Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 13

இயேசுவுக்கு வந்த சோதனைகளிலிருந்து பாடங்கள்

இயேசுவுக்கு வந்த சோதனைகளிலிருந்து பாடங்கள்

மத்தேயு 4:1-11 மாற்கு 1:12, 13 லூக்கா 4:1-13

  • இயேசுவைச் சாத்தான் சோதிக்கிறான்

யோவானிடம் இயேசு ஞானஸ்நானம் எடுத்த உடனே, கடவுளுடைய சக்தி அவரை யூதேயா வனாந்தரத்துக்கு வழிநடத்துகிறது. அவர் நிறைய விஷயங்களைப் பற்றி யோசிக்க வேண்டியிருக்கிறது. ஏனென்றால், அவர் ஞானஸ்நானம் எடுத்தபோது “வானம் திறக்கப்பட்டது.” (மத்தேயு 3:16) பரலோகத்தில் இருந்தபோது, அவர் கற்றுக்கொண்ட விஷயங்களும் செய்த விஷயங்களும் அவருடைய ஞாபகத்துக்கு வந்தன. அதனால், அவர் யோசித்துப் பார்க்க நிறைய இருக்கிறது.

இயேசு 40 நாட்கள் இரவும் பகலும் வனாந்தரத்தில் இருக்கிறார். அந்தச் சமயத்தில் அவர் எதுவும் சாப்பிடவில்லை. அதனால், அவருக்கு ரொம்பப் பசியெடுக்கிறது. அவரைச் சோதிப்பதற்காகப் பிசாசாகிய சாத்தான் அங்கே வருகிறான். அவரிடம், “நீ கடவுளுடைய மகனாக இருந்தால், இந்தக் கற்களை ரொட்டிகளாகும்படி சொல்” என்கிறான். (மத்தேயு 4:3) அற்புதங்களைச் செய்ய இயேசுவுக்குச் சக்தி இருக்கிறது. ஆனாலும், தன்னுடைய ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள அதைப் பயன்படுத்துவது தவறு என்பது இயேசுவுக்குத் தெரியும். அதனால், சாத்தான் சொன்னதைச் செய்ய அவர் மறுத்துவிடுகிறார்.

பிசாசு அதோடு நிறுத்திக்கொள்ளவில்லை. அவரைச் சோதிக்க வேறொரு வழியைப் பயன்படுத்துகிறான். ஆலயத்தின் உயரமான இடத்திலிருந்து கீழே குதிக்கும்படி அவரிடம் சொல்கிறான். அப்போது தேவதூதர்கள் வந்து அவரைக் காப்பாற்றுவார்கள் என்றும் சொல்கிறான். ஆனால், இயேசு அவனுடைய வார்த்தையில் மயங்கவில்லை; சாகசம் செய்து மற்றவர்களைப் பிரமிக்க வைக்க வேண்டும் என்று அவர் நினைக்கவில்லை. அப்படிச் செய்து கடவுளைச் சோதிப்பது தவறு என்று வேதவசனங்களிலிருந்து எடுத்துக்காட்டுகிறார்.

பிசாசு மூன்றாவது முறையாக இயேசுவைச் சோதிக்கிறான். ஏதோவொரு விதத்தில் “இந்த உலகத்தில் இருக்கிற எல்லா ராஜ்யங்களையும் அவற்றின் மகிமையையும்” அவருக்குக் காட்டுகிறான். பிறகு, “நீ ஒரேவொரு தடவை என்முன் விழுந்து என்னை வணங்கினால், இவை எல்லாவற்றையும் உனக்குத் தருவேன்” என்று சொல்கிறான். அதற்கு இயேசு, “அப்பாலே போ சாத்தானே” என்று சொல்லி மறுத்துவிடுகிறார். (மத்தேயு 4:8-10) யெகோவாவுக்கு மட்டுமே பரிசுத்த சேவை செய்ய வேண்டும் என்று அவருக்குத் தெரியும். அதனால், சாத்தானுக்கு அவர் கொஞ்சம்கூட இடம் கொடுக்கவில்லை. கடவுளுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று உறுதியாக இருக்கிறார்.

இயேசுவுக்கு வந்த சோதனைகளிலிருந்தும், பிசாசுக்கு அவர் கொடுத்த பதில்களிலிருந்தும் நாம் பாடம் கற்றுக்கொள்ளலாம். இன்று சிலர் பிசாசை வெறுமனே ஒரு கெட்ட குணம் என்று சொல்கிறார்கள். ஆனால் இந்த உண்மை சம்பவங்களிலிருந்து, பிசாசு என்பவன் நம் கண்களுக்குத் தெரியாத நிஜமான ஓர் ஆள் என்பதைப் புரிந்துகொள்கிறோம். அதோடு, உலக அரசாங்கங்கள் எல்லாம் பிசாசின் கையில் இருக்கின்றன, அவன்தான் இவற்றை ஆட்டிப்படைக்கிறான் என்பதையும் புரிந்துகொள்கிறோம். இதெல்லாம் அவன் கையில் இல்லையென்றால், அவன் எப்படி இயேசுவுக்கு இவற்றைத் தருவதாகச் சொல்லியிருப்பான்?

அதோடு, ஒரே ஒரு தடவை தன்னை விழுந்து வணங்கினால், உலகத்தில் இருக்கிற எல்லா ராஜ்யங்களையும் தருவதாக இயேசுவிடம் பிசாசு சொன்னான். இயேசுவுக்கு ஆசை காட்டியதைப் போலவே அவன் நமக்கும் ஆசை காட்டலாம். சொத்துசுகத்தையும், அந்தஸ்தையும், பதவியையும் காட்டி நமக்கு வலை விரிக்கலாம். அவன் என்னதான் ஆசை காட்டினாலும், இயேசுவைப் போல நாம் யெகோவாவுக்கு உண்மையாக இருக்க வேண்டும். பிசாசு “வேறொரு நல்ல சந்தர்ப்பம் வரும்வரை” இயேசுவைவிட்டு விலகிப்போனான், ஆனால் ஒரேயடியாகப் போய்விடவில்லை என்பதை மறந்துவிடாதீர்கள்! (லூக்கா 4:13) நமக்கும் சாத்தான் வலை வீசிக்கொண்டேதான் இருப்பான். அதனால், நாம் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.