ஜெபம் செய்வது எப்படிப் பிரயோஜனமாக இருக்கும்?
ஜெபம் செய்வதால் நமக்கு ஏதாவது நன்மை இருக்கிறதா? கண்டிப்பாக இருக்கிறது என்று பைபிள் சொல்கிறது. கடவுளுடைய உண்மையுள்ள ஊழியர்கள் செய்த ஜெபங்கள் அவர்களுக்கு ரொம்பப் பிரயோஜனமாக இருந்தன. (லூக்கா 22:40; யாக்கோபு 5:13) சொல்லப்போனால், ஜெபம் செய்யும்போது நமக்கு நிறைய நன்மைகள் கிடைக்கின்றன. நம்முடைய ஆன்மீகப் பசி தீரும், மனதளவிலும் உடலளவிலும்கூட நமக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். எப்படி?
உதாரணத்துக்கு, உங்கள் பிள்ளைக்கு ஒரு பரிசு கிடைப்பதாக வைத்துக்கொள்ளுங்கள். அந்த பரிசுக்கான நன்றியை மனதுக்குள் உணர்ந்தாலே போதும் என்று உங்கள் பிள்ளையிடம் சொல்வீர்களா? அல்லது, அந்த நன்றியை வாய்விட்டு சொல்ல கற்றுக்கொடுப்பீர்களா? நம்முடைய உணர்ச்சிகளை வார்த்தைகளில் சொல்லும்போதுதான் அந்த உணர்ச்சிகளுக்கு அதிக கவனம் செலுத்தி, அதைப் பலப்படுத்த முடியும். கடவுளிடம் பேசும் விஷயத்திலும் இதுதான் உண்மை. அதற்குச் சில உதாரணங்களை இப்போது பார்க்கலாம்.
நன்றி தெரிவிக்கும் ஜெபம். நமக்கு நடக்கிற நல்ல விஷயங்களுக்காக நம் தகப்பன் யெகோவாவுக்கு நன்றி சொல்லும்போது, அவர் தரும் ஆசீர்வாதங்கள் நம் கண்முன்னால் வந்து நிற்கும். அப்போது, நம் மனதில் நன்றி ஊற்றெடுக்கும், ரொம்ப சந்தோஷமாகவும் நம்பிக்கையான மனநிலையோடும் இருப்போம்.—பிலிப்பியர் 4:6.
உதாரணம்: தன்னுடைய ஜெபத்தைக் கேட்டு அதற்குப் பதில் கொடுத்ததற்காக தன்னுடைய அப்பாவுக்கு இயேசு நன்றி சொன்னார்.—யோவான் 11:41.
மன்னிப்பு கேட்டு செய்யும் ஜெபம். மன்னிப்பு கேட்டு கடவுளிடம் ஜெபம் செய்யும்போது நம்முடைய மனசாட்சியைப் பக்குவப்படுத்த முடிகிறது. உண்மையிலேயே மனம் திருந்தியதைக் காட்ட முடிகிறது. நாம் செய்த தவறு எவ்வளவு மோசமானது என்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது. குற்ற உணர்விலிருந்தும் நம்மால் விடுபட முடிகிறது.
உதாரணம்: தாவீது, தான் செய்த தவறை நினைத்து மனம் வருந்தி, ஜெபத்தில் மன்னிப்பு கேட்டார்.—சங்கீதம் 51.
வழிநடத்துதலுக்காகவும், ஞானத்துக்காகவும் செய்யும் ஜெபம். நல்ல தீர்மானங்களை எடுப்பதற்கு உதவும்படி அல்லது அதற்குத் தேவையான ஞானத்தைத் தரும்படி யெகோவாவிடம் ஜெபம் செய்வது, உண்மையிலேயே மனத்தாழ்மை உள்ளவர்களாக இருக்க நமக்கு உதவுகிறது. இது நம்முடைய வரம்புகளை ஞாபகத்தில் வைத்திருக்கவும் நம்முடைய பரலோக அப்பாவான யெகோவாமேல் நம்பிக்கையைப் பலப்படுத்தவும் உதவுகிறது.—நீதிமொழிகள் 3:5, 6.
உதாரணம்: இஸ்ரவேலர்களை ஆட்சி செய்வதற்கு வழிநடத்துதலையும் ஞானத்தையும் கேட்டு சாலொமோன் மனத்தாழ்மையோடு ஜெபம் செய்தார்.—1 ராஜாக்கள் 3:5-12.
இக்கட்டில் தவிக்கும்போது செய்யும் ஜெபம். வேதனையில் தவிக்கும்போது, நம் மனதில் இருக்கிற கவலைகளை எல்லாம் யெகோவாவிடம் கொட்டி ஜெபம் செய்தால் நமக்கு மன நிம்மதி கிடைக்கும். அப்போது, நம்மேல் நம்பிக்கை வைப்பதற்குப் பதிலாக யெகோவாமேல் நம்பிக்கை வைப்போம்.—சங்கீதம் 62:8.
உதாரணம்: எதிரியின் பெரிய படை தாக்க வந்த சமயத்தில் ஆசா ராஜா ஜெபம் செய்தார்.—2 நாளாகமம் 14:11.
கஷ்டத்தில் தவிக்கிறவர்களின் நலனுக்காக செய்யும் ஜெபம். இப்படிப்பட்ட ஜெபங்கள் சுயநலத்தை விரட்டியடித்து, கரிசனையையும் அனுதாபத்தையும் காட்ட நமக்கு உதவும்.
உதாரணம்: இயேசு தன்னுடைய சீஷர்களுக்காக ஜெபம் செய்தார்.—யோவான் 17:9-17.
புகழ் சேர்க்கும் ஜெபம். யெகோவாவுடைய அற்புத செயல்களையும் குணங்களையும் பற்றி ஜெபத்தில் புகழ்ந்து சொல்லும்போது அவர்மேல் இருக்கிற மதிப்பும் நன்றியுணர்வும் அதிகமாகும். இப்படிப்பட்ட ஜெபங்கள், நம் கடவுளாகவும் தகப்பனாகவும் இருக்கிற யெகோவாவிடம் நெருங்கிப் போக நமக்கு உதவும்.
உதாரணம்: கடவுளுடைய படைப்புகளைப் பார்த்து தாவீது புகழ்ந்து பாடினார்.—சங்கீதம் 8.
ஜெபம் செய்வதால் கிடைக்கிற இன்னொரு ஆசீர்வாதம் என்னவென்றால், “எல்லா சிந்தனைக்கும் மேலான தேவசமாதானம்” நமக்குக் கிடைக்கும். (பிலிப்பியர் 4:7) கஷ்டங்கள் நிறைந்த இந்த உலகத்தில் மன நிம்மதி கிடைப்பது, உண்மையிலேயே ஒரு பெரிய ஆசீர்வாதம்தான். இதனால், உடலளவிலும் நமக்கு நிறைய நன்மைகள் கிடைக்கின்றன. (நீதிமொழிகள் 14:30) ஆனால், இது நம்முடைய சொந்த முயற்சியால்தான் கிடைக்கிறதா? இதில் வேறு என்ன முக்கியமான விஷயம் உட்பட்டிருக்கிறது?
ஜெபம் செய்யும்போது உடலளவிலும் மனதளவிலும், எல்லாவற்றுக்கும் மேலாக ஆன்மீக விதத்திலும் நிறைய நன்மைகள் கிடைக்கின்றன