண்டை வறண்டுவிடும், நாக்கு வாயோடு ஒட்டிக்கொள்ளும். அப்போது, ‘யெகோவாவே, நீங்கதான் எனக்கு உதவி செய்யணும்’ என்று அவரிடம் கெஞ்சுவேன்.
மிஷனரிகளான ஹோமர் மக்கே மற்றும் ரூத் மக்கே மூலமாக யெகோவா எனக்கு உதவி செய்தார். இவர்கள் கனடா நாட்டிலிருந்து வந்தவர்கள். 1947-ல் நியு யார்க்கில் உள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய மிஷனரி பள்ளியில் பட்டம் பெற்றவர்கள். ஊழியத்தில் நான் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியிலும் என் கையைப் பிடித்து என்னை நடத்தி சென்றார்கள். வீட்டுக்கு வீடு ஊழியத்தில் பேசுவதற்காக ரூத் தினமும் எனக்குப் பயிற்சி கொடுப்பார். வீட்டுக்காரர் முன்பு நான் பயத்தில் வெலவெலத்து நிற்கும்போது என்னை எப்படி சகஜ நிலைக்குக் கொண்டுவர வேண்டும் என்று அவருக்கு நன்றாகத் தெரியும். அந்த மாதிரி சமயங்களில் என் கையைப் பிடித்து, “கவலப்படாதம்மா, அடுத்த வீட்டுல நல்லா பேசலாம்” என்று சொல்வார். கனிவான குரலில் அவர் அப்படிச் சொல்லும்போது எனக்கு எவ்வளவு தெம்பாக இருக்கும் தெரியுமா?
எலிசபெத் சக்கரநாராயன் என்ற சகோதரிதான் இனிமேல் என்னுடைய ஊழிய பார்ட்னர் என்று ஒருநாள் தெரிந்துகொண்டேன். அதைக் கேட்டதும் எனக்குப் பயமாக இருந்தது. ஏனென்றால், அவர் என்னைவிட ரொம்ப மூத்தவர், பைபிளைச் சொல்லிக்கொடுப்பது அவருக்குக் கைவந்த கலை. ‘எனக்கும் அவங்களுக்கும் ஏணி வைச்சாக்கூட எட்டாதே’ என்று நினைத்தேன். ஆனால், இவர்தான் எனக்கு ஏற்ற ஊழிய பார்ட்னர் என்று போகப் போக புரிந்துகொண்டேன்.
“நாம தனியா இல்ல”
எங்களுடைய முதல் நியமிப்பு, பம்பாய்க்குக் கிழக்கே சுமார் 400 கி.மீ தூரத்திலிருந்த சரித்திரப் புகழ்பெற்ற நகரமான ஔரங்காபாத்தில். கிட்டத்தட்ட 10 லட்சம் மக்கள் வாழும் அந்த ஊரில் நாங்கள் இருவர் மட்டும்தான் யெகோவாவின் சாட்சிகள் என்று அங்கு சென்ற பிறகுதான் எங்களுக்குத் தெரிந்தது. அதோடு, அந்த ஊரில் மராத்தி மொழிதான் பேசுவார்கள்; அதனால், அந்த மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.
சில நேரங்களில் தனிமை என்னை வாட்டி வதைக்கும். தாயில்லா குழந்தையைப் போல் நான் விம்மி விம்மி அழுவேன். ஆனால் சகோதரி எலிசபெத் எனக்கு அம்மாவுக்கு அம்மாவாக இருந்து என்னைத் தேற்றுவார்கள். “சில நேரங்கள்ல நாம தனி மரமா இருக்கிற மாதிரி தோணலாம், ஆனா உண்மையில நாம தனியா இல்ல. உன் குடும்பமும் நண்பர்களும் பக்கத்தில இல்லனாலும், யெகோவா எப்பவும் உன் பக்கத்திலேயே இருக்கிறார். அவரை உன் ஃபிரெண்டா ஆக்கிக்கோ. அப்புறம் பாரு, தனிமை உன்னைவிட்டு பறந்து போய்விடும்” என்று சொல்லி என் மன வலிக்கு மருந்து போடுவார். அவர் சொன்ன அந்த முத்தான வார்த்தைகளை நான் இன்றும் என் மனதில் பத்திரமாகப் பூட்டிவைத்திருக்கிறேன்.
எங்கள் கையில் அவ்வளவாகப் பணம் இல்லாதபோது நாங்கள் ஊழியத்திற்கு நடந்தே போவோம். காற்று, மழை, வெயில், புழுதி என எதையும் பார்க்காமல் கிட்டத்தட்ட 20 கி.மீ. நடந்தே செல்வோம். வெயில் காலத்தில் 40 டிகிரி செல்ஷியஸ் வரை அனல் கக்கும். மழைக் காலத்தில் சில பகுதிகள் சேறும் சகதியுமாக ஆகிவிடும்; பல மாதங்களுக்கு அப்படியே இருக்கும். இதெல்லாம்கூட எங்களுக்குப் பெரிய விஷயமாக இல்லை, ஆனால் அந்த ஊர் ஜனங்கள் மனதில் ஊறிபோயிருந்த சில கலாச்சாரங்களைச் சமாளிப்பதுதான் ரொம்ப கஷ்டமாக இருந்தது.
சொந்தக்காரராக இருந்தால் தவிர முன்பின் தெரியாத ஆண்களோடு பொது இடங்களில் பெண்கள் பேச மாட்டார்கள். அதுவும், ஆண்களுக்குப் பெண்கள் பைபிள் விஷயங்களை சொல்லிக் கொடுப்பதெல்லாம் அபூர்வம்தான்.
அதனால், அந்த ஊர்க்காரர்கள் எங்களை ஏளனமாக, கேவலமாகப் பேசுவார்கள். முதல் ஆறுமாதம் வரை வாரா வாரம் நடக்கும் பைபிள் கூட்டங்களில் நாங்கள் இரண்டுபேர் மட்டும்தான் இருந்தோம். போகப் போக பைபிள் செய்திக்கு ஆர்வம் காட்டினவர்கள் எங்களோடு சேர்ந்துகொண்டார்கள். சிறிய ஒரு தொகுதி ஆரம்பமானது. சிலர் எங்களோடு சேர்ந்து ஊழியத்திற்கும் வர ஆரம்பித்தார்கள்.“திறமையை மெருகூட்டிக்கொண்டே இரு”
சுமார் இரண்டரை வருடம் கழித்து நாங்கள் திரும்பவும் பம்பாய்க்கே நியமிக்கப்பட்டோம். எலிசபெத், வீட்டுக்கு வீடு ஊழியம் செய்தார்; நானோ, என் அப்பாவுக்கு உதவியாக கன்னட மொழியில் பைபிள் பிரசுரங்களை மொழிபெயர்க்க நியமிக்கப்பட்டேன். அந்தச் சமயத்தில் என் அப்பாவுக்குச் சபையில் ஏகப்பட்ட பொறுப்பு இருந்தது, அதோடு அவர் மட்டும்தான் கன்னட மொழியில் பைபிள் புத்தகங்களை மொழிபெயர்த்து வந்தார். அதனால் அவருக்கு உதவியாக நான் நியமிக்கப்பட்டதில் அவருக்கு ரொம்ப சந்தோஷம்.
என் அப்பாவும் அம்மாவும் 1966-ல் திரும்பவும் உடுப்பிக்கே போக முடிவெடுத்தார்கள். என் அப்பா பம்பாய் நகரத்தை விட்டு போவதற்குமுன் கடைசியாக என்னிடம் சொன்னது இதுதான்: “உன் திறமையை மெருகூட்டிக்கொண்டே இரும்மா. எளிமையா, தெளிவா மொழிபெயர்க்கனும். எப்பவுமே அளவுக்குமீறிய தன்னம்பிக்கை உனக்கு வர கூடாது. மனத்தாழ்மையா இரு. யெகோவாவையே நம்பியிரு.” அதன் பிறகு உடுப்பிக்குச் சென்ற கொஞ்ச நாட்களிலேயே அவர் இறந்துவிட்டார். இன்றுவரை அவர் சொன்ன அறிவுரையின்படி நடக்க நான் முயற்சி செய்து வருகிறேன்.
“உனக்குன்னு ஒரு குடும்பம் வேண்டாமா?”
இந்திய கலாச்சாரத்தில் பொதுவாக பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்குப் பருவ வயதிலேயே திருமணம் செய்து வைத்துவிடுவார்கள். பிள்ளைகளைப் பெற்று வளர்க்கச் சொல்லி நச்சரிப்பார்கள். அதனால் அடிக்கடி என் காதில் விழும் டயலாக், “உனக்குன்னு ஒரு குடும்பம் வேண்டாமா? வயசான காலத்தில உன்ன யாரு பாத்துப்பா, தனிமரமா ஆயிடுவியே!”
இதைக் கேட்டு கேட்டு எனக்கு சலித்து விட்டது. சில நேரங்களில் என் மனசு ரண வேதனைப்படும். மற்றவர்கள்முன் அதைக் காட்டிக்கொள்ள மாட்டேன். ஆனால், தனியாக இருக்கும்போது என் மனதில் உள்ளதையெல்லாம் யெகோவாவிடம் கொட்டித் தீர்ப்பேன். திருமணம் செய்யாததை யெகோவா எப்போதும் ஒரு குறையாகப் பார்ப்பதில்லை என்பதுதான் எனக்கு ரொம்ப ஆறுதலாக இருக்கும். கவனச்சிதறல் இல்லாமல் கடவுளுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற என் ஆசை மங்கிவிடாமல் இருக்க நான் செய்வதெல்லாம், யெப்தாவின் மகளைப் பற்றியும் இயேசுவைப் பற்றியும் அடிக்கடி நினைத்துப் பார்ப்பதுதான். இவர்கள் இருவரும் திருமணம் செய்யாதவர்கள்! கடவுளுடைய சித்தத்தைச் செய்வதில் தங்களையே கரைத்துக்கொண்டவர்கள்!!—யோவான் 4:34.
யெகோவா கொடுத்த பரிசு
நானும் எலிசபெத்தும் கிட்டத்தட்ட 50 வருடம் இணைப்பிரியா தோழிகளாக இருந்தோம். அவர் 2005-ல் இறந்துவிட்டார். அப்போது அவருக்கு 98 வயது. கடைசி காலத்தில் அவருடைய கண்பார்வை மங்கிப் போனதால் அவரால் பைபிள் படிக்க முடியவில்லை. அதனால் நாள் முழுவதும் ஜெபம் செய்வதிலேயே நேரத்தைக் கழிப்பார். அதில் அவருக்கு அலாதி சந்தோஷம்! சில நேரங்களில் அவருடைய அறையிலிருந்து முணுமுணுவென்ற சத்தம் கேட்கும்போது யாரிடமோ பேசிக்கொண்டிருக்கிறார் என்று நினைப்பேன். அப்புறம்தான் தெரிந்தது அவர் யெகோவாவிடம் பேசிக்கொண்டிருக்கிறார் என்று. யெகோவா அவருக்கு நிஜமானவராக இருந்தார். எப்போதும் அவர் கண்முன்னே இருப்பது போல் உணர்ந்தார். யெகோவாவின் சேவையில் தளராமல் நிலைத்து நிற்க அவருக்கும் சரி யெப்தாவின் மகளுக்கும் சரி, இதுவே உதவியது என்று புரிந்துகொண்டேன். இளமைப் பருவத்திலும் கஷ்டநஷ்டத்திலும் என்னைச் செதுக்கிச் சீராக்க முதிர்ச்சியுள்ள, அருமையான ஒரு தோழியைத் தந்ததற்காக நான் யெகோவாவுக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறேன்.—பிரசங்கி 4:9, 10.
யெப்தாவின் மகளைப் போல் இருந்து யெகோவாவுக்குச் சேவை செய்ததில் எனக்கு எத்தனை எத்தனையோ நன்மைகள் கிடைத்திருக்கின்றன. திருமணம் செய்யாமல் இருப்பதால், பைபிள் ஆலோசனைகளைக் கடைப்பிடிப்பதால் சந்தோஷமாக இருக்கிறேன், திருப்தியாகவும் வாழ்கிறேன். அதேசமயம் ‘கவனச்சிதறல் இல்லாமல் நம் எஜமானருக்குத் தொடர்ந்து ஊழியமும் செய்கிறேன்.’—1 கொரிந்தியர் 7:35. (w11-E 12/01)
[பக்கம் 28-ன் படம்]
பம்பாயில் 1950-ல் என் அப்பா ஒரு சொற்பொழிவு கொடுத்தபோது
[பக்கம் 28-ன் படம்]
எலிசபெத் இறப்பதற்கு கொஞ்ச நாட்களுக்கு முன்
[பக்கம் 29-ன் படம்]
1960-ல் ஒரு பைபிள் சொற்பொழிவைப் பற்றிப் பிரச்சாரம் செய்தபோது
[பக்கம் 29-ன் படம்]
இப்போது மொழிபெயர்ப்பு குழுவில் என்னுடன் வேலை செய்பவர்களோடு