கடவுளை நீங்கள் நம்புவீர்களா?
நீங்கள் மிக உயர்வாகக் கருதும் நண்பர் ஒருவர் உங்களால் புரிந்துகொள்ள முடியாத ஏதோவொன்றைச் செய்ததாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். மற்றவர்கள் அவர் செய்ததைக் குறை சொல்கிறார்கள், அவரது உள்நோக்கத்தைச் சந்தேகித்து, அவரைக் கொடூரமானவர் என்று குற்றம்சாட்டுகிறார்கள். அவர்கள் சொல்வதை நீங்கள் சட்டென்று ஒத்துக்கொள்வீர்களா, அல்லது உங்களுடைய நண்பர் தன் தரப்பில் பேசுவதைக் கேட்கும்வரை காத்திருப்பீர்களா? ஒருவேளை அவர் அங்கே இல்லை என்றால், அவர் ஏதோவொரு நன்மைக்காகத்தான் அப்படிச் செய்திருப்பார் என்று நினைத்து பொறுமையாக இருப்பீர்களா?
பதிலைச் சொல்வதற்குமுன் கூடுதலான விஷயங்களை நீங்கள் தெரிந்திருக்க வேண்டும். எனவே, ‘என் நண்பரைப் பற்றி எனக்கு எந்தளவு தெரியும்? நான் அவரை உயர்வாகக் கருத என்ன காரணங்கள் இருக்கின்றன?’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். ஒரு நண்பரைப் பற்றி ஒரு முடிவுக்கு வரும்முன் நாம் இப்படிச் சிந்திக்கிறோமென்றால், கடவுளுடைய விஷயத்திலும் அப்படிச் சிந்திப்பது எவ்வளவு முக்கியம்! அவ்வாறு செய்தால் அவர் கொடூரமானவரா இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
கடவுள் செய்த சிலவற்றை உங்களால் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கலாம், அல்லது அவர் ஏன் ஒரு சம்பவத்தை அனுமதித்தார் என்று குழம்பி இருக்கலாம். கடவுள் கொடூரமானவர் என்று அநேகர் உங்களிடம் சொல்லலாம். கடவுளுடைய உள்நோக்கத்தைச் சந்தேகிக்க உங்களைத் தூண்டலாம். அச்சமயங்களில், கடவுள் ஏதோவொரு நன்மைக்காகத்தான் செயல்பட்டிருப்பார் என நினைத்து அவர்மீது நம்பிக்கை இழக்காமல் இருப்பீர்களா? கடவுளை எந்தளவுக்கு அறிந்திருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே உங்கள் பதில் இருக்கும். அப்படியென்றால், உங்களையே இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள்: ‘கடவுள் எனக்கு இதுவரை எப்படிப்பட்ட நண்பராக இருந்திருக்கிறார்?’
வாழ்க்கையில் நிறையக் கஷ்டங்களைச் சந்தித்திருந்தால், கடவுள் உங்களுடைய நண்பராக இல்லை என்ற முடிவிற்கு நீங்கள் ஒருவேளை வரலாம். ஆனால், சற்றுச் சிந்தித்துப் பாருங்கள். கடவுள் எதற்குக் காரணமாக இருந்திருக்கிறார்—உங்கள் கஷ்டங்களுக்கா, சந்தோஷங்களுக்கா? நாம் ஏற்கெனவே பார்த்தபடி, ‘இந்த உலகத்தை ஆளுவது’ பிசாசாகிய சாத்தான்; யெகோவா தேவன் அல்ல. (யோவான் 12:31) எனவே, இந்த உலகத்தில் நடக்கிற எல்லா அநியாயங்களுக்கும் அக்கிரமங்களுக்கும் சாத்தானே காரணம். நாம் எதிர்ப்படும் அநேக கஷ்டங்களுக்கு நம்முடைய பலவீனங்களும் எதிர்பாரா சம்பவங்களுமே காரணம்.
கடவுள் எதற்குக் காரணமாக இருந்திருக்கிறார்—உங்கள் கஷ்டங்களுக்கா, சந்தோஷங்களுக்கா?
அப்படியானால், கடவுள் உண்மையிலேயே எதற்குக் காரணமாக இருந்திருக்கிறார்? அவர் ‘வானத்தையும் பூமியையும் உண்டாக்கினார்,’ நம் உடலை ‘பிரமிக்கத்தக்க அதிசயமாய்’ படைத்தார், ‘தம் கையில் நம் சுவாசத்தை வைத்திருக்கிறார்’ என்றெல்லாம் பைபிள் வர்ணிக்கிறது. (சங்கீதம் 124:8; 139:14; தானியேல் 5:23) இது எதை அர்த்தப்படுத்துகிறது?
நாம் சுவாசிக்கிற ஒவ்வொரு நொடிக்கும், வாழ்கிற ஒவ்வொரு நிமிடத்திற்கும் நம் படைப்பாளருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் என்று அர்த்தப்படுத்துகிறது. (அப்போஸ்தலர் 17:28) அருமையான உயிர், சிங்கார பூமி, பாச உள்ளங்கள், நேச நட்புகள், அதிசயமான ஐம்புலன்கள்—இவையெல்லாம் கடவுள் தந்திருக்கும் அன்பளிப்புகள் என்று அர்த்தப்படுத்துகிறது. (யாக்கோபு 1:17) இத்தனை அன்பளிப்புகளை அள்ளித் தந்திருக்கும் கடவுள், நம் மதிப்பிற்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமான நண்பர் என்பதை நிச்சயமாகவே ஒத்துக்கொள்வீர்கள்தானே?
உண்மைதான், கடவுளை நம்புவது சில சமயம் உங்களுக்குக் கடினமாக இருக்கலாம். அவர்மீது நம்பிக்கை வைக்கும் அளவுக்கு அவரைப் பற்றித் தெரியவில்லை என நினைக்கலாம். இது புரிந்துகொள்ளத்தக்கதே. கடவுள் கொடூரமானவர் எனச் சிலர் சொல்வதற்கான எல்லாக் காரணங்களையும் இந்தச் சிறுகட்டுரைகளில் அலசி ஆராய முடியாது. ஆனால், கடவுளைப் பற்றி இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ள எடுக்கப்படும் முயற்சிகள் எதுவுமே வீண்போகாது. * அப்படி முயற்சியெடுத்தீர்களென்றால், கடவுளைப் பற்றிய சத்தியங்களைக் கட்டாயம் தெரிந்துகொள்வீர்கள். கடவுள் கொடூரமானவரா? இல்லை! அதற்கு நேர்மாறாக, “கடவுள் அன்பாகவே இருக்கிறார்.”—1 யோவான் 4:8. ▪ (w13-E 05/01)
^ உதாரணத்திற்கு, கடவுள் ஏன் துன்பத்தை அனுமதிக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகத்தில் அதிகாரம் 11-ஐ பாருங்கள். இந்தப் புத்தகம் யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.