Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 44

புயல்காற்றை இயேசு அடக்குகிறார்

புயல்காற்றை இயேசு அடக்குகிறார்

மத்தேயு 8:18, 23-27 மாற்கு 4:35-41 லூக்கா 8:22-25

  • கலிலேயா கடலில் புயலை அடக்குகிறார்

இயேசு அன்று முழுவதும் வேலை செய்து, களைப்பாக இருக்கிறார். அதனால் சாயங்காலத்தில், “அக்கரைக்குப் போகலாம் வாருங்கள்” என்று தன் சீஷர்களிடம் சொல்கிறார். கப்பர்நகூமுக்கு எதிரிலிருக்கிற கரைக்கு அவர்கள் போகிறார்கள்.—மாற்கு 4:35.

கலிலேயா கடலின் கிழக்குக் கரையில் கெரசேனர் என்ற பகுதி இருக்கிறது. இந்தப் பகுதி, தெக்கப்போலி என்றும் அழைக்கப்படுகிறது. தெக்கப்போலியைச் சேர்ந்த நகரங்களில் யூதர்கள் அதிகமாக வாழ்ந்தாலும், இது கிரேக்க கலாச்சாரத்தின் முக்கிய இடமாக இருக்கிறது.

இயேசு ஒரு படகில் ஏறி கப்பர்நகூமிலிருந்து புறப்படுவதை மக்கள் பார்த்துவிடுகிறார்கள். அந்தப் படகுடன் வேறு சில படகுகளும் கலிலேயா கடலைக் கடக்க ஆரம்பிக்கின்றன. (மாற்கு 4:36) அக்கரை ஒன்றும் அவ்வளவு தூரத்தில் இல்லை. கலிலேயா கடல் ஒரு பெரிய நன்னீர் ஏரி; கிட்டத்தட்ட 21 கிலோமீட்டர் நீளமாகவும், 12 கிலோமீட்டர் அகலமாகவும் இருக்கிறது; இது சற்று ஆழமான ஏரி.

இயேசு பரிபூரண மனிதராக இருந்தாலும், நாள் முழுவதும் ஊழியம் செய்ததால் இப்போது ரொம்பக் களைப்பாக இருக்கிறார். அதனால், படகு புறப்பட்டதும் அவர் படகின் பின்புறத்துக்குப் போய், தலையணை வைத்து நன்றாகப் படுத்துத் தூங்குகிறார்.

அவருடைய அப்போஸ்தலர்கள் பலருக்குப் படகு ஓட்டுவது கைவந்த கலை. ஆனால், இந்தப் பயணம் அவர்களுடைய திறமைக்கு ஒரு சவாலாக இருக்கப்போகிறது. கலிலேயா கடலைச் சுற்றிலும் மலைகள் இருக்கின்றன. பொதுவாக, கலிலேயா கடலின் மேற்பரப்பு வெதுவெதுப்பாக இருக்கும். சில சமயங்களில், மலைகளிலிருந்து வீசுகிற குளிர்காற்று, கலிலேயா கடலின் வெதுவெதுப்பான மேற்பரப்பை வேகமாக மோதும்போது பயங்கர புயல் உருவாகும். இப்போதும் அதேதான் நடக்கிறது. அலைகள் படகின்மீது ஆக்ரோஷமாக மோதுகின்றன. ‘படகு தண்ணீரால் நிரம்ப ஆரம்பித்ததால், மூழ்கிவிடும் ஆபத்து’ ஏற்படுகிறது. (லூக்கா 8:23) ஆனால், இயேசு இன்னமும் தூங்கிக்கொண்டிருக்கிறார்!

அப்போஸ்தலர்கள் இதுபோன்ற பல புயல்களைப் பார்த்திருக்கிறார்கள். அதனால், தங்களுடைய அனுபவத்தை வைத்து, படகை ஓட்ட மும்முரமாக முயற்சி செய்கிறார்கள். ஆனால், இந்தத் தடவை அவர்களால் சமாளிக்க முடிவதில்லை. உயிருக்குப் பயந்து, அவர்கள் இயேசுவை எழுப்புகிறார்கள். “எஜமானே, காப்பாற்றுங்கள், நாம் சாகப்போகிறோம்!” என்று அலறுகிறார்கள். (மத்தேயு 8:25) தண்ணீரில் மூழ்கிவிடுவோமோ என்று பயப்படுகிறார்கள்.

இயேசு எழுந்ததும், “விசுவாசத்தில் குறைவுபடுகிறவர்களே, ஏன் இப்படிப் பயப்படுகிறீர்கள்?” என்று அவர்களிடம் கேட்கிறார். (மத்தேயு 8:26) பிறகு காற்றையும் கடலையும் பார்த்து, “உஷ்! அமைதியாக இரு!” என்று சொல்கிறார். (மாற்கு 4:39) உடனே, சீறிக்கொண்டிருந்த புயல்காற்று அடங்குகிறது, பொங்கியெழுந்த அலைகள் அமைதியாகின்றன. (மனதைத் தொடும் இந்தச் சம்பவத்தைப் பற்றி மாற்குவும் லூக்காவும் எழுதியிருக்கிறார்கள். புயல்காற்றை இயேசு அற்புதமாக அடக்கியதைப் பற்றி முதலில் சொல்லிவிட்டு, பிறகு சீஷர்களின் விசுவாசக் குறைவைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்கள்.)

இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த சீஷர்களுக்கு எப்படி இருந்திருக்கும்! கொந்தளித்துக்கொண்டிருந்த கலிலேயா கடல் கப்சிப் என்று அடங்கியதும் அவர்களுக்கு ஏதோவொரு இனம் புரியாத பயம் ஏற்படுகிறது. அதனால், “இவர் உண்மையில் யார்? காற்றும் கடலும்கூட இவருக்கு அடங்கிவிடுகின்றனவே!” என்று ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்கிறார்கள். பின்பு, கடலின் அக்கரைக்குப் பத்திரமாக வந்துசேர்கிறார்கள். (மாற்கு 4:41–5:1) ஆனால், இவர்களுக்குப் பின்னால் வந்த மற்ற படகுகள் மேற்குக் கரைக்குத் திரும்பிப் போயிருக்கலாம்.

இயற்கையைக் கட்டுப்படுத்துகிற சக்தி கடவுளுடைய மகனுக்கு இருப்பதைப் பற்றிப் படிக்கும்போது நம் மனதில் நம்பிக்கை பிறக்கிறது. அவர் ராஜாவாக ஆட்சி செய்யும்போது அவருடைய முழு கவனமும் இந்தப் பூமியின்மேல் இருக்கும். அப்போது, இயற்கை பேரழிவுகளே இருக்காது. மக்கள் எல்லாரும் பாதுகாப்பாக வாழ்வார்கள்.