Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 117

எஜமானின் இரவு விருந்து

எஜமானின் இரவு விருந்து

மத்தேயு 26:21-29 மாற்கு 14:18-25 லூக்கா 22:19-23 யோவான் 13:18-30

  • யூதாஸ் ஒரு துரோகி என்று அடையாளம் காட்டுகிறார்

  • நினைவுநாள் விருந்தை இயேசு ஆரம்பித்துவைக்கிறார்

மாலையில்தான், தன்னுடைய அப்போஸ்தலர்களின் பாதங்களைக் கழுவி மனத்தாழ்மையை இயேசு கற்றுக்கொடுத்திருந்தார். பஸ்கா உணவுக்குப் பிறகு, “நான் நம்பிக்கை வைத்திருந்த நெருங்கிய நண்பனே எனக்குத் துரோகம் செய்துவிட்டான். என்னோடு சேர்ந்து சாப்பிட்டவனே எனக்கு எதிரியாகிவிட்டான்” என்று தாவீது தீர்க்கதரிசனமாகச் சொன்ன வார்த்தைகளை இயேசு சொல்கிறார். அதற்குப் பிறகு, “உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான்” என்கிறார்.—சங்கீதம் 41:9; யோவான் 13:18, 21.

அப்போஸ்தலர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்கிறார்கள். பிறகு ஒவ்வொருவராக, “எஜமானே, அது நானா, நானா?” என்று கேட்கிறார்கள். யூதாஸ் இஸ்காரியோத்தும்கூட கேட்கிறான். இயேசுவுக்குப் பக்கத்தில் யோவான் இருக்கிறார். அதனால், அது யார் என்று இயேசுவிடம் கேட்கும்படி யோவானிடம் பேதுரு சொல்கிறார். யோவான் இயேசுவின்மேல் சாய்ந்துகொண்டு, “எஜமானே, அது யார்?” என்று கேட்கிறார்.—மத்தேயு 26:22; யோவான் 13:25.

அதற்கு இயேசு, “நான் யாருக்கு ரொட்டித் துண்டைத் தோய்த்துக் கொடுக்கிறேனோ அவன்தான்” என்று சொல்கிறார். பிறகு, ரொட்டித் துண்டை மேஜையில் வைக்கப்பட்டிருக்கிற உணவில் தோய்த்து யூதாசிடம் கொடுக்கிறார். அப்போது, “மனிதகுமாரன் தன்னைப் பற்றி எழுதப்பட்டிருக்கிறபடியே உங்களைவிட்டுப் போகிறார் என்பது உண்மைதான்; ஆனால், மனிதகுமாரனைக் காட்டிக்கொடுக்கிறவனுக்குக் கேடுதான் வரும்! அவன் பிறக்காமல் இருந்திருந்தாலே அவனுக்கு நல்லதாக இருந்திருக்கும்” என்று சொல்கிறார். (யோவான் 13:26; மத்தேயு 26:24) பிறகு, சாத்தான் யூதாசுக்குள் நுழைகிறான். ஏற்கெனவே கெட்டுப்போயிருந்த யூதாஸ், இப்போது சாத்தானின் விருப்பப்படி நடக்க தன்னை முழுமையாகக் கொடுத்துவிடுகிறான். இதன்மூலம் ‘அழிவின் மகனாக’ ஆகிறான்.—யோவான் 6:64, 70; 12:4; 17:12.

இயேசு அவனிடம், “நீ செய்யப்போவதைச் சீக்கிரமாகச் செய்” என்று சொல்கிறார். பணப்பெட்டி யூதாசிடம் இருந்ததால், “பண்டிகைக்குத் தேவையானதை வாங்கி வரும்படியோ ஏழைகளுக்கு ஏதாவது கொடுக்கும்படியோ” இயேசு சொல்லியிருப்பார் என்று மற்ற அப்போஸ்தலர்கள் நினைத்துக்கொள்கிறார்கள். (யோவான் 13:27-30) ஆனால், இயேசுவைக் காட்டிக்கொடுப்பதற்காக யூதாஸ் போகிறான்.

பஸ்கா உணவைச் சாப்பிட்ட அதே மாலை நேரத்தில், புது விதமான இன்னொரு விருந்தை இயேசு அறிமுகப்படுத்துகிறார். ஒரு ரொட்டியை எடுத்து, கடவுளுக்கு நன்றி சொல்லி, அதைப் பிட்டு, தன் அப்போஸ்தலர்களிடம் சாப்பிடக் கொடுக்கிறார். “இது உங்களுக்காகக் கொடுக்கப்படும் என் உடலைக் குறிக்கிறது. என் நினைவாக இதைத் தொடர்ந்து செய்யுங்கள்” என்று சொல்கிறார். (லூக்கா 22:19) அப்போஸ்தலர்கள் அதை வாங்கிச் சாப்பிடுகிறார்கள்.

இப்போது இயேசு திராட்சமது கிண்ணத்தை எடுத்து, கடவுளுக்கு நன்றி சொல்லி, அவர்களிடம் கொடுக்கிறார். ஒவ்வொருவரும் அந்தக் கிண்ணத்திலிருந்து குடிக்கிறார்கள். “இந்தக் கிண்ணம் உங்களுக்காகச் சிந்தப்படப்போகிற என் இரத்தத்தின் அடிப்படையிலான புதிய ஒப்பந்தத்தைக் குறிக்கிறது” என்று சொல்கிறார்.—லூக்கா 22:20.

இப்படி, தன்னுடைய மரண நினைவுநாளை அனுசரிப்பதற்கு இயேசு ஏற்பாடு செய்கிறார். அவரைப் பின்பற்றுகிறவர்கள் ஒவ்வொரு வருஷமும் நிசான் 14 அன்று அதை அனுசரிக்க வேண்டும். உண்மையுள்ள மனிதர்களைப் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுதலை செய்வதற்கு இயேசுவும் அவருடைய தகப்பனும் செய்த ஏற்பாட்டை இந்த நிகழ்ச்சி நினைவுபடுத்தும். யூதர்கள் கொண்டாடிய பஸ்காவைவிட இது மேலானது. ஏனென்றால், விசுவாசமுள்ள மனிதர்களுக்குக் கிடைக்கப்போகிற உண்மையான விடுதலையை இது நினைவுபடுத்துகிறது.

தன்னுடைய இரத்தம் “பாவ மன்னிப்புக்கென்று பலருக்காகச் சிந்தப்படப்போகிறது” என்று இயேசு சொல்கிறார். அந்தப் பாவ மன்னிப்பைப் பெறப்போகிற பலரில் அப்போஸ்தலர்களும் உண்மையுள்ள மற்ற சீஷர்களும் அடங்குவர். இயேசுவுடன் சேர்ந்து அவருடைய தகப்பனின் அரசாங்கத்தில் ஆட்சி செய்யும் வாய்ப்பு இவர்களுக்குக் கிடைக்கும்.—மத்தேயு 26:28, 29.