Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 46

இயேசுவின் உடையைத் தொட்டதால் குணமாகிறாள்

இயேசுவின் உடையைத் தொட்டதால் குணமாகிறாள்

மத்தேயு 9:18-22 மாற்கு 5:21-34 லூக்கா 8:40-48

  • இயேசுவின் உடையைத் தொட்ட பெண் குணமாகிறாள்

தெக்கப்போலி பகுதியிலிருந்து இயேசு திரும்பி வந்துவிட்டார் என்ற செய்தி கலிலேயா கடலின் வடமேற்கு கரையில் வாழ்கிற யூதர்கள் மத்தியில் வேகமாகப் பரவுகிறது. சமீபத்தில், புயல்காற்று வீசியபோது காற்றையும் கடலையும் இயேசு அடக்கிய விஷயத்தை நிறைய பேர் கேள்விப்பட்டிருப்பார்கள். பேய் பிடித்திருந்த ஆட்களை அவர் குணமாக்கிய விஷயமும் சிலருடைய காதுகளை எட்டியிருக்கும். அதனால், இயேசுவை வரவேற்பதற்காகக் கடலோரத்தில் ‘மக்கள் திரண்டு வருகிறார்கள்.’ (மாற்கு 5:21) இது ஒருவேளை கப்பர்நகூம் பகுதியாக இருந்திருக்கலாம். அவர் படகிலிருந்து இறங்கும்போதே, அடுத்து என்ன செய்வார் என்று பார்க்க எல்லாரும் ஆர்வமாக இருக்கிறார்கள்.

ஜெபக்கூடத் தலைவர்களில் ஒருவரான யவீரு என்பவரும் இயேசுவைப் பார்க்கத் துடித்துக்கொண்டிருக்கிறார். இயேசுவைப் பார்த்ததும் அவருடைய காலில் விழுகிறார். “என்னுடைய சிறுபெண்ணின் உடல்நிலை ரொம்ப மோசமாக இருக்கிறது; தயவுசெய்து நீங்கள் வந்து அவள்மேல் கைகளை வையுங்கள்; அவள் குணமாகி, பிழைத்துக்கொள்வாள்” என்று சொல்லிப் பல தடவை கெஞ்சுகிறார். (மாற்கு 5:23) அந்தச் சிறுபெண்ணுக்கு 12 வயதுதான் ஆகிறது. அவள் யவீருவின் ஒரே மகள், செல்ல மகள். யவீருவுக்கு இயேசு உதவி செய்வாரா?—லூக்கா 8:42.

யவீருவின் வீட்டுக்குப் போகிற வழியில், இயேசு இன்னொரு கண்ணீர் கதையைக் கேட்கிற சூழ்நிலை உருவாகிறது. இயேசுவுடன் வருகிற மக்களில் பலர், அவர் ஏதாவது அற்புதம் செய்வாரா என்ற ஆசையில்தான் வருகிறார்கள். ஆனால், அந்தக் கூட்டத்தில் இருக்கிற ஒரு பெண் மட்டும் தன்னுடைய மோசமான வியாதியைப் பற்றியே யோசித்துக்கொண்டிருக்கிறாள்.

இந்த யூதப் பெண், கடந்த 12 வருஷங்களாக இரத்தப்போக்கால் படாத பாடுபட்டிருக்கிறாள். நிறைய மருத்துவர்களைப் பார்த்தும், எவ்வளவோ சிகிச்சைகள் எடுத்தும் ஒரு பிரயோஜனமும் இல்லை. அவளுடைய காசெல்லாம் கரைந்ததுதான் மிச்சம். சொல்லப்போனால், அவளுடைய நிலைமை ‘இன்னும் மோசமாகத்தான் ஆகியிருக்கிறது.’—மாற்கு 5:26.

அவள் ரொம்பப் பலவீனமாக இருக்கிறாள். அந்த நோயைப் பற்றி வெளியே சொல்ல அவளுக்கு வெட்கமாகவும் தர்மசங்கடமாகவும் இருக்கிறது. அதோடு, இரத்தப்போக்கு ஏற்பட்டால் ஒரு பெண் தீட்டுள்ளவளாக இருப்பாள் என்று மோசேயின் திருச்சட்டம் சொன்னது. அவளையோ இரத்தக் கறைபடிந்த அவளுடைய உடைகளையோ யாராவது தொட்டால் அவர்கள் குளிக்க வேண்டும் என்றும், சாயங்காலம்வரை அவர்கள் தீட்டுள்ளவர்களாக இருப்பார்கள் என்றும் சொன்னது.—லேவியராகமம் 15:25-27.

இந்தப் பெண், ‘இயேசுவைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருந்தாள்.’ அதனால், இப்போது அவரைத் தேடி வந்திருக்கிறாள். அவள் தீட்டுள்ளவளாக இருந்ததால், முடிந்தவரை யார் கண்ணிலும் படாமல் அந்தக் கூட்டத்துக்குள் நுழைகிறாள். “அவருடைய மேலங்கியைத் தொட்டாலே போதும், நான் குணமாகிவிடுவேன்” என்று தனக்குள் சொல்லிக்கொள்கிறாள். அவருடைய மேலங்கியின் ஓரத்தைத் தொட்டதுமே, அவளுடைய இரத்தப்போக்கு நின்றுவிட்டதை அவள் உணர்கிறாள். அவளைப் ‘பாடாய்ப் படுத்திய அந்த நோயிலிருந்து அவள் குணமாகிறாள்.’—மாற்கு 5:27-29.

அப்போது இயேசு, “யார் என்னைத் தொட்டது?” என்று கேட்கிறார். அதைக் கேட்டபோது அந்தப் பெண்ணுக்கு எப்படி இருந்திருக்கும்! பேதுரு இயேசுவைக் கண்டிக்கும் விதமாக, “போதகரே, மக்கள் உங்களைச் சுற்றிலும் நெருக்கிக்கொண்டிருக்கிறார்கள்” என்று சொல்கிறார். அப்படியென்றால், “யார் என்னைத் தொட்டது?” என்று இயேசு ஏன் கேட்டார்? அதற்கான பதிலை அவரே சொல்கிறார். “யாரோ என்னைத் தொட்டார்கள்; என்னிடமிருந்து வல்லமை வெளியேறியது எனக்குத் தெரியும்” என்று சொல்கிறார். (லூக்கா 8:45, 46) ஏனென்றால், அந்தப் பெண் குணமானபோது இயேசுவிடமிருந்து வல்லமை வெளியேறியிருந்தது.

இனி தப்பிக்க முடியாது என்று அவளுக்குப் புரிந்துவிடுகிறது. அதனால், பயத்தில் நடுங்கிக்கொண்டே இயேசுவின் காலில் விழுகிறாள். எல்லார் முன்பாகவும் தன் நோயைப் பற்றியும் சற்று முன்பு தான் குணமானதைப் பற்றியும் சொல்கிறாள். அதைக் கேட்டதும், “மகளே, உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கியிருக்கிறது. உன்னைப் பாடாய்ப் படுத்திய நோயிலிருந்து சுகமாகி, சமாதானமாகப் போ” என்று இயேசு கனிவாகச் சொல்கிறார். இப்போது அவளுக்கு ரொம்ப ஆறுதலாக இருக்கிறது.—மாற்கு 5:34.

இந்தப் பூமியை ஆட்சி செய்வதற்காகக் கடவுள் தேர்ந்தெடுத்திருக்கிற ராஜா கனிவுள்ளவர், கரிசனையுள்ளவர். அவருக்கு மக்கள்மேல் அக்கறையும் இருக்கிறது, அவர்களுக்கு உதவி செய்வதற்குச் சக்தியும் இருக்கிறது.