Skip to content

இயேசு கிறிஸ்து யார்?

இயேசு கிறிஸ்து யார்?

இயேசு கிறிஸ்து யார்?

“கிறிஸ்தவரல்லாத பலரும்கூட அவர் ஞானம் பொருந்திய மகா போதகராக இருந்தாரென நம்புகிறார்கள். இதுவரை வாழ்ந்தவர்களிலேயே மிகவும் செல்வாக்கு பெற்றவர்களில் நிச்சயமாகவே அவரும் ஒருவர்.” (த உவர்ல்டு புக் என்ஸைக்ளோப்பீடியா) “அவர்” யார்? அவரே இயேசு கிறிஸ்து, கிறிஸ்தவ மதத்தின் ஸ்தாபகர். அவர் யார் என்று உங்களுக்குத் தெரியுமா? உங்கள் வாழ்வில் எந்த விதத்திலாவது அவர் செல்வாக்கு செலுத்துகிறாரா?

சுவிசேஷங்கள் என அழைக்கப்படும் நான்கு சரித்திர ஏடுகளில் இயேசுவின் ஊழியத்தைப் பற்றிய சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தப் பதிவுகள் எந்தளவுக்கு உண்மையானவை? அவற்றை ஆராய்ந்த பிறகு, புகழ்பெற்ற சரித்திராசிரியர் வில் டியூரன்ட் இவ்வாறு எழுதினார்: “ஒரு சில சாதாரண மனிதர்கள் ஒரு சந்ததிக்குள் அத்தனை சக்தி வாய்ந்த வசீகரமான ஒரு நபரையும், அத்தனை உயர்ந்த ஒரு நன்னெறியையும், மானிட சகோதரத்துவத்தின் அத்தனை ஊக்கமூட்டும் ஒரு காட்சியையும் உருவாக்குவது என்பது சுவிசேஷங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கும் எந்த அற்புதத்தைக் காட்டிலும் நம்ப முடியாததாகவே இருக்கும்.”

இருந்தாலும், கீழை நாடுகளிலும் மற்ற நாடுகளிலும் வாழும் லட்சோப லட்சம் மக்களுக்கு இயேசு ஓர் அந்நியராகவே தெரிகிறார். அப்படி ஒருவர் வாழ்ந்ததாக அவர்கள் நம்பலாம், ஆனால் தங்களுடைய வாழ்க்கைக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்று அவர்கள் நினைக்கிறார்கள். வேறு சிலரோ, இயேசுவை பின்பற்றுவதாக சொல்லிக்கொள்ளும் ஆட்களுடைய செயல்களைக் கண்டு, இயேசுவையே புறக்கணிக்கிறார்கள். ‘கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழ்ந்த நகரமாகிய நாகசாகியில் அணுகுண்டு போட்டவர்கள் இவர்கள்தான்’ என ஜப்பானியர் சிலர் கூறுவர்.

ஆனால் டாக்டரின் மருத்துவ ஆலோசனையை நோயாளி பின்பற்றத் தவறினால், அவருடைய நோய்க்கு டாக்டரையா குற்றம் சாட்டுவீர்கள்? நிச்சயம் மாட்டீர்கள். அன்றாட பிரச்சினைகளை சமாளிப்பதற்கு இயேசு கொடுத்த ஆலோசனையை கிறிஸ்தவமண்டலத்தார் வெகுகாலமாகவே அசட்டை செய்து வந்திருக்கிறார்கள். ஆகவே இயேசுவின் அறிவுரைகளைப் பின்பற்றாமல் பெயரளவில் கிறிஸ்தவர்களாக இருப்பவர்களை மனதில் வைத்து அவரை புறக்கணிப்பதற்கு பதிலாக, அவரைப் பற்றி நீங்கள் ஏன் கொஞ்சம் தெரிந்துகொள்ளக் கூடாது? பைபிளை ஆராய்ந்து பார்த்து, உண்மையில் இயேசு யார், உங்கள் வாழ்விலும் அவர் எப்படி மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

அன்பு​—⁠அவர் கொடுக்கும் ஆலோசனை

இயேசு கிறிஸ்து ஒரு மகா போதகர், சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் பாலஸ்தீனாவில் வாழ்ந்து வந்தார். அவருடைய பிள்ளைப் பருவத்தைப் பற்றிய பதிவுகள் வெகு சொற்பமே உள்ளன. (மத்தேயு 1, 2 அதிகாரங்கள்; லூக்கா 1, 2 அதிகாரங்கள்) இயேசு 30 வயதானபோது, “சத்தியத்தைக் குறித்துச் சாட்சி கொடுக்க” தம் ஊழியத்தை ஆரம்பித்தார். (யோவான் 18:37; லூக்கா 3:21-23) இயேசுவின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த நால்வரும் அவர் செய்த ஊழியத்திற்கே, அதாவது அவர் பூமியிலிருந்த கடைசி மூன்றரை வருட காலப்பகுதிக்கே கவனம் செலுத்தினார்கள்.

இயேசு ஊழியம் செய்த காலத்தில், வாழ்க்கையில் வரும் பல்வேறு பிரச்சினைகளை சமாளிப்பதற்கு ஒரு திறவுகோலை தமது சீஷர்களுக்கு கொடுத்தார். அந்தத் திறவுகோல் எது? அன்பே அந்தத் திறவுகோல். சரித்திரத்திலேயே புகழ்பெற்ற பிரசங்கங்களில் ஒன்றான மலைப் பிரசங்கத்தில், சக மனிதரிடம் அன்பு காட்டுவது எப்படி என்பதை சீஷர்களுக்குக் கற்பித்தார். “மனுஷர் உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்” என சொன்னார். (மத்தேயு 7:12) இது பொன் விதி என அழைக்கப்படுகிறது. “மனுஷர்” என இயேசு இங்கே குறிப்பிட்டது எதிரிகளையும் உட்படுத்துகிறது. அதே பிரசங்கத்தில், “உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; . . . உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்” என்று அவர் கூறினார். (மத்தேயு 5:44) இத்தகைய அன்பு இன்று நாம் எதிர்ப்படும் பல பிரச்சினைகளையும் தீர்க்கும் அல்லவா? தீர்க்கும் என்றே இந்து தலைவர் மோஹன்தாஸ் காந்தி நினைத்தார். அவர் இப்படி சொன்னதாக கூறப்படுகிறது: “மலைப் பிரசங்கத்தில் கிறிஸ்து கொடுத்த போதனைகளைப் பின்பற்றினால், . . . இந்த முழு உலகத்தின் பிரச்சினைகளையும் நாம் தீர்த்திருப்போம்.” அன்பைப் பற்றிய இயேசுவின் போதனைகளைக் கடைப்பிடித்தால், மனிதருடைய தீரா பிரச்சினைகளும் தீர்ந்துவிடும்.

செயலில் அன்பு

இயேசு தாம் கற்பித்ததற்கு ஏற்ப வாழ்ந்தார். தமது சொந்த நலனைவிட பிறருடைய நலனுக்கே அதிக கவனம் செலுத்தினார்; அன்பை செயலில் காட்டினார். ஒருநாள் இயேசுவும் அவருடைய சீஷர்களும் சாப்பிடக்கூட நேரமில்லாமல் அநேகருக்கு உதவி செய்து கொண்டிருந்தார்கள். ஆகவே தம்முடைய சீஷர்களுக்கு ‘சற்று இளைப்பாறுதல்’ தேவை என்பதை உணர்ந்த இயேசு, அவர்களை தனிமையான ஓரிடத்திற்கு அழைத்துச் சென்றார். ஆனால் மக்கள் கூட்டமோ அவர்களுக்கு முன்பே அங்கு போய் காத்துக் கொண்டிருந்தது. இயேசுவின் நிலையில் நீங்கள் இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்? இயேசு “அவர்கள்மேல் மனதுருகி, அநேக காரியங்களை அவர்களுக்கு உபதேசிக்கத் தொடங்கினார்.” (மாற்கு 6:30-34) இந்த உருக்கமான இரக்கமே பிறருக்கு உதவ அவரை உந்துவித்தது.

இயேசு ஆன்மீக போதனைகளை அளிப்பதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. நடைமுறையான உதவியையும் அளித்தார். உதாரணமாக, ஒருநாள் பூராவும் அவருடைய போதனையை கேட்டுக் கொண்டிருந்த (பெண்களும் பிள்ளைகளும் தவிர) 5,000 ஆண்களுக்கு உணவளித்தார். மற்றொரு சந்தர்ப்பத்தில் 4,000 பேருக்கு உணவளித்தார். முதல் சந்தர்ப்பத்தில், ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் பயன்படுத்தினார்; இரண்டாம் சந்தர்ப்பத்தில், ஏழு அப்பங்களையும் சில சிறிய மீன்களையும் பயன்படுத்தினார். (மத்தேயு 14:14-21; 15:32-38; மாற்கு 6:35-44; 8:1-9) இவையெல்லாம் அற்புதங்கள் தானே? ஆம், அவர் அற்புதங்களை செய்தவர்தான்.

வியாதியஸ்தர் பலரையும் இயேசு சுகப்படுத்தினார். குருடர்கள், முடவர்கள், குஷ்டரோகிகள், செவிடர்கள் ஆகியோரை குணப்படுத்தினார். ஏன், மரித்தவர்களையும் உயிர்ப்பித்தாரே! (லூக்கா 7:22; யோவான் 11:30-45) ஒருசமயம் குஷ்டரோகி ஒருவன் “உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும்” என்று அவரிடம் கெஞ்சினான். அதற்கு இயேசு எப்படி பிரதிபலித்தார்? அவர் தமது “கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார்.” (மாற்கு 1:40, 41) அவர்களுக்கு உதவ வேண்டுமென்ற மிகுந்த ஆசையே இயேசுவை தூண்டியது. இப்படிப்பட்ட அற்புதங்கள் வாயிலாக, துயரப்படுவோர் மீது தாம் வைத்திருந்த அன்பை மெய்ப்பித்துக் காட்டினார்.

இவற்றை நம்புவது கடினமாக இருக்கிறதா? ஆனால் பெரும்பாலான அற்புதங்களை பொது மக்கள் பார்வையிலேயே இயேசு நடப்பித்தார். எல்லா சந்தர்ப்பத்திலும் குறைகாண முயன்ற அவருடைய எதிரிகளும்கூட அவர் அற்புதங்கள் செய்ததை மறுதலிக்க முடியவில்லை. (யோவான் 9:1-34) அதைத் தவிர, அவருடைய அற்புதங்களுக்கு ஒரு நோக்கம் இருந்தது. அதாவது, கடவுளால் அனுப்பப்பட்டவரே இயேசு என்பதை மக்கள் அடையாளம் கண்டுகொள்ள அவை உதவின.​—யோவான் 6:14.

இயேசுவின் போதனைகளையும் அவருடைய வாழ்க்கையையும் சுருக்கமாக சிந்தித்தது அவர் மீது பிரியத்தை ஏற்படுத்தி, அவருடைய அன்பை பின்பற்ற நம்மை உந்துவிக்கிறது. என்றாலும், உங்களுடைய வாழ்க்கையில் இயேசு செல்வாக்கு செலுத்தக்கூடிய வேறு வழிகளும் இருக்கின்றன. அவர் அன்பைப் பற்றி போதித்த மகா போதகர் மட்டுமல்ல, ஆனால் பூமிக்கு வருவதற்கு முன்பே கடவுளுடைய ஒரேபேறான குமாரனாக இருந்தார் என அவர் குறிப்பிட்டார். (யோவான் 1:14; 3:16; 8:58; 17:5; 1 யோவான் 4:9) பூமிக்குரிய வாழ்க்கைக்குப் பின்பும் அவர் வாழ்ந்து வருகிறார்; இதனால் அவர் உங்களுக்கு இன்னும் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவராக ஆகிறார். இயேசு உயிர்த்தெழுப்பப்பட்டு, இப்போது கடவுளுடைய ராஜ்யத்தின் அரசராக முடிசூட்டப்பட்டிருக்கிறார் என பைபிள் சுட்டிக்காட்டுகிறது. (வெளிப்படுத்துதல் 11:15) “ஒன்றான மெய்த் தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்” என இயேசு சொன்னார். (யோவான் 17:3; 20:31) ஆம், இயேசு கிறிஸ்துவைப் பற்றிய அறிவைப் பெறும்போது பூங்காவனம் போன்ற பரதீஸில் என்றென்றும் வாழலாம். எப்படி? இயேசுவைப் பற்றி நீங்கள் ஏன் அதிகம் கற்றுக்கொள்ளக் கூடாது? அவரைப் பின்பற்றுவதற்கு எப்படி அவரது ‘அன்பு நம்மை நெருக்கி ஏவுகிறது’ என்பதை நீங்களும் ருசித்துப் பார்க்கலாமே. (2 கொரிந்தியர் 5:14) உங்களுக்கு உதவ யெகோவாவின் சாட்சிகள் ஆவலோடு இருக்கிறார்கள்.​—யோவான் 13:34, 35.

இதிலுள்ள பைபிள் மேற்கோள்கள் யாவும் தமிழ் யூனியன் மொழிபெயர்ப்பிலிருந்து எடுக்கப்பட்டவை.