பாடம் 34
யெகோவாமேல் இருக்கும் அன்பை நாம் எப்படிக் காட்டலாம்?
நீங்கள் பைபிளைப் படிக்க ஆரம்பித்த பிறகு கடவுள்மேல் அன்பு அதிகமாகியிருக்கிறதா? அந்த அன்பு இன்னும் அதிகமாக வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்களா? அப்படியென்றால், யெகோவாமேல் உங்களுக்கு இருக்கும் அன்பு அதிகமாக அதிகமாக, உங்கள்மேல் அவருக்கு இருக்கும் அன்பும் அக்கறையும்கூட அதிகமாகும் என்பதை மனதில் வையுங்கள். அவர்மேல் அன்பு வைத்திருப்பதை நீங்கள் எப்படிக் காட்டலாம்?
1. யெகோவாமேல் இருக்கும் அன்பை நாம் எப்படிக் காட்டலாம்?
யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதன் மூலம் அவர்மேல் வைத்திருக்கும் அன்பை நாம் காட்டலாம். (1 யோவான் 5:3-ஐ வாசியுங்கள்.) கீழ்ப்படியும்படி அவர் யாரையும் கட்டாயப்படுத்துவது இல்லை. அவருக்குக் கீழ்ப்படிவதா வேண்டாமா என்று முடிவு செய்ய நம் ஒவ்வொருவருக்கும் வாய்ப்புக் கொடுக்கிறார். ஏனென்றால், நாம் ‘மனப்பூர்வமாய்க் கீழ்ப்படிய’ வேண்டுமென்று அவர் விரும்புகிறார். (ரோமர் 6:17) அதாவது, வெறும் கடமைக்காக இல்லாமல் அன்பினால் அவருக்குக் கீழ்ப்படிய வேண்டுமென்று விரும்புகிறார். யெகோவாவுக்குப் பிடித்ததைச் செய்வதன் மூலமும் அவருக்குப் பிடிக்காததைச் செய்யாமல் இருப்பதன் மூலமும் நீங்கள் அவர்மேல் அன்பு காட்ட முடியும். அதற்கு இந்தப் புத்தகத்தின் 3-ஆம் பகுதியும் 4-ஆம் பகுதியும் உங்களுக்கு உதவி செய்யும்.
2. யெகோவாமேல் அன்பு காட்டுவது ஏன் சிலசமயம் சிரமமாக இருக்கலாம்?
“நீதிமானுக்குப் பல கஷ்டங்கள் வரும்” என்று பைபிள் சொல்கிறது. (சங்கீதம் 34:19) முதலில், நம்மிடம் இருக்கும் பலவீனங்களோடு நாம் போராட வேண்டியிருக்கிறது. அதுமட்டுமல்ல, நமக்குப் பணப் பிரச்சினை வரலாம், யாராவது நமக்கு அநியாயம் செய்துவிடலாம், அல்லது வேறு ஏதாவது பிரச்சினைகளில் நாம் சிக்கித் தவிக்கலாம். இதுபோன்ற சமயங்களில் யெகோவாவுக்குக் கீழ்ப்படிவதைவிட தவறான வழியில் போவது சுலபமாகத் தெரியலாம். ஆனாலும் நீங்கள் யெகோவா சொல்கிறபடி செய்யும்போதுதான், மற்ற எதையும்விட அல்லது யாரையும்விட அவர்மேல் அதிக அன்பு வைத்திருப்பதைக் காட்ட முடியும். அவருக்கு நீங்கள் உண்மையாக இருக்கிறீர்கள் என்பதையும் நிரூபிக்க முடியும். அப்போது, யெகோவாவும் உங்களுக்கு உண்மையாக இருப்பார். அவர் உங்களைக் கைவிடவே மாட்டார்.—சங்கீதம் 4:3-ஐ வாசியுங்கள்.
ஆராய்ந்து பார்க்கலாம்!
நீங்கள் யெகோவாவுக்குக் கீழ்ப்படியும்போது அவர் ஏன் சந்தோஷப்படுகிறார் என்று இப்போது பார்க்கலாம். அவருக்கு உண்மையாக இருக்க உங்களுக்கு எது உதவும் என்றும் பார்க்கலாம்.
3. உங்கள்மேலும் குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது
யோபு என்பவர்மேலும், யெகோவாவை வணங்க விரும்புகிற மற்ற எல்லா மனிதர்கள்மேலும் சாத்தான் குற்றம் சுமத்தியதாக பைபிள் சொல்கிறது. யோபு 1:1, 6–2:10-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
-
யோபு எதற்காக யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்ததாக சாத்தான் சொன்னான்?—யோபு 1:9-11-ஐப் பாருங்கள்.
-
எல்லா மனிதர்கள்மேலும், உங்கள்மேலும்கூட சாத்தான் என்ன குற்றம் சுமத்துகிறான்?—யோபு 2:4-ஐப் பாருங்கள்.
யோபு 27:5-ன் பிற்பகுதியைப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
-
யெகோவாமேல் உண்மையிலேயே அன்பு வைத்திருந்ததை யோபு எப்படிக் காட்டினார்?
4. யெகோவாவின் மனதை சந்தோஷப்படுத்துங்கள்
நீதிமொழிகள் 27:11-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
-
நீங்கள் யெகோவாவின் பேச்சைக் கேட்டு ஞானமாக நடக்கும்போது அவருக்கு எப்படி இருக்கும்? ஏன்?
5. உங்களால் யெகோவாவுக்கு உண்மையாக இருக்க முடியும்
யெகோவாமேல் அன்பு இருப்பதால், நாம் அவரைப் பற்றி மற்றவர்களிடம் சொல்கிறோம். அவருக்கு உண்மையாக இருப்பதால், கஷ்டமான சூழ்நிலையில்கூட அவரைப் பற்றிப் பேசுகிறோம். வீடியோவைப் பார்த்துவிட்டு, கீழே இருக்கும் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்.
-
யெகோவாவைப் பற்றி மற்றவர்களிடம் பேச சிலசமயம் தயங்குகிறீர்களா?
-
கிரேசன் எப்படித் தைரியத்தை வரவழைத்துக்கொண்டார்?
யெகோவா நேசிப்பதை நாமும் நேசிக்க வேண்டும், அவர் வெறுப்பதை நாமும் வெறுக்க வேண்டும். அப்படிச் செய்தால், அவருக்கு உண்மையாக இருப்பது சுலபம். சங்கீதம் 97:10-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
-
யெகோவா எதையெல்லாம் நேசிக்கிறார்? எதையெல்லாம் வெறுக்கிறார்? இதுவரை படித்ததிலிருந்து என்ன சொல்வீர்கள்?
-
நல்லதை நேசிக்கவும் கெட்டதை வெறுக்கவும் நீங்கள் எப்படிக் கற்றுக்கொள்ளலாம்?
6. யெகோவாவுக்குக் கீழ்ப்படிவது நமக்கு நல்லது
யெகோவாவுக்குக் கீழ்ப்படிவதுதான் எப்போதுமே நல்லது. ஏசாயா 48:17, 18-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
-
நமக்கு எது நல்லது என்று யெகோவாவுக்குத்தான் தெரியும் என்பதை நீங்கள் நம்புகிறீர்களா? ஏன்?
-
பைபிளைப் பற்றியும் உண்மைக் கடவுளான யெகோவாவைப் பற்றியும் படித்தது உங்களுக்கு எப்படிப் பிரயோஜனமாக இருந்திருக்கிறது?
சிலர் இப்படிச் சொல்கிறார்கள்: “நான் செய்றது என்னைத்தானே பாதிக்கும், கடவுள எப்படி பாதிக்கும்!”
-
நம்மால் கடவுளுடைய மனதை சந்தோஷப்படுத்தவோ கஷ்டப்படுத்தவோ முடியும் என்பதை எந்த வசனத்தைக் காட்டி விளக்குவீர்கள்?
சுருக்கம்
யெகோவா சொல்கிறபடி நடப்பது சிலசமயம் சிரமமாக இருக்கலாம். ஆனாலும் அவருக்குக் கீழ்ப்படியவும் உண்மையாக இருக்கவும் வேண்டும். அப்போதுதான் அவர்மேல் அன்பு வைத்திருப்பதை நாம் காட்ட முடியும்.
ஞாபகம் வருகிறதா?
-
யோபுவின் அனுபவத்திலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?
-
நீங்கள் யெகோவாமேல் வைத்திருக்கும் அன்பை எப்படிக் காட்டுவீர்கள்?
-
என்ன செய்தால் யெகோவாவுக்கு உண்மையாக இருப்பது உங்களுக்கு சுலபமாக இருக்கும்?
அலசிப் பாருங்கள்
யெகோவாவுக்கும் அவருடைய சபைக்கும் நீங்கள் எப்படி உண்மையாக இருக்கலாம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
“உண்மையுள்ளவரிடம் நீங்கள் உண்மையுள்ளவராக நடந்துகொள்கிறீர்கள்” (16:49)
மனிதர்கள்மேல் சாத்தான் சுமத்திய குற்றச்சாட்டுகளைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.
“யோபு உத்தமமாய் நடக்கிறார்” (பைபிள்—ஒரு கண்ணோட்டம், பகுதி 6)
சின்னப் பிள்ளைகள்கூட எப்படி யெகோவாவுக்கு உண்மையாக இருக்கலாம் என்று பாருங்கள்.
மற்றவர்கள் தப்பு செய்ய தூண்டினாலும் இளைஞர்கள் எப்படிக் கடவுளுக்கு உண்மையாக இருக்கலாம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.