Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 20

கானாவில் இரண்டாவது அற்புதம்

கானாவில் இரண்டாவது அற்புதம்

மாற்கு 1:14, 15 லூக்கா 4:14, 15 யோவான் 4:43-54

  • “கடவுளுடைய அரசாங்கம் நெருங்கி வந்துவிட்டது” என்று இயேசு பிரசங்கிக்கிறார்

  • தூரத்திலிருந்தே ஒரு இளைஞனைக் குணமாக்குகிறார்

சமாரியாவில் இரண்டு நாட்கள் தங்கிய பிறகு, இயேசு தான் வளர்ந்த கலிலேயாவுக்குப் போகிறார். அவர் பல மாதங்களாக யூதேயாவில் பிரசங்க வேலையைச் செய்திருந்தார். ஆனாலும், இப்போது ஓய்வெடுப்பதற்காக அவர் கலிலேயாவுக்குப் போகவில்லை. அதற்குப் பதிலாக, இன்னும் பெரியளவில் அங்கே ஊழியம் செய்யப் போகிறார். அங்கிருக்கிற மக்கள் தன்னை ஏற்றுக்கொள்வார்கள் என்று இயேசு எதிர்பார்த்திருக்க மாட்டார். அதனால்தான், “ஒரு தீர்க்கதரிசிக்குத் தன்னுடைய சொந்த தேசத்தில் மதிப்பில்லை” என்று அவர் சொல்கிறார். (யோவான் 4:44) இயேசுவின் சீஷர்கள் அவருடன் தங்காமல், தங்களுடைய வீடுகளுக்குத் திரும்பிப் போய், முன்பு செய்துவந்த வேலைகளைச் செய்ய ஆரம்பிக்கிறார்கள்.

இயேசு முதலில் எந்தச் செய்தியைப் பிரசங்கிக்கிறார்? “கடவுளுடைய அரசாங்கம் நெருங்கி வந்துவிட்டது; மனம் திருந்துங்கள், நல்ல செய்தியில் விசுவாசம் வையுங்கள்” என்று பிரசங்கிக்கிறார். (மாற்கு 1:15) அதைக் கேட்டு கலிலேயாவில் இருக்கிற மக்கள் என்ன செய்கிறார்கள்? நிறைய பேர் இயேசுவை ஏற்றுக்கொண்டு, அவருக்கு மரியாதை கொடுக்கிறார்கள். அவர் சொன்ன செய்தி மட்டுமே அதற்குக் காரணம் அல்ல. சில மாதங்களுக்கு முன்னால் எருசலேமில் நடந்த பஸ்கா பண்டிகையின்போது இயேசு செய்த மிகப் பெரிய அடையாளங்களை அவர்களில் சிலர் நேரில் பார்த்திருந்தார்கள். அதனால்தான், அவர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்கிறார்கள்.—யோவான் 2:23.

இப்போது, கலிலேயாவின் எந்த இடத்தில் இயேசு தன்னுடைய ஊழியத்தை ஆரம்பிக்கிறார்? ஒருவேளை, கானாவில் ஆரம்பித்திருக்கலாம். முன்பு அங்கே நடந்த ஒரு கல்யாணத்தில் அவர் தண்ணீரைத் திராட்சமதுவாக மாற்றியிருந்தார். இப்போது இரண்டாவது தடவையாக கானாவுக்கு வந்திருக்கும்போது, ஒரு இளைஞன் உடம்பு சரியில்லாமல் சாகக் கிடக்கிறான் என்று கேள்விப்படுகிறார். அவனுடைய அப்பா, ஏரோது அந்திப்பாவிடம் வேலை செய்கிற ஒரு அதிகாரி. இந்த ஏரோது அந்திப்பாதான் பிற்பாடு யோவான் ஸ்நானகரின் தலையை வெட்டினான். இயேசு யூதேயாவிலிருந்து கானாவுக்கு வந்திருப்பதை இந்த அதிகாரி கேள்விப்படுகிறார். வேதனையில் துவண்டுபோயிருந்த இந்த அதிகாரி, இயேசுவைப் பார்ப்பதற்காக கப்பர்நகூமிலிருக்கிற தன் வீட்டிலிருந்து கானாவுக்கு வருகிறார். இயேசுவைப் பார்த்ததும், “எஜமானே, என்னுடைய பிள்ளை சாவதற்கு முன்பு என் வீட்டுக்கு வாருங்கள்” என்று கெஞ்சுகிறார்.—யோவான் 4:49.

இயேசு அவரிடம், “நீ புறப்பட்டுப் போ, உன்னுடைய மகன் பிழைத்துக்கொண்டான்” என்று சொல்கிறார். (யோவான் 4:50) அதைக் கேட்டு அந்த அதிகாரிக்கு ஒரே ஆச்சரியம்! இயேசுவின் வார்த்தையை நம்பி, தன் வீட்டுக்குக் கிளம்புகிறார். வழியில், அவருடைய அடிமைகள் அவரைச் சந்திப்பதற்காக ஓடோடி வருவதைப் பார்க்கிறார். அவருடைய மகன் குணமாகிவிட்டான் என்ற நல்ல செய்தியைச் சொல்வதற்காக அவர்கள் வந்திருக்கிறார்கள். ‘அவன் எந்த நேரத்தில் குணமடைந்தான்?’ என்று அவர்களிடம் விசாரிக்கிறார்.

“நேற்று ஏழாம் மணிநேரத்தில் அவனுக்குக் காய்ச்சல் விட்டது” என்று அவர்கள் சொல்கிறார்கள்.—யோவான் 4:52.

“உன்னுடைய மகன் பிழைத்துக்கொண்டான்” என்று இயேசு சொன்ன அதே நேரத்தில்தான் அவன் குணமானான் என்பதை அந்த அதிகாரி புரிந்துகொள்கிறார். அடிமைகளை வைத்திருக்கிற அளவுக்குப் பணக்காரராக இருக்கும் அந்த அதிகாரியும் அவருடைய வீட்டில் இருக்கிற எல்லாரும் இயேசுவின் சீஷர்களாக ஆகிறார்கள்.

இப்படி, கானாவில் இரண்டு தடவை இயேசு அற்புதங்களைச் செய்கிறார். முதலில், தண்ணீரைத் திராட்சமதுவாக மாற்றுகிறார். அடுத்து, அவர் இருக்கிற இடத்திலிருந்தே கிட்டத்தட்ட 26 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிற ஒரு இளைஞனைக் குணமாக்குகிறார். இதுவரை இயேசு நிறைய அற்புதங்களைச் செய்திருந்தாலும், இந்த இளைஞனைக் குணமாக்கியது ரொம்ப முக்கியமான அற்புதம் என்று சொல்லலாம். ஏனென்றால், கலிலேயாவில் அவருடைய ஊழியத்தின் ஆரம்பத்தில் இது நடக்கிறது. அவர் கடவுளால் அனுப்பப்பட்ட தீர்க்கதரிசி என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது. ஆனால், எந்தளவு இந்த ‘தீர்க்கதரிசிக்கு அவருடைய சொந்த தேசத்தில் மதிப்பு’ கிடைக்கிறது?

இயேசு தன் சொந்த ஊரான நாசரேத்துக்குப் போகும்போது இந்தக் கேள்விக்குப் பதில் கிடைக்கும். அங்கே என்ன நடக்கிறது?