இரத்தம்: யாருடைய தெரிவு, யாருடைய மனசாட்சி?
பிற்சேர்க்கை
இரத்தம்: யாருடைய தெரிவு, யாருடைய மனசாட்சி?
எழுதியவர்: ஜே. லோவெல் டிக்ஸன், M.D.
நியு யார்க் ஸ்டேட் மெடிக்கல் சொஸைட்டி காப்புரிமை பெற்ற நியு யார்க் ஸ்டேட் ஜர்னல் ஆஃப் மெடிஸின் அனுமதியுடன் மறு அச்சு செய்யப்பட்டுள்ளது; 1988; 88:463-464.
மருத்துவர்கள் தங்களுடைய அறிவையும் திறமைகளையும் அனுபவத்தையும் பயன்படுத்தி, நோயையும் மரணத்தையும் எதிர்த்துப் போராட தங்களையே அர்ப்பணித்திருக்கிறார்கள். ஆனால் சிபாரிசு செய்யப்படும் ஒரு சிகிச்சை முறையை நோயாளி மறுத்தால் என்ன செய்வது? அந்நோயாளி ஒரு யெகோவாவின் சாட்சியாக இருக்கலாம்; அதோடு இரத்தத்தையோ சிவப்பு இரத்த அணுக்களையோ பிளாஸ்மாவையோ பிளேட்லெட்களையோ பயன்படுத்தி அவருக்கு சிகிச்சையளிக்க மருத்துவர் விரும்பலாம்.
இரத்தமில்லாத சிகிச்சையை நோயாளி தேர்ந்தெடுப்பது தங்கள் கைகளைக் கட்டிப்போடுவதாக மருத்துவ பணியாளர்கள் உணரலாம். என்றாலும், யெகோவாவின் சாட்சிகளல்லாத நோயாளிகளும்கூட மருத்துவர் சிபாரிசு செய்யும் சிகிச்சையை அநேக சமயங்களில் தேர்ந்தெடுப்பதில்லை என்பதை ஒருவர் மறந்துவிடக் கூடாது. அப்பல்பாம் மற்றும் ராத்1 சொல்கிறபடி, மருத்துவக் கல்வி புகட்டப்படும் மருத்துவமனைகளில் 19% நோயாளிகள் ஏதாவது ஒரு வகை சிகிச்சையை அல்லது சிகிச்சை முறையை வேண்டாமென மறுத்தார்கள், “உயிருக்கு ஆபத்தானவையாக இருந்தபோதிலும்” 15% நோயாளிகள் அவ்வாறு மறுப்புத் தெரிவித்தார்கள்.
“எது நல்லதென்று டாக்டர்களுக்கு நன்றாக தெரியும்” என்ற பொதுவான கருத்து நிலவுவதால் அநேகர் மருத்துவருடைய திறமைக்கும் அறிவுக்கும் மதிப்புக் கொடுத்து இணங்கிவிடுகிறார்கள். ஆனால் இந்தக் கருத்து ஓர் அறிவியல் உண்மை என்பது போல நினைத்து நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்க மருத்துவர் முற்படுவது எத்தனை ஆபத்தானதாக இருக்கும். நாம் பெற்றுள்ள மருத்துவப் பயிற்சியும் உரிமமும் அனுபவமும் மருத்துவத் துறையில் நமக்குச் சிறந்த அனுகூலங்களைத் தருகின்றன என்பது உண்மைதான். என்றாலும், நோயாளிகளுக்கு உரிமைகள் இருக்கின்றன. அதோடு, நாம் அறிந்திருக்கிறபடி, உரிமைகளுக்குத்தான் சட்டம் (அரசியல் அமைப்புச் சட்டமும்கூட) அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது.
அநேக மருத்துவமனைகளின் சுவர்களில், “நோயாளியின் உரிமைகள் மசோதா” பார்வைக்கு வைக்கப்பட்டிருப்பதை ஒருவர் பார்க்கலாம். இந்த உரிமைகளில் ஒன்றுதான் நன்கு விஷயமறிந்து ஒப்புதல் அளித்தலாகும், இன்னும் திருத்தமாக சொன்னால், விஷயமறிந்து தெரிவு செய்தலாகும். பல்வேறு சிகிச்சைகளின் விளைவுகளை (அல்லது சிகிச்சை பெறாததால் வரும் விளைவுகளை) பற்றிய தகவல் நோயாளிக்கு அளிக்கப்பட்டபின், எந்தச் சிகிச்சையை ஏற்பது என்பதை அந்த நோயாளி தீர்மானிக்க வேண்டும். நியு யார்க்கில், பிராங்க்ஸிலுள்ள ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவமனையில், இரத்தமேற்றுதல் மற்றும் யெகோவாவின் சாட்சிகள் சம்பந்தமாக தயாரிக்கப்பட்ட ஒரு திட்டக் கொள்கை இவ்வாறு குறிப்பிட்டது: “வயதுவந்த எந்தவொரு நோயாளியும் சட்ட ரீதியில் ஊனமுற்றவராக இல்லாதிருந்தால், எந்தவொரு சிகிச்சையையும் மறுக்க அவருக்கு உரிமை உண்டு, அது உடல்நலத்திற்கு எவ்வளவு ஆபத்தாக இருந்தாலும் சரி.”2
நெறிமுறைகள் அல்லது சட்டப்பூர்வ கடமைகளைப் பற்றி மருத்துவர்கள் குரல் எழுப்பினாலும், நோயாளிகளின் தெரிவுக்குத்தான் நீதிமன்றங்கள் முக்கியத்துவம் கொடுத்திருக்கின்றன.3 நியு யார்க் மேல்முறையீட்டு நீதிமன்றம் இவ்வாறு குறிப்பிட்டது: “எந்தச் சிகிச்சை முறையை ஏற்பது என்பதைத் தீர்மானிக்கிற நோயாளியின் உரிமையே மிக முக்கியம். . . . தகுதிவாய்ந்த வயதுவந்த நோயாளி ஒருவர் குறிப்பிட்ட மருத்துவ சிகிச்சையை மறுக்க உரிமை பெற்றிருக்கிறார் என்பதால், அதை மதித்து செயல்படும் மருத்துவர் சட்டப்பூர்வமான அல்லது தொழில் ரீதியிலான உத்தரவாதங்களை மீறியதாக குற்றம் சாட்டப்பட முடியாது.”4 “மருத்துவப் பணி சார்ந்த நெறிமுறைகள் முக்கியமானவையாக இருந்தாலும், தனிப்பட்ட நபருடைய அடிப்படை உரிமைகளைவிட அதிக முக்கியத்துவத்தை அவை பெற முடியாது” என்றும் அந்த நீதிமன்றம் குறிப்பிட்டது. “ஒரு நிறுவனத்தின் தேவைகள் அல்ல, ஆனால் தனிநபருடைய உரிமைகளும் விருப்பங்களுமே முக்கியமானவை.”5
யெகோவாவின் சாட்சி ஒருவர் இரத்தத்தை மறுக்கும்போது, அதிகபட்ச மருத்துவ கவனிப்பைவிட குறைந்தபட்ச மருத்துவ கவனிப்பைக் கொடுக்கிறோமே என்ற உறுத்தல் மருத்துவர்களுக்கு ஏற்படலாம். என்றாலும், கடமையுணர்வுடன் பணிபுரியும் மருத்துவர்களிடம் யெகோவாவின் சாட்சிகள் கேட்பதெல்லாம், அந்தச் சூழ்நிலையில் முடிந்தவரை மிகச் சிறந்த மாற்று சிகிச்சையை அளிக்குமாறுதான். நாம் அநேக சந்தர்ப்பங்களில் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு சிகிச்சை முறையை மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது. உதாரணமாக, உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகையில், ஆன்டிபையாடிக் மருந்துகளால் கடுமையான அலர்ஜி ஏற்படுகையில், அல்லது விலையுயர்ந்த ஒரு சாதனம் கிடைக்காமல் போகையில் சிகிச்சையை மாற்றிக்கொள்கிறோம். யெகோவாவின் சாட்சிகள் விஷயத்தில், மருத்துவ அல்லது அறுவை சிகிச்சை சார்ந்த பிரச்சினையை நோயாளியின் தெரிவுக்கும் மனசாட்சிக்கும் இசைவாகவும், இரத்தத்திற்கு விலகியிருக்க வேண்டுமென்ற நெறிமுறைக்கு/மத நம்பிக்கைக்கு இசைவாகவும் கையாளும்படி மருத்துவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இரத்தமேற்ற வேண்டாம் என்ற வேண்டுகோளுக்கு இசைவாக மருத்துவர்கள் செயல்படுகையில் நல் மனசாட்சியோடும் சிறப்பாகவும் சிகிச்சை செய்ய முடியும் என்பதை யெகோவாவின் சாட்சிகளுக்குச் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை சம்பந்தமான எண்ணற்ற அறிக்கைகள் காட்டுகின்றன. உதாரணமாக, 1981-ல் கூலீ என்பவர் 1,026 இருதய நாளங்கள் சம்பந்தப்பட்ட அறுவை சிகிச்சைகளை ஆராய்ந்து பார்த்தார், இவற்றில் 22% சிறுவர்களுக்குச் செய்யப்பட்டது. “யெகோவாவின் சாட்சிகளுக்குச் செய்யப்பட்ட அறுவை சிகிச்சைகளில் இருந்த ஆபத்துகள், மற்றவர்களுக்குச் செய்யப்பட்ட அறுவை சிகிச்சைகளில் இருந்த ஆபத்துகளைவிட கணிசமானளவு குறைவாகவே இருந்தன”6 என்பதை அவர் உறுதி செய்தார். சாட்சிகளுக்குச் செய்யப்பட்ட பெரிய அறுவை சிகிச்சைகளைப் பற்றி கம்பொரிஸ்7 என்பவர் அறிக்கை செய்தார், அதாவது யெகோவாவின் சாட்சிகளில் சிலர் “இரத்தமேற்றிக்கொள்ள மறுத்ததால், அவசரமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டத்தில்கூட அவர்களுக்குச் சிகிச்சை மறுக்கப்பட்டுள்ளது.” அவர் இவ்வாறு கூறினார்: “அறுவை சிகிச்சை அறையில் என்ன சூழ்நிலை ஏற்பட்டாலும், நோயாளியின் மத நம்பிக்கைகள் மதிக்கப்படுமென சிகிச்சைக்கு முன் எல்லா நோயாளிகளுக்கும் உறுதி அளிக்கப்பட்டது.
இந்தக் கொள்கை சம்பந்தமாக எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை.”நோயாளி யெகோவாவின் சாட்சியாக இருந்தால், தெரிவு செய்யும் விஷயத்தைவிட மனசாட்சி முக்கிய இடம் பெறுகிறது. மருத்துவருடைய மனசாட்சியை மட்டுமே ஒருவர் நினைத்துப் பார்க்கக் கூடாது. நோயாளியின் மனசாட்சியைப் பற்றியென்ன? இரத்தத்தால் பிரதிநிதித்துவம் செய்யப்படும் உயிரைக் கடவுளிடமிருந்து வந்த பரிசாக யெகோவாவின் சாட்சிகள் கருதுகிறார்கள். கிறிஸ்தவர்கள் “இரத்தத்துக்கு விலகியிருக்க வேண்டும்” என்ற பைபிள் கட்டளையை அவர்கள் நம்புகிறார்கள். (அப்போஸ்தலர் 15:28, 29)8எனவே ஒரு மருத்துவர் அப்படிப்பட்ட நோயாளியின் உறுதியான, நீண்டகால மத நம்பிக்கையை மீறினால், விளைவு கவலைக்குரியதாக இருக்கலாம். மனசாட்சியை மீறும்படி ஒருவரை வற்புறுத்துவது “மனிதனுடைய கண்ணியத்திற்குக் கொடுக்கப்படும் வேதனைமிக்க பயங்கர அடியாக இருக்கும். ஒரு கருத்தில் பார்த்தால், அது மரணத்தைவிட அல்லது கொலையைவிட மோசமானது” என்று இரண்டாம் போப் ஜான் பால் கூறினார்.9
ஒருபுறத்தில் யெகோவாவின் சாட்சிகள் மத காரணங்களுக்காக இரத்தம் ஏற்றிக்கொள்ள மறுக்கிறார்கள், மறுபுறத்தில் யெகோவாவின் சாட்சிகள் அல்லாத நோயாளிகளில் அநேகர் எய்ட்ஸ், ஏ மற்றும் பி அல்லாத கல்லீரல் அழற்சி, நோய் காப்புத் திறன் சார்ந்த எதிர் பாதிப்புகள் போன்றவற்றின் காரணமாக இரத்தம் ஏற்றிக்கொள்ள மறுக்கிறார்கள். நன்மைகளோடு ஒப்பிடுகையில் இத்தகைய ஆபத்துகள் குறைவானதா என்பதன் பேரில் நமது கருத்துகளை சொல்லலாம். ஆனால் அமெரிக்க மருத்துவ சங்கம் குறிப்பிடுவது போல், “மருத்துவர் சிபாரிசு செய்யும் ஒரு சிகிச்சையின் அல்லது அறுவை சிகிச்சையின் சாதகங்களையும் பாதகங்களையும் எடைபோட்டு அதை ஏற்பதா அல்லது அதை தவிர்ப்பதால் வரும் ஆபத்துகளை ஏற்பதா என்று இறுதியில் தீர்மானிப்பது [நோயாளியே]. அதுதான் தனிப்பட்ட நபரின் இயல்பான உரிமை, சட்டமும்கூட இதை அங்கீகரிக்கிறது.”10
“இரத்தப்போக்கினால் மரணமே வந்தாலும் இரத்தம் ஏற்றிக்கொள்ளாத” ஒரு யெகோவாவின் சாட்சி சம்பந்தமாக ஆபத்து/நன்மை என்ற விவாதத்தை மக்லின்11 கொண்டுவந்தார். ஒரு மருத்துவ மாணவன் இவ்வாறு சொன்னான்: “அவருடைய சிந்திக்கும் திறமைகள் நல்ல நிலையில் இருந்தன. ஆனால் ஒரேவொரு சிகிச்சை முறையே செய்ய முடியும், அதுவோ மத நம்பிக்கைகளுக்கு எதிரானது என்ற நிலை ஏற்பட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்?” மக்லின் இவ்வாறு விவாதித்தார்: “அவர் தவறு செய்வதாக நாம் உறுதியாக நம்பலாம். ஆனால் இரத்தம் ஏற்றிக்கொள்வது . . . நித்திய அழிவில் விளைவடையலாம் என்று யெகோவாவின் சாட்சிகள் நம்புகிறார்கள். ஆபத்தை/நன்மையை எடைபோட்டு பார்க்கும்படி மருத்துவத்தில் நாம் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறோம், ஆனால் பூமியில் வாழப்போகும் எஞ்சியுள்ள நாட்களையும் நித்திய அழிவையும் எடை போட்டு பார்த்தால், நம் கருத்தை மறுபரிசீலனை செய்யத்தான் வேண்டும்.”11
நோயாளிகளைச் சார்ந்திருப்பவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதைச் சிறப்பித்துக் காட்ட ஜர்னல் இதழில் இன் ரெ ஆஸ்பார்ன் என்ற வழக்கு பற்றி வெர்சில்லோ மற்றும் டுப்ரே12 மேற்கோள் காட்டினார்கள், ஆனால் அந்த வழக்கு எப்படித் தீர்க்கப்பட்டது? அது இரண்டு சிறு பிள்ளைகளின் தகப்பனைப் பற்றியது, அவர் பலத்த காயம் அடைந்திருந்தார். அவர் இறந்துவிட்டால் பிள்ளைகளைப் பொருளாதார ரீதியிலும் ஆன்மீக ரீதியிலும் அவருடைய உறவினர்கள் கவனித்துக் கொள்வார்கள் என நீதிமன்றம் தீர்மானித்தது. எனவே, சமீபத்தில் நடந்த மற்ற வழக்குகளில்13 செய்தது போல, சிகிச்சை சம்பந்தமாக நோயாளியின் தெரிவை மீறி அரசாங்கம் செயல்படுவதை நியாயப்படுத்த எந்தவொரு பலமான காரணமும் இருப்பதாக நீதிமன்றம் காணவில்லை; அவர் உறுதியாக மறுக்கும் ஒரு சிகிச்சையை அளிக்குமாறு நீதிமன்றம் தீர்ப்பளிப்பது சட்டப்படி தவறானது.14 மாற்று சிகிச்சை பெற்ற அந்த நோயாளி குணமடைந்து தன் குடும்பத்தைத் தொடர்ந்து பராமரித்தார்.
பெரும்பாலான நோயாளிகளுக்கு இரத்தம் ஏற்றாமலேயே சிகிச்சை அளிக்க முடியும் என்பது மருத்துவர்கள் கண்டறிந்த உண்மை அல்லவா? நாம் கற்ற காரியங்களும் அறிந்த காரியங்களும் மருத்துவப் பிரச்சினைகள் சார்ந்தவை; ஆனால் நோயாளிகள் மனிதர்கள், அவர்களுடைய தனிப்பட்ட நெறிமுறைகளையும் இலட்சியங்களையும் அசட்டை செய்ய முடியாது. அவர்களுடைய தெரிவுகள், ஒழுக்கநெறிகள், மனசாட்சி ஆகியவற்றைப் பற்றி அவர்களே நன்கு அறிந்திருக்கிறார்கள்; அவையே அவர்களுடைய வாழ்க்கைக்கு அர்த்தமளிக்கின்றன.
யெகோவாவின் சாட்சியாக இருக்கும் நோயாளி ஒருவருடைய மதம் சார்ந்த மனசாட்சிக்கு மதிப்புக் கொடுப்பது நம் மருத்துவ திறமைகளுக்குச் சவாலாக இருக்கலாம். ஆனால் நாம் இந்தச் சவாலைச் சந்திக்கும்போது, அனைவருமே அருமையாக கருதும் மதிப்புமிக்க சுயாதீனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம். ஜான் ஸ்டுவார்ட் மில் சரியாகவே இவ்வாறு எழுதினார்: “மொத்தத்தில், இந்தச் சுயாதீனங்கள் மதிக்கப்படாத எந்தவொரு சமுதாயமும் சுதந்திரமாக இல்லை, எந்த வகை அரசாங்கம் ஆட்சி செய்தாலும் . . . ஆரோக்கியத்தை—உடல், மனம், ஆன்மீக ஆரோக்கியத்தை—காத்துக்கொள்வதற்கு அவரவரே உத்திரவாதமுள்ளவர். ஒவ்வொருவரும் தங்களுக்கு நல்லதாக தோன்றுகிற முறையில் மற்றவர்கள் வாழ வேண்டுமென வற்புறுத்தாமல், அவரவருக்கு நல்லதாக தோன்றுகிற முறையில் வாழ அனுமதித்தால் மனிதவர்க்கம் அதிக நன்மையடையும்.”15
[REFERENCES]
1. Appelbaum PS, Roth LH: Patients who refuse treatment in medical hospitals. JAMA 1983; 250:1296-1301.
2. Macklin R: The inner workings of an ethics committee: Latest battle over Jehovah’s Witnesses. Hastings Cent Rep 1988; 18(1):15-20.
3. Bouvia v Superior Court, 179 Cal App 3d 1127, 225 Cal Rptr 297 (1986); In re Brown, 478 So 2d 1033 (Miss 1985).
4. In re Storar, 438 NYS 2d 266, 273, 420 NE 2d 64, 71 (NY 1981).
5. Rivers v Katz, 504 NYS 2d 74, 80 n 6, 495 NE 2d 337, 343 n 6 (NY 1986).
6. Dixon JL, Smalley MG: Jehovah’s Witnesses. The surgical/ethical challenge. JAMA 1981; 246:2471-2472.
7. Kambouris AA: Major abdominal operations on Jehovah’s Witnesses. Am Surg 1987; 53:350-356.
8. Jehovah’s Witnesses and the Question of Blood. Brooklyn, NY, Watchtower Bible and Tract Society, 1977, pp 1-64.
9. Pope denounces Polish crackdown. NY Times, January 11, 1982, p A9.
10. Office of the General Counsel: Medicolegal Forms with Legal Analysis. Chicago, American Medical Association, 1973, p 24.
11. Kleiman D: Hospital philosopher confronts decisions of life. NY Times, January 23, 1984, pp B1, B3.
12. Vercillo AP, Duprey SV: Jehovah’s Witnesses and the transfusion of blood products. NY State J Med 1988; 88:493-494.
13. Wons v Public Health Trust, 500 So 2d 679 (Fla Dist Ct App) (1987); Randolph v City of New York, 117 AD 2d 44, 501 NYS 2d 837 (1986); Taft v Taft, 383 Mass 331, 446 NE 2d 395 (1983).
14. In re Osborne, 294 A 2d 372 (DC Ct App 1972).
15. Mill JS: On liberty, in Adler MJ (ed): Great Books of the Western World. Chicago, Encyclopaedia Britannica, Inc, 1952, vol 43, p 273.