Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 59

மனிதகுமாரன் யார்?

மனிதகுமாரன் யார்?

மத்தேயு 16:13-27 மாற்கு 8:22-38 லூக்கா 9:18-26

  • கண் தெரியாத ஒருவனை இயேசு குணமாக்குகிறார்

  • கடவுளுடைய அரசாங்கத்தின் சாவிகளை பேதுரு பெற்றுக்கொள்வார்

  • தன்னுடைய மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் பற்றி இயேசு சொல்கிறார்

இயேசுவும் அவருடைய சீஷர்களும் பெத்சாயிதாவுக்கு வந்துசேர்கிறார்கள். அப்போது மக்கள் கண் தெரியாத ஒருவனை இயேசுவிடம் கூட்டிக்கொண்டு வந்து, அவனைத் தொட்டு குணமாக்கும்படி கெஞ்சுகிறார்கள்.

இயேசு அவனுடைய கையைப் பிடித்து, அந்தக் கிராமத்துக்கு வெளியே கூட்டிக்கொண்டு போகிறார். பிறகு, அவனுடைய கண்கள்மேல் உமிழ்ந்து, “ஏதாவது தெரிகிறதா?” என்று கேட்கிறார். அப்போது அவன், “ஆட்கள் நடமாடுவது தெரிகிறது; ஆனால், அவர்கள் மரங்களைப் போல் தெரிகிறார்கள்” என்று சொல்கிறான். (மாற்கு 8:23, 24) இயேசு அவனுடைய கண்கள்மேல் கைகளை வைக்கிறார். இப்போது அவனுக்கு எல்லாமே தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. அதனால், இயேசு அவனை வீட்டுக்கு அனுப்பிவைக்கிறார். ஆனால், கிராமத்துக்குள் நுழைய வேண்டாம் என்று அவனிடம் சொல்கிறார்.

அடுத்ததாக, பிலிப்புச் செசரியாவுக்குப் போவதற்காக இயேசுவும் அவருடைய சீஷர்களும் வடக்கு நோக்கிப் பயணம் செய்கிறார்கள். அந்தக் கிராமம் கடல் மட்டத்திலிருந்து 1,150 அடி உயரத்தில் இருக்கிறது. அதன் வடகிழக்கில் பனி படர்ந்த எர்மோன் மலை இருக்கிறது. பிலிப்புச் செசரியாவுக்குப் போக அவர்கள் மலைப்பாதையில் கிட்டத்தட்ட 40 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்ய வேண்டும். அதற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஆகும்.

அவர்கள் வழியில் போய்க்கொண்டிருக்கும்போது, ஜெபம் செய்வதற்காக இயேசு தனியாக ஓரிடத்துக்குப் போகிறார். இன்னும் ஒன்பது அல்லது பத்து மாதங்களில் அவர் இறந்துவிடுவார். அதனால், இயேசு தன் சீஷர்களை நினைத்து கவலைப்படுகிறார். சமீபத்தில், அவருடைய சீஷர்களில் பலர் அவரைப் பின்பற்றுவதை நிறுத்திவிட்டார்கள். ஒருவேளை, மற்ற சீஷர்கள் குழப்பத்தில் இருந்திருக்கலாம் அல்லது ஏமாற்றம் அடைந்திருக்கலாம். அவரை ராஜாவாக்க மக்கள் முயற்சி செய்தபோது அவர் ஏன் அதை ஏற்றுக்கொள்ளவில்லை... அவர் யார் என்று நிரூபிப்பதற்கு ஏன் ஒரு அடையாளத்தைக் கொடுக்கவில்லை... என்றெல்லாம் அவர்கள் யோசித்திருக்கலாம்.

அவர் ஜெபம் செய்துகொண்டிருக்கிற இடத்துக்குச் சீஷர்கள் வந்ததும், “மனிதகுமாரனை யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?” என்று அவர்களிடம் கேட்கிறார். அதற்கு அவர்கள், “சிலர் யோவான் ஸ்நானகர் என்றும், வேறு சிலர் எலியா என்றும், இன்னும் சிலர் எரேமியா அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்கிறார்கள்” என்று பதிலளிக்கிறார்கள். இறந்துபோன அந்தத் தீர்க்கதரிசிகளில் ஒருவர்தான் இப்போது உயிரோடு வந்துவிட்டார் என்று மக்கள் நினைக்கிறார்கள். சீஷர்கள் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள இயேசு விரும்புகிறார். அதனால், “நீங்கள் என்னை யாரென்று சொல்கிறீர்கள்?” என்று கேட்கிறார். அப்போது பேதுரு, “நீங்கள் கிறிஸ்து, உயிருள்ள கடவுளுடைய மகன்” என்று சட்டென பதில் சொல்கிறார்.—மத்தேயு 16:13-16.

கடவுள்தான் இந்த விஷயத்தை பேதுருவுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார் என்றும், அதை நினைத்து பேதுரு சந்தோஷப்பட வேண்டும் என்றும் இயேசு சொல்கிறார். அதோடு, “நான் உனக்குச் சொல்கிறேன், நீ பேதுரு; நான் என்னுடைய சபையை இந்தக் கற்பாறைமேல் கட்டுவேன்; கல்லறையின் வாசல்களால் அதை ஜெயிக்க முடியாது” என்றும் சொல்கிறார். தானே ஒரு சபையைக் கட்டப்போவதாக இயேசு சொல்கிறார். அதன் உறுப்பினர்கள் இந்தப் பூமியில் கடைசிவரை உண்மையாக இருந்தால், கல்லறையால்கூட அவர்களைப் பிடித்துவைக்க முடியாது என்று சொல்கிறார். அதோடு, “பரலோக அரசாங்கத்தின் சாவிகளை நான் உனக்குத் தருவேன்” என்றும் பேதுருவுக்கு வாக்குக் கொடுக்கிறார்.—மத்தேயு 16:18, 19.

அப்போஸ்தலர்கள் மத்தியில் பேதுருவுக்கு முதல் இடத்தை இயேசு கொடுக்கவுமில்லை, சபையின் அஸ்திவாரமாக அவரை ஆக்கவுமில்லை. இயேசு என்ற கற்பாறையின் மேல்தான் சபை கட்டப்படும். (1 கொரிந்தியர் 3:11; எபேசியர் 2:20) ஆனால், பேதுருவுக்கு மூன்று சாவிகள் கிடைக்கும். அதாவது, பரலோக அரசாங்கத்துக்குள் நுழைய வெவ்வேறு மக்கள் தொகுதிகளுக்கு வாய்ப்பைத் திறந்து வைக்கிற பாக்கியம் அவருக்குக் கிடைக்கும்.

கி.பி. 33-ஆம் வருஷம், பெந்தெகொஸ்தே நாளில் முதல் சாவியை பேதுரு பயன்படுத்துவார். மீட்புப் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை மனம் திருந்துகிற யூதர்களுக்கும், யூத மதத்துக்கு மாறியவர்களுக்கும் அவர் எடுத்துச்சொல்வார். இரண்டாவது சாவியை, விசுவாசம் வைக்கிற சமாரியர்கள் கடவுளுடைய அரசாங்கத்துக்குள் நுழைவதற்காகப் பயன்படுத்துவார். மூன்றாவது சாவியை, கி.பி. 36-ஆம் வருஷத்தில் பயன்படுத்துவார். அப்போது, விருத்தசேதனம் செய்யப்படாத மற்ற தேசத்து மக்களான கொர்நேலியுவுக்கும் மற்றவர்களுக்கும் அதே வாய்ப்பு கிடைக்கும்.—அப்போஸ்தலர் 2:37, 38; 8:14-17; 10:44-48.

இந்தச் சமயத்தில், எருசலேமில் தான் படப்போகிற பாடுகளைப் பற்றியும் தன் மரணத்தைப் பற்றியும் சீஷர்களிடம் இயேசு சொல்கிறார். அதைக் கேட்டு அவர்கள் ரொம்பக் கவலைப்படுகிறார்கள். இயேசு உயிரோடு எழுந்து பரலோகத்துக்குப் போவார் என்பது பேதுருவுக்குப் புரியாததால், அவர் இயேசுவைத் தனியாகக் கூட்டிக்கொண்டு போய், “எஜமானே, இந்தக் கஷ்டங்கள் உங்களுக்கு வேண்டாம்! இதெல்லாம் உங்களுக்கு நடக்கவே நடக்காது” என்று அதட்டலாகச் சொல்கிறார். ஆனால் இயேசு திரும்பிக்கொண்டு, “என் பின்னால் போ, சாத்தானே! நீ எனக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறாய்; நீ கடவுளைப் போல் யோசிக்காமல் மனுஷர்களைப் போல் யோசிக்கிறாய்” என்று பேதுருவிடம் சொல்கிறார்.—மத்தேயு 16:22, 23.

இயேசு தன் அப்போஸ்தலர்களையும் மற்றவர்களையும் தன்னிடம் கூப்பிட்டு, தன்னைப் பின்பற்றி வருவது சுலபம் கிடையாது என்று சொல்கிறார். “யாராவது என்னைப் பின்பற்றிவர விரும்பினால், அவர் தன்னையே துறந்து, தன் சித்திரவதைக் கம்பத்தை சுமந்துகொண்டு தொடர்ந்து என் பின்னால் வர வேண்டும். தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக்கொள்ள நினைக்கிறவன் அதை இழந்துபோவான்; ஆனால், எனக்காகவும் நல்ல செய்திக்காகவும் தன் உயிரை இழப்பவன் அதைக் காப்பாற்றிக்கொள்வான்” என்று சொல்கிறார்.—மாற்கு 8:34, 35.

இயேசுவின் அங்கீகாரம் வேண்டுமென்றால், அவருடைய சீஷர்கள் தைரியமாக இருக்க வேண்டும்; தியாகங்கள் செய்ய வேண்டும். “விசுவாசதுரோகமும் பாவமும் செய்கிற இந்தத் தலைமுறையினரில் ஒருவன் என்னைக் குறித்தும் என் வார்த்தைகளைக் குறித்தும் வெட்கப்பட்டால், மனிதகுமாரன் தன்னுடைய தகப்பனின் மகிமையில் பரிசுத்த தூதர்களோடு வரும்போது அவனைக் குறித்து வெட்கப்படுவார்” என்று இயேசு சொல்கிறார். (மாற்கு 8:38) இயேசு அப்படி வரும்போது, “அவரவருடைய நடத்தைக்கு ஏற்றபடி அவரவருக்குப் பலன் கொடுப்பார்.”—மத்தேயு 16:27.