Skip to content

அழியாத ஆவி ஒன்றுண்டா?

அழியாத ஆவி ஒன்றுண்டா?

அழியாத ஆவி ஒன்றுண்டா?

மரணத்திற்குப்பின் வாழ்க்கை இருக்கிறதா? இக்கேள்வி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே மனிதகுலத்தை குழப்பமடையச் செய்திருக்கிறது. காலங்காலமாக எல்லா சமுதாயத்தினரும் இந்த விஷயத்தைப் பற்றி ஆழ்ந்து யோசித்து, பல்வேறு நம்பிக்கைகளை உருவாக்கியிருக்கின்றனர்.

ஒருவர் மரிக்கையில் “ஆவி” என்ற ஒன்று தப்பிப்பிழைப்பதாக இந்தியாவிலும் உலகின் பல பாகங்களிலும் உள்ள அநேகர் நம்புகின்றனர். ஒருவருக்குள் இருக்கும் ஏதோவொன்று மரணத்தின்போது உடலை விட்டுப் பிரிந்து தொடர்ந்து உயிர் வாழ்கிறதா? உயிருள்ள ஒருவரிடம் இருக்கும் ஆவி என்பது என்ன? நாம் மரிக்கும்போது அதற்கு என்ன சம்பவிக்கிறது? இந்தக் கேள்விகளுக்கு கடவுளுடைய ஏவுதலால் எழுதப்பட்ட வார்த்தையாகிய பைபிள் உண்மையான பதில்களை, திருப்தியளிக்கும் பதில்களை தருகிறது.

ஆவி என்றால் என்ன?

“ஆவி” என பைபிளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள வார்த்தைகள் அடிப்படையில் ‘சுவாசத்தை’ அர்த்தப்படுத்துகின்றன. ஆனால் சுவாசித்தல் என்ற செயலைவிட இதில் அதிக அர்த்தம் பொதிந்திருக்கிறது. உதாரணமாக, யாக்கோபு என்ற பைபிள் எழுத்தாளர் இவ்வாறு கூறுகிறார்: “ஆவியில்லாத சரீரம் செத்ததாயிருக்கிறது.” (யாக்கோபு 2:26) ஆகவே, சரீரத்தை உயிர்ப்பூட்டுவதே ஆவி.

இந்த உயிர்ப்பு சக்தி வெறும் சுவாசமாகவோ நுரையீரலுக்குள் சென்று வரும் காற்றாகவோ இருக்க முடியாது. ஏன்? ஏனென்றால் சுவாசம் நின்றுவிட்ட பிறகும் உடலிலுள்ள செல்களில் சிறிது நேரத்திற்கு​—⁠தஉவர்ல்டு புக் என்ஸைக்ளோபீடியா கூறுகிறபடி, “பல நிமிடங்களுக்கு”​—⁠உயிர் தங்கியிருக்கிறது. இதனால் மறு உயிர்விப்பு சிகிச்சைமுறை (resuscitation) பலன் தருகிறது, உடலுறுப்புகளை ஒருவரிடமிருந்து எடுத்து மற்றவருக்கு பொருத்தவும் முடிகிறது. ஆனால் உடல் செல்களில் இருக்கும் இந்த உயிர்ப்பும் அடங்கிவிட்டால் மீண்டும் உயிருக்குக் கொண்டுவர எடுக்கும் எந்த முயற்சியும் வீணே. உலகமே திரண்டுவந்து சுவாசத்தைக் கொடுத்தாலும் ஒரு செல்லைக்கூட உயிர்ப்பிக்க முடியாது. ஆகவே, ஆவி என்பது செல்களை உயிருடன் வைத்துக்கொள்ளும் காணமுடியாத உயிர்சக்தி அல்லது உயிர்ப்பு. சுவாசிப்பதன் மூலம் இந்த உயிர்சக்தி காக்கப்படுகிறது.​—யோபு 34:14, 15.

இந்த ஆவி, மனிதரிடம் மட்டும்தான் செயல்படுகிறதா? இந்த விஷயத்தை சரியாக புரிந்துகொள்வதற்கு பைபிள் நமக்கு உதவுகிறது. ஞானியாகிய சாலொமோன் ராஜா இவ்வாறு எழுதினார்: “மனுஷனுடைய ஆவி உயர ஏறுகிறதோ என்றும் மிருகங்களின் ஆவி கீழே பூமியில் இறங்குகிறதோ என்றும் அறிகிறவன் யார்?” (பிரசங்கி 3:21, திருத்திய மொழிபெயர்ப்பு) ஆகவே, மனிதருக்கு மட்டுமல்ல, மிருகங்களுக்கும் ஆவி இருப்பதாக சொல்லப்படுகிறது. அது எப்படி?

இந்த ஆவியை அல்லது உயிர் சக்தியை ஓர் இயந்திரத்தில் அல்லது கருவியில் பாயும் மின் சக்திக்கு ஒப்பிடலாம். காண முடியாத மின்சாரத்தைக் கொண்டு பல உபகரணங்களை பல விதங்களில் செயல்பட வைக்கலாம். உதாரணமாக, மின்சாரத்தால் ஓர் அடுப்பு வெப்பத்தை உண்டாக்குகிறது, கம்ப்யூட்டர் தகவல்களை அலசுகிறது, கணக்குகளை செய்கிறது, டிவியோ காட்சிகளையும் ஒலியையும் உருவாக்குகிறது. ஆனால் அந்த மின்சக்தி எந்த உபகரணங்களை இயக்குவிக்கிறதோ அவற்றிற்குரிய இயல்புகளை ஏற்பதில்லை. அது வெறுமனே சக்தியாகவே இருக்கிறது. அவ்வாறே உயிரை இயங்க வைக்கும் உயிர்சக்தியும் ஜீவராசிகளுக்குரிய எந்த இயல்பையும் ஏற்பதில்லை. அதற்கு எந்தவொரு பண்போ சிந்திக்கும் திறமையோ இல்லை. மனிதருக்கும் மிருகங்களுக்கும் “ஆவி ஒன்றே.” (பிரசங்கி 3:19, NW) ஆகவே, ஒருவர் மரிக்கையில் அவருடைய ஆவி மற்றொரு உலகிற்குச் சென்று ஓர் ஆவி ஆளாக ஜீவிப்பதில்லை.

அப்படியானால், மரித்தவர்களின் நிலை என்ன? ஒருவர் மரிக்கையில் ஆவிக்கு என்ன சம்பவிக்கிறது?

“மண்ணுக்குத் திரும்புவாய்”

முதல் மனிதனாகிய ஆதாம் வேண்டுமென்றே கடவுளுடைய கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் போனபோது, யெகோவா அவனிடம் சொன்னார்: “நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய்.” (ஆதியாகமம் 3:19) ஆதாமை யெகோவா மண்ணிலிருந்து உருவாக்குவதற்கு முன்பு அவன் எங்கிருந்தான்? எங்குமே இருக்கவில்லை! அவன் இல்லவே இல்லை. ஆகவே, நீ “மண்ணுக்குத் திரும்புவாய்” என்று யெகோவா தேவன் சொன்னபோது, அவன் இறந்துவிடுவான் என்றே அர்த்தப்படுத்தினார். ஆதாம், ஆவி உலகுக்கு மாற்றப்பட மாட்டான். அவன் மரிக்கும்போது, மறுபடியும் உயிரற்றவனாக, எங்குமே இல்லாதவனாக ஆகிவிடுவான். அவனுக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை மரணம்​—⁠உயிரில்லாமை​—⁠மற்றொரு உலகிற்கு மாற்றப்படுவது அல்ல.​—ரோமர் 6:23.

மரித்த மற்றவர்களுடைய நிலை என்ன? மரித்தவர்களின் நிலையைப் பற்றி பிரசங்கி 9:​5, 10 தெளிவாக விவரிக்கிறது. அதில் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “இறந்தவர்கள் ஒன்றும் அறியார்கள்; . . . கல்லறையில் எந்த வேலையோ திட்டமோ அறிவோ அல்லது புத்திக்கூர்மையோ இல்லை.” (மொஃபட்) ஆகவே, மரணம் என்பது எங்குமே இல்லாத ஒரு நிலை. ஒருவன் மரிக்கும்போது, “அவனுடைய ஆவி பிரியும், அவன்தன் மண்ணுக்குத் திரும்புவான்; அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்துபோம்” என சங்கீதக்காரன் எழுதினார்.​—சங்கீதம் 146:4.

ஆகவே, மரித்தவர்கள் உணர்வற்றவர்கள், செயலற்றவர்கள் என்பது தெளிவாகிறது. அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது. அவர்களால் உங்களைப் பார்க்க முடியாது; நீங்கள் சொல்வதைக் கேட்க முடியாது; உங்களோடு பேசவும் முடியாது. உங்களுக்கு உதவி செய்யவும் முடியாது, தீங்கு செய்யவும் முடியாது. எனவே மரித்தவர்களைப் பற்றி துளிகூட பயப்பட வேண்டியதில்லை. ஆனால் ஒருவர் மரிக்கும் சமயத்தில், ஆவி எவ்வாறு அவரை விட்டு ‘பிரிகிறது’?

ஆவி ‘தேவனிடத்திற்கு திரும்புகிறது’

ஒருவர் மரிக்கும்போது, ‘ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கு போகிறது [“திரும்புகிறது,” NW]’ என பைபிள் குறிப்பிடுகிறது. (பிரசங்கி 12:7) அப்படியானால், ஓர் ஆவி சொல்லர்த்தமாகவே, விண்வெளியில் பயணம் செய்து கடவுளிடம் போகிறது/திரும்புகிறது என்றா அர்த்தம்? இல்லவே இல்லை! “போகிறது” அல்லது “திரும்புகிறது” என்ற வார்த்தையை பைபிள் பயன்படுத்தும் விதம் உண்மையிலேயே ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்வதைக் குறிக்க வேண்டியதில்லை. உதாரணமாக, உண்மையற்ற இஸ்ரவேலர்களிடம் இவ்வாறு கூறப்பட்டது: “என்னிடத்திற்குத் திரும்புங்கள், அப்பொழுது உங்களிடத்திற்குத் திரும்புவேன் என்று சேனைகளின் கர்த்தர் [“யெகோவா,” NW] சொல்லுகிறார்.” (மல்கியா 3:7) இஸ்ரவேலர் யெகோவாவிடம் ‘திரும்புவது,’ அவர்கள் தங்களுடைய தவறான போக்கை விட்டுவிட்டு மறுபடியும் கடவுளுடைய நீதியான வழிகளைப் பின்பற்றுவதை அர்த்தப்படுத்தியது. யெகோவா இஸ்ரவேலரிடம் ‘திரும்புவது’ என்பது மறுபடியும் தம்முடைய மக்களை அன்புடன் கவனிக்கப் போவதை அர்த்தப்படுத்தியது. இந்த இரண்டு விஷயத்திலும் ‘திரும்புவது’ என்பது மனப்பான்மையை குறிக்கிறது, சொல்லர்த்தமாகவே ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்வதை அல்ல.

அவ்வாறே, மரணத்தின்போது கடவுளிடம் ஆவி ‘போகையில்’ அல்லது ‘திரும்புகையில்’ அது உண்மையில் பூமியிலிருந்து பரலோகத்திற்குச் செல்வதில்லை. ஆவி என்பது உயிர்சக்தியே என்பதை மறந்துவிட வேண்டாம். அந்த சக்தி ஒருவரிடமிருந்து சென்றுவிட்டால், அதை மறுபடியும் அவனுக்குள் கொண்டுவரும் திறமை கடவுளுக்கு மட்டுமே உண்டு. ஆகவே ஆவி, “தேவனிடத்திற்கு போகிறது” அல்லது “திரும்புகிறது” என்று சொல்லும்போது அந்த நபருடைய எதிர்கால வாழ்க்கையைக் குறித்த எதிர்பார்ப்பு முற்றிலும் இப்போது கடவுளையே சார்ந்திருக்கிறது என்று அர்த்தம்.

உதாரணமாக, இயேசுவின் மரணத்தைக் குறித்து பைபிள் என்ன சொல்கிறது என்பதை கவனியுங்கள். சுவிசேஷக எழுத்தாளனாகிய லூக்கா இதை இவ்வாறு விளக்குகிறார்: “இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனை விட்டார்.” (லூக்கா 23:46) இயேசுவின் ஆவி அவரைவிட்டுச் சென்ற பின்பு அவர் சொல்லர்த்தமாகவே பரலோகத்திற்குச் செல்லவில்லை. ஏனென்றால் மூன்றாம் நாள்வரை இயேசு உயிர்த்தெழுப்பப்படவில்லை; அதோடு, இன்னும் 40 நாட்கள் கழித்தே பரலோகத்திற்குச் சென்றார். (அப்போஸ்தலர் 1:3, 9) ஆனால், இயேசு மரிக்கும் சமயத்தில் உறுதியான நம்பிக்கையுடன்​—⁠மறுபடியும் தம்மை உயிருக்குக் கொண்டுவர யெகோவாவுக்கு திறமை இருக்கிறது என்ற முழு நம்பிக்கையுடன்​—⁠தம்முடைய ஆவியை பிதாவின் கரங்களில் ஒப்புவித்தார்.

ஆம், கடவுளால் மட்டுமே ஒருவரை மீண்டும் உயிருக்குக் கொண்டுவர முடியும். (சங்கீதம் 104:30) எப்பேர்ப்பட்ட மகத்தான எதிர்பார்ப்பு!

ஓர் உறுதியான நம்பிக்கை

பைபிள் இவ்வாறு கூறுகிறது: ‘காலம் வருகிறது; அப்போது [“ஞாபகார்த்த,” NW] கல்லறைகளில் உள்ளோர் அனைவரும் [இயேசுவின்] குரலைக் கேட்டு வெளியே வருவர்.’ (யோவான் 5:28, 29, பொது மொழிபெயர்ப்பு) ஆம், யெகோவாவின் ஞாபகத்தில் உள்ளவர்கள் அனைவரும் உயிர்த்தெழுப்பப்படுவார்கள் அல்லது மீண்டும் உயிர் பெறுவார்கள் என இயேசு கிறிஸ்து வாக்குறுதி கொடுத்தார். இறந்தவர்களைப் பற்றிய துக்க செய்திகளை அறிவிப்பதற்குப் பதிலாக, உயிரடைந்தவர்களைப் பற்றிய மகிழ்ச்சியான செய்திகள் அறிவிக்கப்படும். கல்லறையிலிருந்து வெளியே வரும் அன்பானவர்களை வரவேற்பது அளவிலா ஆனந்தமே!

கடவுள் கொடுத்துள்ள இந்த நம்பிக்கையிலிருந்து நீங்கள் எவ்வாறு நன்மையடையலாம் என்பதைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? என்ற சிற்றேட்டில் இந்தத் தகவலை பெறலாம். அந்தச் சிற்றேட்டைப் பற்றிய கூடுதலான விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருத்தமான விலாசத்திற்கு எழுதுங்கள்.

மொழிபெயர்ப்பு இன்னதென்று குறிப்பிடப்பட்டிராத வேதவசன மேற்கோள்கள் தமிழ் யூனியன் மொழிபெயர்ப்பிலிருந்து எடுக்கப்பட்டவை. NW என்பது நவீன ஆங்கில மொழி பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு​—⁠துணைக்குறிப்புகளுடன்.