Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இரத்தமேற்றுதல்—எந்தளவு பாதுகாப்பானது?

இரத்தமேற்றுதல்—எந்தளவு பாதுகாப்பானது?

இரத்தமேற்றுதல்​—⁠எந்தளவு பாதுகாப்பானது?

ஞானமுள்ள ஒருவர் எந்தவொரு முக்கியமான மருத்துவ சிகிச்சையையும் ஏற்பதற்கு முன்பு அதன் குறைநிறைகளை தெரிந்துகொள்வார். இரத்தமேற்றும் விஷயத்தில் என்ன சொல்லலாம்? இன்றைய மருத்துவத்தில் அது முக்கிய சிகிச்சை முறையாக இருக்கிறது. நோயாளிகள் மீது உண்மையான அக்கறை கொண்ட அநேக மருத்துவர்கள் தயங்காமல் அவர்களுக்கு இரத்தம் ஏற்றுகின்றனர். அது உயிர் காக்கும் பரிசு என அழைக்கப்படுகிறது.

இலட்சக்கணக்கானோர் இரத்த தானம் செய்திருக்கின்றனர் அல்லது இரத்தம் ஏற்றியிருக்கின்றனர். 1986 முதல் 1987 வரை, கனடாவில் வசித்த 2.5 கோடி பேரில் 13 லட்சம் பேர் இரத்த தானம் செய்தனர். “சமீபத்திய ஆண்டில், ஐக்கிய மாகாணங்களில் மட்டுமே 1.2 கோடி முதல் 1.4 கோடி யூனிட் இரத்தம் ஏற்றப்பட்டது.”​—⁠த நியு யார்க் டைம்ஸ், பிப்ரவரி 18, 1990.

“இரத்தம் எப்போதும் ஒரு மாய மருந்தாக கருதப்படுகிறது” என டாக்டர் லூயி ஜே. கீட்டிங் குறிப்பிடுகிறார். “முதல் 46 வருடங்களுக்கு மருத்துவர்களும் சரி, பொது மக்களும் சரி, இரத்தத்தை ஆபத்தற்றதாக கருதி வந்தனர், ஆனால் உண்மையில் அது அப்படி இருக்கவில்லை.” (கிளீவ்லாண்டு கிளினிக் மருத்துவப் பத்திரிகை [ஆங்கிலம்], மே 1989) அன்றைய நிலைமை என்ன? இன்றைய நிலைமை என்ன?

முப்பது ஆண்டுகளுக்கு முன்புகூட, நோயியல் வல்லுநர்களிடமும் இரத்த வங்கி ஊழியர்களிடமும் இவ்வாறு சொல்லப்பட்டது: “இரத்தம் ஒரு வெடிமருந்து! அது மிகுந்த நன்மையை உண்டாக்கலாம், அல்லது மிகுந்த தீமையை உண்டாக்கலாம். இரத்தமேற்றுவதால் ஏற்படும் மரண எண்ணிக்கை, மயக்க மருந்தினால் அல்லது குடல்வால் அகற்றும் அறுவை சிகிச்சையினால் ஏற்படும் மரண எண்ணிக்கைக்குச் சமமாக இருக்கிறது. இரத்தமேற்றுவதைப் பொறுத்தவரை, 1,000 முதல் 3,000 கேஸ்களில் ஒன்று அல்லது 5,000 கேஸ்களில் ஒன்று என்ற வீதத்தில் மரணம் ஏற்படுகிறதென தோராயமாக கணக்கிடப்பட்டுள்ளது. லண்டனில், 13,000 பாட்டில்களுக்கு ஒரு மரணம் ஏற்படுவதாக அறிக்கை செய்யப்பட்டுள்ளது.”​—⁠நியு யார்க் மாகாண மருத்துவப் பத்திரிகை (ஆங்கிலம்), ஜனவரி 15, 1960.

இரத்தமேற்றுவதில் உள்ள ஆபத்துகள் குறைக்கப்பட்டிருக்கின்றனவா? இன்று இரத்தமேற்றுவது பாதுகாப்பானதா? உண்மையைச் சொன்னால், இரத்தமேற்றுவதால் ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கானோருக்கு பல விபரீதங்கள் ஏற்படுகின்றன, அநேகர் உயிரிழக்கின்றனர். இதையெல்லாம் படிக்கும்போது, இரத்தத்தால் கடத்தப்படும் நோய்கள் உங்கள் மனதிற்கு வரலாம். ஆனால் அந்த நோய்களைப் பற்றி சிந்திப்பதற்கு முன், அதிகம் அறியப்படாத மற்ற ஆபத்துகளைப் பற்றி சிந்திக்கலாம்.

இரத்தமும் உங்கள் தற்காப்பு அமைப்பும்

20-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், இரத்தம் எவ்வளவு அற்புதமான விதத்தில் சிக்கலாக இருக்கிறது என்பதை விஞ்ஞானிகள் புரிந்துகொண்டார்கள். வெவ்வேறு இரத்த குரூப்புகள் இருப்பதை அவர்கள் கண்டுபிடித்தார்கள். இரத்த தானம் செய்பவரின் இரத்தத்தையும் நோயாளியின் இரத்தத்தையும் ஒத்துப் பார்ப்பது மிகவும் முக்கியம். ‘ஏ’ குரூப்பைச் சேர்ந்த ஒருவர் ‘பி’ குரூப் இரத்தத்தை ஏற்றிக்கொண்டால், இரத்த சிகப்பணு சிதைவு என்ற பயங்கர எதிர்விளைவு ஏற்படலாம். இதனால் அவருடைய சிவப்பு அணுக்களெல்லாம் அழிந்து அவர் சீக்கிரத்தில் உயிரிழந்துவிடலாம். இரத்தத்தை குரூப்புகளாக பிரிப்பதும் (blood-typing) அவற்றை ஒன்றோடொன்று ஒத்துப் பார்ப்பதும் (cross matching) இன்று சர்வசாதாரணமாக செய்யப்பட்டு வந்தாலும், தவறுகள் நடக்கத்தான் செய்கின்றன. இரத்த சிவப்பணு சிதைவினால் ஒவ்வொரு வருடமும் மக்கள் இறக்கிறார்கள்.

சில இரத்த குரூப்புகளைத்தான் மருத்துவமனைகள் ஒத்துப் பார்க்கின்றன, ஆனால் இரத்தம் மிகவும் சிக்கலானது என்பதால் இரத்த குரூப்புகள் ஒத்துப்போவதில் அதிக பிரச்சினை இருப்பதாக அத்தாட்சிகள் காட்டுகின்றன. ஏன்? “இரத்தமேற்றுதல்: உபயோகங்கள், துஷ்பிரயோகங்கள், அபாயங்கள்” என்ற கட்டுரையில் டாக்டர் டக்லஸ் ஹெச். போஸி, ஜூனியர் இவ்வாறு எழுதுகிறார்: “கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன்பு, இரத்தமேற்றுவதை ஆபத்தான சிகிச்சைமுறை என சாம்சன் விளக்கினார். . . . [அதுமுதல்] குறைந்தது 400 சிவப்பணு ஆன்டிஜன்கள் கூடுதலாக அடையாளம் கண்டுகொள்ளப்பட்டிருக்கின்றன, அவற்றின் பண்புகளும் விளக்கப்பட்டிருக்கின்றன. இந்த எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகும் என்பது நிச்சயம். ஏனென்றால் சிவப்பணு புறச்சவ்வு மிக மிகச் சிக்கலானது.”​—⁠தேசிய மருத்துவச் சங்கப் பத்திரிகை (ஆங்கிலம்), ஜூலை 1989.

இரத்தமேற்றுவது உடலின் தற்காப்பு அமைப்பை எப்படிப் பாதிக்கிறது என விஞ்ஞானிகள் இப்போது ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அறுவை சிகிச்சை தேவைப்படும் நிலையிலுள்ள உங்களையோ உங்கள் உறவினரையோ இது எவ்வாறு பாதிக்கும்?

ஒருவரது இதயத்தை, ஈரலை, அல்லது வேறொரு உறுப்பை மற்றொருவருக்கு டாக்டர்கள் பொருத்தும்போது, அவரது உடலின் தற்காப்பு அமைப்பு அந்த அந்நிய திசுவை அடையாளம் கண்டு நிராகரித்துவிடும். இரத்தமேற்றுதல்கூட திசு மாற்றும் ஒரு சிகிச்சைதான். “சரியாக” ஒத்துப்போகிறதென சொல்லப்படும் இரத்தமும்கூட ஒருவரது தற்காப்பு அமைப்பை முடக்கிப்போட்டு விடலாம். “இரத்தமேற்றுதல் தற்காப்பு அமைப்பை பாதிக்கிறது” என நூற்றுக்கணக்கான மருத்துவ ஆராய்ச்சிகள் குறிப்பிட்டிருப்பதாக நோயியல் நிபுணர்களின் ஒரு மாநாட்டில் சொல்லப்பட்டது.​—⁠“இரத்தமேற்றுதலுக்கு எதிராக வழக்கு வலுவடைகிறது,” மருத்துவ உலகின் செய்திகள் (ஆங்கிலம்), டிசம்பர் 11, 1989.

கொடிய (புற்றுநோய்) செல்களைக் கண்டறிந்து அழிப்பதே உங்கள் தற்காப்பு அமைப்பின் முக்கிய வேலை. அப்படியென்றால் தற்காப்பு அமைப்பு முடக்கப்பட்டால் புற்றுநோயும் மரணமும் ஏற்படுமா? இரண்டு அறிக்கைகளைக் கவனியுங்கள்.

நெதர்லாந்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் முடிவுகளைப் புற்றுநோய் (பிப்ரவரி 15, 1987) என்ற ஆங்கில பத்திரிகை வெளியிட்டது: “பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் ஒரு தொகுதியை ஆய்வு செய்தபோது, இரத்தமேற்றுதல் ஒருவருடைய வாழ்நாளைக் கணிசமான அளவு குறைத்தது என்பது கண்டறியப்பட்டது. ஐந்து வருட காலப்பகுதியில், இரத்தம் ஏற்றிக்கொண்ட அந்த நோயாளிகளில் மொத்தம் 48 சதவீதத்தினரே உயிர் பிழைத்தனர், ஆனால் இரத்தம் ஏற்றிக்கொள்ளாதவர்களில் மொத்தம் 74 சதவீதத்தினர் உயிர் பிழைத்தனர்.” தென் கலிபோர்னிய பல்கலைக்கழகத்தின் மருத்துவர்கள், புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்துகொண்ட நூறு நோயாளிகளை ஆராய்ச்சி செய்தனர். “இரத்தம் ஏற்றிக்கொள்ளாதவர்களில் 14 சதவீதத்தினரையே குரல்வளை சம்பந்தப்பட்ட புற்றுநோய்கள் மீண்டும் தாக்கியிருந்தன, ஆனால் இரத்தம் ஏற்றிக்கொண்டவர்களில் 65 சதவீதத்தினரை மீண்டும் தாக்கியிருந்தன. வாய், தொண்டை, மூக்கு, அல்லது சைனஸ் சம்பந்தப்பட்ட புற்றுநோய்கள், இரத்தம் ஏற்றிக்கொள்ளாதவர்களில் 31 சதவீதத்தினரையும் இரத்தம் ஏற்றிக்கொண்டவர்களில் 71 சதவீதத்தினரையும் மீண்டும் தாக்கியிருந்தன.”​—⁠காது, மூக்கு, தொண்டை ஆராய்ச்சியின் ஆண்டு தொகுப்பேடுகள் (ஆங்கிலம்), மார்ச் 1989.

இந்த ஆராய்ச்சிகள் இரத்தமேற்றுதலைப் பற்றி எதைக் காட்டுகின்றன? “புற்றுநோய்க்கான இரத்தமேற்றுதல்களும் அறுவை சிகிச்சையும்” என்ற கட்டுரையின் முடிவில் டாக்டர் ஜான் எஸ். ஸ்பிராட் இவ்வாறு கூறினார்: “புற்றுநோய்க்காக ஆபரேஷன் செய்யும் டாக்டர்கள் இனி இரத்தமேற்றாமல் அந்த ஆபரேஷன்களைச் செய்ய வேண்டி வரலாம்.”​—⁠அமெரிக்க அறுவை சிகிச்சைப் பத்திரிகை (ஆங்கிலம்), செப்டம்பர் 1986.

தொற்று ஏற்படாதவாறு காப்பது உங்கள் தற்காப்பு அமைப்பின் மற்றொரு முக்கிய வேலை. அதனால்தான், சில ஆராய்ச்சிகள் காட்டுகிறபடி, இரத்தம் ஏற்றிக்கொள்ளும் நோயாளிகளுக்கு அதிக தொற்று ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மலக்குடல் அறுவை சிகிச்சை பற்றி டாக்டர் பி. ஐ. டார்ட்டர் ஆராய்ந்தார். இரத்தம் கொடுக்கப்பட்ட நோயாளிகளில் 25 சதவீதத்தினரைத் தொற்றுகள் தாக்கின; ஆனால் இரத்தம் கொடுக்கப்படாதவர்களில் 4 சதவீதத்தினரை மட்டுமே அவை தாக்கின. அவர் இவ்வாறு அறிக்கையிட்டார்: “ஆபரேஷனின்போதோ அதற்கு முன்போ பின்போ இரத்தமேற்றுவதால் பயங்கர தொற்றுகள் ஏற்பட்டிருக்கின்றன. . . . எந்தளவு அதிக யூனிட் இரத்தம் கொடுக்கப்பட்டதோ அந்தளவு அதிக தொற்று ஆபரேஷனுக்குப் பிறகு ஏற்பட்டது.” (பிரிட்டிஷ் அறுவை சிகிச்சைப் பத்திரிகை [ஆங்கிலம்], ஆகஸ்ட் 1988) 1989-⁠ல் நடந்த இரத்த வங்கிகளுக்கான அமெரிக்க கூட்டுறவு சங்கத்தின் கூட்டத்தில் கலந்துகொண்டோர் அறிய வந்தது இதுதான்: இடுப்பு மாற்று சிகிச்சையின்போது இரத்தம் ஏற்றிக்கொண்டவர்களில் 23 சதவீதத்தினருக்குத் தொற்றுகள் ஏற்பட்டன, ஆனால் இரத்தம் ஏற்றிக்கொள்ளாதவர்களுக்கு எவ்வித தொற்றும் ஏற்படவில்லை.

இரத்தமேற்றுவதால் உண்டாகும் இந்தப் பாதிப்பைப் பற்றி டாக்டர் ஜான் ஏ. காலின்ஸ் இவ்வாறு எழுதினார்: “ஒரு ‘சிகிச்சை’ எவ்வித பலனும் அளிக்காதபோது, அதுவும் நோயாளியின் முக்கிய பிரச்சினையை அது இன்னும் மோசமாக்கிவிட்டதாக பிற்பாடு தெரியவரும்போது நிச்சயம் வேடிக்கையாக இருக்கும்.”​—⁠உலக அறுவை சிகிச்சைப் பத்திரிகை (ஆங்கிலம்), பிப்ரவரி 1987.

நோயற்றதா அல்லது ஆபத்து நிறைந்ததா?

இரத்தத்தால் கடத்தப்படும் நோய், கடமையுணர்வுள்ள மருத்துவர்களுக்கும் அநேக நோயாளிகளுக்கும் கவலை தருகிறது. எந்த நோய்? ஒரேவொரு நோயைக் குறிப்பிட முடியாது, ஏனெனில் உண்மையில் அநேக நோய்கள் இருக்கின்றன.

இரத்தமேற்றும் நுணுக்கங்கள் [ஆங்கிலம்] (1982) என்ற புத்தகம் நன்கு அறியப்பட்ட நோய்களைப் பற்றிப் பேசிவிட்டு, மேக நோய், சைட்டோமெகாலோ வைரஸ் தொற்று, மலேரியா போன்ற “இரத்தமேற்றுதலோடு சம்பந்தப்பட்ட மற்ற தொற்று நோய்களைப் பற்றியும்” குறிப்பிடுகிறது. அது மேலும் சொல்வதாவது: “வேறு பல நோய்கள்கூட இரத்தமேற்றுதலால் கடத்தப்படுவதாக அறிக்கை செய்யப்பட்டுள்ளது. அக்கி, தொற்றக்கூடிய மோனோ நியூக்ளியோசிஸ் (எப்ஸ்டீன்–பார் வைரஸ்), டாக்சோ பிளாஸ்மோசிஸ், ட்ரிப்பானோசோமியாசிஸ் [ஆப்பிரிக்க தூக்க நோய் மற்றும் ஷாகஸ் நோய்], லேயிஷ்மேனியாசிஸ், ப்ரூசெலொசிஸ் [விட்டுவிட்டு வரும் காய்ச்சல்], டைஃபஸ், யானைக்கால் வியாதி, தட்டம்மை, சால்மோனெலோசிஸ், கொலொராடோ உண்ணிக் காய்ச்சல் போன்றவை அந்த நோய்களில் சில.”

நோய்களின் இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. “இரத்தமேற்றுவதால் லைம் நோயா? அதற்குச் சாத்தியமே இல்லை, ஆனால் வல்லுநர்கள் உஷாராகியிருக்கிறார்கள்.” இது போன்ற தலைப்புச் செய்திகளை நீங்கள் வாசித்திருப்பீர்கள். லைம் நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களிடமிருந்து பெறப்படும் இரத்தம் எந்தளவு நம்பகமானது? ‘அப்படிப்பட்ட இரத்தத்தை நீங்கள் ஏற்றிக்கொள்வீர்களா?’ என்று சுகாதார அதிகாரிகளின் ஒரு குழுவிடம் கேட்கப்பட்டது. “‘மாட்டோம்’ என்றுதான் எல்லாருமே பதிலளித்தார்கள், ஆனால் அந்த இரத்தத்தை அப்புறப்படுத்துவதைப் பற்றி யாருமே வாய் திறக்கவில்லை.” வங்கிகளில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் இத்தகைய இரத்தத்தை, அதுவும் நிபுணர்கள் தாமே ஏற்றிக்கொள்ள விரும்பாத இரத்தத்தை பொது மக்கள் எவ்வாறு கருத வேண்டும்?​—⁠த நியு யார்க் டைம்ஸ், ஜூலை 18, 1989.

கவலைக்குரிய இரண்டாவது காரணம் இதுதான்: ஒரு தேசத்தில் ஏதேனும் ஒரு நோய் மிக அதிகமாக பரவியிருக்கலாம். அந்தத் தேசத்திலிருந்து பெறப்பட்ட இரத்தம் வெகுதூர இடங்களுக்கு அனுப்பப்படலாம். அவ்விடங்களிலுள்ள பொது மக்களும் சரி, மருத்துவரும் சரி, அந்த நோயின் ஆபத்தைக் குறித்து அறியாதிருக்கலாம். அதுவும் அகதிகள், குடியேறிகள் போன்ற பலர் இன்று அதிகமதிகமாக பயணம் செய்வதால், இரத்தத்தின் வாயிலாக விநோதமான நோய்கள் கடத்தப்படும் ஆபத்து அதிகரித்து வருகிறது.

மேலும், தொற்றுநோய் நிபுணர் ஒருவர் இவ்வாறு எச்சரித்தார்: “இரத்தப் புற்றுநோய், லிம்ஃபோமா, டிமென்ஷியா என்ற மனக்கோளாறு [அல்லது, அல்ஸைமர் நோய்] உள்பட இதுவரை தொற்று நோயாக கருதப்படாத பல கோளாறுகள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்காக இரத்தம் பரிசோதிக்கப்பட வேண்டியிருக்கலாம்.”​—⁠இரத்தமேற்றுதல் மருத்துவ விமர்சனங்கள் (ஆங்கிலம்), ஜனவரி 1989.

இந்த ஆபத்துகள் கதிகலங்க வைக்கையில், மற்றவை இன்னும் அதிக பீதியை ஏற்படுத்தியுள்ளன.

எய்ட்ஸ் கொள்ளைநோய்

“இரத்தத்தைப் பற்றி மருத்துவர்களுக்கும் நோயாளிகளுக்கும் இருந்த அபிப்பிராயத்தை எய்ட்ஸ் நோய் முற்றிலும் மாற்றிவிட்டது. அதுவும் நல்லதுக்குத்தான் என இரத்தமேற்றுதல் பற்றிய மாநாட்டிற்காக தேசிய உடல்நல நிறுவனங்களில் கூடியிருந்த மருத்துவர்கள் கூறினார்கள்.”​—⁠வாஷிங்டன் போஸ்ட், ஜூலை 5, 1988.

எய்ட்ஸ் கொள்ளைநோய் (நோய் எதிர்ப்பு மண்டலத்தைச் செயலற்றதாய் ஆக்கும் நோய்), இரத்தத்தின் மூலம் தொற்றுநோய்கள் கடத்தப்படும் ஆபத்தை மிகவும் வலிமையான விதத்தில் மக்களுக்கு உணர்த்தியிருக்கிறது. இலட்சக்கணக்கானோர் இப்போது பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அது கட்டுப்பாட்டை மீறி பரவி வருகிறது. அதனால் ஏற்படும் மரண விகிதம் கிட்டத்தட்ட 100 சதவீதம்.

மனித நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைக்கும் வைரஸால் (ஹெச்ஐவி வைரஸால்) எய்ட்ஸ் உண்டாகிறது. இந்த வைரஸ் இரத்தத்தின் மூலம் கடத்தப்படுகிறது. நவீன கொள்ளை நோயான எய்ட்ஸ் 1981-ல் கண்டறியப்பட்டது. அதற்கு அடுத்த வருடமே, இரத்தத்தினாலான பொருட்களில் இந்த வைரஸ் கடத்தப்படக்கூடும் என்பதை உடல்நல நிபுணர்கள் அறிய வந்தார்கள். ஹெச்ஐவி நோய் எதிர்ப்பொருட்கள் இரத்தத்தில் இருக்கின்றனவா என்பதை அறியும் பரிசோதனைகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்த போதிலும், இரத்தத் துறை உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவில்லை என்பது இப்பொழுது ஒப்புக்கொள்ளப்படுகிறது. ஒருவழியாக, 1985-⁠ல், a தானம் செய்யப்பட்ட இரத்தம் பரிசோதிக்கப்பட ஆரம்பித்தது. ஆனாலும் ஏற்கெனவே சேமித்து வைக்கப்பட்டிருந்த இரத்தப் பொருட்கள் பரிசோதிக்கப்படாமல் உபயோகிக்கப்பட்டன.

‘இப்போது கிடைக்கும் இரத்தம் பாதுகாப்பானது’ என அதன் பிறகு பொது மக்களுக்கு உறுதியளிக்கப்பட்டது. என்றாலும் எய்ட்ஸ் நோய்க்கு ஓர் அபாயகரமான “மந்த காலம்” (window period) இருப்பது பிற்பாடு வெளிச்சத்துக்கு வந்தது. ஒரு நபரை எய்ட்ஸ் தாக்கினாலும், பல மாதங்களுக்குப் பிறகுதான் அதற்குரிய நோய் எதிர்ப்பொருட்களைப் பரிசோதனையில் கண்டறிய முடியும். ஆகவே பரிசோதனை நெகடிவ் என காண்பிக்கும்போது, அந்த வைரஸ் தனக்கு இருப்பதை அறியாமலேயே ஒருவர் இரத்த தானம் செய்துவிடலாம். இது உண்மையில் நடந்திருக்கிறது. அப்படிப்பட்ட இரத்தத்தை ஏற்றிக்கொண்டவர்களுக்கு எய்ட்ஸ் தொற்றியிருக்கிறது!

இந்த நிலைமை இன்னும் மோசமாக ஆனது. “மௌனமான ஹெச்ஐவி தொற்றுகள்” பற்றி புதிய இங்கிலாந்து மருத்துவப் பத்திரிகை (ஜூன் 1, 1989 [ஆங்கிலம்]) அறிக்கை செய்தது. தற்போது செய்யப்படும் நேர்முகமற்ற பரிசோதனைகளால் எய்ட்ஸ் வைரஸ் கண்டுபிடிக்கப்படாமல் ஒருவரது உடலில் பல வருடங்களுக்குப் பதுங்கியிருக்கலாம் என்பது உறுதி செய்யப்பட்டது. இது வெகு அபூர்வம்தான் என சிலர் சொல்லலாம்; என்றாலும், “இரத்தம் மற்றும் அதன் கூறுகளின் வாயிலாக எய்ட்ஸ் கடத்தப்படும் ஆபத்தை முற்றிலும் புறக்கணித்துவிட முடியாது” என்றே இது நிரூபிக்கிறது. (நோயாளி கவனிப்பு [ஆங்கிலம்], நவம்பர் 30, 1989) ஆகவே, கலக்கமூட்டும் முடிவு இதுதான்: உடலில் வைரஸ் இல்லை என பரிசோதனை காட்டினாலும் அது உண்மையில் இல்லை என்ற முடிவுக்கு நாம் வர முடியாது. அப்படியென்றால், இன்னும் எத்தனை பேர் இரத்தத்தின் மூலம் எய்ட்ஸ் நோயைப் பெறுவார்கள்?

இன்னும் எத்தனை பிரச்சினையோ?

இரத்தம் சம்பந்தமாக இன்னும் எத்தனை பயங்கர பிரச்சினைகள் வெடிக்கப் போகின்றன என்பது யாருக்குமே தெரியாது.

எய்ட்ஸ் வைரஸுக்கு ஹெச்ஐவி என பெயரிடப்பட்டது. ஆனால் சில நிபுணர்கள் இப்போது அதை ஹெச்ஐவி-1 என்று அழைக்கிறார்கள். ஏன்? ஏனென்றால் எய்ட்ஸ் வகையைச் சேர்ந்த மற்றுமொரு வைரஸை (ஹெச்ஐவி-2) அவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். எய்ட்ஸ் அறிகுறிகளை உண்டுபண்ணும் இந்த வைரஸ், சில பகுதிகளில் பரவலாக இருக்கிறது. அதோடு, “தற்போது இங்குப் பயன்படுத்தப்படும் பரிசோதனை முறைகளால் இந்த வைரஸை எல்லா சமயங்களிலும் கண்டுபிடிக்க முடிவதில்லை” என்று த நியு யார்க் டைம்ஸ் (ஜூன் 27, 1989) அறிக்கையிடுகிறது. “இந்தப் புதிய கண்டுபிடிப்புகளின் காரணமாக, . . . தானம் செய்யப்படுகிற இரத்தம் பாதுகாப்பானதா இல்லையா என்பதை உறுதி செய்வது இரத்த வங்கிகளுக்கு இன்னும் கடினமாகியிருக்கிறது.”

எய்ட்ஸ் வைரஸின் ‘தூரத்து உறவுகளைப்’ பற்றி என்ன சொல்லலாம்? அப்படிப்பட்ட ஒரு வைரஸ் “முதிர்ந்த T–அணு இரத்தப் புற்று நோய்/லிம்ஃபோமா மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட ஒரு கொடிய நோய்க்கு காரணமாயிருக்கிறது என நம்பப்படுகிறது” என்று (அ.ஐ.மா.) பிரஸிடென்ஷியல் கமிஷன் ஒன்று கூறுகிறது. இரத்த தானம் செய்பவர்களை ஏற்கெனவே தாக்கியிருக்கும் இந்த வைரஸ், இரத்தம் மூலமாக பரவலாம். ‘அப்படிப்பட்ட மற்ற வைரஸுகளை இரத்த வங்கிகளால் எந்தளவு கண்டுபிடிக்க முடிகிறது?’ என்று கேட்க மக்களுக்கு உரிமை உண்டு.

இரத்தத்தில் இன்னும் எத்தனை வைரஸுகள் மறைந்திருக்கின்றன என்பதை உண்மையில் காலம்தான் தெரியப்படுத்தும். “ஏற்கெனவே கண்டறியப்பட்ட வைரஸுகளைவிட, இன்னும் கண்டறியப்படாதவைதான் அதிக கவலையளிக்கின்றன” என்று டாக்டர் ஹெரால்டு டி. மெரிமன் எழுதுகிறார். “தொற்றக்கூடிய வைரஸுகள் பல வருடங்களுக்கு உடலிலேயே பதுங்கியிருந்து பிறகு தலைகாட்டும்போது, இரத்தமேற்றியதால் வந்த வினைதான் இது என்று திட்டவட்டமாக சொல்வது கடினம், அவற்றைக் கண்டுபிடிப்பது அதைவிடக் கடினம். HTLV வகை, இவ்வாறு தலைகாட்டிய முதல் வகை மட்டுமே.” (இரத்தமேற்றுதல் மருத்துவ விமர்சனங்கள் [ஆங்கிலம்], ஜூலை 1989) “எய்ட்ஸ் கொள்ளை நோயின் பீதி ஒருபுறம் இருந்தபோதும், . . . இரத்தமேற்றுதலில் உள்ள புதிய ஆபத்துகளைப் பற்றிய கருத்துகளும் விளக்கங்களும் 1980-களில் பரபரப்பூட்டின. ஆகவே, மற்ற கொடிய வைரஸ் நோய்கள் உண்டென்பதும் இரத்தத்தை ஏற்றுவதன் மூலம் அவை கடத்தப்படுகின்றன என்பதும் தெள்ளத் தெளிவாகிறது.”​—⁠ஒத்திருக்கும் வைரஸ் வெளிப்படுவதைக் கட்டுப்படுத்துதல்: மாற்று உபாயங்கள் (ஆங்கிலம்), 1989.

ஏற்கெனவே பல பிரச்சினைகள் வெடித்திருப்பதால், “பரவலான முன்னெச்சரிப்பு நடவடிக்கைகள்” எடுக்கப்பட வேண்டுமென நோய்க் கட்டுப்பாட்டு மையம் பரிந்துரை செய்கிறது. அதாவது, ‘எல்லா நோயாளிகளுமே ஹெச்ஐவி வைரஸை அல்லது மற்ற வைரஸுகளை இரத்தத்தில் பெற்றிருப்பது போல நினைத்துக்கொண்டு உடல்நலப் பணியாளர்கள் ஜாக்கிரதையாக வேலை செய்ய வேண்டும்.’ நியாயமான காரணத்துடன்தான், உடல்நலப் பணியாளர்களும் பொது மக்களும் இரத்தத்தைப் பற்றிய தங்களுடைய கருத்தை இப்போது மறுபரிசீலனை செய்துவருகிறார்கள்.

[அடிக்குறிப்பு]

a எல்லா இரத்தமும் பரிசோதிக்கப்படுவதாக இன்றுகூட நாம் நினைக்க முடியாது. உதாரணமாக, 1989-ன் ஆரம்பத்தில் பிரேஸிலிலிருந்த இரத்த வங்கிகளில் சுமார் 80 சதவீதம் அரசு கட்டுப்பாட்டில் இருக்கவுமில்லை, எய்ட்ஸ் நோய்க்குரிய பரிசோதனையைச் செய்யவுமில்லை என்று அறிக்கை செய்யப்பட்டுள்ளது.

[பக்கம் 8-ன் பெட்டி]

“இரத்தமேற்றப்படும் 100 பேரில் ஏறக்குறைய ஒரு நபருக்கு ஜுரம், குளிர் காய்ச்சல், அல்லது தோல் அரிப்பு ஏற்படுகிறது. . . . சிவப்பு அணு ஏற்றப்படுகிற 6,000 பேரில் ஏறக்குறைய ஒருவருக்குச் சிவப்பணு சிதைவு என்ற எதிர்விளைவு (hemolytic transfusion reaction) ஏற்படுகிறது. இந்தக் கடுமையான நோய்த் தடுப்பு எதிர்விளைவு இரத்தம் ஏற்றப்பட்ட உடனடியாகவோ சில நாட்கள் கழித்தோ ஏற்படலாம்; இதனால் கடும் [சிறுநீரக] செயலிழப்பும், மன அதிர்ச்சியும், இரத்தநாள அடைப்பும், சொல்லப்போனால் மரணம்கூட ஏற்படலாம்.”​—⁠தேசிய உடல்நல நிறுவனங்கள் (NIH) மாநாடு, 1988.

[பக்கம் 9-ன் பெட்டி]

டென்மார்க்கைச் சேர்ந்த நீல்ஸ் யெர்னே என்ற விஞ்ஞானி 1984-ல் மருத்துவத்துக்கான நோபல் பரிசைப் பெற்றார். இரத்தம் ஏற்றிக்கொள்ள மறுத்ததற்குரிய காரணத்தை அவரிடம் கேட்டபோது, “ஒருவருடைய இரத்தம் அவருடைய கைரேகைகளைப் போன்றது; எந்த இரு நபர்களுடைய இரத்தமும் அச்சு அசலாக இருப்பதில்லை” என்று கூறினார்.

[பக்கம் 10-ன் பெட்டி]

இரத்தம், பாழாகிவிட்ட கல்லீரல்கள், அதோடு . . .

“இரத்தத்தால் கடத்தப்படும் எய்ட்ஸ் நோய், . . . கல்லீரல் அழற்சி போன்ற மற்ற நோய்களின் அளவுக்குப் பெரும் அச்சுறுத்தலாக ஒருபோதும் இருந்ததில்லை என்பது எதிர்மறையான ஓர் உண்மை” என்று வாஷிங்டன் போஸ்ட் விவரித்தது.

ஆம், கல்லீரல் அழற்சியால் ஏராளமான மக்கள் மிகவும் நோய்வாய்ப்பட்டு இறந்திருக்கிறார்கள். அதற்குக் குறிப்பாக எந்தவொரு சிகிச்சையும் கிடையாது. ஐ.மா. செய்தி மற்றும் உலக அறிக்கை (மே 1, 1989) சொல்கிறபடி, ஐக்கிய மாகாணங்களில் இரத்தம் ஏற்றிக்கொள்பவர்களில் சுமார் 5 சதவீதத்தினருக்கு, அதாவது ஒரு வருடத்தில் 1,75,000 மக்களுக்குக் கல்லீரல் அழற்சி ஏற்படுகிறது. அவர்களில் ஏறக்குறைய பாதி பேருக்கு அந்த நோயைக் கடத்தக்கூடிய அபாயம் எப்போதும் இருக்கிறது; குறைந்தபட்சம் 5 பேரில் ஒருவருக்குக் கல்லீரல் வீக்கம் அல்லது ஈரல் புற்றுநோய் உண்டாகிறது. இதனால் 4,000 பேர் இறப்பதாக கணக்கிடப்படுகிறது. ஒரு ஜம்போ ஜெட் விமானம் விபத்துக்குள்ளாகி, பயணிகள் எல்லாரும் உயிரிழந்ததைப் பற்றிய ஒரு தலைப்புச் செய்தியை வாசிப்பதாக கற்பனை செய்து பாருங்கள். ஆம், 4,000 பேர் இறப்பது, ஒவ்வொரு மாதமும் ஒரு ஜம்போ ஜெட் விமானம் விபத்திற்குள்ளாவதற்குச் சமம்!

சற்றுக் கடுமை குறைந்த கல்லீரல் அழற்சி (A வகை), அசுத்தமான உணவினாலோ தண்ணீரினாலோ பரவுகிறது என்பதை மருத்துவர்கள் வெகு காலமாக அறிந்திருந்தார்கள். பின்னர், அதைவிட கடுமையான ஒரு வகை கல்லீரல் அழற்சி இரத்தம் மூலம் கடத்தப்பட்டு வருவதைக் கண்டார்கள்; ஆனால் இரத்தப் பரிசோதனை மூலம் அதைக் கண்டறிய வழி ஏதும் அப்போது இருக்கவில்லை. இறுதியில், புத்திக்கூர்மையுள்ள விஞ்ஞானிகள் இந்த வைரஸின் (B வகை) “தடங்களை” எப்படிக் கண்டுபிடிப்பது என்பதைத் தெரிந்துகொண்டார்கள். 1970-களின் ஆரம்பத்திற்குள், இரத்தம் சில நாடுகளில் பரிசோதனை செய்யப்பட துவங்கியது. தானம் செய்யப்பட்ட இரத்தம் நம்பகமானதாக தெரிந்தது, அதோடு, இரத்தத்தை உபயோகிப்பது சம்பந்தமாக ஒளிமயமான எதிர்காலம் இருந்ததாகவும் தெரிந்தது! ஆனால் அது உண்மையிலேயே அப்படி இருந்ததா?

பரிசோதிக்கப்பட்ட இரத்தத்தை ஏற்றிக்கொண்ட ஆயிரக்கணக்கான ஆட்களுக்கும்கூட கல்லீரல் அழற்சி ஏற்பட்டது என்ற உண்மை விரைவில் தெரியவந்தது. அநேகர் மிகவும் நோய்வாய்ப்பட்ட பின்னர், தங்களுடைய ஈரல்கள் பழுதடைந்திருந்ததைத் தெரிந்துகொண்டார்கள். ஆனால் இரத்தம் பரிசோதிக்கப்பட்டிருந்த போதிலும் ஏன் இப்படி நடந்தது? இரத்தத்தில் மற்றொரு வகையான வைரஸ் இருந்தது; அதாவது A மற்றும் B வகை அல்லாத கல்லீரல் அழற்சி (NANB) வைரஸ் இருந்தது. இரத்தமேற்றும் விஷயத்தில் அது சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பெரும் தொல்லையாக இருந்தது; அமெரிக்கா, இத்தாலி, இஸ்ரேல், சுவீடன், ஸ்பெயின், ஜப்பான் ஆகிய நாடுகளில் இரத்தம் ஏற்றப்பட்ட 8 முதல் 17 சதவீதத்தினருக்கு இது தொற்றியது.

“A மற்றும் B வகை அல்லாத கல்லீரல் அழற்சி​—⁠ஒருவழியாகப் புதிர் விடுவிக்கப்பட்டிருக்கிறது”; “இரத்தத்தால் வரும் ஜுரம் முறியடிக்கப்படுகிறது” போன்ற தலைப்புச் செய்திகள் அதன்பின் தோன்ற ஆரம்பித்தன. அதைத் தொடர்ந்து, “நழுவிக்கொண்டே இருந்தது ஒருவழியாகப் பிடிபட்டது!” என்ற செய்தி வெளியானது. ஏப்ரல் 1989-ல் கல்லீரல் அழற்சி C என்று அழைக்கப்படும் NANB-⁠க்கு ஒரு பரிசோதனை முறை கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது.

பிரச்சினை தீர்ந்துவிட்டதாக உடனே முடிவுகட்டி விடுகிறீர்களா? உண்மை என்னவெனில், இன்னொரு வகை கல்லீரல் அழற்சி வைரஸ் இருப்பதாக இத்தாலிய ஆய்வாளர்கள் அறிக்கை செய்திருக்கின்றனர்; மரபுப்பிறழ்ந்த (mutant) இந்த வைரஸ், கல்லீரல் அழற்சி நோயாளிகளில் மூன்றில் ஒரு பகுதியினரை தாக்கியிருக்கலாம் என்று சொல்கின்றனர். “A, B, C மற்றும் D மட்டுமே கல்லீரல் அழற்சியின் வகைகள் அல்ல, வேறு பல வகைகளும் தோன்றலாம் என்று மருத்துவ அதிகாரிகள் சிலர் கவலை தெரிவித்துள்ளனர்” என்று ஹார்வர்டு மருத்துவப் பள்ளி ஆரோக்கிய மடல் (நவம்பர் 1989) குறிப்பிட்டது. த நியு யார்க் டைம்ஸ் (பிப்ரவரி 13, 1990) பின்வருமாறு கூறியது: “மற்ற வைரஸ்கள் கல்லீரல் அழற்சியை ஏற்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் அதிகம் சந்தேகிக்கின்றனர்; கண்டுபிடிக்கப்பட்டால், அவை கல்லீரல் அழற்சி E என்றும், F என்றும் இப்படியே வரிசையாகப் பெயரிடப்படும்.”

இரத்தத்தைப் பாதுகாப்பானதாக ஆக்குவதற்கு இரத்த வங்கிகள் இன்னும் நீண்ட கால ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டுமா? அமெரிக்க செஞ்சிலுவைச் சங்கத்தின் இயக்குநர் ஒருவர் இதற்கு ஆகும் செலவை மேற்கோள் காண்பித்து, கவலைதரும் இந்தக் குறிப்பைச் சொன்னார்: “தொற்றக்கூடிய ஒவ்வொரு வைரஸையும் கண்டுபிடிக்க பரிசோதனை மேல் பரிசோதனை செய்துகொண்டே இருப்பதற்கு நமக்குக் கொஞ்சமும் வசதியில்லை.”​—⁠மருத்துவ உலகின் செய்தி, மே 8, 1989.

கல்லீரல் அழற்சி B-க்குரிய பரிசோதனை முறையும்கூட நம்பகமானதல்ல; அது இன்னும் இரத்தத்தின் மூலம் அநேகருக்குக் கடத்தப்பட்டு வருகிறது. அதோடு, கல்லீரல் அழற்சி C-க்குரிய பரிசோதனை முறை கண்டுபிடிக்கப்பட்டிருப்பதைக் குறித்து மக்கள் திருப்தி அடைவார்களா? அந்நோய் தாக்கி ஒரு வருடம் சென்ற பிறகே இந்தப் பரிசோதனையின் மூலம் நோய் எதிர்ப்பொருட்களைக் கண்டுபிடிக்க முடியுமென அமெரிக்க மருத்துவச் சங்கத்தின் பத்திரிகை (ஜனவரி 5, 1990) [ஆங்கிலம்] விவரித்தது. ஆனால், அதற்குள் இரத்தம் ஏற்றப்பட்டவர்களின் கல்லீரல்கள் பாழாகிவிடலாம், ஏன், அவர்கள் உயிரையே இழக்க நேரிடலாம்.

[பக்கம் 11-ன் பெட்டி/படம்]

இரத்தத்தின் மூலம் தூர இடங்களிலுள்ள மக்களுக்கு எப்படி நோய் கடத்தப்படுகிறது என்பதற்கு ஓர் உதாரணம் ஷாகஸ் நோய். ‘தென் அமெரிக்காவில் 1-2 கோடி மக்கள் இந்நோயால் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கின்றனர்’ என “த மெடிக்கல் போஸ்ட்” (ஜனவரி 16, 1990) அறிக்கை செய்கிறது. “தென் அமெரிக்காவில் இரத்தமேற்றுதலால் ஏற்பட்டிருக்கும் மிகப் பெரிய கேடுகளில் ஒன்று” என இது சொல்லப்பட்டுள்ளது. தூங்கிக் கொண்டிருக்கும் ஒருவரின் முகத்தை ஒரு “கொலைகார பூச்சி” கடித்து, இரத்தத்தை உறிஞ்சி, அந்தக் காயத்தில் கழிவை விட்டுச்செல்கிறது. அந்த நபர் பல ஆண்டுகளுக்கு ஷாகஸ் நோயை உடலில் பெற்றிருக்கலாம் (இச்சமயத்தில் இரத்த தானமும் செய்யலாம்), பிறகு கொடிய இருதய கோளாறுகளால் உயிரிழக்கலாம்.

தொலைதூர கண்டங்களில் வாழும் மக்களுக்கு இது ஏன் கவலையளிக்கிறது? “த நியு யார்க் டைம்ஸ்” (மே 23, 1989) பத்திரிகையில், இரத்தமேற்றுதலுக்குப் பின்னர் ஷாகஸ் நோயைப் பெற்றவர்களைப் பற்றி டாக்டர் எல். கே. ஆல்ட்மன் அறிக்கை செய்தார், அவர்களில் ஒருவர் இறந்தும்போனார். ஆல்ட்மன் எழுதியதாவது: “எத்தனையோ பேருக்கு அந்த நோய் இருப்பதே கண்டுபிடிக்கப்படாமல் போயிருக்கலாம். ஏனென்றால் [இங்குள்ள மருத்துவர்களுக்கு] ஷாகஸ் நோயைப் பற்றித் தெரியாது, அது இரத்தத்தின் மூலம் கடத்தப்படும் என்பதும் தெரியாது.” ஆம், இரத்தத்தின் மூலம் வியாதிகள் பல இடங்களுக்குக் கடத்தப்படுகிறது.

[பக்கம் 12-ன் பெட்டி]

டாக்டர் நட் லண்டு–ஒலெசன் இவ்வாறு எழுதினார்: “இரத்த தானம் செய்வதற்கு முன் எய்ட்ஸ் நோய் பரிசோதனை செய்யப்படுவதால், அந்நோயைப் பெற்றிருக்கும் வாய்ப்பு அதிகமுள்ள சிலர் இரத்த தானம் செய்ய முன்வருகின்றனர். ஆகவே இரத்தமேற்றிக் கொள்வதைப் பற்றி ஒரு தடவைக்குப் பல தடவை நாம் யோசிக்க வேண்டுமென நினைக்கிறேன். யெகோவாவின் சாட்சிகள் அநேக ஆண்டுகளாக இரத்தத்தை மறுத்து வந்திருக்கின்றனர். எதிர்காலத்தை முன்கூட்டியே அவர்கள் கணித்துவிட்டார்களோ?”​—⁠“உகெஸ்கிரிஃப்ட் ஃபார் லேகர்” (மருத்துவர்களுக்கான வார இதழ்), செப்டம்பர் 26, 1988.

[பக்கம் 9-ன் படம்]

துப்பாக்கியால் சுடப்பட்ட போப் உயிர் பிழைத்தார். குணமாகிய பிறகோ, மறுபடியும் இரண்டு மாதங்களுக்கு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, “படாத பாடுபட்டார்.” காரணம்? அவர் ஏற்றிக்கொண்ட இரத்தத்தில் உயிருக்கு உலை வைக்கும் சைட்டோமெகாலோ வைரஸ் தொற்று இருந்தது

[படத்திற்கான நன்றி]

UPI/Bettmann Newsphotos

[பக்கம் 12-ன் படம்]

எய்ட்ஸ் வைரஸ்

[படத்திற்கான நன்றி]

CDC, Atlanta, Ga.