Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 84

இயேசுவின் சீஷராக இருப்பது மிகப் பெரிய பொறுப்பு

இயேசுவின் சீஷராக இருப்பது மிகப் பெரிய பொறுப்பு

லூக்கா 14:25-35

  • ஒரு சீஷர் செய்ய வேண்டிய தியாகங்கள்

பரிசேயர்களின் தலைவன் ஒருவனுடைய வீட்டில் விருந்து சாப்பிட்டபோது முக்கியமான பாடங்களை இயேசு கற்றுக்கொடுத்திருந்தார். இயேசு இப்போது எருசலேமை நோக்கிப் பயணம் செய்கிறார். மக்கள் கூட்டம் கூட்டமாக அவரோடு பயணம் செய்கிறார்கள். ஆனால், அவரை உண்மையாகப் பின்பற்றுவதற்காக எந்தத் தியாகத்தையும் செய்ய அவர்கள் தயாராக இருக்கிறார்களா?

பயணத்தின்போது இயேசு அவர்களைப் பார்த்து, “என்னிடம் வருகிற ஒருவன் தன் அப்பாவையும் அம்மாவையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரர்களையும் சகோதரிகளையும், ஏன், தன் உயிரையும்கூட வெறுக்கவில்லை என்றால் அவன் என்னுடைய சீஷனாக இருக்க முடியாது” என்று சொல்கிறார். (லூக்கா 14:26) சிலர் அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்திருக்கலாம். இயேசுவின் இந்த வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம்?

தன்னுடைய சீஷர்கள் தங்களுடைய குடும்பத்தார்மீது அன்பு காட்டக் கூடாது என்று இயேசு சொல்லவில்லை. அவர்களைவிட தன்னை அதிகமாக நேசிக்க வேண்டும் என்றுதான் சொல்கிறார். கல்யாணம் ஆனதால் முக்கியமான அழைப்பைத் தட்டிக்கழித்த மனிதனைப் போல அவர்கள் இருக்கக்கூடாது.—லூக்கா 14:20.

ஒரு சீஷர் “தன் உயிரையும்கூட” வெறுக்க வேண்டும் என்று இயேசு சொன்னதைக் கவனியுங்கள். அப்படியென்றால், உண்மையான சீஷர் தன்னுடைய உயிரைவிட இயேசுவை அதிகமாக நேசிக்க வேண்டும்; தேவைப்பட்டால், தன்னுடைய உயிரைக் கொடுக்கவும் தயாராக இருக்க வேண்டும். கிறிஸ்துவின் சீஷராக ஆவது ஒரு முக்கியமான பொறுப்பு என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. அதைச் சர்வசாதாரணமாக நினைக்கக் கூடாது; நன்றாக யோசித்த பிறகே அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இயேசுவின் சீஷராக ஆகிற ஒருவருக்குக் கஷ்டங்களும் துன்புறுத்தல்களும் வரலாம். அதனால்தான், “சித்திரவதைக் கம்பத்தை சுமந்துகொண்டு என்னைப் பின்பற்றி வராத எவனும் என்னுடைய சீஷனாக இருக்க முடியாது” என்று இயேசு சொல்கிறார். (லூக்கா 14:27) இயேசு பல கஷ்டங்களைச் சந்தித்திருந்தார். எதிரிகள் தன்னைக் கொன்றுபோடுவார்கள் என்றும்கூட சொல்லியிருந்தார். உண்மையான சீஷர், இயேசு அனுபவித்தது போன்ற கஷ்டங்களைச் சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும்.

கிறிஸ்துவின் சீஷராக இருப்பது என்றால் என்ன அர்த்தம் என்பதை இயேசுவோடு பயணம் செய்கிற கூட்டத்தார் ரொம்பக் கவனமாக யோசித்துப் பார்க்க வேண்டும். அதை வலியுறுத்துவதற்காக இயேசு ஒரு உவமையைச் சொல்கிறார். “உங்களில் யாராவது ஒரு கோபுரம் கட்ட விரும்பினால், அதைக் கட்டி முடிக்க தனக்குப் போதுமான வசதி இருக்கிறதா என்று முதலில் செலவைக் கணக்கு பார்க்காமல் இருப்பானா? அப்படிச் செய்யாவிட்டால், அஸ்திவாரம் போட்ட பிறகு, அவனால் அதைக் கட்டி முடிக்க முடியாமல் போய்விடும்” என்று சொல்கிறார். (லூக்கா 14:28, 29) இயேசுவின் சீஷர்களாக ஆவதற்கு முன்பு, அந்தப் பொறுப்பை முழுமையாகச் செய்து முடிக்க அந்தக் கூட்டத்தார் உறுதியான தீர்மானத்தை எடுக்க வேண்டும். இதை விளக்குவதற்கு அவர் இன்னொரு உவமையைச் சொல்கிறார்.

“எந்த ராஜாவாவது போருக்குப் போகும்போது, தனக்கு எதிராக 20,000 படைவீரர்களோடு வருகிற ராஜாவைத் தன்னுடைய 10,000 படைவீரர்களோடு ஜெயிக்க முடியுமா, முடியாதா என்று முதலில் கலந்தாலோசிக்காமல் இருப்பாரா? அவரால் ஜெயிக்க முடியாது என்று தெரிந்தால், எதிரி தூரத்தில் வரும்போதே தன்னுடைய தூதுவர் குழுவை அனுப்பி, சமாதானம் செய்துகொள்ளப் பார்ப்பார், இல்லையா?” என்று கேட்கிறார். இயேசு சொல்லவந்த முக்கிய குறிப்பு இதுதான்: “அதுபோலவே, உங்களில் யாராவது தன் உடைமைகள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு வரவில்லை என்றால், அவன் நிச்சயமாகவே என்னுடைய சீஷனாக இருக்க முடியாது.”—லூக்கா 14:31-33.

தன் பின்னால் வந்துகொண்டிருக்கிற மக்களிடம் மட்டும் அந்த வார்த்தைகளை இயேசு சொல்லவில்லை. கிறிஸ்துவைப் பற்றித் தெரிந்துகொள்கிற எல்லாருமே இதைச் செய்யத் தயாராக இருக்க வேண்டும். இயேசுவின் சீஷர்களாய் ஆக விரும்புகிறவர்கள், தங்களிடம் இருக்கிற எல்லாவற்றையும், தங்கள் உடைமைகளையும், ஏன், தங்கள் உயிரையும்கூட தியாகம் செய்யத் தயாராக இருக்க வேண்டும். இதைப் பற்றி அவர்கள் யோசித்துப் பார்க்க வேண்டும், ஜெபம் செய்ய வேண்டும்.

முன்பு, மலைப்பிரசங்கத்தில் தான் சொன்ன ஒரு விஷயத்தைப் பற்றி இயேசு மறுபடியும் சொல்கிறார். தன்னுடைய சீஷர்கள் “பூமிக்கு உப்பாக” இருக்கிறார்கள் என்று இயேசு அப்போது சொல்லியிருந்தார். (மத்தேயு 5:13) உணவுப் பொருள்கள் கெட்டுப்போகாமல் இருக்க உப்பு உதவும். அதேபோல், மக்கள் ஆன்மீக விஷயத்திலும் ஒழுக்க விஷயத்திலும் கெட்டுப்போய்விடாதபடி தன்னுடைய சீஷர்கள் பாதுகாப்பார்கள் என்று விளக்குவதற்காக இயேசு அப்படிச் சொல்லியிருக்கலாம். அவருடைய ஊழியம் முடியப்போகிற இந்தச் சமயத்தில், அவர் இப்படிக் கேட்கிறார்: “உப்பு நல்லதுதான். ஆனால், உப்பு அதன் சுவையை இழந்தால், எதை வைத்து அதற்கு மறுபடியும் சுவை சேர்க்க முடியும்?” (லூக்கா 14:34) அப்போது கிடைத்த உப்பு சில சமயங்களில் அசுத்தமாக இருந்தது என்பதும், அதில் மண் கலந்திருந்தது என்பதும் அங்கிருக்கிறவர்களுக்குத் தெரியும். அந்த உப்பு அதன் சுவையை இழந்துவிட்டால் அது ஒன்றுக்கும் உதவாது என்பதும் அவர்களுக்குத் தெரியும்.

ரொம்பக் காலமாகத் தன்னுடைய சீஷர்களாக இருப்பவர்களும்கூட, தங்களுடைய தீர்மானத்தில் தொடர்ந்து உறுதியாக இருக்க வேண்டும் என்பதைத்தான் இயேசுவின் வார்த்தைகள் காட்டுகின்றன. அவர்கள் உறுதியாக இல்லையென்றால், சுவை இல்லாத உப்பைப் போல ஒன்றுக்கும் உதவாதவர்களாக ஆகிவிடுவார்கள். அதைப் பார்த்து இந்த உலகம் அவர்களைக் கேலி செய்யலாம். அதைவிட கொடுமை என்னவென்றால், கடவுளுடைய தயவை அவர்கள் இழந்துவிடுவார்கள். அவருடைய பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்திவிடுவார்கள். அப்படி நடக்காமல் பார்த்துக்கொள்வது அவசியம் என்பதை வலியுறுத்துவதற்காக, “கேட்பதற்குக் காதுள்ளவன் கவனித்துக் கேட்கட்டும்” என்று இயேசு சொல்கிறார்.—லூக்கா 14:35.