Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 49

சந்தோஷமான குடும்பம்​—பகுதி 1

சந்தோஷமான குடும்பம்​—பகுதி 1

புதுமணத் தம்பதிகள் காலமெல்லாம் சந்தோஷமாக வாழ ஆசைப்படுகிறார்கள். அது நிறைவேறுமா? கண்டிப்பாக! பைபிள் சொல்கிறபடி நடக்க முயற்சி எடுத்திருக்கும் தம்பதிகள் ரொம்ப வருஷத்துக்குப் பிறகும்கூட சந்தோஷமாக வாழ்கிறார்கள்.

1. கணவர்களுக்கு பைபிள் என்ன அறிவுரை தருகிறது?

கணவரைத்தான் குடும்பத்தின் தலைவராக யெகோவா நியமித்திருக்கிறார். (எபேசியர் 5:23-ஐ வாசியுங்கள்.) குடும்பத்துக்குப் பிரயோஜனமான முடிவுகளைக் கணவர் எடுக்க வேண்டுமென்று அவர் எதிர்பார்க்கிறார். அதோடு, “உங்கள் மனைவிமீது தொடர்ந்து அன்பு காட்டுங்கள்” என்று சொல்கிறார். (எபேசியர் 5:25) அப்படியென்றால், ஒரு நல்ல கணவர் வீட்டிலும் வெளியிலும் மனைவியை அன்பாக நடத்துவார், அவளைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்வார், அவளுக்குத் தேவையானதையெல்லாம் செய்வார், அவளுடைய உணர்ச்சிகளைப் புரிந்து நடந்துகொள்வார். (1 தீமோத்தேயு 5:8) முக்கியமாக, யெகோவாவோடு ஒரு நல்ல பந்தத்தை வைத்துக்கொள்ள உதவுவார். (மத்தேயு 4:4) உதாரணத்துக்கு, மனைவியோடு சேர்ந்து ஜெபம் செய்வார், பைபிளையும் படிப்பார். இப்படியெல்லாம் செய்யும்போது, யெகோவாவோடு அவருக்கு இருக்கும் நட்பு நிலைத்திருக்கும்.​—1 பேதுரு 3:7-ஐ வாசியுங்கள்.

2. மனைவிகளுக்கு பைபிள் என்ன அறிவுரை தருகிறது?

“மனைவி தன் கணவனுக்கு ஆழ்ந்த மரியாதை காட்ட வேண்டும்.” (எபேசியர் 5:33) அதை அவள் எப்படிச் செய்யலாம்? கணவனுக்கு இருக்கும் நல்ல குணங்களைப் பற்றியும், குடும்பத்தைக் கவனித்துக்கொள்ள அவர் எடுக்கும் முயற்சிகளைப் பற்றியும் நினைத்துப் பார்க்கலாம். அவர் எடுக்கும் முடிவுகளுக்கு ஆதரவு கொடுக்கலாம், அவரிடம் அன்பாகப் பேசலாம், மற்றவர்களிடம் அவரைப் பற்றி நல்ல விதமாகப் பேசலாம். அவர் யெகோவாவை வணங்காதவராக இருந்தாலும் இப்படியெல்லாம் செய்வதன் மூலம் அவருக்கு மரியாதை காட்டலாம்.

3. தம்பதிகள் தங்கள் பந்தத்தை எப்படிப் பலப்படுத்தலாம்?

“அவர்கள் இரண்டு பேரும் ஒரே உடலாக இருப்பார்கள்” என்று பைபிள் சொல்கிறது. (மத்தேயு 19:5) அப்படியென்றால், தங்களுக்கு இடையில் இருக்கும் நெருக்கம் குறைவதற்கு அவர்கள் இடம்கொடுக்கக் கூடாது. அதற்கு அவர்கள் ஒன்றாகச் சேர்ந்து நேரம் செலவிட வேண்டும். மனதில் இருப்பதையெல்லாம் வெளிப்படையாகவும் அன்பாகவும் பேச வேண்டும். யெகோவாவுக்கு அடுத்தபடியாகத் துணையைத்தான் முக்கியமாக நினைக்க வேண்டும், வேறு யாரையும் அல்லது எதையும்விட! அதோடு, துணையைத் தவிர வேறு யாருடனும் தவறான விதத்தில் நெருங்கிப் பழகவே கூடாது.

ஆராய்ந்து பார்க்கலாம்!

உங்கள் திருமண பந்தத்தைப் பலப்படுத்த உதவும் பைபிள் அறிவுரைகளைப் பற்றிப் பார்க்கலாம்.

4. கணவர்களே—மனைவிமேல் அன்பும் அக்கறையும் காட்டுங்கள்

“கணவர்களும் தங்கள் சொந்த உடல்மீது அன்பு காட்டுவதுபோல் தங்கள் மனைவிமீதும் அன்பு காட்ட வேண்டும்” என்று பைபிள் சொல்கிறது. (எபேசியர் 5:28, 29) இதன் அர்த்தம் என்ன? வீடியோவைப் பார்த்துவிட்டு, கீழே இருக்கும் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்.

  • கணவர்கள் என்னென்ன வழிகளில் தங்கள் மனைவிமேல் அன்பும் அக்கறையும் காட்டலாம்?

கொலோசெயர் 3:12-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • கணவர்கள் எப்படி இந்தக் குணங்களைத் தங்கள் மனைவியிடம் காட்டலாம்?

5. மனைவிகளே—கணவரிடம் அன்பும் மரியாதையும் காட்டுங்கள்

கணவர் யெகோவாவை வணங்கினாலும் சரி, வணங்காவிட்டாலும் சரி, மனைவி அவருக்கு மரியாதை காட்ட வேண்டுமென்று பைபிள் சொல்கிறது. 1 பேதுரு 3:1, 2-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • உங்கள் கணவர் யெகோவாவை வணங்காதவர் என்றால், அவரும் யெகோவாவை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று நீங்கள் கண்டிப்பாக ஆசைப்படுவீர்கள். அதற்கு பைபிளைப் பற்றிப் பேசிக்கொண்டே இருப்பது உதவுமா அல்லது அவரிடம் அன்பாகவும் மரியாதையாகவும் நடந்துகொள்வது உதவுமா? ஏன்?

கணவனும் மனைவியும் சேர்ந்து நல்ல முடிவுகளை எடுக்க முடியும். ஆனால் சிலசமயங்களில், கணவர் எடுக்கும் முடிவை மனைவியால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போகலாம். அதை அவரிடம் சாந்தமாகவும் மரியாதையாகவும் சொல்லலாம். ஆனால், குடும்பத்துக்கு எது நல்லது என்று முடிவு எடுக்கும் பொறுப்பை கணவருக்குத்தான் யெகோவா கொடுத்திருக்கிறார் என்பதை மனைவி புரிந்துகொள்ள வேண்டும். அவர் எடுக்கும் முடிவுக்கு முழு ஆதரவு கொடுக்க வேண்டும். அப்போது, முழு குடும்பமும் சந்தோஷமாக இருப்பதற்கு உதவ முடியும். 1 பேதுரு 3:3-5-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • மனைவி தன் கணவருக்கு மரியாதை காட்டும்போது யெகோவா எப்படி உணருவார்?

6. உங்களால் பிரச்சினைகளைச் சமாளிக்க முடியும்

பிரச்சினைகள் இல்லாத திருமண வாழ்க்கையே கிடையாது. ஆனால், கணவனும் மனைவியும் சேர்ந்து அந்தப் பிரச்சினைகளைச் சமாளிக்க வேண்டும். வீடியோவைப் பார்த்துவிட்டு, கீழே இருக்கும் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்.

  • வீடியோவில் வந்த கணவனும் மனைவியும் எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விலகிப்போய்க் கொண்டிருந்தார்கள்?

  • அவர்களுக்குள் இருந்த விரிசலை சரிசெய்ய என்னென்ன செய்தார்கள்?

1 கொரிந்தியர் 10:24-ஐயும் கொலோசெயர் 3:13-ஐயும் படியுங்கள். ஒவ்வொரு வசனத்தையும் படித்த பிறகு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • இந்த அறிவுரைகள் எப்படித் திருமண பந்தத்தைப் பலப்படுத்தும்?

நாம் ஒருவருக்கு ஒருவர் மதிப்புக் கொடுக்க வேண்டுமென்று பைபிள் சொல்கிறது. அப்படியென்றால், ஒருவரை ஒருவர் அன்போடும் மரியாதையோடும் நடத்த வேண்டும். ரோமர் 12:10-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • ‘என் கணவர்/மனைவி முதல்ல எனக்கு மதிப்பு காட்டட்டும், அப்புறம் நான் காட்டுறேன்’ என்று நாம் நினைக்கலாமா? ஏன்?

சிலர் இப்படிச் சொல்கிறார்கள்: “நாங்க ரெண்டு பேரும் முன்ன மாதிரி இப்போ அன்யோன்யமா இல்ல.”

  • பைபிள் அவர்களுக்கு உதவி செய்யும் என்பதை நீங்கள் எப்படி எடுத்துச் சொல்வீர்கள்?

சுருக்கம்

தம்பதிகள் ஒருவர்மேல் ஒருவர் அன்பும் மரியாதையும் காட்டும்போதும், பைபிள் அறிவுரைகள்படி நடக்கும்போதும் சந்தோஷமாக இருக்க முடியும்.

ஞாபகம் வருகிறதா?

  • கல்யாண வாழ்க்கை சந்தோஷமாக இருப்பதற்குக் கணவர் என்ன செய்ய வேண்டும்?

  • கல்யாண வாழ்க்கை சந்தோஷமாக இருப்பதற்கு மனைவி என்ன செய்ய வேண்டும்?

  • நீங்கள் கல்யாணமானவராக இருந்தால், எந்த பைபிள் அறிவுரை உங்கள் திருமண பந்தத்தைப் பலப்படுத்தும் என்று நினைக்கிறீர்கள்?

குறிக்கோள்

அலசிப் பாருங்கள்

உங்கள் குடும்பம் சந்தோஷமாக இருப்பதற்கு நீங்கள் என்னென்ன செய்யலாம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

மணவாழ்வில் மகிழ்ச்சி மலர... (சிறு புத்தகம்)

பைபிள் அறிவுரைகள்படி நடக்கும்போது கல்யாண வாழ்க்கை எப்படி சந்தோஷமாக இருக்கும் என்பதை இந்த இசை வீடியோவில் பாருங்கள்.

உன்னை நேசிக்கிறேன் (4:26)

கணவர்தான் குடும்பத்தின் தலைவர் என்பதை மனைவி எப்படி மதித்து நடக்கலாம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

“பெண்களே, தலைமை ஸ்தானத்திற்கு ஏன் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்?” (காவற்கோபுரம், மே 15, 2010)

கல்யாண வாழ்க்கையில் பெரிய பெரிய பிரச்சினைகளை சந்தித்து விவாகரத்து செய்துகொண்ட ஒரு தம்பதி எப்படி மறுபடியும் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று பாருங்கள்.

கடவுளுடைய உதவியோடு திரும்ப கட்டின திருமண வாழ்க்கை (5:14)