Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 22

நீங்களும் பிரசங்கிக்கலாம்!

நீங்களும் பிரசங்கிக்கலாம்!

பைபிள் சொல்லும் உண்மைகளைத் தெரிந்துகொள்ளும்போது, ‘இத எல்லாரும் தெரிஞ்சுக்கிட்டா நல்லா இருக்குமே!’ என்று நீங்கள் நினைக்கலாம். உண்மைதான்! ஆனால், அதை மற்றவர்களிடம் சொல்ல தயக்கமாகவும் பயமாகவும் இருக்கிறதா? நீங்கள் எப்படித் தைரியமாகவும் சந்தோஷமாகவும் அதை எல்லாரிடமும் சொல்லலாம் என்று பார்க்கலாம்.

1. கற்றுக்கொண்டதை உங்களுக்குத் தெரிந்தவர்களிடம் எப்படிச் சொல்லலாம்?

“நாங்கள் பார்த்தவற்றையும் கேட்டவற்றையும் பற்றிப் பேசுவதை எங்களால் நிறுத்த முடியாது” என்று இயேசுவின் சீஷர்கள் சொன்னார்கள். (அப்போஸ்தலர் 4:20) கற்றுக்கொண்ட விஷயங்கள் அவர்களுக்கு ரொம்பப் பிடித்திருந்ததால், எல்லாரிடமும் அதைச் சொல்ல ஆசைப்பட்டார்கள். நீங்களும் ஆசைப்படுகிறீர்களா? அப்படியென்றால், குடும்பத்தில் இருக்கிறவர்களிடமும் நண்பர்களிடமும் பக்குவமாகப் பேச ஆரம்பிக்கலாம், இல்லையா?—கொலோசெயர் 4:6-ஐ வாசியுங்கள்.

இதோ, சில வழிகள்!

  • குடும்பத்தாரிடம், “நான் புதுசா ஒண்ணு கத்துக்கிட்டேன்” என ஆரம்பியுங்கள்.

  • சுகமில்லாமல் அல்லது கவலையில் இருக்கும் நண்பரிடம் ஆறுதலான ஒரு வசனத்தைக் காட்டுங்கள்.

  • உங்களோடு வேலை பார்க்கிறவர்கள் உங்களை நலம் விசாரிக்கும்போது, பைபிள் படிப்பில் அல்லது சபைக் கூட்டத்தில் கற்றுக்கொண்ட ஒரு விஷயத்தைச் சொல்லுங்கள்.

  • வெப்சைட்டை உங்கள் நண்பர்களுக்குக் காட்டுங்கள்.

  • பைபிள் படிப்பில் மற்றவர்களையும் உங்களோடு உட்காரச் சொல்லுங்கள் அல்லது jw.org-ல் பைபிள் படிப்புக்காக விண்ணப்பிக்க சொல்லிக்கொடுங்கள்.

2. சபையாரோடு சேர்ந்து ஊழியம் செய்வதால் என்ன பலன்கள் கிடைக்கும்?

இயேசுவின் சீஷர்கள் தங்களுக்குத் தெரிந்தவர்களிடம் மட்டுமே நல்ல செய்தியைச் சொல்லவில்லை. இயேசு அவர்களை “ஒவ்வொரு நகரத்துக்கும் . . . இரண்டிரண்டு பேராக அனுப்பினார்.” (லூக்கா 10:1) இப்படி ஒழுங்கான முறையில் அவர்கள் ஊழியம் செய்ததால் நல்ல செய்தியைக் கேட்க நிறைய பேருக்கு வாய்ப்புக் கிடைத்தது. ஒன்றாகச் சேர்ந்து ஊழியம் செய்ததால் சீஷர்களுக்கும் அதிக சந்தோஷம் கிடைத்தது. (லூக்கா 10:17) நீங்களும் சபையில் இருப்பவர்களோடு சேர்ந்து ஊழியம் செய்வதைப் பற்றி யோசிக்கலாம், இல்லையா?

ஆராய்ந்து பார்க்கலாம்!

பயம் இல்லாமல் பிரசங்கிக்கவும், அதில் கிடைக்கும் சந்தோஷத்தை அனுபவிக்கவும் உங்களால் முடியும். எப்படி என்று பார்க்கலாம்.

3. யெகோவா உங்களோடு இருப்பார்

ஊழியம் செய்ய ஆசை இருந்தாலும், மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ அல்லது செய்வார்களோ என்று சிலர் பயப்படலாம்.

  • கற்றுக்கொண்ட விஷயங்களை மற்றவர்களிடம் சொல்ல உங்களுக்கும் பயமாக இருக்கிறதா? ஏன்?

வீடியோவைப் பார்த்துவிட்டு, கீழே இருக்கும் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்.

  • வீடியோவில் நாம் பார்த்த பிள்ளைகள் எப்படிப் பயத்தை சமாளித்தார்கள்?

ஏசாயா 41:10-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • ஊழியம் செய்வதற்குப் பயமாக இருக்கும்போது ஜெபம் செய்வது உங்களுக்கு எப்படி உதவும்?

உங்களுக்குத் தெரியுமா?

‘என்னால எல்லாம் ஊழியம் செய்யவே முடியாது’ என்றுதான் ஆரம்பத்தில் நிறைய யெகோவாவின் சாட்சிகள் நினைத்திருக்கிறார்கள். இதற்கு ஒரு உதாரணம்தான் செர்கே. அவருக்குத் தாழ்வு மனப்பான்மை இருந்ததால் மற்றவர்களிடம் பேசவே கஷ்டப்பட்டார். ஆனால், பைபிளைப் படிக்க ஆரம்பித்த பிறகு நிலைமை மாறிவிட்டது. அவர் சொல்கிறார்: “பயம் இருந்தாலும் கத்துக்கிட்ட விஷயங்களை மத்தவங்ககிட்ட சொல்ல ஆரம்பிச்சேன். பைபிளை பத்தி பேசப் பேச எனக்கு தன்னம்பிக்கை கிடைச்சுது. எனக்கே அது ரொம்ப ஆச்சரியமா இருந்துச்சு. அதுமட்டுமில்ல, என்னோட விசுவாசமும் அதிகமாச்சு.”

4. மரியாதையோடு பேசுங்கள்

நீங்கள் என்ன சொல்லப்போகிறீர்கள் என்பது மட்டுமல்ல, அதை எப்படிச் சொல்லப்போகிறீர்கள் என்பதும் ரொம்ப முக்கியம். 2 தீமோத்தேயு 2:24-ஐயும் 1 பேதுரு 3:15-யும் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • பைபிளைப் பற்றி மற்றவர்களிடம் பேசும்போது இந்த வசனங்களில் சொல்லியிருப்பதுபோல் நீங்கள் எப்படி நடந்துகொள்ளலாம்?

  • குடும்பத்தில் இருப்பவர்களோ நண்பர்களோ நீங்கள் சொல்வதை ஒருவேளை ஏற்றுக்கொள்ளாமல் போகலாம். அப்போது நீங்கள் என்ன செய்யலாம்? என்ன செய்யக் கூடாது?

  • எதை நம்ப வேண்டுமென்று நேரடியாகச் சொல்வதற்குப் பதிலாக சாதுரியமாகக் கேள்விகள் கேட்பது ஏன் நல்லது?

5. நல்ல செய்தியைச் சொல்வது சந்தோஷம் தரும்

நல்ல செய்தியைச் சொல்லும் வேலையை இயேசுவுக்கு யெகோவா கொடுத்தார். இயேசு அந்த வேலையைப் பற்றி என்ன நினைத்தார்? யோவான் 4:34-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • சாப்பாடு சாப்பிடுவது நாம் உயிர்வாழ்வதற்கு உதவி செய்கிறது, சந்தோஷத்தையும் கொடுக்கிறது. கடவுளுடைய விருப்பத்தின்படி நடப்பது (உதாரணத்துக்கு, ஊழியம் செய்வது) ஏன் உணவு சாப்பிடுவதுபோல் இருப்பதாக இயேசு சொன்னார்?

  • நல்ல செய்தியை மற்றவர்களுக்குச் சொல்வதால் என்னென்ன சந்தோஷங்கள் கிடைக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

உங்களுக்கு சில டிப்ஸ்

  • எப்படிப் பேச ஆரம்பிக்கலாம் என்று வாரநாள் கூட்டத்தில் கற்றுக்கொள்ளுங்கள்.

  • வாரநாள் கூட்டத்தில் மாணவராகச் சேர என்ன செய்யலாம் என்று உங்களுக்கு பைபிள் படிப்பு நடத்துபவரிடம் கேளுங்கள். கூட்டத்தில் பேச்சுகளைக் கொடுத்துப் பழகும்போது, மற்றவர்களிடம் பேசுவது சுலபமாகிவிடும்.

  • மக்கள் பொதுவாகச் சொல்லும் மறுப்புகளுக்கு அல்லது கேட்கும் கேள்விகளுக்கு எப்படிப் பதில் சொல்லலாம் என்று பேசிப் பழக, இந்தப் புத்தகத்தில் இருக்கும் “சிலர் இப்படிச் சொல்கிறார்கள்” அல்லது “யாராவது இப்படிக் கேட்கலாம்” பகுதிகளைப் பயன்படுத்துங்கள்.

யாராவது இப்படிக் கேட்கலாம்: “பார்த்து ரொம்ப நாள் ஆச்சு, எப்படி இருக்கீங்க?”

  • பைபிளிலிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட விஷயங்களைப் பற்றி அவரிடம் சொல்ல இந்தச் சந்தர்ப்பத்தை நீங்கள் எப்படிப் பயன்படுத்திக்கொள்ளலாம்?

சுருக்கம்

மற்றவர்களிடம் நல்ல செய்தியைச் சொல்வது சந்தோஷம் தரும். நீங்கள் நினைக்கும் அளவுக்கு அது கஷ்டம் கிடையாது.

ஞாபகம் வருகிறதா?

  • நல்ல செய்தியை நாம் ஏன் மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டும்?

  • அதை எப்படி நீங்கள் மரியாதையோடு சொல்லலாம்?

  • உங்களுக்குப் பயமாக இருந்தால், எப்படி அதைச் சமாளித்து மற்றவர்களிடம் பேசலாம்?

குறிக்கோள்

அலசிப் பாருங்கள்

jw.org கான்டாக்ட் கார்டைப் பயன்படுத்தி நல்ல செய்தியைச் சொல்லலாம். அதை எப்படி எளிமையாகச் செய்யலாம் என்பதற்கு நான்கு வழிகளைப் பாருங்கள்.

JW.ORG கான்டாக்ட் கார்டை பயன்படுத்துவது எப்படி? (1:43)

நல்ல செய்தியைச் சொல்ல உங்களுக்கு உதவும் நான்கு குணங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.

“‘மனுஷர்களைப் பிடிப்பதற்கு’ நீங்கள் தயாரா?” (காவற்கோபுரம், செப்டம்பர் 2020)

நாம் சின்னப் பிள்ளைகளாக இருந்தாலும் எப்படித் தைரியமாக நல்ல செய்தியைச் சொல்லலாம்? அதற்கு உதவும் ஒரு பைபிள் உதாரணத்தைப் பாருங்கள்.

தைரியமா பேச யெகோவா உதவி செய்வார் (11:59)

உங்கள் குடும்பத்தில் யெகோவாவைப் பற்றித் தெரியாதவர்கள் இருக்கலாம். அவர்களிடம் பைபிளைப் பற்றி எப்படிப் பேசலாம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

“சத்தியத்தில் இல்லாத குடும்பத்தாரின் இதயத்தைத் தொடுவது எப்படி?” (காவற்கோபுரம், மார்ச் 15, 2014)