Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஆபிரகாம் அன்பின் அடையாளம்

ஆபிரகாம் அன்பின் அடையாளம்

ஆபிரகாம் அன்பின் அடையாளம்

ஆபிரகாமின் அன்பு மனைவி சாராள் கண்ணை மூடிவிட அவருக்குத் துக்கம் தொண்டையை அடைக்கிறது. அவளை அடக்கம் செய்யும் தருணத்தில், அவளைப் பற்றிய இனிய நினைவலைகள் அவர் மனதில் மோதுகின்றன. வேதனையில் நெஞ்சம் கனக்க கண்ணீர் பீறிடுகிறது. (ஆதியாகமம் 23:1, 2) இப்படிக் கண்ணீர் விடுவது ஒன்றும் வெட்கப்பட வேண்டிய விஷயம் அல்ல, மாறாக, இது அவரிடமிருக்கும் மிகச் சிறந்த குணத்தை வெளிப்படுத்துகிறது. அதுதான் அன்பு.

அன்பு என்றால் என்ன? அன்பு என்பது, ஒருவர் மீதுள்ள நெருங்கிய பாசப் பிணைப்பை அல்லது அளவுகடந்த நேசத்தைக் குறிக்கிறது. அன்புள்ள ஒருவர், மற்றவர்கள்மேல் தனக்கு இருக்கும் அன்பைச் செயலில் காட்டுவார், அவர்களுக்காக எதையும் தியாகம் செய்யத் தயாராய் இருப்பார்.

ஆபிரகாம் எப்படி அன்பைக் காட்டினார்? தன் குடும்பத்தார்மீது அன்பு இருப்பதை ஆபிரகாம் செயலில் காட்டினார். அவருக்குத் தலைக்குமேல் வேலைகள் இருந்தாலும், குடும்பத்தாரின் உணர்வுகளைப் புரிந்துகொள்வதில், அவர்களுடைய ஆன்மீகத் தேவைகளைக் கவனிப்பதில் நேரம் செலவிட்டார். குடும்பத்தாருக்கு ஆன்மீக விஷயங்களை அவர் சொல்லிக் கொடுப்பதை யெகோவாவே கவனித்திருக்கிறார். (ஆதியாகமம் 18:19) அதுமட்டுமா, ஆபிரகாமின் அன்பைப் பற்றி அவர் வெளிப்படையாகக் குறிப்பிட்டிருக்கிறார். ஆம், ஈசாக்கைப் பற்றி ஆபிரகாமிடம் பேசியபோது, ‘உன் நேசகுமாரன்’ என்று அவர் குறிப்பிட்டார்.—ஆதியாகமம் 22:2.

அருமை மனைவி சாராள் இறந்தபோது ஆபிரகாம் கண்ணீர்விட்டதும்கூட அவர் அன்புள்ளவர் என்பதைக் காட்டுகிறது. சாராளுக்காக அவர் கதறி அழுதார். நெஞ்சுரமும் மனவலிமையும் கொண்ட அவர், மற்றவர்கள் முன் அழுவதை அவமானமாக நினைக்கவில்லை. ஆபிரகாம், மனபலமும் அதேசமயம் கனிவும் கலந்த இனிய குணம் உள்ளவர்.

கடவுள்மீது அன்பு இருப்பதையும் ஆபிரகாம் காட்டினார். அந்த அன்பை உயிருள்ளவரை காட்டினார். எப்படி? “நாம் கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பதே அவர்மீது அன்பு காட்டுவதாகும்; அவருடைய கட்டளைகள் பாரமானவை அல்ல” என்று 1 யோவான் 5:3 சொல்வது நமக்கு நினைவிருக்கும். இந்த வசனத்தில் சொல்லப்பட்டுள்ளபடி, கடவுள்மீது அன்பு காட்டுவதில் அவர் தலைசிறந்த உதாரணமாய்த் திகழ்ந்தார்.

ஆபிரகாமுக்குக் கடவுள் கொடுத்த ஒவ்வொரு கட்டளைக்கும் அவர் உடனடியாகக் கீழ்ப்படிந்தார். (ஆதியாகமம் 12:4; 17:22, 23; 21:12-14; 22:1-3) அது சுலபமா, கஷ்டமா என்றெல்லாம் அவர் பார்க்கவில்லை; ஏன், எதற்கு என்றெல்லாம் கேள்வி கேட்கவில்லை. ஏனென்றால் அதெல்லாம் அவருக்கு முக்கியமாகத் தெரியவில்லை, கடவுள் சொல்வதை உடனடியாகச் செய்வதே அவருக்கு முக்கியமாக இருந்தது. கடவுளுடைய ஒவ்வொரு கட்டளைக்கும் கீழ்ப்படிவதை அவரிடம் அன்பு காட்டுவதற்குக் கிடைத்த வாய்ப்பாகக் கருதினார்.

நமக்கு என்ன பாடம்? ஆபிரகாமைப் போல நாமும் மற்றவர்களிடம், முக்கியமாக நம் குடும்பத்தாரிடம் அன்பு காட்ட வேண்டும். தலைக்குமேல் வேலை இருந்தாலும்கூட நம் மனதுக்கு நெருக்கமானவர்களுடன் நேரம் செலவிட வேண்டும்.

அதோடு, யெகோவாவிடமும் முழுமனதோடு அன்புகாட்ட முயல வேண்டும். அந்த அன்பு நம் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். எப்படியெனில், நம் மனதை, பேச்சை, நடத்தையை கடவுளுக்குப் பிடித்தமான விதத்தில் மாற்ற அது நம்மைத் தூண்டும்.—1 பேதுரு 1:14-16.

யெகோவாவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவது எல்லாச் சமயத்திலும் சுலபமாக இருக்காதுதான். ஆனால், ஒன்று மட்டும் உறுதி: ஆபிரகாமுக்கு உதவியவர், ஆபிரகாமை ‘என் சிநேகிதன்’ என்று அழைத்தவர், நமக்கும் உதவுவார். (ஏசாயா 41:8) கடவுளுடைய வார்த்தையான பைபிள் இந்த வாக்கைக் கொடுக்கிறது: ‘யெகோவா உங்களை உறுதிப்படுத்துவார், உங்களைப் பலப்படுத்துவார்.’ (1 பேதுரு 5:10) ஆபிரகாமின் உற்ற நண்பரான யெகோவா கொடுத்த இந்த வாக்கு நம் நெஞ்சை நெகிழ வைக்கிறது, அல்லவா? (w12-E 01/01)

[பக்கம் 13-ன் பெட்டி]

ஆண்கள் அழுவது கோழைத்தனமா?

ஆம் என்றே நிறையப் பேர் சொல்வார்கள். ஆனால், தாளா துக்கத்தில் கண்ணீர் சிந்தியவர் ஆபிரகாம் மட்டுமல்ல; நெஞ்சுரம் கொண்ட அநேக உண்மை ஊழியர்கள் அழுதிருப்பதாக பைபிள் குறிப்பிடுகிறது. அதைக் கேட்கும்போது ஆச்சரியமாக இருக்கலாம். யோசேப்பு, தாவீது, அப்போஸ்தலன் பேதுரு, எபேசு சபையின் மூப்பர்கள் என பலர் அழுதிருக்கிறார்கள், ஏன் இயேசுவும்கூட கண்ணீர்விட்டிருக்கிறார். (ஆதியாகமம் 50:1; 2 சாமுவேல் 18:33; லூக்கா 22:61, 62; யோவான் 11:35; அப்போஸ்தலர் 20:36-38) ஆக, ஆண்கள் அழுவது கோழைத்தனம் அல்ல என்பது பைபிளிலிருந்து தெளிவாகத் தெரிகிறது.