Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இறந்தவர்களை மீண்டும் பார்க்க முடியும்—உயிர்த்தெழுதல்

இறந்தவர்களை மீண்டும் பார்க்க முடியும்—உயிர்த்தெழுதல்

இறந்தவர்கள் உயிர்த்தெழுப்பப்படுவார்கள், அதாவது மீண்டும் உயிரோடு வருவார்கள் என்று பைபிள் சொல்கிறது. இதை நீங்கள் நம்புகிறீர்களா? * இறந்த நம் அன்பானவர்களோடு சேர்ந்து மீண்டும் வாழ்வதை நினைக்கும்போது ஆனந்தமாக இருக்கிறது. ஆனால், இது உண்மையிலேயே நடக்குமா? பதில் தெரிந்துகொள்வதற்கு முதலில் இயேசுவின் அப்போஸ்தலர்கள், அதாவது அவருடைய விசேஷ சீடர்கள், இதை ஏன் நம்பினார்கள் என்று பார்ப்போம்.

இறந்தவர்கள் மீண்டும் உயிரோடு வருவார்கள் என்பதை அப்போஸ்தலர்கள் ஆணித்தரமாக நம்புவதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. முதலில், உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசுவை அப்போஸ்தலர்கள் கண்ணார கண்டார்கள்; அதன்பின், ‘ஒரே நேரத்தில் ஐந்நூறுக்கும் அதிகமான’ சீடர்கள் இயேசுவைப் பார்த்தார்கள். (1 கொரிந்தியர் 15:6) அதோடு, இயேசு உயிர்த்தெழுந்த விஷயம் உண்மையெனப் பலர் ஏற்றுக்கொண்டதையும் அதை மற்றவர்களுக்குச் சொன்னதையும் இயேசுவின் வரலாற்றை விவரிக்கும் நான்கு சுவிசேஷ புத்தகங்கள் காட்டுகின்றன.—மத்தேயு 27:62–28:20; மாற்கு 16:1-8; லூக்கா 24:1-53; யோவான் 20:1–21:25.

இரண்டாவது காரணம், இயேசு செய்த உயிர்த்தெழுதல்களில் மூன்றை அப்போஸ்தலர்கள் கண்ணாரக் கண்டார்கள். ஒன்று, நாயீன் என்ற நகரில். இரண்டு, கப்பர்நகூம் என்ற ஊரில். மூன்று, பெத்தானியா என்ற கிராமத்தில். (லூக்கா 7:11-17; 8:49-56; யோவான் 11:1-44) பெத்தானியாவில் நடந்த உயிர்த்தெழுதலைப்பற்றி இந்த இதழின் ஆரம்பத்தில் வாசித்திருப்பீர்கள். இறந்தவருடைய குடும்பத்தார் இயேசுவின் மிக நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள். அந்தச் சம்பவத்தை இப்போது விரிவாகப் பார்ப்போம்.

‘நானே உயிர்த்தெழுதலாக இருக்கிறேன்’

லாசரு இறந்து நான்கு நாட்கள் ஆகியிருந்தன. அப்போது, லாசருவின் சகோதரி மார்த்தாளிடம் இயேசு, “உன் சகோதரன் எழுந்திருப்பான்” என்றார். முதலில் மார்த்தாளுக்கு அது புரியவில்லை. “அவன் எழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன்” என அவள் சொன்னாள். ஆனால், அது எதிர்காலத்தில் நடக்கும் என்று நினைத்து அப்படிச் சொன்னாள். அப்போது இயேசு, “நானே உயிர்த்தெழுதலும் வாழ்வுமாக இருக்கிறேன்” என்று சொல்லி அவளுடைய சகோதரனை உயிரோடு எழுப்பினார். அதைப் பார்த்த மார்த்தாள் மலைத்துப்போய் நின்றதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?—யோவான் 11:23-25.

மரித்த லாசரு அந்த நான்கு நாட்கள் எங்கிருந்தார்? தான் எங்கேயோ உயிரோடு இருந்ததாக லாசரு சொல்லவில்லை; அவருடைய ஆத்துமா பரலோகத்திற்கும் போகவில்லை. கடவுளின் அருகில் சொர்க்க வாழ்க்கை வாழ்ந்த லாசருவை இயேசு மீண்டும் பூமிக்கு இழுத்து வரவும் இல்லை. அப்படியென்றால், அந்த நான்கு நாட்கள் அவர் எங்குதான் இருந்தார்? அவர் ஒன்றும் அறியாத நிலையில் கல்லறையில் இருந்தார்.—பிரசங்கி 9:5, 10.

மரணத்தை இயேசு தூக்கத்திற்கு ஒப்பிட்டது உங்களுக்கு நினைவிருக்கும். தூங்குகிறவர்கள் எழுவதுபோல் இறந்தவர்களும் உயிர்த்தெழுப்பப்படுவார்கள். அந்தப் பதிவை பைபிளில் இப்படி வாசிக்கிறோம்: “‘நம்முடைய நண்பன் லாசரு  தூங்குகிறான், அவனை எழுப்புவதற்காக நான் [இயேசு] அங்கு போகப் போகிறேன்’ என்றார். அதற்குச் சீடர்கள், ‘எஜமானே, அவன் தூங்கினால் குணமாகிவிடுவானே’ என்றார்கள். அவன் இறந்துவிட்டதைப்பற்றி இயேசு பேசிக்கொண்டிருந்தார். அவர்களோ, தூங்குவதைப்பற்றி அவர் பேசுவதாக நினைத்துக்கொண்டார்கள். அதனால் இயேசு, ‘லாசரு இறந்துவிட்டான்’ என்று அவர்களிடம் வெளிப்படையாகவே சொன்னார்.” (யோவான் 11:11-14) உயிர்த்தெழுதலின் மூலம் லாசருவுக்கு இயேசு மீண்டும் உயிர் கொடுத்து, அவருடைய குடும்பத்தாரோடு அவரைச் சேர்த்து வைத்தார். லாசரு மீண்டும் உயிரோடு வந்தது அவருடைய குடும்பத்தாருக்கு எத்தனை ஆறுதலையும் ஆனந்தத்தையும் அளித்திருக்கும்!

அன்று இயேசு சிலரைத்தான் உயிர்த்தெழுப்பினார்; எதிர்காலத்தில் கடவுளுடைய அரசாங்கத்தின் ராஜாவாக அவர் பிரமாண்டமான விதத்தில் மக்களை உயிர்த்தெழுப்பப் போகிறார். * ஆம், அவர் ஆட்சி செய்யும்போது மரணத்தில் “தூங்கிக்கொண்டிருப்பவர்களை” எழுப்பப் போகிறார். அதனால்தான் அவர், ‘நானே உயிர்த்தெழுதலாக இருக்கிறேன்’ என்றார். அன்பானவர்களை நீங்கள் மீண்டும் உயிரோடு பார்க்கும்போது எப்படிச் சந்தோஷத்தில் துள்ளி குதிப்பீர்கள் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள்! இறந்தவர்கள் உயிர்த்தெழுந்து வரும்போது அவர்களுக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!—லூக்கா 8:56.

அன்பானவர்களை மீண்டும் உயிரோடு பார்க்கும்போது சந்தோஷத்தில் துள்ளி குதிப்பதைக் கற்பனை செய்து பாருங்கள்!

மரணமில்லா வாழ்வைப் பெற நம்பிக்கை தேவை

மார்த்தாளிடம் இயேசு, “என்மீது விசுவாசம் வைக்கிறவன் இறந்தாலும் உயிர்பெறுவான்; உயிரோடிருந்து என்மீது விசுவாசம் வைக்கிற எவனும் இறந்துபோகாமலும் இருப்பான்” என்றார். (யோவான் 11:25, 26) இயேசு ஆட்சி செய்யும்போது அவர் உயிர்த்தெழுப்புகிற எல்லோருக்கும் சாகாமல் வாழும் வாய்ப்பு இருக்கிறது. அந்த வாய்ப்பைத் தக்கவைத்துக்கொள்ள அவர்கள் இயேசுமீது நம்பிக்கை வைக்க வேண்டும்.

“என்மீது விசுவாசம் வைக்கிறவன் இறந்தாலும் உயிர்பெறுவான்.”—யோவான் 11:25

இந்த நம்பிக்கையூட்டும் வார்த்தைகளை மார்த்தாளிடம் இயேசு சொன்னபின், “‘இதை நம்புகிறாயா?’ என்று கேட்டார். அதற்கு அவள், ‘ஆம், எஜமானே; நீங்கள்தான் கடவுளுடைய மகனாகிய கிறிஸ்து . . . என்று நம்புகிறேன்’ என்றாள்.” (யோவான் 11:26, 27) மார்த்தாளைப் போல உங்களுக்கும் உயிர்த்தெழுதலில் நம்பிக்கை இருக்கிறதா? அப்படிப்பட்ட நம்பிக்கையை வளர்க்க முதலில் கடவுள் ஏன் மனிதர்களைப் படைத்தார் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். (யோவான் 17:3; 1 தீமோத்தேயு 2:4) உயிர்த்தெழுதலைப்பற்றி யெகோவாவின் சாட்சிகளிடம் கேட்டுப் பாருங்களேன். இதைப்பற்றி பைபிளிலிருந்து உங்களுக்கு விளக்க அவர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். ▪ (w14-E 01/01)

^ பாரா. 2 இந்தப் பத்திரிகையில் பக்கம் 6-ல் “மரணம் வாழ்க்கையின் முற்றுப்புள்ளியல்ல!” என்ற கட்டுரையைப் பாருங்கள்.

^ பாரா. 9 எதிர்காலத்தில் நடக்கப்போகும் உயிர்த்தெழுதலைப்பற்றி அதிகம் தெரிந்துகொள்ள பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகத்தில் அதிகாரம் 7-ஐ பாருங்கள். இது யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது. www.pr418.com-லும் இந்தப் புத்தகம் கிடைக்கும்.