Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 33

ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றுகிறார்

ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றுகிறார்

மத்தேயு 12:15-21 மாற்கு 3:7-12

  • மக்கள் கூட்டம் இயேசுவை நெருக்கித் தள்ளுகிறது

  • ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றுகிறார்

பரிசேயர்களும் ஏரோதுவின் ஆதரவாளர்களும் தன்னைக் கொல்லத் திட்டம் தீட்டுகிறார்கள் என்பது தெரிந்ததும், இயேசு தன்னுடைய சீஷர்களோடு கலிலேயா கடலோரமாகப் போகிறார். கலிலேயாவிலிருந்தும், கடலோர நகரங்களான தீரு, சீதோனிலிருந்தும், யோர்தான் ஆற்றின் கிழக்குக் கரையிலிருந்தும், எருசலேமிலிருந்தும், தெற்கே இருக்கிற இதுமேயாவிலிருந்தும் மக்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள். நிறைய பேரை இயேசு குணமாக்குகிறார். அதனால், பயங்கரமான நோய்களால் அவதிப்பட்ட எல்லாரும் அவரைத் தொடுவதற்காக முண்டியடித்துக்கொண்டு வருகிறார்கள். இயேசு தங்களைத் தொடும்வரை காத்திருக்காமல், இவர்களே அவரைத் தொட முயற்சி செய்கிறார்கள்.—மாற்கு 3:9, 10.

அங்கே மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அவர்கள் தன்னை நெருக்காமல் இருப்பதற்காக, ஒரு சிறிய படகைத் தயாராக வைக்கும்படி இயேசு தன் சீஷர்களிடம் சொல்கிறார். அந்தப் படகைக் கரையிலிருந்து சற்றுத் தள்ளி நிறுத்தினால், மக்கள் கூட்டம் அவரை நெருக்காமல் இருக்கும். அதேசமயத்தில், படகில் இருந்துகொண்டே மக்களுக்குக் கற்றுக்கொடுக்கவும் முடியும். அல்லது, கடலோரமாக இருக்கிற வேறு இடங்களுக்குப் போய் அங்கிருக்கிற மக்களுக்கு உதவி செய்ய முடியும்.

இயேசுவின் செயல்கள், ‘ஏசாயா தீர்க்கதரிசி மூலம் சொல்லப்பட்ட வார்த்தைகளை’ நிறைவேற்றியது என்று சீஷராகிய மத்தேயு எழுதியிருக்கிறார். (மத்தேயு 12:17) எந்தத் தீர்க்கதரிசனத்தை இயேசு இங்கே நிறைவேற்றுகிறார்?

“இதோ! இவர்தான் நான் தேர்ந்தெடுத்திருக்கிற என்னுடைய அன்பு ஊழியர், இவரை நான் ஏற்றுக்கொள்கிறேன். என்னுடைய சக்தியை இவருக்குத் தருவேன். எது நியாயம் என்பதை எல்லா தேசத்து மக்களுக்கும் இவர் தெளிவாகக் காட்டுவார். இவர் வாக்குவாதம் செய்ய மாட்டார், குரலை உயர்த்திப் பேச மாட்டார்; முக்கியத் தெருக்களில் இவருடைய குரலை யாரும் கேட்க மாட்டார்கள். நியாயத்தை நிலைநாட்டும்வரை, நசுங்கிய எந்த நாணலையும் இவர் ஒடிக்க மாட்டார்; மங்கியெரிகிற எந்தத் திரியையும் அணைக்க மாட்டார். உண்மையில், எல்லா மக்களும் இவருடைய பெயரில் நம்பிக்கையோடு இருப்பார்கள்.”—மத்தேயு 12:18-21; ஏசாயா 42:1-4.

இயேசுதான் கடவுளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அன்பு ஊழியர். எது நியாயம் என்பதை இயேசு தெளிவாகக் காட்டுகிறார். பொய்யான மதப் பாரம்பரியங்களால் எது நியாயம் என்றே அன்றிருந்த மக்களுக்குத் தெரியவில்லை. கடவுள் தந்த திருச்சட்டத்துக்குப் பரிசேயர்கள் தங்கள் இஷ்டப்படி விளக்கம் கொடுக்கிறார்கள். ஓய்வுநாள் வந்துவிட்டால், நோயால் அவதிப்படுகிற ஒருவருக்கு உதவிகூட செய்ய மாட்டார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில், கடவுள் எதை நியாயம் என்று சொல்கிறார் என்பதை இயேசு தெளிவுபடுத்துகிறார். கடவுளுடைய சக்தி தன்மேல் இருக்கிறது என்பதை நிரூபிக்கிறார். கொஞ்சம்கூட நியாயமே இல்லாத பாரம்பரியங்களின் பாரம் தாங்க முடியாமல் கஷ்டப்படுகிற மக்களுக்கு விடுதலை தருகிறார். அதற்காக, அந்த மதத் தலைவர்கள் அவரைக் கொல்ல நினைக்கிறார்கள். எவ்வளவு அநியாயம்!

“இவர் வாக்குவாதம் செய்ய மாட்டார், குரலை உயர்த்திப் பேச மாட்டார்; முக்கியத் தெருக்களில் இவருடைய குரலை யாரும் கேட்க மாட்டார்கள்” என்றால் என்ன அர்த்தம்? மக்களைக் குணப்படுத்தும்போது, “தன்னைப் பற்றி யாரிடமும் சொல்லக் கூடாதென்று” இயேசு சொல்கிறார்; பேய்களுக்கும் அதே கட்டளையைக் கொடுக்கிறார். (மாற்கு 3:12) தெருக்களில் நின்று மக்கள் தன்னைப் பற்றி விளம்பரப்படுத்த வேண்டும் என்றோ, தன்னைப் பற்றிய பரபரப்பான செய்திகளைக் கேட்டு மக்கள் தன்னைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்றோ இயேசு நினைக்கவில்லை.

அதற்குப் பதிலாக, நசுங்கிய நாணலைப் போல ஒடிந்து, மிதிபட்டு கிடக்கிற மக்களிடம் இயேசுவே போய் ஆறுதலான செய்தியைச் சொல்கிறார். அந்த மக்கள் மங்கியெரிகிற திரியைப் போல இருக்கிறார்கள், கிட்டத்தட்ட அணைந்துவிடும் நிலையில் இருக்கிறார்கள். நசுங்கிய நாணலை இயேசு ஒடிக்கவில்லை, மங்கியெரிகிற திரியை அணைக்கவில்லை. தாழ்மையான மக்களை அன்பாகவும், கனிவாகவும் தூக்கிவிடுகிறார். அதனால், எல்லா மக்களும் இயேசுவைத் தாராளமாக நம்பலாம்.