Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுளுடைய சட்டங்களைக் கடைப்பிடிப்பதால் என்ன நன்மை?

கடவுளுடைய சட்டங்களைக் கடைப்பிடிப்பதால் என்ன நன்மை?

பைபிளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்

கடவுளுடைய சட்டங்களைக் கடைப்பிடிப்பதால் என்ன நன்மை?

இந்தக் கட்டுரையில் சில கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இந்தக் கேள்விகளை நீங்களும் கேட்டிருக்கலாம். பைபிள் சொல்லும் பதில்களைத் தெரிந்துகொள்ள இந்தக் கட்டுரையை வாசியுங்கள். அதைப் பற்றி உங்களுக்கு விளக்க யெகோவாவின் சாட்சிகள் ஆவலாக இருக்கிறார்கள்.

1. கடவுளுக்கு ஏன் கீழ்ப்படிய வேண்டும்?

நம்மைப் படைத்தவர் கடவுள். அதனால் நாம் அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும். இயேசுவும்கூட கடவுளுக்கு எப்போதும் கீழ்ப்படிந்து நடந்தார். (யோவான் 6:38; வெளிப்படுத்துதல் 4:11) நாம் கடவுளை நேசிக்கிறோம் என்பதைக் காட்ட ஒரு வழி அவருடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படிவது.1 யோவான் 5:3-ஐ வாசியுங்கள்.

யெகோவா தேவன் கொடுத்துள்ள சட்டங்கள் எல்லாம் நம்முடைய நன்மைக்குத்தான். அவற்றைக் கடைப்பிடித்தால் இன்றும் சந்தோஷமாக வாழலாம், எதிர்காலத்திலும் முடிவில்லா வாழ்வைப் பெற்றுக்கொள்ளலாம்.—சங்கீதம் 19:7, 11-ஐயும் ஏசாயா 48:17, 18-ஐயும் வாசியுங்கள்.

2. ஆரோக்கியமாக வாழ கடவுளுடைய சட்டங்கள் எப்படி உதவும்?

குடிவெறியைக் கடவுளுடைய சட்டம் தடை செய்கிறது. அதற்குக் கீழ்ப்படிந்தால், உயிர் குடிக்கும் நோய்களிலிருந்தும் விபத்துக்களிலிருந்தும் நம்மைப் பாதுகாத்துக்கொள்ளலாம். அளவுக்குமீறி குடித்தால் அதற்கு அடிமையாகிவிடுவோம், முட்டாள்தனமாக நடந்துகொள்வோம். (நீதிமொழிகள் 23:20, 29, 30) குடிக்கவே கூடாதென பைபிள் சொல்வதில்லை ஆனால், மிதமாக குடிப்பதை யெகோவா அனுமதிக்கிறார்.சங்கீதம் 104:15-ஐயும் 1 கொரிந்தியர் 6:10-ஐயும் வாசியுங்கள்.

பொறாமை, கட்டுக்கடங்கா கோபம் போன்ற மோசமான குணங்களைப் பற்றியும் யெகோவா எச்சரிக்கிறார். அவருடைய அறிவுரைகளை எந்தளவுக்குக் கடைப்பிடிக்கிறோமோ அந்தளவுக்கு ஆரோக்கியமாக இருப்போம்.நீதிமொழிகள் 14:30-ஐயும் 22:24, 25-ஐயும் வாசியுங்கள்.

3. கடவுளுடைய சட்டங்கள் நம்மை எப்படிப் பாதுகாக்கும்?

மணத்துணையல்லாத ஒருவருடன் செக்ஸ் வைத்துக்கொள்வதை கடவுளுடைய சட்டம் தடைசெய்கிறது. (எபிரெயர் 13:4) இதற்குக் கீழ்ப்படிந்தால் கணவன் மனைவிக்கிடையே நம்பிக்கை அதிகமாகும். பிள்ளைகளும் ஒரு நல்ல சூழலில் வளருவார்கள். ஆனால் இந்தச் சட்டத்தை மீறுபவர்களுடைய வாழ்க்கையில் வியாதி, விவாகரத்து, சண்டைச் சச்சரவு, கடும் மனவேதனை போன்றவைதான் மிஞ்சும். அதோடு பிள்ளைகள் ஒற்றைப் பெற்றோருடன் வாழ வேண்டிய கதி ஏற்படும்.நீதிமொழிகள் 5:1-9-ஐ வாசியுங்கள்.

மணத்துணையல்லாத ஒருவருடன் செக்ஸ் வைத்துக்கொள்ளத் தூண்டும் சூழ்நிலைகளைத் தவிர்த்தால் கடவுளோடுள்ள நம் நட்பு முறிந்துபோகாது. நம்மால் மற்றவர்களும் பாதிக்கப்பட மாட்டார்கள்.1 தெசலோனிக்கேயர் 4:3-6-ஐ வாசியுங்கள்.

4. உயிருக்கு மதிப்புக் கொடுத்தால் நமக்கு என்ன நன்மை?

கடவுள் கொடுத்த பரிசாகிய உயிரை மதிப்பவர்கள் புகை பிடிப்பதைப் போன்ற ஆபத்தான பழக்கங்களை விட்டுவிடுவதால் ஆரோக்கியமான வாழ்வை அனுபவிப்பார்கள். (2 கொரிந்தியர் 7:1) தாயின் வயிற்றில் வளரும் சிசுவின் உயிரைக்கூட கடவுள் உயர்வாகக் கருதுகிறார் என்று யாத்திராகமம் 21:22, 23-ன் எபிரெய மூல மொழிபெயர்ப்பு காட்டுகிறது. ஆகவே கருக்கலைப்பு செய்யவே கூடாது. உயிரை மதிப்பவர்கள் வீட்டிலும், வேலையிலும், வண்டி ஓட்டுவதிலும் பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடிப்பதும் அவசியம். (உபாகமம் 22:8) உயிருக்கு ஆபத்தான போட்டி விளையாட்டுகளிலும் கலந்துகொள்ளக்கூடாது. ஏனென்றால், உயிர் கடவுள் தந்த பரிசு.சங்கீதம் 36:9-ஐ வாசியுங்கள்.

5. இரத்தத்தைப் புனிதமாகக் கருதுவதால் நமக்கு என்ன நன்மை?

இரத்தம் உயிரைக் குறிப்பதால் கடவுள் அதைப் புனிதமாகக் கருதுகிறார். (ஆதியாகமம் 9:3, 4) இரத்தம் உயிருக்கு சமம் என்று கடவுளுடைய சட்டம் சொல்கிறது. அதற்குக் கீழ்ப்படிவது நமக்கு நன்மையைத் தரும். எப்படி? இரத்தத்தின் மூலம் நம் பாவங்களுக்கு மன்னிப்பு கிடைக்கிறது.லேவியராகமம் 17:11-13; எபிரெயர் 9:22-ஐ வாசியுங்கள்.

இயேசு பாவம் செய்யாதவராக இருந்ததால் அவருடைய இரத்தம் விலை மதிக்க முடியாதது. மனிதர்களுக்காக அவர் தம்மையே பலியாகக் கொடுத்த பின்பு, தம் உயிரைக் குறிக்கும் இரத்தத்தின் விலையைக் கடவுளிடம் செலுத்தினார். (எபிரெயர் 9:12) அவர் சிந்திய இரத்தத்தால்தான் நமக்கு முடிவில்லா வாழ்வு கிடைக்கும்.மத்தேயு 26:28-ஐயும் யோவான் 3:16-ஐயும் வாசியுங்கள். (w11-E 11/01)

கூடுதல் தகவல்களுக்கு யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற இந்தப் புத்தகத்தில் 12, 13 அதிகாரங்களைப் பாருங்கள்.