பைபிள் தரும் பதில்கள்
கடவுளுடைய பெயர் என்ன?
நம் குடும்பத்தில் இருக்கும் எல்லாருக்கும் ஒரு பெயர் இருக்கிறது. ஏன், செல்லப் பிராணிகளுக்கும் கூட பெயர் இருக்கிறது. அப்படியென்றால், கடவுளுக்கு ஒரு பெயர் இருக்காதா? சர்வவல்லமையுள்ள தேவன், பேரரசர், படைப்பாளர் போன்ற நிறைய பட்டப்பெயர்கள் கடவுளுக்கு இருக்கின்றன என பைபிள் சொல்கிறது. ஆனால், அவருக்கென்று ஒரு சொந்த பெயரும் இருக்கிறது.—யாத்திராகமம் 6:2, 3-ஐ வாசியுங்கள்.
அநேக பைபிள் மொழிபெயர்ப்புகளில் கடவுளுடைய பெயரை சங்கீதம் 83:17-ல் பார்க்கலாம். உதாரணத்திற்கு, தமிழ் யூனியன் மொழிபெயர்ப்பு பைபிளில், ‘யெகோவா என்னும் நாமத்தையுடைய தேவரீர் ஒருவரே பூமியனைத்தின்மேலும் உன்னதமானவர்’ என்று இருக்கிறது.
நாம் ஏன் கடவுளுடைய பெயரைப் பயன்படுத்த வேண்டும்?
கடவுளுடைய பெயரை நாம் பயன்படுத்த வேண்டும் என்று அவர் விரும்புகிறார். நமக்கு ரொம்ப பிடித்தவர்களை அல்லது நம் நெருங்கிய நண்பர்களை பெயர் சொல்லித்தான் கூப்பிடுவோம். அதுவும் அப்படி கூப்பிடுவது அவர்களுக்குப் பிடித்திருந்தால் நிச்சயம் பெயர் சொல்லி அழைப்போம். கடவுளிடம் பேசும்போது மட்டும் ஏன் அவருடையப் பெயரைப் பயன்படுத்தக் கூடாது? கடவுளுடைய பெயரைப் பயன்படுத்தும்படி இயேசு கிறிஸ்துவே உற்சாகப்படுத்துகிறார்.—மத்தேயு 6:9-ஐயும் யோவான் 17:26-ஐயும் வாசியுங்கள்.
ஆனால், கடவுளுடைய நண்பராவதற்கு அவருடைய பெயரை மட்டும் தெரிந்து வைத்திருந்தால் போதாது. அதைவிட அதிகத்தைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். உதாரணத்திற்கு, கடவுள் எப்படிப்பட்டவர்? கடவுளுடைய நண்பராக முடியுமா? இதுபோன்ற கேள்விகளுக்கு பைபிள் பதில் அளிக்கிறது. (w13-E 01/01)