Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 22

நான்கு சீஷர்கள் மனிதர்களைப் பிடிப்பவர்களாக ஆகிறார்கள்

நான்கு சீஷர்கள் மனிதர்களைப் பிடிப்பவர்களாக ஆகிறார்கள்

மத்தேயு 4:13-22 மாற்கு 1:16-20 லூக்கா 5:1-11

  • தன்னை முழுநேரமாகப் பின்பறும்படி சீஷர்களை இயேசு அழைக்கிறார்

  • மீன்பிடிக்கிறவர்கள் மனிதர்களைப் பிடிக்கிறவர்களாக ஆகிறார்கள்

நாசரேத் மக்களிடமிருந்து தப்பித்த பிறகு, கலிலேயா கடலுக்குப் பக்கத்தில் இருக்கிற கப்பர்நகூமுக்கு இயேசு போகிறார். இந்த கலிலேயா கடலுக்கு “கெனேசரேத்து ஏரி” என்ற பெயரும் இருக்கிறது. (லூக்கா 5:1) கடலோரமாக வாழ்கிற கலிலேயா மக்கள் பெரிய வெளிச்சத்தைப் பார்ப்பார்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்னது இப்போது நிறைவேறுகிறது.—ஏசாயா 9:1, 2.

கலிலேயாவில் இருக்கும்போது, “பரலோக அரசாங்கம் நெருங்கி வந்துவிட்டது” என்று இயேசு எல்லாருக்கும் பிரசங்கிக்கிறார். (மத்தேயு 4:17) அங்கே தன்னுடைய சீஷர்கள் நான்கு பேரை அவர் பார்க்கிறார். முன்பு, அவர்கள் இயேசுவோடு பயணம் செய்திருந்தார்கள். யூதேயாவிலிருந்து திரும்பி வந்த பிறகு, மறுபடியும் மீன்பிடிக்கிற வேலைக்கே போய்விட்டார்கள். (யோவான் 1:35-42) ஆனால், இப்போது அவர்கள் இயேசுவோடு இருந்து கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. அப்படிச் செய்தால்தான், அவர் போன பிறகு அவர்களால் தொடர்ந்து ஊழியத்தைச் செய்ய முடியும்.

இயேசு கரையோரமாக நடந்து போகும்போது, சீமோன் பேதுருவையும் அவருடைய சகோதரர் அந்திரேயாவையும் பார்க்கிறார். அவர்களும் அவர்களோடு வேலை செய்கிறவர்களும் வலைகளை அலசிக்கொண்டிருக்கிறார்கள். இயேசு பேதுருவின் படகில் ஏறி, அதைக் கரையிலிருந்து சற்றுத் தள்ளும்படி அவரிடம் சொல்கிறார். கொஞ்சத் தூரம் அவர்கள் படகைத் தள்ளியவுடன், இயேசு அந்தப் படகில் உட்கார்ந்து, அங்கே கூடிவந்திருக்கிற மக்களுக்குக் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிப் பிரசங்கிக்கிறார்.

பிறகு இயேசு பேதுருவிடம், “ஆழமான இடத்துக்குப் படகைக் கொண்டுபோய், உங்கள் வலைகளைப் போட்டு மீன்பிடியுங்கள்” என்று சொல்கிறார். அதற்கு பேதுரு, “போதகரே, ராத்திரி முழுவதும் நாங்கள் பாடுபட்டும் ஒன்றுமே கிடைக்கவில்லை; இருந்தாலும், நீங்கள் சொல்வதால் வலைகளைப் போடுகிறேன்” என்று சொல்கிறார்.—லூக்கா 5:4, 5.

அவர்கள் வலைகளைப் போட்டதும் ஏராளமான மீன்கள் சிக்குகின்றன. சொல்லப்போனால், அவர்களுடைய வலைகளே கிழிய ஆரம்பிக்கின்றன. அதனால், இன்னொரு படகிலிருந்த தங்கள் கூட்டாளிகளிடம் சைகை காட்டி உதவிக்கு வரச் சொல்லிக் கூப்பிடுகிறார்கள். சீக்கிரத்திலேயே இரண்டு படகுகளும் மீன்களால் நிரம்பி, கிட்டத்தட்ட மூழ்கிவிடும் நிலைக்கு வந்துவிடுகின்றன. இதைப் பார்த்ததும் பேதுரு இயேசுவின் காலில் விழுந்து, “எஜமானே, நான் ஒரு பாவி, என்னைவிட்டுப் போய்விடுங்கள்” என்று சொல்கிறார். அதற்கு இயேசு, “பயப்படாதே. இனிமேல் நீ மனுஷர்களை உயிரோடு பிடிப்பாய்” என்று சொல்கிறார்.—லூக்கா 5:8, 10.

இயேசு பேதுருவையும் அந்திரேயாவையும் பார்த்து, “என் பின்னால் வாருங்கள், உங்களை மனுஷர்களைப் பிடிப்பவர்களாக ஆக்குவேன்” என்று சொல்கிறார். (மத்தேயு 4:19) செபெதேயுவின் மகன்களான யாக்கோபையும் யோவானையும்கூட அவர் கூப்பிடுகிறார். கொஞ்சம்கூட தயங்காமல் இந்த மீனவர்கள் எல்லாரும் இயேசுவின் பின்னால் போகிறார்கள். மீன்பிடிக்கிற வேலையை விட்டுவிட்டு முழுநேரமாக இயேசுவைப் பின்பற்ற ஆரம்பிக்கிறார்கள்.