கடவுளிடம் நெருங்கி வாருங்கள்
இவைகளை “குழந்தைகளுக்கு வெளிப்படுத்தியிருக்கிறீர்”
கடவுளைப் பற்றிய உண்மைகளைத் தெரிந்துகொள்ள விருப்பமா? அதாவது, கடவுள் யார், அவருக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது, அவருடைய நோக்கம் என்ன, இதையெல்லாம் தெரிந்துகொள்ள ஆசையா? தம்முடைய வார்த்தையாகிய பைபிளில் யெகோவா தம்மைப் பற்றிய எல்லா விஷயங்களையும் பதிவு செய்திருக்கிறார். ஆனால், பைபிளைப் படிக்கும் எல்லோராலும் அதை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது. ஏன்? ஏனென்றால், ஒரு சிலருக்கு மட்டும்தான் கடவுளைப் பற்றிய உண்மைகளைப் புரிந்துகொள்ளும் பாக்கியம் கிடைத்திருக்கிறது. இதைப் பற்றி இயேசு என்ன சொன்னார் என்று பார்க்கலாமா?—மத்தேயு 11:25-ஐ வாசியுங்கள்.
அந்த வசனத்தின் சூழமைவைப் பாருங்கள். அந்த வசனம், “பின்பு இயேசு” என்று ஆரம்பிக்கிறது. எனவே, இயேசு அடுத்து சொல்லவிருந்த குறிப்பு சற்றுமுன் நடந்த ஒரு விஷயத்திற்கு அவர் பதிலளிப்பது போல் இருக்கிறது. அவர் சற்றுமுன்தான் கலிலேயாவில் இருந்த மூன்று ஊராரைக் கடிந்துகொண்டார். ஏனென்றால், அவர் செய்த வல்லமையான செயல்களைப் பார்த்தும் அவரைப் பின்பற்ற அவர்கள் விரும்பவில்லை. (மத்தேயு 11:20-24) ‘இயேசுவின் அற்புதங்களைக் கண்ணாரக் கண்டும், அவர் கற்றுக்கொடுத்த சத்தியங்களைக் காதாரக் கேட்டும் யாராவது அவரைப் பின்பற்றாமல் போவார்களா?’ என நீங்கள் யோசிக்கலாம். மக்கள் அப்படி நடந்துகொண்டதற்கு அவர்களுடைய மனம் இறுகிப்போயிருந்ததுதான் காரணம்.—மத்தேயு 13:10-15.
பைபிளில் காணப்படும் ஆன்மீக சத்தியங்களைப் புரிந்துகொள்ள இரண்டு முக்கியமான விஷயங்கள் நமக்குத் தேவை என்பது இயேசுவுக்குத் தெரியும். ஒன்று, கடவுளுடைய உதவி, மற்றொன்று சரியான மனநிலை. “தகப்பனே, பரலோகத்திற்கும் பூமிக்கும் எஜமானரே, அனைவர் முன்பாகவும் நான் உங்களைப் போற்றிப் புகழ்கிறேன்; ஏனென்றால், இந்த விஷயங்களை நீங்கள் ஞானிகளுக்கும் அறிவாளிகளுக்கும் மறைத்து, குழந்தைகளுக்கு வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்” என இயேசு விளக்கினார். பைபிளிலுள்ள ஆன்மீக சத்தியங்களை முழுமையாகப் புரிந்துகொள்வதற்கு பாக்கியம் பெற்றிருக்க வேண்டும் என்று ஏன் சொல்கிறார்கள் என இப்போது புரிகிறதா? யெகோவா ‘பரலோகத்திற்கும் பூமிக்கும் எஜமானராக’ இருப்பதால் அந்தச் சத்தியங்களை யாருக்குத் தெரியப்படுத்துவது என்று தீர்மானிக்கும் உரிமை அவருக்குத்தான் இருக்கிறது. ஆனால், இந்த விஷயத்தில் கடவுள் பாரபட்சம் பார்ப்பதில்லை. அப்படியென்றால், யாருக்கு அந்தச் சத்தியங்களை வெளிப்படுத்த வேண்டும் என்பதை எதன் அடிப்படையில் தீர்மானிக்கிறார்?
தாழ்மையுள்ளவர்களை யெகோவா நேசிக்கிறார், கர்வமுள்ளவர்களை எதிர்க்கிறார். (யாக்கோபு 4:6) ‘ஞானிகளுக்கும் அறிவாளிகளுக்கும்’ இதை மறைக்கிறார். ஏனென்றால், அவர்கள் உலக ஞானத்தில் ஊறியதாலும் மெத்தப் படித்ததாலும் தலைக்கனம் பிடித்தவர்களாக இருக்கிறார்கள். சொந்த ஞானத்தில் சார்ந்திருந்து கடவுளின் வழிநடத்துதலை ஒதுக்கித் தள்ளுகிறார்கள். (1 கொரிந்தியர் 1:19-21) ஆனால், “குழந்தைகளுக்கு,” அதாவது குழந்தைகள் போல மனத்தாழ்மையோடும் உண்மை மனதோடும் தம்மிடம் வருபவர்களுக்கு யெகோவா சத்தியத்தைத் தெரியப்படுத்துகிறார். (மத்தேயு 18:1-4; 1 கொரிந்தியர் 1:26-28) கடவுளுடைய மகனான இயேசு இந்த இரண்டு விதமான ஆட்களையும் பார்த்தார். கர்வம் தலைக்கேறிய, மெத்தப் படித்த அநேக மதத் தலைவர்கள் இயேசுவின் செய்தியைப் புரிந்துகொள்ளவில்லை, ஆனால், தாழ்மையுள்ள மீனவர்கள் புரிந்துகொண்டார்கள். (மத்தேயு 4:18-22; 23:1-5; அப்போஸ்தலர் 4:13) அதே சமயம், சில பணக்காரர்களும் அதிகம் படித்தவர்களும் உண்மையான மனத்தாழ்மையைக் காட்டியதால் இயேசுவின் சீடர்களானார்கள்.—லூக்கா 19:1, 2, 8; அப்போஸ்தலர் 22:1-3.
ஆரம்பத்தில் கேட்கப்பட்ட கேள்வியை மீண்டும் சிந்திக்கலாம்: கடவுளைப் பற்றிய உண்மைகளைத் தெரிந்துகொள்ள விருப்பமா? அப்படியானால், ‘எனக்கு எல்லாம் தெரியும்’ என்று தங்களையே மெச்சிக்கொள்கிறவர்களைக் கடவுள் ஒதுக்கித் தள்ளுகிறார் என்பதை நினைவில் வையுங்கள். உலகத்தார் தாழ்வாகப் பார்ப்பவர்களைக் கடவுள் உயர்வாகப் பார்க்கிறார். ஆக, சரியான மனநிலையோடும் மனத்தாழ்மையோடும் கடவுளுடைய வார்த்தையைப் படித்தீர்கள் என்றால் யெகோவா கொடுக்கும் அருமையான பரிசை உங்களால் பெற்றுக்கொள்ள முடியும். ஆம், அவரைப் பற்றிய உண்மைகளைப் புரிந்துகொள்ள முடியும். அவற்றைப் புரிந்துகொள்ளும்போது இப்போதே அர்த்தமுள்ள வாழ்க்கை வாழலாம். எதிர்காலத்தில், “உண்மையான வாழ்வை” அதாவது, நீதி குடிகொண்டிருக்கும் புதிய உலகில் முடிவில்லா வாழ்வைப் பெறலாம். *—1 தீமோத்தேயு 6:12, 19; 2 பேதுரு 3:13. ▪ (w13-E 01/01)
^ கடவுளைப் பற்றியும் அவருடைய நோக்கங்களைப் பற்றியும் கற்றுக்கொடுக்க யெகோவாவின் சாட்சிகள் ஆர்வமாக இருக்கிறார்கள். பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகத்தைப் பயன்படுத்தி இலவசமாக பைபிள் படிப்பு நடத்துகிறார்கள்.