Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 27

இயேசுவின் உயிர்த்தியாகம் நம்மை எப்படி மீட்கும்?

இயேசுவின் உயிர்த்தியாகம் நம்மை எப்படி மீட்கும்?

ஆதாமும் ஏவாளும் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போனதால்தான் நமக்குப் பாவமும் துன்பமும் மரணமும் வந்தது. a ஆனால், இந்த நிலைமை மாறப்போகிறது. இயேசு பூமிக்கு வந்து நமக்காக மீட்புவிலையைக் கொடுக்க யெகோவா ஏற்பாடு செய்தார். ஒருவரை விடுவிக்கவோ மீட்கவோ கொடுக்கப்படும் தொகைதான் மீட்புவிலை. நம்மைப் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் மீட்க இயேசு தன் பரிபூரணமான மனித உயிரையே மீட்புவிலையாகத் தந்தார். (மத்தேயு 20:28-ஐ வாசியுங்கள்.) பூமியில் என்றென்றும் வாழும் உரிமை இயேசுவுக்கு இருந்தது. ஆனாலும், தன் உயிரைத் தியாகம் செய்வதன் மூலம், ஆதாமும் ஏவாளும் இழந்துபோன எல்லாமே நமக்குக் கிடைப்பதற்கு வழிசெய்தார். அதோடு, அவரும் யெகோவாவும் நம்மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார்கள் என்பதைக் காட்டினார். இயேசுவின் உயிர்த்தியாகத்துக்கு நன்றி காட்ட இந்தப் பாடம் உங்களுக்கு உதவும்.

1. இயேசுவின் உயிர்த்தியாகத்தால் இன்று நமக்கு என்ன நன்மை?

நாம் பாவ இயல்போடு பிறந்திருப்பதால், யெகோவாவுக்குப் பிடிக்காத நிறைய விஷயங்களைச் செய்கிறோம். அந்தத் தவறுகளை நினைத்து நாம் மனதார வருத்தப்பட்டு, இயேசு மூலம் யெகோவாவிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். அந்தத் தவறுகளை மறுபடியும் செய்யாமல் இருக்கவும் கடினமாக முயற்சி செய்ய வேண்டும். அப்போது, யெகோவாவின் நெருங்கிய நண்பராக முடியும். (1 யோவான் 2:1) பைபிள் இப்படிச் சொல்கிறது: “கிறிஸ்துவும், பாவங்களுக்காக எல்லா காலத்துக்கும் ஒரே தடவையாக இறந்தார்; அநீதிமான்களுக்காக ஒரு நீதிமான் மரணமடைந்தார்; உங்களைக் கடவுளிடம் வழிநடத்துவதற்காக இறந்தார்.”1 பேதுரு 3:18.

2. இயேசுவின் உயிர்த்தியாகத்தால் எதிர்காலத்தில் நமக்கு என்ன நன்மை?

பரிபூரணமான மனித உயிரைக் கொடுத்து எல்லாரையும் மீட்பதற்காக இயேசுவை இந்தப் பூமிக்கு யெகோவா அனுப்பிவைத்தார். “[இயேசுமேல்] விசுவாசம் வைக்கிற யாரும் அழிந்துபோகாமல் முடிவில்லாத வாழ்வைப் பெற வேண்டும்” என்று அவர் நினைத்தார். (யோவான் 3:16) இயேசு செய்த உயிர்த்தியாகத்தின் அடிப்படையில் ஆதாமுடைய பாவத்தின் பாதிப்புகள் எல்லாவற்றையும் யெகோவா சீக்கிரத்தில் சரிசெய்யப்போகிறார். அப்படியென்றால், இயேசுவின் உயிர்த்தியாகத்தில் நாம் விசுவாசம் வைத்தால் பூஞ்சோலை பூமியில் என்றென்றும் சந்தோஷமாக வாழும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கும்!—ஏசாயா 65:21-23.

ஆராய்ந்து பார்க்கலாம்!

இயேசு ஏன் தன்னுடைய உயிரைக் கொடுத்தார் என்றும், அதனால் உங்களுக்கு என்ன நன்மை என்றும் தெரிந்துகொள்ளலாம்.

3. இயேசுவின் உயிர்த்தியாகம் பாவத்தையும் மரணத்தையும் ஒழிக்கும்

வீடியோவைப் பார்த்துவிட்டு, கீழே இருக்கும் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்.

  • கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போனதால் ஆதாம் என்ன வாய்ப்பை இழந்துவிட்டான்?

ரோமர் 5:12-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • ஆதாம் செய்த பாவம் உங்கள் வாழ்க்கையை எப்படிப் பாதித்திருக்கிறது?

யோவான் 3:16-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • கடவுள் ஏன் தன் மகனைப் பூமிக்கு அனுப்பினார்?

  1. ஆதாம் எந்தக் குறையும் இல்லாத பரிபூரண மனிதனாக இருந்தான். ஆனால், கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போய்விட்டான். அவனால் எல்லாருக்கும் பாவமும் மரணமும் வந்தது

  2. இயேசு எந்தக் குறையும் இல்லாத பரிபூரண மனிதராக இருந்தார். அவர் கடவுளுக்குக் கீழ்ப்படிந்தார். எந்தக் குறையும் இல்லாமல் என்றென்றைக்கும் வாழும் வாய்ப்பை மனிதர்களுக்குக் கொடுத்தார்

4. இயேசுவின் உயிர்த்தியாகத்தால் எல்லாருக்குமே நன்மை

வீடியோவைப் பார்த்துவிட்டு, கீழே இருக்கும் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்.

  • ஒரே ஒருவருடைய மரணம் எப்படி எல்லாருக்குமே நன்மை தருகிறது?

1 தீமோத்தேயு 2:5, 6-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • பரிபூரண மனிதனான ஆதாமினால் எல்லாருக்கும் பாவமும் மரணமும்தான் வந்தது. ஆனால், பரிபூரண மனிதரான இயேசுவினால் நமக்கு வாழ்வு கிடைத்திருக்கிறது. இயேசு ‘சரிசமமான மீட்புவிலையை’ கொடுத்தார் என்று எப்படிச் சொல்லலாம்?

5. மீட்புவிலை—யெகோவா உங்களுக்குத் தந்த பரிசு

யெகோவாவை நேசிக்கிறவர்கள் மீட்புவிலையைத் தங்களுக்கென்று யெகோவா தந்த பரிசாக நினைக்கிறார்கள். உதாரணத்துக்கு, கலாத்தியர் 2:20-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • மீட்புவிலையைத் தனக்கென்று கொடுக்கப்பட்ட பரிசாக பவுல் நினைத்தார் என்று எப்படிச் சொல்லலாம்?

ஆதாம் பாவம் செய்த பிறகு, அவனுக்கும் அவனுடைய சந்ததிகளுக்கும் சாவு வந்தது. ஆனால், நீங்கள் என்றென்றும் சந்தோஷமாக வாழ்வதற்காக யெகோவா தன் மகனின் உயிரையே தந்தார்.

இப்போது சில வசனங்களைப் படிக்கலாம். தன் மகன் சித்திரவதையை அனுபவித்தபோது யெகோவாவுக்கு எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். யோவான் 19:1-7, 16-18-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • யெகோவாவும் இயேசுவும் உங்களுக்காகச் செய்திருக்கும் தியாகத்தைப் பற்றி யோசிக்கும்போது உங்களுக்கு எப்படி இருக்கிறது?

யாராவது இப்படிக் கேட்கலாம்: “ஒரே ஒருத்தர் இறக்குறதுனால எப்படி எல்லாரோட உயிரையும் காப்பாத்த முடியும்?”

  • நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்?

சுருக்கம்

இயேசு தன் உயிரைத் தியாகம் செய்ததால் யெகோவா நம் பாவங்களை மன்னிக்கிறார், நம்மால் என்றென்றும் சந்தோஷமாக வாழவும் முடியும்.

ஞாபகம் வருகிறதா?

  • இயேசு ஏன் இறந்தார்?

  • இயேசுவுடைய பரிபூரணமான மனித உயிர் எப்படி சரிசமமான மீட்புவிலையாக இருந்தது?

  • இயேசு செய்த உயிர்த்தியாகத்தால் உங்களுக்கு என்ன நன்மை?

குறிக்கோள்

அலசிப் பாருங்கள்

இயேசுவின் பரிபூரண மனித உயிரை ஏன் மீட்புவிலை என்று சொல்கிறோம் எனத் தெரிந்துகொள்ளுங்கள்.

“இயேசுவின் பலி எப்படி ‘பலருக்கு மீட்புவிலையாக’ இருக்கிறது?” (ஆன்லைன் கட்டுரை)

மீட்பு கிடைப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டுமென்று தெரிந்துகொள்ளுங்கள்.

“இயேசு இரட்சிக்கிறார்—எப்படி?” (ஆன்லைன் கட்டுரை)

ரொம்ப மோசமான பாவங்களைக்கூட யெகோவா மன்னிப்பாரா?

“பைபிள் கேள்விகளுக்கான பதில்கள்” (ஆன்லைன் கட்டுரை)

இயேசுவின் உயிர்த்தியாகத்தைப் பற்றித் தெரிந்துகொண்டது எப்படி ஒருவருடைய சுபாவத்தை மாற்றியது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

“வன்முறையைக் கைவிட்டேன்” (ஆன்லைன் கட்டுரை)

a பாவம் என்பது கெட்ட செயலை மட்டுமல்ல, வழிவழியாக வந்திருக்கிற பாவ இயல்பையும் குறிக்கிறது.