அதிகாரம் 64
ஏன் மன்னிக்க வேண்டும்?
-
ஏழு தடவை மன்னித்தால் போதுமா?
-
இரக்கமில்லாத அடிமை பற்றிய உதாரணம்
சகோதரர்களுக்கு இடையில் பிரச்சினை வந்தால், அதை அவர்கள் இருவரும் பேசி சரிசெய்துகொள்ள வேண்டும் என்று இயேசு சொன்னதை பேதுரு கேட்டிருந்தார். ஆனாலும், எத்தனை தடவை இப்படி முயற்சி எடுக்க வேண்டும் என்று தெரிந்துகொள்ள பேதுரு விரும்பியிருக்கலாம்.
அதனால் அவர் இயேசுவிடம் போய், “எஜமானே, எனக்கு விரோதமாக என் சகோதரன் பாவம் செய்தால் நான் எத்தனை தடவை அவனை மன்னிக்க வேண்டும்? ஏழு தடவையா?” என்று கேட்கிறார். மதத் தலைவர்கள் சிலர் மூன்று தடவை மன்னித்தால் போதும் என்று கற்பித்தார்கள். அதனால், ஒரு சகோதரனை “ஏழு தடவை” மன்னிப்பதன் மூலம் தான் ரொம்பத் தாராளமாக நடந்துகொள்வதாக பேதுரு நினைத்திருக்கலாம்.—மத்தேயு 18:21.
ஆனால், மற்றவர்கள் எத்தனை தடவை தவறு செய்தார்கள் என்று கணக்கு வைத்துக்கொள்ளும்படி இயேசு கற்பிக்கவில்லை. அதனால் அவர், “ஏழு தடவை அல்ல, 77 தடவை என்று நான் உனக்குச் சொல்கிறேன்” என்று சொல்லி பேதுருவைத் திருத்துகிறார். (மத்தேயு 18:22) வேறு வார்த்தைகளில் சொன்னால், கணக்குவழக்கில்லாமல் மற்றவர்களை மன்னிக்க வேண்டும் என்றுதான் இயேசு சொல்கிறார். தன் சகோதரனை இத்தனை தடவைதான் மன்னிக்க வேண்டும் என்று பேதுரு கணக்குப் பார்க்கக் கூடாது.
பிறகு, மன்னிப்பது ஒரு கடமை என்பதைப் புரிய வைப்பதற்காக பேதுருவுக்கும் மற்றவர்களுக்கும் இயேசு ஒரு உதாரணத்தைச் சொல்கிறார். இரக்கமுள்ள எஜமானைப் பின்பற்றாத ஒரு அடிமையைப் பற்றிய உதாரணம் அது. ஒரு ராஜா தன் அடிமைகளிடம் கடனை வசூலிக்க நினைக்கிறார். ஒரு அடிமை அவரிடம் 10,000 தாலந்து [6,00,00,000 தினாரியு] கடன் வாங்கி இருந்தான். இது ரொம்பப் பெரிய தொகை. அவனை ராஜா முன்னால் கொண்டுவருகிறார்கள். அவ்வளவு பெரிய கடனை அவனால் அடைக்கவே முடியாது. அதனால், அவனையும் அவனுடைய மனைவியையும் பிள்ளைகளையும் விற்று கடனை அடைக்கும்படி ராஜா உத்தரவு போடுகிறார். உடனே, அந்த அடிமை அவருடைய காலில் விழுந்து, “கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள், எல்லாவற்றையும் உங்களுக்குத் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்” என்று சொல்லிக் கெஞ்சுகிறான்.—மத்தேயு 18:26.
ராஜாவுக்கு அவனைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. அவன்மீது இரக்கப்பட்டு அவ்வளவு பெரிய கடனை அவர் ரத்து செய்கிறார். இதற்குப் பிறகு, அந்த அடிமை வெளியே போய்த் தன்னிடம் 100 தினாரியு கடன் வாங்கியிருந்த சக அடிமையைத் தேடிக் கண்டுபிடிக்கிறான். அவனைப் பிடித்து, கழுத்தை நெரித்து, “எனக்குக் கொடுக்க வேண்டிய கடனையெல்லாம் திருப்பிக் கொடு” என்று சொல்கிறான். அப்போது அந்தச் சக அடிமை மத்தேயு 18:28, 29) ஆனால், ராஜாவின் மன்னிப்பைப் பெற்ற அடிமை அவரைப் போல இரக்கத்துடன் நடந்துகொள்ளவில்லை. அவனுடைய சக அடிமை ஒரு சிறிய தொகையைத்தான் அவனிடம் கடன் வாங்கியிருந்தான். ஆனாலும், அதைத் திருப்பிக் கொடுக்கும்வரை அவனைச் சிறையில் அடைக்கச் செய்கிறான்.
அவனுடைய காலில் விழுந்து, “கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள், நான் உங்களுக்குத் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்” என்று சொல்லிக் கெஞ்சுகிறான். (அவன் இப்படிக் கொடூரமாக நடந்துகொள்வதை மற்ற அடிமைகள் பார்க்கிறார்கள். அவர்கள் ராஜாவிடம் போய் நடந்ததைச் சொல்கிறார்கள். உடனே ராஜா அந்த அடிமையை வரவழைத்து, “பொல்லாத அடிமையே, நீ என்னிடம் கெஞ்சிக் கேட்டபோது உன் கடனையெல்லாம் ரத்து செய்தேன். நான் உனக்கு இரக்கம் காட்டியதைப் போல் நீயும் உன்னுடைய சக அடிமைக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டாமா?” என்று கேட்கிறார். அவருக்கு அவன்மேல் பயங்கர கோபம் வருகிறது. அதனால், எல்லா கடனையும் அடைக்கும்வரை அவனைச் சிறைக்காவலர்களிடம் ஒப்படைக்கிறார். இயேசு இந்த உதாரணத்தைச் சொன்ன பிறகு, “நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் சகோதரரை உள்ளப்பூர்வமாக மன்னிக்காவிட்டால் என் பரலோகத் தகப்பனும் உங்களை மன்னிக்க மாட்டார்” என்று சொல்கிறார்.—மத்தேயு 18:32-35.
மற்றவர்களை மன்னிப்பதைப் பற்றிய ஒரு அருமையான பாடத்தை இந்த உதாரணத்திலிருந்து நாம் கற்றுக்கொள்கிறோம். நாம் செய்த பாவங்கள் எல்லாம் பெரிய கடனைப் போல இருக்கிறது. கடவுள் அவற்றையெல்லாம் மன்னித்திருக்கிறார். அவற்றோடு ஒப்பிடும்போது, நம்முடைய கிறிஸ்தவ சகோதரர்கள் நமக்கு விரோதமாகச் செய்கிற தவறுகள் எல்லாம் ஒன்றுமே இல்லை. யெகோவா நம்மை ஒரு தடவை அல்ல, ஆயிரக்கணக்கான தடவை மன்னித்திருக்கிறார். அப்படியென்றால், நம்முடைய சகோதரர்கள்மீது நமக்கு மனக்குறை இருந்தாலும் நாம் அவர்களைத் தாராளமாக மன்னிக்க வேண்டாமா? மலைப்பிரசங்கத்தில் இயேசு சொன்னது போல, மற்றவர்களை நாம் மன்னித்தால் நம் பாவங்களை கடவுள் மன்னிப்பார்.—மத்தேயு 6:12.