அட்டைப்பட கட்டுரை | புகைப்பழக்கம்—கடவுள் என்ன நினைக்கிறார்?
புகைப்பிடிப்பதை கடவுள் எப்படிக் கருதுகிறார்?
முந்தைய கட்டுரையில் வந்த நவோகோ, இந்தப் பழக்கத்திலிருந்து எப்படி விடுபட்டார் என்பதைச் சொல்கிறார்: “கடவுள பத்தி தெரிஞ்சிகிட்டது என்னோட வாழ்க்கையையே மாத்திடுச்சு.” நவோகோ, பைபிளிலிருந்துதான் கடவுளைப் பற்றி தெரிந்துகொண்டார். புகைப் பழக்கத்தைக் குறித்து பைபிளில் நேரடியாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. * இருந்தாலும், இதைப் பற்றி கடவுள் என்ன நினைக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள பைபிள் நமக்கு உதவுகிறது. புகைப்பிடிப்பதைப் பற்றி பைபிளிலிருந்து தெரிந்துகொண்டது, இந்தப் பழக்கத்தை விட்டுவிடவும் அதில் ஈடுபடாமல் இருக்கவும் அநேகருக்கு உதவியிருக்கிறது. (2 தீமோத்தேயு 3:16, 17) சரி, புகைப் பழக்கத்தினால் வரும் மூன்று மோசமான விளைவுகளையும் இதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்பதையும் இனி சிந்திப்போம்.
புகை—அடிமையாக்கிவிடுகிறது
சிகரெட்டில் நிக்கோடின் என்ற போதைப்பொருள் மிக அதிக அளவில் இருக்கிறது; ஒருவரைப் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாக்கி விடுகிறது. நிக்கோடின் ஒருவரை சுறுசுறுப்பாகவும் செயல்பட வைக்கும், சோர்வாகவும் செயல்பட வைக்கும். புகைப்பிடிக்கும்போது நிக்கோடின் அதிகளவிலும் படுவேகமாகவும் மூளைக்குச் செல்கிறது. ஒவ்வொரு முறை புகையை இழுக்கும்போது ஒரு ‘டோஸ்’ (Dose) நிக்கோடின் உடலுக்குள் செல்கிறது. சராசரியாக, ஒரு நாளில் ஒரு சிகரெட் பாக்கெட் ஊதும் பழக்கம் இருப்பவர்கள் 200 ‘டோஸ்’ நிக்கோடினை சுவாசிக்கிறார்கள். இந்தளவு நிக்கோடின் வேறெந்த போதைப் பொருளிலும் இல்லை! நிக்கோடினுக்கு அடிமையாக இருக்கும் ஒருவரால் புகைப்பிடிக்காமல் இருக்க முடியாது; புகைப்பிடிக்காவிட்டால் கை-கால் உதறல், மனச்சோர்வு, வெறுப்பு போன்றவற்றால் அவதிப்படுவார்.
‘யாருக்கு உங்களை கீழ்ப்படுத்துகிறீர்களோ அவருக்கே நீங்கள் அடிமைகள்.’—ரோமர் 6:16
புகைக்கு அடிமையாக இருக்கும் அதேசமயத்தில், கடவுளுக்கும் கீழ்ப்பட்டிருக்க முடியுமா?
“யாருக்கு உங்களை அர்ப்பணித்துக் கீழ்ப்படுத்துகிறீர்களோ அவருக்கே நீங்கள் அடிமைகள் என்பது உங்களுக்குத் தெரியாதா?” என்று பைபிள் சொல்கிறது. (ரோமர் 6:16) புகைப்பிடிக்கும் விஷயத்திலும் இந்த வசனத்தைப் பொறுத்தலாம். புகைப்பிடிக்க வேண்டும் என்ற ஆசை ஒருவருடைய மனதை அரித்துக்கொண்டே இருந்தால் அவர் அந்த மோசமான பழக்கத்திற்கு அடிமை என்று அர்த்தம். நம் உடலை மட்டுமல்ல நம் மனதையும் சிந்தனையையும் கெடுக்கக்கூடிய பழக்கவழக்கங்களிலிருந்து நாம் விடுபட்டிருக்க வேண்டுமென யெகோவா (கடவுளுடைய பெயர்) விரும்புகிறார். (சங்கீதம் 83:18; 2 கொரிந்தியர் 7:1) யெகோவாவை அதிகமாக நேசிக்கும்... மதிக்கும்... ஒருவர் அவருக்கு முழுமனதோடு சேவை செய்ய வேண்டும் என்று ஆசைப்படுவார். ஆனால், உயிரைக் குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாக இருக்கும் ஒருவரால் எப்படி யெகோவாவுக்கு முழுமனதோடு சேவை செய்ய முடியும்? இந்த விஷயத்தைப் புரிந்திருக்கும்போது புகைப்பிடிக்கும் ஆசையை எதிர்த்து நம்மால் போராட முடியும்.
ஜெர்மனியில் வசிக்கும் ஓலாஃப், 12 வயதில் புகைப்பிடிக்க ஆரம்பித்தார். 16 வருடங்கள் அதற்கு அடிமையாக இருந்தார். சிகரெட் பிடிக்க ஆரம்பித்தபோது அதில் எந்தப் பாதிப்பும் இல்லை என்பதாக நினைத்தார். ஆனால், புகைப் பழக்கத்திற்குத் தான் எந்தளவு அடிமையாகி இருந்தார் என்பதைப் போகப்போக புரிந்துகொண்டார். அவர் சொல்கிறார், “ஒரு நாள் என்கிட்ட ஒரு சிகரெட்கூட இல்ல. எனக்கிருந்த எரிச்சல்ல, ஊதி போட்ட சிகரெட் துண்டுகளையெல்லாம் ஆஷ் ட்ரேயிலிருந்து பொறுக்கி, அதுல இருந்த புகையிலைய மட்டும் தனியா எடுத்து, நியூஸ் பேப்பர்ல வெச்சு ஒரு சிகரெட் செஞ்சேன். நான் செஞ்சத நினைச்சு எனக்கே ரொம்ப கேவலமா இருந்துச்சு.” பிறகு, அவரால் எப்படி இந்தப் பழக்கத்திலிருந்து விடுபட முடிந்தது? ஓலாஃப் சொல்கிறார்,
“யெகோவாவ பிரியப்படுத்தணும்னு நினைச்சதுதான் அதுக்கு முக்கிய காரணம். நம்ம மேல யெகோவாவுக்கு இருக்கிற அன்பும் அவர் தர நம்பிக்கையும்தான் அந்த கெட்ட பழக்கத்துல இருந்து ஒரேடியா விடுபட எனக்கு உதவுச்சு.”புகை—உடலைக் கெடுக்கிறது
டொபாக்கோ அட்லஸ் புத்தகம் சொல்கிறது, “சிகரெட் பிடிப்பது . . . உடல் உறுப்புகள் ஒவ்வொன்றையும் கெடுத்துவிடுகிறது. பல நோய்களுக்குக் காரணமாக இருப்பதோடு உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கிறது. இது அறிவியல் ரீதியாகவும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.” புகைப்பிடிப்பது புற்றுநோய், இருதயக் கோளாறு, நுரையீரல் பாதிப்பு போன்ற தொற்றாத நோய்களை ஏற்படுத்துகிறது. காசநோய் (டி.பி) போன்ற தொற்று நோய்களையும் ஏற்படுத்துகிறது, இதனால் அநேகர் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு (WHO) சொல்கிறது.
“உன் கடவுளாகிய யெகோவாமீது உன் முழு இருதயத்தோடும் உன் முழு மூச்சோடும் உன் முழு மனதோடும் அன்பு காட்ட வேண்டும்.” —மத்தேயு 22:37
உடலைக் கெடுக்கும் பழக்கத்தில் ஈடுபட்டுக்கொண்டே, கடவுள்மீதும் அன்பு காட்ட முடியுமா?
நம்முடைய உயிரையும் உடலையும் திறமைகளையும் எப்படிப் பயன்படுத்த வேண்டுமென யெகோவா தேவன் பைபிளின் மூலம் நமக்குச் சொல்லிக்கொடுக்கிறார். அதனால்தான் அவருடைய மகன் இயேசு, “உன் கடவுளாகிய யெகோவாமீது உன் முழு இருதயத்தோடும் உன் முழு மூச்சோடும் உன் முழு மனதோடும் அன்பு காட்ட வேண்டும்” என்று சொன்னார். (மத்தேயு 22:37) நம் உயிரையும் உடலையும் நல்ல விதத்தில் பயன்படுத்த வேண்டும், அவற்றிற்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார். யெகோவாவையும் அவருடைய வாக்குறுதிகளையும் பற்றி நாம் தெரிந்துகொள்ளும்போது அவர் நமக்காகச் செய்திருக்கும் எல்லாவற்றையும் உயர்வாக மதிப்போம். உடலுக்குக் கேடு உண்டாக்கும் எதையும் செய்யாமல் இருக்க இது நமக்கு உதவும்.
இந்தியாவைச் சேர்ந்த ஜெயவந்த் என்கிற டாக்டர் 38 வருடங்களாகப் புகைப்பிடித்துக்கொண்டிருந்தார். அவர் சொன்னார், “புகைப்பிடிக்கிறதால வர கெடுதிகள பத்தி மருத்துவ புத்தகங்கள்ல படிச்சிருக்கேன். என்கிட்ட வந்த நோயாளிங்ககிட்ட புகைப்பிடிக்கிறது தப்புன்னு சொல்லியிருக்கேன். ஆனா, அஞ்சு-ஆறு தடவ முயற்சி செஞ்சும் என்னாலயே அந்த பழக்கத்த விடமுடியல.” கடைசியில் அவர் எப்படி அந்தப் பழக்கத்தை விட்டார்? “பைபிள் படிப்புதான் எனக்கு உதவுச்சு. யெகோவாவ சந்தோஷப்படுத்தணும்னு நினைச்சதால அந்த பழக்கத்த உடனடியா விட்டுட்டேன்” என்கிறார் ஜெயவந்த்.
புகை—மற்றவர்களுக்கும் கேடு விளைவிக்கிறது
சிகரெட் பிடிப்பவர் வெளியிடும் புகையும் சரி சிகரெட் எரியும்போது வரும் புகையும் சரி, இரண்டுமே ஆபத்தானது. அந்தப் புகையை வெறுமனே சுவாசித்தால்கூட புற்றுநோயும் மற்ற நோய்களும் நம்மைத் தாக்கும். ஒவ்வொரு வருடமும் பெண்கள், குழந்தைகள் என 6,00,000 பேர் இதனால் மரிக்கிறார்கள். “புகையைச் சுவாசிப்பவர்களால் அதனுடைய பாதிப்புகளிலிருந்து தப்பிக்க முடியாது” என்பதாக உலக சுகாதார அமைப்பு அறிக்கையிட்டுள்ளது.
“உன்மீது நீ அன்பு காட்டுவதுபோல்சக மனிதர்மீதும் அன்பு காட்ட வேண்டும்.”—மத்தேயு 22:39
நீங்கள் வெளியிடும் புகையை உங்கள் அருகில் இருப்பவர்களும் குடும்பத்தாரும் சுவாசித்தால் அவர்களை நீங்கள் நேசிக்கிறீர்கள் என்று சொல்ல முடியுமா?
இயேசு குறிப்பிட்ட இரண்டு முக்கியமான கட்டளைகளில் இரண்டாவது கட்டளை, “உன்மீது நீ அன்பு காட்டுவதுபோல் மத்தேயு 22:39) சக மனிதர்களை அதாவது நம் குடும்பத்தாரை, நண்பர்களை, நம்மைச் சுற்றி இருப்பவர்களை நேசிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை இயேசு இந்த வசனத்தில் காட்டுகிறார். நமக்கிருக்கும் கெட்ட பழக்கம் நமக்கு நெருக்கமானவர்களைப் பாதிக்கிறது என்றால், சக மனிதர்மீது அன்பு காட்டுகிறோம் என்று சொல்ல முடியுமா? மற்றவர்கள் மீது நமக்கு உண்மையான அன்பு இருந்தால், “ஒவ்வொருவனும் தனக்குப் பிரயோஜனமானதை நாடாமல், மற்றவர்களுக்குப் பிரயோஜனமானதையே நாட வேண்டும்” என்ற பைபிள் அறிவுரையை நிச்சயம் பின்பற்றுவோம்.—1 கொரிந்தியர் 10:24.
சக மனிதர்மீதும் அன்பு காட்ட வேண்டும்” என்பதாகும்! (ஆர்மீனியாவில் இருக்கும் ஆர்மென் சொல்கிறார், “நான் புகைப்பிடிச்சதால என்னோட குடும்பத்துல இருந்தவங்க ரொம்பவே பாதிக்கப்பட்டாங்க. நான் அதை நிறுத்தணும்னு என்கிட்ட கெஞ்சினாங்க. என்னோட கெட்ட பழக்கம் அவங்கள பாதிக்கும்னு நான் ஒத்துக்கவே இல்ல. ஆனா நான் பைபிள் படிச்சதுனாலயும் யெகோவாவ நேசிக்க ஆரம்பிச்சதுனாலயும் புகைப்பிடிகிற பழக்கத்த விடமுடிஞ்சது. அது என்னை மட்டும் இல்ல என்னை சுத்தி இருக்கிறவங்களையும் பாதிக்குதுனு நல்லா புரிஞ்சுகிட்டேன்.”
புகைக்கு நிரந்தர தீர்வு
தீய பழக்கத்திலிருந்து விடுபட ஓலாஃப், ஜெயவந்த், ஆர்மெனுக்கு பைபிள் உதவியது. புகைப்பிடிப்பது உடல்நலத்திற்குக் கேடு என்பதைத் தெரிந்துகொண்டது மட்டுமே அந்தப் பழக்கத்தை விட்டுவிட அவர்களுக்கு உதவவில்லை. யெகோவாமீது அவர்களுக்கு இருந்த அன்பும் அவரைப் பிரியப்படுத்த வேண்டும் என்ற ஆசையும்தான் இதற்கு முக்கிய காரணமாக இருந்தது. அன்பைப் பற்றி 1 யோவான் 5:3 சொல்கிறது: “நாம் கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பதே அவர்மீது அன்பு காட்டுவதாகும்; அவருடைய கட்டளைகள் பாரமானவை அல்ல.” பைபிள் புத்திமதிகளைக் கடைப்பிடிப்பது சுலபமல்ல; ஆனால், கடவுள்மீது ஆழமான அன்பு இருக்கும்போது அவருக்குக் கீழ்ப்படிவது நமக்குச் சுலபமாக இருக்கும்.
புகைப்பிடிப்பதிலிருந்து மக்களை விடுவிக்க, அதற்கு அடிமையாகாமல் இருக்க, லட்சக்கணக்கான மக்களுக்கு யெகோவா உதவுகிறார். (1 தீமோத்தேயு 2:3, 4) சீக்கிரத்தில், தம் மகன் இயேசு கிறிஸ்துவின் மூலமாக இந்தப் பூமியை ஆட்சி செய்வார். புகையிலைக்கு பல கோடி மக்களை அடிமையாக்கி இருக்கும் பேராசைப்பிடித்த வியாபாரிகளை அப்போது அடியோடு அழித்துவிடுவார். மக்களின் உயிரைக் குடிக்கும் இந்தப் பழக்கத்தை நிரந்தரமாக நீக்கிவிடுவார்; இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும் துடைத்தழித்துவிடுவார். அப்போது, அவருடைய மக்கள் என்றென்றும் ஆரோக்கியமாக வாழ்வார்கள்!—ஏசாயா 33:24; வெளிப்படுத்துதல் 19:11, 15.
நீங்கள் புகைப் பழக்கத்தை விடமுடியாமல் தவிக்கிறீர்களா? சோர்ந்துவிடாதீர்கள்! யெகோவாவை நேசித்தால்... புகைப்பிடிப்பதை அவர் எப்படிக் கருதுகிறார் என்பதைப் புரிந்துகொண்டால்... இந்தப் பழக்கத்திலிருந்து உங்களால் விடுபட முடியும். யெகோவாவின் சாட்சிகள் உங்களுக்கு உதவ தயாராக இருக்கிறார்கள்! நீங்கள் விரும்பினால், உங்களை நேரில் சந்தித்து பைபிளில் இருக்கும் நடைமுறையான ஆலோசனைகளைப் பின்பற்ற உங்களுக்கு உதவுவார்கள். இந்தப் பழக்கத்திலிருந்து விடுபட தேவையான பலத்தையும் சக்தியையும் யெகோவா உங்களுக்கு நிச்சயம் கொடுப்பார்; அதில் சந்தேகமே வேண்டாம்!—பிலிப்பியர் 4:13. ▪ (w14-E 06/01)
^ பாரா. 3 புகைப்பிடிப்பதில் சிகரெட், பீடி, சுருட்டு, சிகரெட் குழாய்கள் போன்றவற்றைப் பயன்படுத்துவது உட்படும். என்றாலும் இங்கு சிந்திக்கப்படும் ஆலோசனைகள் பாக்கு, மூக்குப்பொடி, நிக்கோடின் கலந்திருக்கும் எலக்டிரானிக் சிகரெட்டுகள் போன்றவற்றிற்கும் பொருந்தும்.