Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 91

லாசரு உயிரோடு எழுப்பப்படுகிறார்

லாசரு உயிரோடு எழுப்பப்படுகிறார்

யோவான் 11:38-54

  • லாசருவின் உயிர்த்தெழுதல்

  • இயேசுவைக் கொல்ல நியாயசங்கம் திட்டம் போடுகிறது

பெத்தானியாவுக்குப் பக்கத்தில் மார்த்தாளையும் மரியாளையும் இயேசு சந்தித்த பிறகு, அவர்கள் எல்லாரும் லாசருவின் கல்லறைக்குப் போகிறார்கள். அது ஒரு கல்லால் மூடப்பட்ட குகை. அங்கே போனதும், “இந்தக் கல்லை எடுத்துப் போடுங்கள்” என்று இயேசு சொல்கிறார். அவர் என்ன செய்யப்போகிறார் என்று மார்த்தாளுக்குப் புரியவில்லை. அதனால் அவள், “எஜமானே, நான்கு நாளாகிவிட்டது, நாறுமே” என்று கவலையோடு சொல்கிறாள். அதற்கு இயேசு, “நீ நம்பிக்கை வைத்தால் கடவுளுடைய மகிமையைப் பார்ப்பாய் என்று உனக்குச் சொன்னேன், இல்லையா?” என்று கேட்கிறார்.—யோவான் 11:39, 40.

அங்கிருக்கிறவர்கள் அந்தக் கல்லை எடுத்துப் போடுகிறார்கள். பிறகு, இயேசு வானத்தை அண்ணாந்து பார்த்து, “தகப்பனே, என் ஜெபத்தைக் கேட்டதற்காக உங்களுக்கு நன்றி சொல்கிறேன். நீங்கள் எப்போதும் என் ஜெபத்தைக் கேட்பீர்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால், நீங்கள்தான் என்னை அனுப்பினீர்கள் என்பதை இங்கே சுற்றி நிற்கிற மக்கள் நம்ப வேண்டும் என்பதற்காகவே இப்படி ஜெபம் செய்கிறேன்” என்று சொல்கிறார். கடவுளுடைய சக்தியால்தான் அவர் இந்த அற்புதத்தைச் செய்யப் போகிறார் என்று காட்டுவதற்காக இயேசு இப்படி எல்லார் முன்பாகவும் ஜெபம் செய்கிறார். அதற்குப் பிறகு, “லாசருவே, வெளியே வா!” என்று சத்தமாகக் கூப்பிடுகிறார். உடனே, லாசரு வெளியே வருகிறார்! அவருடைய கைகளும் கால்களும் துணிகளால் சுற்றப்பட்டிருக்கின்றன. முகத்திலும் ஒரு துணி சுற்றப்பட்டிருக்கிறது. இயேசு அங்கிருக்கிறவர்களிடம், “இவனுடைய கட்டுகளை அவிழ்த்துவிடுங்கள், இவன் போகட்டும்” என்று சொல்கிறார்.—யோவான் 11:41-44.

மரியாளுக்கும் மார்த்தாளுக்கும் ஆறுதல் சொல்வதற்காக வந்திருந்த யூதர்களில் பலர் இந்த அற்புதத்தைப் பார்த்த பிறகு, இயேசுமேல் விசுவாசம் வைக்கிறார்கள். மற்றவர்களோ, பரிசேயர்களிடம் போய் இயேசு செய்த அற்புதத்தைப் பற்றிச் சொல்கிறார்கள். பரிசேயர்களும் முதன்மை குருமார்களும் யூத உயர் நீதிமன்றமான நியாயசங்கத்தைக் கூட்டுகிறார்கள். தலைமைக் குருவான காய்பாவும் அதில் ஒரு உறுப்பினராக இருக்கிறார். நியாயசங்கத்தில் இருக்கிற சிலர், “இப்போது என்ன செய்வது? இந்த மனுஷன் நிறைய அற்புதங்களைச் செய்கிறானே! இவனை இப்படியே விட்டுவிட்டால் எல்லாரும் இவன்மேல் விசுவாசம் வைப்பார்கள். பிறகு, ரோமர்கள் வந்து நம்முடைய ஆலயத்தையும் தேசத்தையும் எடுத்துக்கொள்வார்கள்” என்று புலம்புகிறார்கள். (யோவான் 11:47, 48) இயேசு ‘நிறைய அற்புதங்களைச் செய்கிறார்’ என்பதை அவற்றையெல்லாம் நேரில் பார்த்த ஆட்களின் மூலம் இவர்கள் கேள்விப்பட்டிருந்தார்கள். ஆனாலும், கடவுள் அவர் மூலமாக அற்புதங்களைச் செய்வதை நினைத்து இவர்கள் சந்தோஷப்படாமல், தங்களுடைய பதவியும் அதிகாரமும் பறிபோய்விடுமோ என்றுதான் கவலைப்படுகிறார்கள்.

உயிர்த்தெழுதலை நம்பாத சதுசேயர்களுக்கு, லாசருவின் உயிர்த்தெழுதல் ஒரு பெரிய அடியாக இருக்கிறது. காய்பாவும் ஒரு சதுசேயர்தான். அவர் நியாயசங்கத்திடம், “உங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. முழு தேசமும் அழிந்துபோவதைவிட மக்களுக்காக ஒரேவொரு மனுஷன் சாவது உங்களுக்குத்தான் நல்லது என்பதை யோசிக்காமல் இருக்கிறீர்களே” என்று சொல்கிறார்.—யோவான் 11:49, 50; அப்போஸ்தலர் 5:17; 23:8.

காய்பா இந்த வார்த்தைகளை “சொந்தமாகச் சொல்லவில்லை.” அவர் தலைமைக் குருவாக இருப்பதால், கடவுள்தான் அவரை இப்படிப் பேச வைக்கிறார். இயேசுவைக் கொன்றால்தான், மக்கள் மத்தியில் யூத மதத் தலைவர்களுக்கு இருக்கிற அதிகாரத்தையும் செல்வாக்கையும் காப்பாற்ற முடியும் என்ற எண்ணத்தோடுதான் காய்பா இப்படிச் சொல்கிறார். ஆனாலும், இயேசு தன்னுடைய மரணத்தின் மூலமாக யூதர்களுக்கு மட்டுமல்லாமல், ‘சிதறிப்போன கடவுளுடைய பிள்ளைகள்’ எல்லாருக்காகவும் மீட்பு விலையைக் கொடுப்பார் என்பதை காய்பாவின் தீர்க்கதரிசனம் சுட்டிக்காட்டுகிறது.—யோவான் 11:51, 52.

காய்பாவின் பேச்சைக் கேட்டு, நியாயசங்கத்தில் இருக்கிறவர்கள் இயேசுவைக் கொல்வதற்குத் திட்டம் போட ஆரம்பிக்கிறார்கள். நியாயசங்கத்தின் உறுப்பினரான நிக்கொதேமுவுக்கு இயேசுவைப் பிடிக்கும். இந்தத் திட்டத்தைப் பற்றி அவர் இயேசுவிடம் சொல்வாரா? எது எப்படியிருந்தாலும், கடவுள் குறித்திருக்கிற நேரத்துக்கு முன்பே தான் கொல்லப்படக் கூடாது என்பதற்காக இயேசு அங்கிருந்து போய்விடுகிறார்.