Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 15

இயேசுவின் முதல் அற்புதம்

இயேசுவின் முதல் அற்புதம்

யோவான் 2:1-12

  • கானா ஊரில் கல்யாணம்

  • இயேசு தண்ணீரைத் திராட்சமதுவாக மாற்றுகிறார்

நாத்தான்வேல் இயேசுவின் சீஷராகி இப்போது மூன்று நாட்கள் ஆகியிருக்கிறது. இயேசுவும் அவருடைய புதிய சீஷர்களும் வடக்கிலுள்ள கலிலேயா மாகாணத்துக்குப் போவதற்காகப் பயணம் செய்கிறார்கள். அந்தச் சீஷர்கள் எல்லாருமே அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள்தான். அவர்கள் எல்லாரும் கானா என்ற ஊரில் நடக்கிற ஒரு கல்யாணத்துக்காகப் போய்க்கொண்டிருக்கிறார்கள். அதுதான் நாத்தான்வேல் பிறந்த ஊர். இயேசு வளர்ந்த நாசரேத்திலிருந்து ஒருசில கிலோமீட்டர் தூரத்தில், ஒரு மலைப்பகுதியில்தான் இந்த ஊர் இருக்கிறது.

இயேசுவின் அம்மாவும் அந்தக் கல்யாணத்துக்கு வந்திருக்கிறாள். மணமக்களின் குடும்பத்துக்கு மரியாள் நெருக்கமானவளாக இருந்ததால் விருந்தாளிகளை உபசரிப்பதில் அவள் மும்முரமாக இருந்திருக்கலாம். அப்போது, திராட்சமது கிட்டத்தட்ட தீர்ந்துவிட்டதைக் கவனிக்கிறாள். உடனே இயேசுவிடம் போய், “பரிமாறுவதற்கு அவர்களிடம் திராட்சமது இல்லை” என்று சொல்கிறாள்.—யோவான் 2:3.

இயேசு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்துதான் அப்படிச் சொல்கிறாள். ஆனால் இயேசு, “பெண்மணியே, அதற்கு நாம் என்ன செய்வது?” என்று அவளிடம் கேட்கிறார். (யோவான் 2:4) ஏனென்றால், அவர் கடவுளால் நியமிக்கப்பட்ட ராஜா. அவர் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்ல வேண்டியது அவருடைய பரலோகத் தகப்பன்தான், அவருடைய குடும்பத்தாரோ நண்பர்களோ அல்ல. அதனால், மரியாள் அந்த விஷயத்தைத் தன் மகன் கையில் விட்டுவிடுகிறாள். பரிமாறுகிறவர்களைக் கூப்பிட்டு, “அவர் என்ன சொல்கிறாரோ அதன்படி செய்யுங்கள்” என்று சொல்கிறாள்.—யோவான் 2:5.

அங்கே ஆறு கல்ஜாடிகள் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றிலும் 40 லிட்டருக்கும் அதிகமான தண்ணீரைப் பிடித்து வைக்க முடியும். இயேசு பரிமாறுகிறவர்களைப் பார்த்து, “இந்த ஜாடிகளில் தண்ணீர் நிரப்புங்கள்” என்று சொல்கிறார். பின்பு அவர்களிடம், “இதிலிருந்து எடுத்துக்கொண்டு போய் விருந்தின் மேற்பார்வையாளரிடம் கொடுங்கள்” என்று சொல்கிறார்.—யோவான் 2:7, 8.

விருந்தின் மேற்பார்வையாளர் அதை ருசிபார்த்துவிட்டு அசந்துபோகிறார். அது அற்புதமாகக் கிடைத்த திராட்சமது என்பது அவருக்குத் தெரியாது. அதனால் மணமகனைக் கூப்பிட்டு, “எல்லாரும் தரமான திராட்சமதுவை முதலில் பரிமாறிவிட்டு, விருந்தாளிகள் மனம்போல் குடித்த பிறகு தரம் குறைந்ததைப் பரிமாறுவார்கள். ஆனால், நீங்கள் தரமான திராட்சமதுவை இதுவரை வைத்திருக்கிறீர்களே” என்று சொல்கிறார்.—யோவான் 2:10.

இதுதான் இயேசு செய்த முதல் அற்புதம். அந்த அற்புதத்தைப் பார்த்த பிறகு அவருடைய சீஷர்கள் அவர்மேல் இன்னும் அதிகமாக விசுவாசம் வைக்கிறார்கள். பிறகு, இயேசுவும் அவருடைய அம்மாவும் சகோதரர்களும் கலிலேயா கடலின் வடமேற்கு கரையில் இருக்கிற கப்பர்நகூம் என்ற நகரத்துக்குப் போகிறார்கள்.