Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 60

கிறிஸ்து மகிமையோடு தோன்றுகிறார்

கிறிஸ்து மகிமையோடு தோன்றுகிறார்

மத்தேயு 16:28–17:13 மாற்கு 9:1-13 லூக்கா 9:27-36

  • இயேசு தோற்றம் மாறுகிறார்

  • கடவுளின் குரலை அப்போஸ்தலர்கள் கேட்கிறார்கள்

எர்மோன் மலையிலிருந்து கிட்டத்தட்ட 25 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிற பிலிப்புச் செசரியா பகுதியில் இயேசு கற்பித்துக்கொண்டிருக்கிறார். அப்போது தன்னுடைய அப்போஸ்தலர்களிடம், “உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், இங்கே நிற்கிறவர்களில் சிலர், மனிதகுமாரன் ராஜ அதிகாரத்தில் வருவதைப் பார்ப்பதற்கு முன்னால் சாகவே மாட்டார்கள்” என்று சொல்கிறார். அதைக் கேட்டு அப்போஸ்தலர்கள் ஆச்சரியப்படுகிறார்கள்.—மத்தேயு 16:28.

ஆனாலும், இதற்கு என்ன அர்த்தம் என்று தெரியாமல் அப்போஸ்தலர்கள் குழம்பியிருக்கலாம். கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்குப் பிறகு, தன்னுடைய அப்போஸ்தலர்களான பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் உயரமான ஒரு மலைக்கு இயேசு கூட்டிக்கொண்டு போகிறார். ஒருவேளை, அவர்கள் ராத்திரி நேரத்தில் போயிருக்கலாம். அதனால், அப்போஸ்தலர்கள் மூன்று பேரும் தூக்கக் கலக்கத்தில் இருக்கிறார்கள். இயேசு ஜெபம் செய்துகொண்டிருக்கும்போதே, அவர்கள் முன்னால் அவருடைய தோற்றம் மாறுகிறது. அவருடைய முகம் சூரியனைப் போலப் பிரகாசிக்கிறது. அவருடைய உடை ஒளியைப் போலப் பளபளவென்று மின்னுகிறது; வெள்ளைவெளேரென ஆகிறது.

பிறகு, இரண்டு பேர் அங்கே தோன்றுகிறார்கள். அவர்கள் பார்ப்பதற்கு ‘மோசே மற்றும் எலியா’ போல இருக்கிறார்கள். அவர்கள் இயேசுவிடம் “எருசலேமில் நிறைவேறப்போகிற அவருடைய இறுதிப் பயணத்தைப் பற்றி” பேசுகிறார்கள். (லூக்கா 9:30, 31) இந்த இறுதிப் பயணம் அநேகமாக அவருடைய மரணத்தையும், உயிர்த்தெழுதலையும் குறிக்கலாம். சமீபத்தில், இயேசு இதைப் பற்றித் தன் சீஷர்களிடம் சொல்லியிருந்தார். (மத்தேயு 16:21) மோசேயும் எலியாவும் இயேசுவிடம் பேசிய விஷயத்திலிருந்து, அவர் நிச்சயம் ஒரு இழிவான மரணத்தைச் சந்தித்தே தீர வேண்டும் என்பது தெரிகிறது. இது இயேசுவிடம் பேதுரு சொன்னதற்கு நேர்மாறாக இருக்கிறது!

இப்போது அப்போஸ்தலர்களுக்குத் தூக்கமெல்லாம் பறந்துவிடுகிறது. அங்கே நடப்பதை அவர்கள் கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இது ஒரு தரிசனம்தான்; ஆனால், எல்லாமே நிஜமாக நடப்பதுபோல் தத்ரூபமாக இருக்கிறது. அதனால் பேதுரு, “ரபீ, இங்கே இருப்பது எங்கள் பாக்கியம். உங்களுக்கு ஒன்றும், மோசேக்கு ஒன்றும், எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை நாங்கள் போடுகிறோம்” என்று இயேசுவிடம் சொல்கிறார். (மாற்கு 9:5) இந்தக் காட்சி இன்னும் கொஞ்ச நேரம் நீடிக்க வேண்டும் என்று பேதுரு ஆசைப்படுகிறாரா? அதனால்தான் கூடாரம் போடுவதாகச் சொல்கிறாரா?

பேதுரு பேசிக்கொண்டிருக்கும்போதே, பிரகாசமான ஒரு மேகம் அவர்களை மூடுகிறது. அதோடு, “இவர் என் அன்பு மகன்; நான் இவரை ஏற்றுக்கொள்கிறேன்; இவர் சொல்வதைக் கேளுங்கள்” என்று அந்த மேகத்திலிருந்து ஒரு குரல் கேட்கிறது. கடவுளுடைய குரலைக் கேட்டதும் சீஷர்கள் பயந்துபோய் சாஷ்டாங்கமாக விழுகிறார்கள். இயேசு அவர்கள் பக்கத்தில் வந்து, “எழுந்திருங்கள், பயப்படாதீர்கள்” என்று சொல்கிறார். (மத்தேயு 17:5-7) அப்போஸ்தலர்கள் மூன்று பேரும் எழுந்து பார்க்கும்போது, அங்கே இயேசு மட்டும்தான் இருக்கிறார். தரிசனம் முடிந்துவிட்டது! விடிந்த பிறகு அவர்கள் எல்லாரும் மலையிலிருந்து இறங்கி வருகிறார்கள். வழியில் இயேசு அவர்களிடம், “நீங்கள் பார்த்த இந்தத் தரிசனத்தை மனிதகுமாரன் உயிர்த்தெழுப்பப்படும்வரை யாரிடமும் சொல்லக் கூடாது” என்று கட்டளையிடுகிறார்.—மத்தேயு 17:9.

அந்தத் தரிசனத்தில் எலியா தோன்றியதால் அப்போஸ்தலர்களுக்கு ஒரு சந்தேகம் வருகிறது. அவர்கள் இயேசுவிடம், “எலியா முதலில் வர வேண்டும் என்று வேத அறிஞர்கள் ஏன் சொல்கிறார்கள்?” என்று கேட்கிறார்கள். அதற்கு அவர், ‘எலியா ஏற்கெனவே வந்துவிட்டார்; ஆனால், அவரை அவர்கள் அடையாளம் கண்டுகொள்ளவில்லை’ என்று சொல்கிறார். (மத்தேயு 17:10-12) யோவான் ஸ்நானகரைப் பற்றித்தான் இயேசு குறிப்பிடுகிறார். எலியா செய்தது போன்ற ஒரு வேலையைத்தான் யோவானும் செய்தார். எலிசாவுக்காக எலியா வழியைத் தயார்படுத்தினார். அதேபோல, கிறிஸ்துவுக்காக யோவான் வழியைத் தயார்படுத்தினார்.

இந்தக் காட்சி இயேசுவையும் அவருடைய அப்போஸ்தலர்களையும் பலப்படுத்துகிறது. பரலோக அரசாங்கத்தின் ராஜாவாக கிறிஸ்து பெறப்போகும் மகிமைக்கு இது ஒரு முற்காட்சியாக இருக்கிறது. இயேசு வாக்குக் கொடுத்தபடி, “மனிதகுமாரன் ராஜ அதிகாரத்தில் வருவதை” அவருடைய சீஷர்கள் பார்த்தார்கள். (மத்தேயு 16:28) அந்த மலையில் இருந்தபோது ‘அவருடைய மகத்துவத்தை நேரில் பார்த்தார்கள்.’ இயேசுதான் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜா என்பதை நம்புவதற்குப் பரிசேயர்கள் ஒரு அடையாளத்தைக் கேட்டபோது, இயேசு மறுத்துவிட்டார். ஆனால், அவருடைய நெருங்கிய சீஷர்களுக்கு அவர் தோற்றம் மாறுகிற காட்சியைப் பார்க்கிற பாக்கியம் கிடைத்தது. கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய தீர்க்கதரிசனங்கள் நிறைவேறும் என்ற நம்பிக்கையை இது கொடுத்தது. அதனால்தான், “தீர்க்கதரிசன வார்த்தைகள் நமக்கு இன்னும் உறுதியாகிவிட்டன” என்று பேதுருவினால் பிற்பாடு எழுத முடிந்தது.—2 பேதுரு 1:16-19.