கடவுளிடம் நெருங்கி வாருங்கள்
‘முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதில்லை’
நீங்கா நினைவுகள் நாம் பெற்ற ஆசீர்வாதம் என்று சொல்லலாம். நம் பாசத்துக்குரியவர்களோடு செலவிட்ட இனிய தருணங்களை நினைத்துப் பார்ப்பது நம் மனதுக்கு இதமளிக்கும். சில சமயங்களில் நினைவுகள் நமக்கு ஆசீர்வாதமாக அல்ல, சாபமாகத் தோன்றும். வாழ்க்கையில் சந்தித்த கசப்பான அனுபவங்களின் நினைவலைகள் உங்கள் நெஞ்சை மோதி நொறுக்குகின்றனவா? ‘சோக நினைவுகள் எல்லாம் என்றாவது என் நெஞ்சைவிட்டு நீங்குமா?’ என நீங்கள் யோசிக்கலாம். ஏசாயா தீர்க்கதரிசி சொன்ன வார்த்தைகள் நம் சோகத்தை நிச்சயம் தணிக்கும்.—ஏசாயா 65:17-ஐ வாசியுங்கள்.
நம் மனதை ரணமாக்கும் நினைவுகளை யெகோவா வேரோடு பிடுங்கி எறியப் போகிறார். எப்படி? துன்பதுயரங்கள் நிறைந்த இந்தப் பொல்லாத உலகை, நிரந்தர நன்மைகளை வாரி வழங்கும் உலகமாக மாற்றப் போகிறார். “இதோ, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் சிருஷ்டிக்கிறேன்” என்று ஏசாயா மூலமாக வாக்குக் கொடுத்திருக்கிறார். இதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளும்போது நம் நெஞ்சில் நம்பிக்கை பந்தலிடும்.
சரி, புதிய வானம் என்றால் என்ன? இதைப் புரிந்துகொள்ள உதவும் இரண்டு குறிப்புகளை பைபிளில் பார்க்கலாம். முதலாவதாக, இந்தப் புதிய வானத்தைப் பற்றி ஏசாயா மட்டுமல்ல இன்னும் இரண்டு பைபிள் எழுத்தாளர்களும் குறிப்பிட்டிருக்கிறார்கள்; பூமியில் ஏற்படப்போகும் அதிரடி மாற்றங்களை விவரிக்கையில் இந்த வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். (2 பேதுரு 3:13; வெளிப்படுத்துதல் 21:1-4) இரண்டாவதாக, பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள ‘வானம்’ என்ற வார்த்தை ஆட்சியை அல்லது அரசாங்கத்தைக் குறிக்கிறது. (ஏசாயா 14:4, 12) அப்படியானால், புதிய வானம் என்பது ஒரு புதிய அரசாங்கமாகும்; இது பூமியில் நீதியை நிலைநாட்டும். இதை ஒரேவொரு அரசாங்கத்தால் மட்டுமே செய்ய முடியும். அதுதான் கடவுளுடைய அரசாங்கம்; பரலோகத்திலிருந்து ஆளப்போகும் அந்த அரசாங்கத்திற்காக ஜெபம் செய்யும்படியே இயேசு நமக்குக் கற்றுக்கொடுத்தார். இது, கடவுளுடைய நீதியான சித்தத்தை பூமியெங்கும் நிறைவேற்றும்.—மத்தேயு 6:9, 10.
புதிய பூமி என்றால் என்ன? இதைச் சரியாகப் புரிந்துகொள்வதற்கு பைபிளில் இரண்டு குறிப்புகள் உள்ளன. முதலாவது, பைபிளில், “பூமி” என்ற வார்த்தை சில சமயங்களில் இந்தக் கிரகத்தை அல்ல, மக்களைக் குறிக்கிறது. (சங்கீதம் 96:1; ஆதியாகமம் 11:1) இரண்டாவது, கடவுளுடைய ஆட்சியில் உண்மையுள்ள மக்கள் நீதியைக் கற்றுக்கொள்வார்கள்; அப்போது பூமியெங்கும் நீதி நிலவும் என்று பைபிள் சொல்கிறது. (ஏசாயா 26:9) அப்படியானால், புதிய பூமி என்பது கடவுளுடைய ஆட்சிக்குக் கட்டுப்பட்டு, அவருடைய நீதிநெறிகளின்படி வாழும் மக்களைக் குறிக்கிறது.
அந்த மக்களின் மனதை வாட்டும் நினைவுகளை யெகோவா எப்படி வேரோடு பிடுங்கி எறிவார் என்பதைப் இப்போது உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா? சீக்கிரத்தில், நீதியான புதிய உலகை யெகோவா நிலைநாட்டுவார்; அப்போது புதிய வானத்தையும் புதிய பூமியையும் பற்றி அவர் கொடுத்த வாக்கு முழுமையாக நிறைவேறும். * அந்தப் புதிய உலகில், மனதை வாட்டும் நினைவுகளுக்குக் காரணமான எதுவும் இருக்காது; அதாவது உடல், மனம், உணர்ச்சி சம்பந்தப்பட்ட எந்தப் பிரச்சினையும் இருக்காது. உண்மையுள்ள மக்கள் வாழ்க்கையை முழுமையாய் அனுபவித்து மகிழ்வார்கள்; ஒவ்வொரு நாளின் நினைவுகளும் நெஞ்சைவிட்டு நீங்கா இனிய நினைவுகளாய் இருக்கும்.
ஆனால், இன்று நம் நெஞ்சை நோகடிக்கும் நினைவுகளெல்லாம் என்னவாகும்? ஏசாயா மூலம் யெகோவா கொடுத்த வாக்கு தொடர்ந்து சொல்கிறது: “முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை.” இந்த உலகில் நாம் அனுபவித்த வேதனையெல்லாம் புதிய உலகில் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவிடும். இதைக் கேட்கும்போதே உங்கள் மனதுக்கு இதமாக இருக்கிறது, அல்லவா? அப்படியானால், இந்த ஒளிமயமான எதிர்காலத்தைத் தருவதாக வாக்குகொடுத்திருக்கும் கடவுளிடம் எப்படி நெருங்கி வரலாம் என நீங்கள் தெரிந்துகொள்ளலாமே! (w12-E 03/01)
[அடிக்குறிப்பு]
^ பாரா. 7 கடவுளுடைய அரசாங்கத்தையும் அது சீக்கிரத்தில் செய்யவிருப்பதையும் பற்றிய கூடுதல் தகவலுக்கு பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகத்தில் அதிகாரங்கள் 3, 8, 9-ஐப் பாருங்கள். இது யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.