பைபிள் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது
என் வாழ்க்கையை மாற்றிய பதில்கள்
-
பிறந்த வருஷம்: 1987
-
பிறந்த இடம்: அஜர்பைஜான்
-
என்னை பற்றி: அப்பா முஸ்லிம், அம்மா யூத மதத்தை சேர்ந்தவங்க
என் கடந்த காலம்:
அஜர்பைஜான்-ல (Azerbaijan) இருக்கிற பாகு (Baku) என்ற இடத்தில நான் பிறந்தேன். என்னையும் அக்காவையும் சேர்த்து எங்க அப்பா அம்மாவுக்கு 2 பிள்ளைங்க. எங்க அப்பா ஒரு முஸ்லிம், அம்மா யூத மதத்தை சேர்ந்தவங்க. அப்பா-அம்மா வேற வேற மதத்தில இருந்தாலும், அவங்களுக்குள்ள எந்த பிரச்சினையும் வந்ததில்ல, ஒருத்தர் மேல ஒருத்தர் ரொம்ப அன்பு வைச்சிருந்தாங்க. நோம்பு இருக்கிற மாசத்தில அப்பாவுக்கு வேண்டியதெல்லாம் அம்மா செய்வாங்க. எங்க அம்மா பஸ்கா பண்டிகையை கொண்டாடும்போது அப்பாவும் எதுவும் சொல்ல மாட்டார். எங்க வீட்டுல குர்ஆன், தோரா, பைபிள்னு மூணுமே இருக்கும்.
‘நீங்க எந்த மதத்தை சேர்ந்தவங்க’னு யாராவது என்கிட்ட கேட்டா, ‘நான் ஒரு முஸ்லிம்’னு சொல்வேன். கடவுள் இருக்காரா இல்லையானு எனக்கு சந்தேகம் வந்ததில்லை. ஆனா, மனசுல சில கேள்வி இருந்தது. ‘மனுஷனை கடவுள் ஏன் படைச்சார்? வாழும்போது அவன் கஷ்டப்படுறது போதாதுனு நரகத்துலயும் போய் கஷ்டப்படணுமா? அதுக்குதான் அவனை படைச்சாரா?’னு அடிக்கடி யோசிப்பேன். ‘நல்லது நடந்தாலும் கெட்டது நடந்தாலும் அதுக்கு கடவுள்தான் காரணம்னு மக்கள் சொல்றாங்க. அப்படினா, நாம கஷ்டப்படுறதை பார்த்து கடவுள் சந்தோஷப்படுறாரா?’னு யோசிப்பேன்.
முஸ்லிம்கள் பொதுவா ஒருநாள்ல 5 தடவை நமாஸ் பண்ணுவாங்க; 12 வயசுல இருந்து நானும் நமாஸ் பண்ண ஆரம்பிச்சேன். என்னையும் அக்காவையும், யூதர்கள் நடத்துன ஒரு ஸ்கூல்ல அப்பா சேர்த்தார். அங்க எபிரெய மொழியையும் தோராவையும் பத்தி எங்களுக்கு சொல்லிக் கொடுத்தாங்க. ஸ்கூல்ல தினமும் காலையில நாங்க யூதர்கள் செய்ற மாதிரி ஜெபம் செய்வோம். அதனால, ஸ்கூலுக்கு போறதுக்கு முன்னாடியே நான் வீட்டுல நமாஸ் பண்ணிட்டு போவேன்.
என் மனசுல இருந்த கேள்விகளுக்கு பதில் எப்படியாவது தெரிஞ்சுக்கணும்னு நினைச்சேன். “கடவுள் ஏன் மனுஷங்களை படைச்சார்? முஸ்லீமா இருக்கிற எங்க அப்பாவை கடவுளுக்கு பிடிக்குமா?”னு என் ஸ்கூல்ல இருக்கிற ரபீக்கள்கிட்ட அடிக்கடி கேட்பேன். (ரபீக்கள், யூத மதத்தை பத்தி சொல்லிக் கொடுக்கிறவங்க.) அவங்க சொன்ன பதில் நம்புற மாதிரியும் இல்ல; நியாயமாவும் எனக்கு தோணல.
பைபிள் என் வாழ்க்கையையே மாத்திடுச்சு:
2002-ல நாங்க ஜெர்மனிக்கு குடிமாறிப்போன ஒரே வாரத்துல, எங்க அப்பாவுக்கு பக்கவாதம் வந்து கோமா நிலைக்கு போயிட்டார். என் குடும்பத்தில இருக்கிற எல்லாரும் நல்லா இருக்கணும், அவங்களுக்கு எதுவும் ஆக கூடாதுனு எப்பவுமே கடவுள்கிட்ட வேண்டிக்குவேன். நாம வாழ்றதும் சாகுறதும் கடவுள் கையிலதான் இருக்குனு நான் நம்புனேன். அதனால, ‘என் அப்பாவை எப்படியாவது காப்பாத்துங்க’னு கடவுள்கிட்ட கெஞ்சி
கேட்டேன். இந்த சின்ன பொண்ணோட ஆசைய நிறைவேத்துறது கடவுளுக்கு ஒரு பெரிய விஷயமே இல்லனு நினைச்சேன். கடவுள் நிச்சயமா எங்க அப்பாவை காப்பாத்துவார்னு நம்புனேன். ஆனா எங்க அப்பா இறந்துட்டார். அதுக்கப்புறம் எனக்கு கடவுள் நம்பிக்கையே இல்லாம போச்சு.நான் அவ்வளவு கெஞ்சியும் கடவுள் எனக்கு உதவி செய்யாததை நினைச்சு மனசு ஒடஞ்சுபோயிட்டேன். ‘ஒண்ணு, கடவுள்னு ஒருத்தர் இல்லாம இருக்கணும்; அப்படியில்லனா, நான் வேண்டிக்கிட்ட விதம் தப்பா இருக்கணும்’னு யோசிச்சேன். அதுக்கப்புறம் நான் நமாஸ் பண்றதையே நிறுத்திட்டேன். மத்த மதத்திலயும் எனக்கு நம்பிக்கை இல்ல. கடைசியில, கடவுளே இல்லன்ற முடிவுக்கு வந்துட்டேன்.
சில மாசத்துக்கு அப்புறம் யெகோவாவின் சாட்சிகள் பைபிளை பத்தி சொல்ல எங்க வீட்டுக்கு வந்தாங்க. கிறிஸ்தவ மதத்தை பத்தி எங்களுக்கு அவ்வளவு நல்ல அபிப்பிராயம் இல்ல. அதனால, நானும் அக்காவும் அவங்க மனசை நோகடிக்காம, அவங்க நம்புறது தப்புனு புரிய வைக்க நினைச்சோம். ‘கடவுளை தவிர, வேற யாரையும் வணங்க கூடாது, சிலைகளையும் வணங்க கூடாதுனு பத்துக் கட்டளைகள் சொல்லுது. அப்படி இருக்கும்போது இயேசுவை, மரியாளை, சிலுவையை மத்த சிலைகளை வணங்குறது சரியா’னு கேட்டோம். அதுக்கு யெகோவாவின் சாட்சிகள் சொன்ன பதில் எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்தது. கிறிஸ்தவங்க, சிலைகளை வணங்கக் கூடாதுனும் கடவுளை தவிர, வேற யார்கிட்டையும் ஜெபம் செய்ய கூடாதுனும் அவங்க பைபிள்ல இருந்தே காட்டுனாங்க.
அப்புறம் நாங்க அவங்ககிட்ட, ‘திரித்துவத்தை பத்தி என்ன நினைக்கிறீங்க? ஒருவேளை இயேசுவை கடவுள்னு சொன்னா, கடவுளால எப்படி பூமியில வாழ முடியும், மனுஷங்களால எப்படி கடவுளையே கொல்ல முடியும்’னு கேட்டோம். அதுக்கு அவங்க பைபிள்ல இருந்தே மறுபடியும் பதில் சொன்னாங்க. ‘இயேசு, கடவுளுக்கு சமமானவர் இல்ல, இயேசுவுக்கும் மேல ஒருத்தர் இருக்கார், அதனால நாங்க திரித்துவத்தை நம்புறது இல்ல’னு சொன்னாங்க. அதை கேட்டதும், ‘இவங்க என்ன வித்தியாசமான கிறிஸ்தவங்களா இருக்காங்களே!’னு நான் யோசிச்சேன்.
இன்னும் என் மனசுல சில கேள்விகள் இருந்தது. ‘நமக்கு வர்ற கஷ்டங்களை கடவுள் ஏன் தடுக்கிறது இல்ல? நாம ஏன் சாகுறோம்?’னு நான் அவங்ககிட்ட கேட்டேன். நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு என்ற புத்தகத்தில இருந்து, நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் காட்டுனாங்க. * அதுக்கப்புறம் நான் அவங்ககிட்ட பைபிள் படிக்க ஆரம்பிச்சேன்.
என் மனசுல இருந்த கேள்விகளுக்கு பைபிள் படிப்புல பதில் தெரிஞ்சுக்கிட்டேன். கடவுளுடைய பெயர் ‘யெகோவா’னும் அவர் நம்ம மேல ரொம்ப அன்பு வெச்சிருக்கார்னும் நான் தெரிஞ்சுக்கிட்டேன். (சங்கீதம் 83:17; 1 யோவான் 4:8) தான் மட்டும் இருந்தா போதும்னு கடவுள் நினைக்காம, நம்ம எல்லாரையும் படைச்சிருக்கார். கஷ்டங்களை கடவுள் விட்டுவெச்சிருந்தாலும், நாம கஷ்டப்படுறதை பார்க்க அவருக்கு பிடிக்கலை. அதனால, ரொம்ப சீக்கிரத்தில கஷ்டமே இல்லாத வாழ்க்கைய நமக்கு கொடுக்கப்போறார். ஆதாம்-ஏவாள் செஞ்ச தப்புனாலதான் மனுஷங்க இன்னைக்கு கஷ்டப்படுறாங்க, இறந்தும் போறாங்க. (ரோமர் 5:12) என் அப்பாவும் அதனாலதான் இறந்துட்டார். ரொம்ப சீக்கிரத்தில கடவுள் இறந்தவங்களை உயிரோடு கொண்டு வரப்போறார். கஷ்டத்தை எல்லாம் தீர்க்க போறார்.—அப்போஸ்தலர் 24:15.
என் மனசில இருக்கிற எல்லா கேள்விக்கும் பைபிள்ல இருந்தே திருப்தியான பதில் கிடைச்சுது. அதனால, நான் மறுபடியும் கடவுளை நம்ப ஆரம்பிச்சேன். யெகோவாவின் சாட்சிகளோடு பழகும்போது அவங்களை பத்தி நல்லா தெரிஞ்சுக்கிட்டேன். அவங்க உலகம் முழுசும் இருந்தாலும் ஒரே குடும்பமா ஒத்துமையா இருக்குறத பார்த்து நான் ரொம்ப ஆச்சரியப்பட்டேன். (யோவான் 13:34, 35) யெகோவாவுக்கு மட்டும்தான் சேவை செய்யணும்னு முடிவு பண்ணேன். அதனால, ஜனவரி 8, 2005-ல நானும் ஒரு யெகோவாவின் சாட்சி ஆனேன்.
எனக்கு கிடைச்ச பலன்:
பைபிள் சொல்ற விஷயங்கள் எல்லாம் எதார்த்தமா இருந்ததுனால நான் வாழ்க்கைய வித்தியாசமா பார்க்க ஆரம்பிச்சேன். பைபிள்ல இருந்து நிறைய விஷயங்களை தெரிஞ்சுக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருந்தது. இறந்தவங்க மறுபடியும் உயிரோட வருவாங்கனு பைபிள்ல இருந்து படிச்சப்போ நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன். எங்க அப்பாவை நான் திரும்பவும் பார்க்க ஆசையா இருக்கேன்.—யோவான் 5:28, 29.
எனக்கு கல்யாணமாகி 6 வருஷம் ஆகுது. என் கணவர் பேர் ஜானத்தன். நாங்க ரெண்டு பேரும் சந்தோஷமா யெகோவாவுக்கு சேவை செய்றோம். பைபிள்ல இருக்கிற விஷயங்கள் எல்லாம் உண்மைனு புரிஞ்சிக்கிட்டோம். யெகோவாவை பத்தி தெரிஞ்சுக்கிட்டதை நாங்க ரொம்ப பெரிய பாக்கியமா நினைக்கிறோம். நாங்க தெரிஞ்சுக்கிட்டதை எங்களால மத்தவங்ககிட்ட சொல்லாம இருக்க முடியாது. யெகோவாவின் சாட்சிகள் மத்த கிறிஸ்தவங்க மாதிரி இல்ல. இவங்கதான் கடவுளை உண்மையா வணங்குற மக்கள். ▪ (w15-E 01/01)
^ பாரா. 15 இது யெகோவாவின் சாட்சிகள் வெளியிட்ட புத்தகம். இப்போ, இந்த புத்தகத்தை ப்ரின்ட் செய்றதில்லை.