அட்டைப்பட கட்டுரை: ஏன் இந்தளவு வேதனை? எப்போது தீரும்?
எத்தனை எத்தனை அப்பாவிகள் பலி!
நோயெல்—அன்புக் குழந்தை. படம் வரைவதென்றால் அவளுக்குக் கொள்ளை ஆசை. ஒரு சாயங்கால வேளையில், விளையாடிக்கொண்டே வீட்டின் பின்புறமாகச் சென்றாள், அங்கிருந்த நீச்சல் குளத்தில் தவறி விழுந்து மூழ்கிப்போனாள். நான்காவது பிறந்த நாளைக் காண்பதற்கு இரண்டே வாரங்கள் முன்னர் அவளுடைய நாடி அடங்கிவிட்டது.
டிசம்பர் 14, 2012 அன்று அமெரிக்காவிலுள்ள கனெடிகட்டில் 26 பேர் ஒரு பள்ளியில் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களில் ஆறேழு வயது நிரம்பிய பிள்ளைகள் மட்டும் 20 பேர். அவர்களுக்கான இரங்கல் கூட்டத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா பேசியபோது ஷார்லெட், டானியேல், ஒலிவியா, ஜோஸஃபின்... என்று அந்தப் பிள்ளைகள் ஒவ்வொருவரின் பெயரையும் குறிப்பிட்டு, “இத்தகைய கோர சம்பவங்கள் முடிவுக்கு வரவேண்டும்” என்று சொன்னார்.
1996-ல் ஈராக் நாட்டை விட்டு 18 வயது பானோ குடும்பமாக நார்வேக்குக் குடிமாறிச் சென்றாள். ரொம்பவும் கலகலப்பான பருவப்பெண். ஆனால், பட்டாம்பூச்சி போல் சுற்றித் திரிந்த அவளுடைய வாழ்க்கை ஜூலை 22, 2011 அன்று பட்டென்று முடிவுக்கு வந்தது; ஒரு தீவிரவாதியின் தாக்குதலில் பலியான 77 பேரில் அவளும் ஒருத்தி. “இன்னும் நிறையப் பேரைக் கொல்ல முடியாமல் போய்விட்டதே” என்று அந்தக் கொடூரன் வருத்தப்பட்டானாம்!
மனதை உலுக்கும் இத்தகைய சம்பவங்கள் உலகெங்கும் அடிக்கடி நடைபெறுகின்றன. விபத்துகள், குற்றச்செயல்கள், போர்கள், பயங்கரவாதச் செயல்கள், இயற்கைப் பேரழிவுகள் போன்ற கோர சம்பவங்களால் ஏற்படும் துயரங்கள்தான் எத்தனை எத்தனை! அப்பாவிகள் அநேகர் அநியாயமாக உயிரிழந்திருக்கிறார்கள். எவ்வளவு வேதனை!
இதற்கெல்லாம் கடவுளைக் குற்றப்படுத்துகிறார்கள் சிலர். மனிதர்களைப் படைத்தவருக்கு அக்கறையே இல்லை என அவர்கள் நினைக்கிறார்கள். வேறு சிலர், கடவுள் நம் வேதனைகளைக் கண்டும் காணாதவர்போல் இருக்கிறார் எனச் சொல்கிறார்கள். இன்னும் சிலர், இதெல்லாம் விதிப்படிதான் நடக்கிறது என்று நினைக்கிறார்கள். இப்படிப்பட்ட கருத்துகளுக்கு முடிவே இல்லை. இவர்கள் நினைப்பதெல்லாம் சரியா? திருப்தியான, நம்பகமான பதிலை நாம் எங்கே கண்டடையலாம்? வேதனைகளுக்குக் காரணங்கள் என்ன, வேதனைகளுக்கு எப்படி முடிவு கட்டப்படும் என்ற கேள்விகளுக்குக் கடவுளுடைய வார்த்தையான பைபிள் அளிக்கும் பதில்களை அடுத்தடுத்த கட்டுரைகளில் பார்ப்போம். (w13-E 09/01)