Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 41

அற்புதங்களுக்குப் பின்னால் இருப்பது யார்?

அற்புதங்களுக்குப் பின்னால் இருப்பது யார்?

மத்தேயு 12:22-32 மாற்கு 3:19-30 லூக்கா 8:1-3

  • இயேசுவின் இரண்டாவது பிரசங்கப் பயணம் ஆரம்பமாகிறது

  • பேய்களைத் துரத்துகிறார், மன்னிக்க முடியாத பாவங்களைப் பற்றி எச்சரிக்கிறார்

மன்னிப்பதைப் பற்றி பரிசேயனாகிய சீமோனின் வீட்டில் பேசிய பிறகு, கலிலேயாவில் அடுத்த பிரசங்கப் பயணத்தை இயேசு ஆரம்பிக்கிறார். இது அவருடைய ஊழியத்தின் இரண்டாவது வருஷம். அவருடைய 12 அப்போஸ்தலர்களும் அவருடன் பயணம் செய்கிறார்கள். “பேய்களிலிருந்தும் நோய்களிலிருந்தும் விடுபட்ட பெண்கள்” சிலரும் அவருடன் போகிறார்கள். (லூக்கா 8:2) மகதலேனா மரியாள், சூசன்னாள், யோவன்னாள் ஆகியோரும் அவருடன் பயணம் செய்கிறார்கள். யோவன்னாளின் கணவர், ஏரோது அந்திப்பாவிடம் வேலை செய்கிற ஒரு அதிகாரி.

இயேசுவைப் பற்றிய செய்திகள் பரவ பரவ, அவரைப் பற்றிய சர்ச்சைகளும் அதிகமாகின்றன. ஒருசமயம், பேய் பிடித்த ஒருவனை அவரிடம் கொண்டு வருகிறார்கள். அவனால் பார்க்கவோ பேசவோ முடியவில்லை. இயேசு அவனைக் குணமாக்குகிறார். மக்கள் எல்லாரும் பிரமித்துப்போய், “ஒருவேளை இவர்தான் தாவீதின் மகனோ?” என்று பேசிக்கொள்ள ஆரம்பிக்கிறார்கள்.—மத்தேயு 12:23.

இயேசுவினாலும் அவருடைய சீஷர்களாலும் சாப்பிடக்கூட முடியாத அளவுக்கு, அவர் தங்கியிருக்கிற வீட்டில் கூட்டம் அலைமோதுகிறது. ஆனால் அங்கே வந்திருக்கிற சிலர், கடவுளால் வாக்குக் கொடுக்கப்பட்ட ‘தாவீதின் மகன்’ இயேசுதான் என்பதை ஏற்றுக்கொள்வதில்லை. வேத அறிஞர்கள் சிலரும் பரிசேயர்கள் சிலரும் எருசலேமிலிருந்து ரொம்பத் தூரம் பயணம் செய்து அங்கே வந்திருக்கிறார்கள். ஆனால், இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்ளவோ அவருக்கு ஆதரவு கொடுக்கவோ அவர்கள் வரவில்லை. “இவனை பெயல்செபூப் பிடித்திருக்கிறது” என்று மக்களிடம் அவர்கள் சொல்கிறார்கள். “பேய்களுடைய தலைவனின்” உதவியால்தான் அவர் பேய்களை விரட்டுகிறார் என்றும் சொல்கிறார்கள். (மாற்கு 3:22) இந்த அமளியைப் பற்றி இயேசுவின் சொந்தக்காரர்கள் கேள்விப்பட்டதும், அவர்கள் இயேசுவைப் பிடித்துக்கொண்டுபோக வருகிறார்கள். ஏன் தெரியுமா?

இந்தச் சமயம்வரை, இயேசுதான் கடவுளின் மகன் என்பதை அவருடைய சொந்த சகோதரர்களே நம்பவில்லை. (யோவான் 7:5) மக்கள் மத்தியில் அவர் குழப்பத்தை ஏற்படுத்திக்கொண்டிருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். நாசரேத்தில் தங்களுடன் வளர்ந்த இயேசுவா இவர் என்று யோசிக்கிறார்கள். கடைசியில், அவருக்கு மனநிலை சரியில்லை என்று முடிவுகட்டி, “அவனுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது” என்று சொல்கிறார்கள்.—மாற்கு 3:21.

ஆனால், உண்மை என்ன? பேய் பிடித்த ஒருவனை இயேசு இப்போதுதான் குணமாக்கியிருக்கிறார். இப்போது அவனால் பார்க்கவும் பேசவும் முடிகிறது. இதை யாராலும் மறுக்க முடியாது. அதனால், வேத அறிஞர்களும் பரிசேயர்களும் இயேசுமேல் பொய்க் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுகிறார்கள். “பேய்களுடைய தலைவனான பெயல்செபூப் உதவியால்தான் இவன் பேய்களை விரட்டுகிறான்” என்று சொல்லி அவருடைய பெயரைக் கெடுக்க முயற்சி செய்கிறார்கள்.—மத்தேயு 12:24.

வேத அறிஞர்களும் பரிசேயர்களும் என்ன யோசிக்கிறார்கள் என்பது இயேசுவுக்குத் தெரியும். அதனால் அவர், “ஒரு ராஜ்யத்துக்குள் பிரிவினைகள் இருந்தால் அந்த ராஜ்யம் நிலைக்காது. ஒரு ஊருக்குள் அல்லது வீட்டுக்குள் பிரிவினைகள் இருந்தால் அதுவும் நிலைக்காது. அதேபோல், சாத்தானைச் சாத்தானே விரட்டினால், அவன் தனக்கு விரோதமாகவே பிரிவினைகள் உண்டாக்குகிறான் என்று அர்த்தம்; அப்படியானால், அவனுடைய ராஜ்யம் எப்படி நிலைக்கும்?” என்று கேட்கிறார்.—மத்தேயு 12:25, 26.

எவ்வளவு திறமையான வாதம்! யூதர்களில் சிலர் பேய்களைத் துரத்துவது பரிசேயர்களுக்கும் தெரியும். (அப்போஸ்தலர் 19:13) அதனால், “நான் பெயல்செபூப் உதவியால் பேய்களை விரட்டுகிறேன் என்றால், உங்களுடைய சீஷர்கள் யாருடைய உதவியால் அவற்றை விரட்டுகிறார்கள்?” என்று இயேசு கேட்கிறார். வேறு வார்த்தைகளில் சொன்னால், இயேசுமேல் பரிசேயர்கள் என்ன குற்றம்சாட்டுகிறார்களோ அது அவர்களுக்கும் பொருந்தும். கடைசியில், “நான் கடவுளுடைய சக்தியால்தான் பேய்களை விரட்டுகிறேன் என்றால், கடவுளுடைய அரசாங்கம் வந்துவிட்டதை நீங்கள் கவனிக்கவில்லை என்றுதான் அர்த்தம்” என்று இயேசு சொல்கிறார்.—மத்தேயு 12:27, 28.

சாத்தானைக் கட்டுப்படுத்துகிற அதிகாரம் தனக்கு இருப்பதால்தான், தன்னால் பேய்களைத் துரத்த முடிகிறது என்பதை ஒரு உதாரணத்தோடு இயேசு விளக்குகிறார். “ஒரு பலசாலியை முதலில் கட்டிப்போடவில்லை என்றால், ஒருவன் எப்படி அவனுடைய வீட்டுக்குள் புகுந்து பொருள்களைக் கொள்ளையடிக்க முடியும்? அவனைக் கட்டிப்போட்ட பின்புதான் வீட்டைக் கொள்ளையடிக்க முடியும். என் பக்கம் இல்லாதவன் எனக்கு விரோதமாக இருக்கிறான், என்னோடு சேர்ந்து மக்களைக் கூட்டிச்சேர்க்காதவன் அவர்களைச் சிதறிப்போக வைக்கிறான்” என்று சொல்கிறார். (மத்தேயு 12:29, 30) வேத அறிஞர்களும் பரிசேயர்களும் இயேசுவுக்கு எதிராக இருக்கிறார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இதன் மூலம், அவர்கள் சாத்தானின் ஆட்கள் என்பதை நிரூபிக்கிறார்கள். யெகோவாவின் துணையோடு இயேசு செயல்படுகிறார். ஆனால், வேத அறிஞர்களும் பரிசேயர்களும் அவரிடமிருந்து மக்களைச் சிதறிப்போக வைக்கிறார்கள்.

சாத்தானின் பக்கம் இருக்கிற இந்த ஆட்களிடம், “மனுஷர்கள் செய்கிற எந்தப் பாவமும் மன்னிக்கப்படும்; அவர்கள் நிந்தித்துப் பேசுகிற எந்த நிந்தனையும் மன்னிக்கப்படும். ஆனால், கடவுளுடைய சக்திக்கு விரோதமாக நிந்தனை செய்கிற எவனுக்கும் என்றுமே மன்னிப்பு கிடையாது; தீராத பாவத்துக்கே அவன் ஆளாவான்” என்று சொல்லி இயேசு எச்சரிக்கிறார். (மாற்கு 3:28, 29) கடவுளுடைய சக்தியின் உதவியால் இயேசு செய்த செயல்களை, சாத்தானின் செயல்கள் என்று சொல்கிறவர்களுக்கு என்ன நடக்கும் என்று யோசித்துப் பாருங்கள்!