Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இரத்தமேற்றுதலுக்குப் பதிலாக தரமான மாற்று சிகிச்சைகள்

இரத்தமேற்றுதலுக்குப் பதிலாக தரமான மாற்று சிகிச்சைகள்

இரத்தமேற்றுதலுக்குப் பதிலாக தரமான மாற்று சிகிச்சைகள்

‘இரத்தம் ஏற்றுவது ஆபத்தானது, ஆனால் அதற்குப் பதிலாக உயர் தரமான வேறு சிகிச்சைகள் உண்டா?’ என நீங்கள் கேட்கலாம். நல்ல கேள்விதான். அதுவும் “தரமான” என்ற வார்த்தை கவனிக்கத்தக்கது.

யெகோவாவின் சாட்சிகள் உட்பட, எல்லாருமே உயர் தரமான மருத்துவ கவனிப்பையே விரும்புகின்றனர். டாக்டர் கிரான்ட் ஈ. ஸ்டெஃபன் இரண்டு முக்கிய அம்சங்களைக் குறிப்பிட்டார்: “தரமான மருத்துவ கவனிப்பு என்பது மருத்துவம் மற்றும் மருத்துவம் சாராத நியாயமான இலட்சியங்களை அடைவதற்கான மருத்துவ நிபுணர்களின் திறமையாகும்.” (அமெரிக்க மருத்துவச் சங்கப் பத்திரிகை, ஜூலை 1, 1988) ‘மருத்துவம் சாராத இலட்சியங்கள்’ ஒரு நோயாளியின் நெறிமுறைகளை அல்லது பைபிள் அடிப்படையிலான மனசாட்சியை மீறாதிருப்பதை உட்படுத்துகின்றன.​—அப்போஸ்தலர் 15:28, 29.

சிக்கலான மருத்துவப் பிரச்சினைகளை இரத்தமின்றி சமாளிப்பதற்கு ஏற்ற நியாயமான, திறம்பட்ட வழிகள் இருக்கின்றனவா? ‘ஆம், இருக்கின்றன’ என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்.

கண்டிப்பாக தேவைப்பட்டபோது மட்டுமே இரத்தம் கொடுத்ததாக பெரும்பாலான மருத்துவர்கள் சொன்னபோதிலும், எய்ட்ஸ் கொள்ளை நோய் பரவ ஆரம்பித்தவுடன் இரத்தத்தைப் பயன்படுத்துவது வெகுவாக குறைந்துவிட்டது. “இரத்தமேற்றுதலைத் தவிர்ப்பதற்காக நோயாளிகளும் மருத்துவர்களும் வெவ்வேறு உத்திகளைக் கண்டுபிடித்திருப்பதே இந்தக் கொள்ளை நோயினால் விளைந்த ஒரு நன்மை” என மேயோ கிளினிக் ப்ரொஸீடிங்ஸ் (செப்டம்பர் 1988) வெளியிட்ட ஒரு தலையங்கம் கூறியது. ஓர் இரத்த வங்கி அதிகாரி இவ்வாறு விவரிக்கிறார்: “செய்தி அதேதான் என்றாலும், மாறியிருப்பது செய்தியின் வலிமையும், (ஆபத்துகளைப் பற்றி கூடுதலாக அறிந்திருப்பதால்) மருத்துவமனையினர் அந்தச் செய்தியை ஏற்றுக்கொள்கிற விதமும், மாற்று சிகிச்சை முறைகளைச் சிந்திப்பதற்கான தேவையுமே ஆகும்.”​—⁠இரத்தமேற்றுதல் மருத்துவ விமர்சனங்கள், அக்டோபர் 1989.

மாற்று சிகிச்சை முறைகள் உண்டு என்பதைக் கவனித்தீர்களா? இரத்தம் ஏன் செலுத்தப்படுகிறது என்பதைத் தெரிந்துகொண்டால் இதையும் உங்களால் புரிந்துகொள்ள முடியும்.

சிவப்பு இரத்த அணுக்களிலுள்ள ஹீமோகுளோபின் நல்லாரோக்கியத்திற்கும் வாழ்விற்கும் அவசியமான ஆக்ஸிஜனை உடலெங்கும் எடுத்துச் செல்கிறது. எனவே ஒருவர் ஏராளமான இரத்தத்தை இழந்துவிட்டால், வேறு இரத்தத்தைக் கொண்டு அந்த இழப்பை ஈடு செய்வதுதான் நியாயமாகத் தோன்றும். சாதாரணமாக ஒவ்வொரு 100 சென்டிமீட்டர் கன அளவு இரத்தத்திலும் சுமார் 14 அல்லது 15 கிராம் ஹீமோகுளோபின் இருக்கிறது. (இன்னொரு அளவை ஹிமாடோகிரிட், இது பொதுவாக 45 சதவீதமாக இருக்கிறது.) ஒரு நோயாளியின் ஹீமோகுளோபின் 10-க்கு (அல்லது 30 சதவீத ஹிமாடோகிரிட்டுக்கு) குறைவாக இருந்தால் அறுவை சிகிச்சைக்கு முன் இரத்தமேற்ற வேண்டும் என்பது ஒரு “விதிமுறை”யாக இருந்தது. வாக்ஸ் சாங்கினிஸ் (மார்ச் 1987) என்ற சுவிஸ் பத்திரிகை இவ்வாறு அறிக்கை செய்தது: “அவசரமில்லாத அறுவை சிகிச்சை (elective surgery) செய்ய நோயாளியின் இரத்தத்தில் 10 கிராம்/டெ.லி. ஹீமோகுளோபின் இருக்க வேண்டுமென 65% [மயக்க மருந்து நிபுணர்கள்] எதிர்பார்த்தனர்.”

ஆனால், “நமக்கு எப்படி அந்த ‘மாஜிக் நம்பர்’ கிடைத்தது?” என இரத்தமேற்றுதல் சம்பந்தமாக 1988-⁠ல் நடந்த ஒரு மாநாட்டில் பேராசிரியர் ஹோவர்டு எல். ஜாடர் கேட்டார். அதன்பின் இவ்வாறு தெளிவாகக் குறிப்பிட்டார்: “மயக்க மருந்து கொடுக்கப்படுவதற்கு முன் ஒரு நோயாளிக்கு 10 கிராம் ஹீமோகுளோபின் இருக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு ஒரு பாரம்பரியக் கருத்து, தெளிவற்ற கோட்பாடு, மருத்துவத்தால் அல்லது பரிசோதனையால் அத்தாட்சியுடன் நிரூபிக்கப்படாதது.” ‘தெளிவற்ற, நிரூபிக்கப்படாத’ ஒரு காரணத்தின் அடிப்படையில் இரத்தமேற்றப்பட்ட பல்லாயிரக்கணக்கான நோயாளிகளைச் சற்று எண்ணிப் பாருங்கள்!

‘ஹீமோகுளோபினின் அளவு குறைவாக இருந்தாலும் பிரச்சினையில்லை என்றால், 14 கிராம்தான் “நார்மலான” அளவு என ஏன் சொல்லப்படுகிறது?’ என்று சிலர் யோசிக்கலாம். அது 14 கிராமாக இருக்கும்போது ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும் கூடுதல் திறன் உங்கள் உடலில் இருக்கிறது என அர்த்தம், ஆகவே உடற்பயிற்சியை அல்லது கடினமான வேலையை செய்ய தயாராகிவிடுகிறீர்கள். இரத்தச்சோகையுள்ள நோயாளிகளை வைத்து நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி, “ஹீமோகுளோபின் 7 கிராம்/டெ.லி. அளவுக்குக் குறைவாக இருந்தபோதும் வேலைத் திறன் குறைவுபட்டதாக தெரியவில்லை. சிலருக்கு ஓரளவு மட்டுமே அத்திறன் குறைவுபட்டது.”​—⁠சமகாலத்திய இரத்தமேற்றும் பழக்கம் (ஆங்கிலம்), 1987.

பெரியவர்களுக்குக் குறைந்தளவு ஹீமோகுளோபின் இருந்தாலும் பிரச்சினையில்லை, ஆனால் பிள்ளைகளுக்கு எப்படி? டாக்டர் ஜேம்ஸ் ஏ. ஸ்டாக்மன் III இவ்வாறு கூறுகிறார்: “பெரும்பாலான குறைப்பிரசவக் குழந்தைகளுக்கு முதல் மூன்று மாதங்களில் ஹீமோகுளோபின் அளவு சரிந்துவிடும். . . . ஆனால் இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு இரத்தம் ஏற்றப்பட்டதாக எந்த அத்தாட்சியும் இல்லை. சொல்லப்போனால், மிகக் குறைந்தளவு ஹீமோகுளோபின் இருந்தாலும் அநேக குழந்தைகளால் எந்த மருத்துவப் பிரச்சினைகளுமின்றி நன்கு தாக்குப்பிடிக்க முடிகிறது.”​—⁠வட அமெரிக்க சிசுநோய் மருத்துவமனைகள் (ஆங்கிலம்), பிப்ரவரி 1986.

அதற்காக, விபத்திலோ அறுவை சிகிச்சை சமயத்திலோ ஒருவர் ஏராளமான இரத்தத்தை இழந்தால் ஒன்றுமே செய்ய வேண்டியதில்லை என அர்த்தமல்ல. ஒருவருக்கு வேகமாகவும் அதிகமாகவும் இரத்த இழப்பு ஏற்பட்டால், அவரது இரத்த அழுத்தம் குறையும், அவர் அதிர்ச்சி நிலைக்கு ஆளாகலாம். ஆகவே முதலில் இரத்தப்போக்கு நிறுத்தப்பட வேண்டும், அதன்பின் அவருடைய இரத்தத்தின் கன அளவு சகஜ நிலைக்குக் கொண்டு வரப்பட வேண்டும். இது அவர் அதிர்ச்சி நிலைக்கு ஆளாவதைத் தடுத்து, மீதமுள்ள சிவப்பு அணுக்களையும் மற்ற கூறுகளையும் சுற்றோட்டத்தில் வைத்திருக்கும்.

முழு இரத்தத்தை அல்லது பிளாஸ்மாவைப் பயன்படுத்தாமலேயே இரத்தத்தின் கன அளவைப் பெருக்கிட முடியும். a இரத்தம் சாராத பல்வேறு திரவங்கள் இரத்தத்தின் கன அளவை நன்கு அதிகரிக்கச் செய்கின்றன. அவற்றில் மிக எளியது சலைன் (உப்புக்) கரைசல்; இது மலிவான விலையில் கிடைக்கிறது, அதோடு நம்முடைய இரத்தத்தில் நன்கு கலந்துவிடுகிறது. டெக்ஸ்ட்ரான், ஹிமாஸெல், மற்றும் லேக்டேடட் ரிங்கர்ஸ் ஸல்யூஷன் போன்ற விசேஷ தன்மைகளைக் கொண்ட திரவங்களும் உண்டு. ஹிடாஸ்டார்ச் (HES) என்பது ஒரு புதிய இரத்தக் கன அளவு பெருக்கி; அது “இரத்தம் சார்ந்த பொருட்களை ஏற்க மறுக்கும் [தீப்புண்] நோயாளிகளுக்குப் பாதுகாப்பான ஒன்று எனப் பரிந்துரை செய்யப்படலாம்.” (தீப்புண் கவனிப்பு மற்றும் மறுவாழ்வுப் பத்திரிகை [ஆங்கிலம்], ஜனவரி/பிப்ரவரி 1989) இப்படிப்பட்ட திரவங்கள் உண்மையிலேயே நன்மை பயக்குபவை. “படிகக் கரைசல்கள் [பொதுவாக பயன்படுத்தப்படும் சலைன் மற்றும் லேக்டேடட் ரிங்கர்ஸ் ஸல்யூஷன்], டெக்ஸ்ட்ரான், HES ஆகியவை ஒப்பிடுகையில் நச்சு அற்றவை, மலிவானவை, எளிதில் கிடைக்கக்கூடியவை, சாதாரண அறை வெப்ப நிலையில் சேமித்து வைக்கப்படுபவை, நோயாளிக்கு ஒத்துப்போகுமா என பரிசோதிக்கப்பட அவசியமில்லாதவை, இரத்தமேற்றுதல் மூலம் பரவும் நோய்களின் பயம் இல்லாததால் ஆபத்தற்றவை.”​—⁠இரத்தமேற்றும் சிகிச்சை​—⁠ஒரு மருத்துவரின் கையேடு (ஆங்கிலம்), 1989.

என்றபோதிலும், ‘என்னுடைய உடல் முழுவதற்கும் ஆக்ஸிஜன் கிடைக்க சிவப்பு இரத்த அணுக்கள் அல்லவா தேவை? அப்படியிருக்கும்போது இரத்தம் சாராத திரவங்கள் எப்படி உதவி செய்கின்றன?’ என நீங்கள் கேட்கலாம். ஏற்கெனவே குறிப்பிடப்பட்டபடி, ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும் கூடுதலான செல்கள் உங்கள் உடலில் சேமித்து வைக்கப்பட்டிருக்கின்றன. நீங்கள் இரத்தத்தை இழக்க நேரிட்டால், அதை ஈடுகட்டுவதற்கு உங்கள் உடல் வியக்கத்தக்க விதத்தில் செயல்பட ஆரம்பிக்கிறது. உங்களுடைய இருதயம் ஒவ்வொரு துடிப்பின்போதும் கூடுதலான இரத்தத்தை பம்ப் செய்கிறது. இழக்கப்பட்ட இரத்தம் பொருத்தமான ஒரு திரவத்தைக் கொண்டு ஈடுசெய்யப்படும்போது, நீர்த்த இரத்தம் சிறு குழாய்களிலும் மிக எளிதாக ஓடுகிறது. வேதியியல் மாற்றங்களால், திசுக்களுக்குக் கூடுதல் ஆக்ஸிஜன் அனுப்பப்படுகிறது. இந்த மாற்றங்கள் மிகச் சிறப்பாக நடைபெறுவதால், சிவப்பு இரத்த அணுக்கள் பாதியளவே இருந்தாலும், ஆக்ஸிஜனின் சுற்றோட்டம் கிட்டத்தட்ட 75 சதவீதம் இயல்பான அளவில் இருக்கிறது. ஒரு நோயாளி ஓய்வெடுக்கையில் அவருடைய இரத்தத்திலுள்ள ஆக்ஸிஜனில் 25 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அதோடு, பெரும்பாலான மயக்க மருந்துகள் ஆக்ஸிஜனுக்கான தேவையைக் குறைக்கின்றன.

மருத்துவர்கள் எவ்வாறு உதவலாம்?

இரத்தப்போக்கினால் சிவப்பு அணுக்களை இழந்திருக்கும் நோயாளிக்குத் திறமைசாலியான ஒரு மருத்துவர் உதவியாயிருக்கலாம். இரத்தத்தின் கன அளவு பழைய நிலைக்குக் கொண்டு வரப்பட்ட உடனேயே, மருத்துவர் ஆக்ஸிஜனை அதிகளவில் வழங்கலாம். இது உடலுக்கு அதிக ஆக்ஸிஜன் கிடைக்கச் செய்கிறது, அநேக சமயங்களில் நல்ல பலன்களையும் தந்திருக்கிறது. அதிக இரத்தம் இழந்த ஒரு பெண்ணுக்கு பிரிட்டிஷ் மருத்துவர்கள் இம்முறையில் சிகிச்சை அளித்தனர். “அவளுடைய ஹீமோகுளோபின் 1.8 கிராம்/டெ.லிட்டராக சரிந்துவிட்டிருந்தது. அப்போது அதிகளவு ஆக்ஸிஜனும் ஏராளமான ஜெலடின் கரைசலும் [ஹிமாஸெல்] அவளுக்குச் செலுத்தப்பட்டன, . . . அதன் பிறகு அவள் நன்கு குணமடைந்தாள்.” (மயக்க மருந்து [ஆங்கிலம்], ஜனவரி 1987) மிக மோசமான அளவுக்கு இரத்தம் இழந்த நோயாளிகளும்கூட அதிக அளவில் ஆக்ஸிஜன் கிடைக்கும் விசேஷ அறைகளில் (hyperbaric oxygen chambers) வைக்கப்பட்டு வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

நோயாளிகளின் உடல் கூடுதலான சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்வதற்கும் மருத்துவர்கள் உதவலாம். எப்படி? இரும்புச் சத்துள்ள மருந்துகளை (தசைகளில் அல்லது நாளங்களில்) செலுத்துவதன் மூலம் ஆகும்; இது, சிவப்பு அணுக்கள் உற்பத்தி செய்யப்படுகிற வேகத்தை மூன்று முதல் நான்கு மடங்கு அதிகரிக்கச் செய்யும். சமீபத்தில் மற்றொரு உதவி கிடைத்திருக்கிறது. உங்களுடைய சிறுநீரகங்கள் எரித்ரோபொய்டின் (EPO) என்ற ஒரு ஹார்மோனைச் சுரக்கின்றன, இது சிவப்பு அணுக்களை உண்டாக்கும்படி எலும்பு மஜ்ஜைகளைத் தூண்டுகிறது. இப்பொழுது செயற்கை வடிவில் EPO கிடைக்கிறது. இதை இரத்தச்சோகை நோயாளிகள் சிலருக்கு மருத்துவர்கள் கொடுக்கலாம்; இவ்வாறு, இழப்பை ஈடுசெய்யும் வகையில் சிவப்பு அணுக்களை உடல் உற்பத்தி செய்வதற்கு அவர்கள் உதவலாம்.

அறுவை சிகிச்சை சமயத்திலும்கூட, கடமையுணர்வுடைய திறம்பட்ட அறுவை சிகிச்சை மருத்துவர்களும் மயக்க மருந்து நிபுணர்களும், இரத்த இழப்பைக் கட்டுப்படுத்துகிற நவீன முறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் உதவி செய்யலாம். இரத்தப்போக்கை குறைப்பதற்கு மின் முறைச் சூடிடுதல் (electrocautery) போன்ற நுணுக்கமான அறுவை சிகிச்சை முறைகள் மிகுந்த பயனளிக்கின்றன. சில சமயங்களில் புண்ணான உடல் பகுதிக்குச் செல்லும் இரத்தம் உறிஞ்சப்பட்டு, வடிகட்டப்பட்டு, மீண்டும் இரத்த ஓட்டத்திற்குள் செலுத்தப்படலாம். b

இரத்தம் சாராத திரவம் கொண்ட இதய–நுரையீரல் இயந்திரம் நோயாளிக்குப் பொருத்தப்படும்போது, இரத்தம் நீர்த்துப் போவதாலும் சிவப்பு அணுக்கள் குறைவாக இழக்கப்படுவதாலும் பயன் உண்டாகிறது.

உதவி செய்வதற்கு வேறு வழிகளும் உள்ளன. உதாரணத்திற்கு, அறுவை சிகிச்சையின்போது ஆக்ஸிஜனின் தேவையைக் குறைத்திட நோயாளியைக் குளிர்நிலையில் வைக்கலாம். இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மயக்க மருந்தைக் (Hypotensive anesthesia) கொடுக்கலாம். இரத்த உறைவை மேம்படுத்தும் சிகிச்சை அளிக்கலாம். இரத்தப்போக்கை சீக்கிரத்தில் நிறுத்த டெஸ்மோபிரசினை (DDAVP) ஏற்றலாம். மேலும், லேசர் “அறுவைக் கத்திகளைப்” பயன்படுத்தலாம். மருத்துவர்களும் அக்கறை கொண்ட நோயாளிகளும் இரத்தமேற்றுதலைத் தவிர்க்க முயற்சி எடுக்கையில் இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போவதைக் கவனிப்பீர்கள். நீங்கள் அதிக அளவான இரத்தத்தை இழக்கக் கூடாது என்றே நாங்கள் விரும்புகிறோம். ஆனால் அப்படியே இழக்க நேரிட்டால், அநேக ஆபத்துகளை உண்டாக்குகிற இரத்தமேற்றும் முறைகள் இல்லாமலேயே திறமையான மருத்துவர்களால் உங்களுக்குச் சிகிச்சை அளிக்க முடியும்.

அறுவை சிகிச்சை வேண்டும்​—⁠ஆனால் இரத்தமேற்றாமல்

அநேகர் இன்று இரத்தத்தை ஏற்றிக்கொள்வதில்லை. யெகோவாவின் சாட்சிகள் மத நம்பிக்கைகளின் காரணமாக இரத்தம் ஏற்றிக்கொள்வதில்லை; மற்றவர்கள் உடல்நல காரணத்திற்காக இரத்தமில்லா உயர் தரமான மாற்று சிகிச்சையைத் தங்களுக்கு அளிக்குமாறு கேட்கிறார்கள். நாம் ஏற்கெனவே கவனித்தபடி, சிக்கலான அறுவை சிகிச்சையைக்கூட இரத்தமில்லாமல் செய்ய முடியும். உங்களுக்கு இன்னும் ஏதாவது சந்தேகம் இருந்தால், மருத்துவப் பிரசுரங்களில் வெளியான வேறு சில அத்தாட்சிகளைக் கவனிப்பது பயனளிக்கலாம்.

“யெகோவாவின் சாட்சி ஒருவருக்குச் செய்யப்பட்ட ‘நான்கு கட்ட மூட்டுப் பொருத்தும் மேஜர் ஆபரேஷன்’” என்ற ஒரு கட்டுரை (முடவியல் விமர்சனம் [ஆங்கிலம்], ஆகஸ்ட் 1986) வெளியானது. “இரண்டு கால் முட்டிகளும் இடுப்பும் பெருஞ் சேதமடைந்திருந்த” இரத்தச்சோகை நோயாளி ஒருவரைப் பற்றி அது கூறியது. படிப்படியாக செய்யப்பட்ட அறுவை சிகிச்சைக்கு முன்னும் பின்னும் இரும்புச் சத்து கலந்த டெக்ஸ்ட்ரான் அவருக்குக் கொடுக்கப்பட்டது, சிகிச்சையும் பலனளித்தது. பிரிட்டிஷ் மயக்க மருந்து பத்திரிகை [ஆங்கிலம்] (1982), 10-க்கும் குறைவான ஹீமோகுளோபினைப் பெற்றிருந்த 52 வயது யெகோவாவின் சாட்சியைப் பற்றி அறிக்கை செய்தது. இரத்த இழப்பைக் கட்டுப்படுத்துவதற்காக, அவருக்கு இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மயக்க மருந்து அளிக்கப்பட்டு, இடுப்பும் தோள்பட்டையும் முழுமையாக மாற்றப்பட்டது. அர்கான்சாஸ் பல்கலைக்கழகத்தில் (அ.ஐ.மா.) ஓர் அறுவை சிகிச்சைக் குழு இதே முறையைப் பயன்படுத்தி, நூறு யெகோவாவின் சாட்சிகளுக்கு இடுப்பு மாற்று சிகிச்சைகளைச் செய்தது. அவர்கள் எல்லாருமே சுகமடைந்தனர். அந்தக் குழுவின் தலைமைப் பேராசிரியர் இவ்வாறு கூறுகிறார்: “(யெகோவாவின் சாட்சிகளான) நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கையில் நாங்கள் கற்றுக்கொண்டதை, இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யும் மற்ற எல்லா நோயாளிகளுக்கும் பயன்படுத்துகிறோம்.”

சில சாட்சிகளுடைய மனசாட்சி இரத்தமேற்றாமல் மாற்று உறுப்பு சிகிச்சை செய்துகொள்ள அனுமதிக்கிறது. 13 மாற்று சிறுநீரக சிகிச்சைகளைப் பற்றிய ஓர் அறிக்கை இவ்வாறு முடிவாக கூறியது: “மாற்று சிறுநீரக சிகிச்சை யெகோவாவின் சாட்சிகளில் பெரும்பான்மையினருக்கு ஆபத்தின்றியும் திறம்பட்ட வகையிலும் செய்யப்படலாம் என்பதை ஒட்டுமொத்த பலன்கள் காட்டுகின்றன.” (மாற்று உறுப்பு சிகிச்சை [ஆங்கிலம்], ஜூன் 1988) இதேவிதமாக, மாற்று இருதய சிகிச்சைகளும் இரத்தமில்லாமல் வெற்றிகரமாக செய்யப்பட்டிருக்கின்றன.

‘இரத்தமில்லா மற்ற அறுவை சிகிச்சைகளைப் பற்றியென்ன?’ என்று நீங்கள் கேட்கலாம். “[அ.ஐ.மா., வேன் மாநிலப் பல்கலைக்கழகத்தில்] இரத்தமேற்றாமல் யெகோவாவின் சாட்சிகள் செய்துகொண்ட மகப்பேறு மற்றும் மகளிர் நோய்கள் சம்பந்தப்பட்ட மேஜர் அறுவை சிகிச்சைகளைக்” குறித்து மருத்துவ அவசரத் தொடர்பு [ஆங்கிலம்], (ஏப்ரல்/மே 1983) அறிக்கை செய்தது. அது சொன்னதாவது: “இரத்தத்தை ஏற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண்களுக்கு ஏற்பட்டதைவிட அதிக மரணங்களும் சிக்கல்களும் இவர்கள் மத்தியில் ஏற்படவில்லை.” மேலும் அது குறிப்பிட்டதாவது: “இந்த ஆய்வின் பலன்கள், மகப்பேறு மற்றும் மகளிர் நோய்கள் சம்பந்தப்பட்ட அறுவை சிகிச்சை செய்துகொள்கிற மற்ற பெண்களுக்கு இரத்தம் ஏற்றப்பட வேண்டுமா என்பதை மறுபரிசீலனை செய்துபார்க்கத் தூண்டுகின்றன.”

கட்டின்ஜன் பல்கலைக்கழக மருத்துவமனையில் (ஜெர்மனி) இரத்தமேற்க மறுத்த 30 நோயாளிகளுக்கு மைனர் ஆபரேஷன்கள் செய்யப்பட்டன. “இரத்தம் ஏற்றிக்கொள்ளும் நோயாளிகளுக்கு ஏற்படாத எந்தச் சிக்கல்களும் இவர்களுக்கு ஏற்படவில்லை. . . . எச்சந்தர்ப்பத்திலும் இரத்தம் ஏற்றக்கூடாதென நோயாளி சொல்கையில் மருத்துவர் உணர்ச்சிவசப்படக் கூடாது; அவசியமாகவும் மருத்துவ ரீதியில் நியாயமாகவும் இருக்கும் ஓர் அறுவை சிகிச்சையை செய்யாமல் இருந்துவிடவும் கூடாது.”​—⁠ரிஸிக்கோ இன் டெர் ஷிரூர்கி, 1987.

உதாரணமாக, நியு யார்க் பல்கலைக்கழக மருத்துவ மையத்தில், அநேக பெரியவர்களுக்கும் பிள்ளைகளுக்கும் மூளை அறுவை சிகிச்சைகூட இரத்தமின்றியே செய்யப்பட்டிருக்கிறது. 1989-ல் நரம்பியல் அறுவை சிகிச்சை துறையின் தலைமை மருத்துவரான ஜோசஃப் ரேன்ஷாஃப் பின்வருமாறு எழுதினார்: “மத நம்பிக்கையின் காரணத்தால் இரத்தம் சார்ந்த பொருட்களை ஏற்க மறுக்கும் நோயாளிகளுக்கு வேகமாகவும் ஓரளவு குறைந்த நேரத்திலும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டால் பெரும்பாலும் ஆபத்துகள் நேரிடாது என்பது தெளிவாக இருக்கிறது. ஆர்வத்திற்குரிய விஷயம் என்னவென்றால், நோயாளி ஒரு யெகோவாவின் சாட்சி என்பதையே நான் மறந்துவிடுவேன்; அவர் மருத்துவமனையைவிட்டுப் போகையில், தன் மத நம்பிக்கைகளை மதித்ததற்காக எனக்கு நன்றி சொல்லும்போதுதான் அது என் ஞாபகத்துக்கு வரும்.”

இறுதியாக, மிகச் சிக்கலான இருதய மற்றும் இரத்த நாள அறுவை சிகிச்சையைப் பெரியவர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இரத்தமின்றி செய்ய முடியுமா? டாக்டர் டென்டன் ஏ. கூலீ இதில் முன்னோடியாக திகழ்ந்தார். பக்கங்கள் 27–9-லுள்ள பிற்சேர்க்கையில் மறு அச்சு செய்யப்பட்டிருக்கும் மருத்துவக் கட்டுரை காட்டுகிறபடி, ஏற்கெனவே செய்யப்பட்ட ஓர் ஆய்வின் அடிப்படையில் டாக்டர் கூலீயின் முடிவு இதுதான்: “யெகோவாவின் சாட்சிகளுக்குச் செய்யப்பட்ட அறுவை சிகிச்சைகளில் இருந்த ஆபத்துகள், மற்றவர்களுக்குச் செய்யப்பட்ட அறுவை சிகிச்சைகளில் இருந்த ஆபத்துகளைவிட கணிசமானளவு குறைவாகவே இருந்தன.” யெகோவாவின் சாட்சிகளுக்கு 1,106 அறுவை சிகிச்சைகளைச் செய்த பின் அவர் இவ்வாறு எழுதுகிறார்: “ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், நோயாளியுடன் செய்த ஒப்பந்தத்தை நான் மீறவே இல்லை,” அதாவது அவர்களுக்கு இரத்தத்தை ஏற்றவே இல்லை.

யெகோவாவின் சாட்சிகள் நல்ல மனப்பான்மையோடு இருப்பது மற்றொரு குறிப்பிடத்தக்க விஷயம் என அறுவை சிகிச்சை மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். “இந்த நோயாளிகளுடைய மனப்பான்மை மற்றவர்களுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக இருந்திருக்கிறது” என்று அக்டோபர், 1989-ல் டாக்டர் கூலீ எழுதினார். “ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டுவிடுமோ அல்லது உயிர் போய்விடுமோ என்றெல்லாம் அநேக நோயாளிகள் பயப்படுவது போல் இவர்கள் பயப்படுவதில்லை. தங்களுடைய எதிர்கால நம்பிக்கையிலும் தங்களுடைய கடவுளிலும் அசைக்க முடியாத விசுவாசத்தை எப்போதும் வைத்திருக்கிறார்கள்.”

இறப்பதற்குத் தங்களுக்கு உரிமை இருக்கிறதென அவர்கள் வலியுறுத்துவதாக இது அர்த்தப்படுத்தாது. சுகமடைய வேண்டும் என்ற விருப்பத்தால்தான் தரமான மருத்துவ சிகிச்சை முறைகளை அவர்கள் நாடுகிறார்கள். இரத்தத்தின் பேரிலான கடவுளுடைய சட்டத்திற்குக் கீழ்ப்படிவது ஞானமான காரியம் என்பதை அவர்கள் உறுதியாய் நம்புகிறார்கள்; இந்த நோக்குநிலை, இரத்தமில்லாத அறுவை சிகிச்சையில் நல்ல பயனளிக்கிறது.

ஃப்ரைபர்க் (ஜெர்மனி) பல்கலைக்கழக அறுவை சிகிச்சை மருத்துவமனையைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் வி. ஷ்லாசர் பின்வருமாறு குறிப்பிட்டார்: “இந்த நோயாளிகளுக்கு [யெகோவாவின் சாட்சிகளுக்கு] அறுவை சிகிச்சை செய்யும்போது இரத்தப்போக்கு அதிகம் ஏற்படவில்லை; சிக்கல்கள் மிகக் குறைவாகவே இருந்தன. நோயின் பேரிலான யெகோவாவின் சாட்சிகளுடைய கண்ணோட்டம், அவர்களுக்கே உரிய விசேஷ கண்ணோட்டம், அறுவை சிகிச்சையின்போது மிகுந்த பயனளித்தது.”​—⁠ஹெர்ஸ் கிரீஸ்லாஃப், ஆகஸ்ட் 1987.

[அடிக்குறிப்புகள்]

a முழு இரத்தம், சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், பிளேட்லெட்கள், பிளாஸ்மா ஆகியவற்றை யெகோவாவின் சாட்சிகள் ஏற்றிக்கொள்வதில்லை. தடுப்பாற்றல் புரதம் (immune globulin) போன்ற சிறிய கூறுகளைப் பற்றி அறிய ஆங்கில காவற்கோபுரம் ஜூன் 1, 1990, பக்கங்கள் 30-1-ஐக் காண்க.

b வீணாகும் இரத்தத்தைச் சேமித்து பயன்படுத்துதல் (blood salvage) மற்றும் (புற உடல் சார்ந்த) இரத்த ஓட்ட இயந்திரத்தை (extracorporeal equipment) பயன்படுத்துதல் பேரிலான பைபிள் நியமங்களை ஆங்கில காவற்கோபுரம் மார்ச் 1, 1989, பக்கங்கள் 30-1 கலந்தாலோசிக்கிறது.

[பக்கம் 13-ன் பெட்டி]

“முழு இரத்தம் தேவைப்படாத அநேக நோயாளிகளுக்கு இரத்தத்தின் கூறுகள் மட்டுமே தற்போது செலுத்தப்படுகின்றன. ஆனாலும் அவர்கள் மிக மோசமான பாதிப்புகளுக்குள்ளாகும் ஆபத்தில் இருக்கிறார்கள். பயனளிப்பதற்குப் பதிலாக கேடுண்டாக்கும் ஒரு சிகிச்சை முறையை எந்த மருத்துவரும் அறிந்தே தன்னுடைய நோயாளிக்கு அளிக்க மாட்டார், ஆனால் அவசியமின்றி இரத்தமேற்றப்படும்போது அதுதான் நடக்கிறது.”​—⁠“இரத்தமேற்றுதலால் கடத்தப்படும் வைரஸ் நோய்கள்” (ஆங்கிலம்), 1987.

[பக்கம் 14-ன் பெட்டி]

“நூறு மிலி இரத்தத்தில் 2 முதல் 2.5 கிராம் ஹீமோகுளோபின் இருந்தால்கூட ஒருவரால் பிழைத்துக்கொள்ள முடியுமென சில நூலாசிரியர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். . . . ஆரோக்கியமான ஒருவர் சிவப்பு இரத்த அணுக்களில் 50 சதவீதத்தை இழந்துவிட்டாலும், அதைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்திருந்தால் எந்தவொரு நோய் அறிகுறியுமின்றி பிழைத்துக் கொள்வார்.”​—⁠“இரத்தமேற்றும் நுணுக்கங்கள்,” 1982.

[பக்கம் 15-ன் பெட்டி]

“இரத்தமேற்றுவது திசுக்களுக்கு ஆக்ஸிஜனை அளிக்கிறது, புண்களை ஆற்றுகிறது, ‘ஊட்டச்சத்து அளிக்கிறது’ போன்ற பழைய கருத்துகளெல்லாம் கைவிடப்படுகின்றன. கடுமையான இரத்தச்சோகை உள்ளவர்களும்கூட இரத்தம் ஏற்றப்படாமலேயே நன்கு தேறினார்கள் என்பதை யெகோவாவின் சாட்சிகளுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் காண்பிக்கின்றன.”​—⁠“மார்புக்கூடு அறுவை சிகிச்சையின் ஆண்டுத் தொகுப்புகள்” (ஆங்கிலம்), மார்ச் 1989.

[பக்கம் 16-ன் பெட்டி]

சிறு பிள்ளைகளுக்குமா? “48 பிள்ளைகளுக்கு இரத்தமேற்றாமல் மிகச் சிக்கலான ஓப்பன்-ஹார்ட் சர்ஜரி செய்யப்பட்டது.” அவர்களில் 10.3 பவுண்டு (4.7 கிலோ) எடை மட்டுமே உள்ள குழந்தைகளும் இருந்தன. “யெகோவாவின் சாட்சிகளுக்கு இரத்தமில்லாமல் செய்யப்பட்ட அறுவை சிகிச்சைகள் தொடர்ந்து வெற்றி பெறுவதாலும், இரத்தமேற்றுவதால் பெரிய சிக்கல்கள் ஏற்படுவதாலும், இப்போது பிள்ளைகளுக்குப் பெரும்பாலும் இரத்தமேற்றாமலேயே இருதய அறுவை சிகிச்சை செய்கிறோம்.”​—⁠“இரத்த ஓட்டம்” (ஆங்கிலம்), செப்டம்பர் 1984.

[பக்கம் 15-ன் படம்]

இரத்தமேற்றிக் கொள்ளாமல் இருதய அறுவை சிகிச்சை செய்கிற ஆட்களுக்கு இருதய– நுரையீரல் இயந்திரம் அதிக உதவியாக இருந்திருக்கிறது