Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உயிர்களை உண்மையிலேயே காப்பாற்றும் இரத்தம்

உயிர்களை உண்மையிலேயே காப்பாற்றும் இரத்தம்

உயிர்களை உண்மையிலேயே காப்பாற்றும் இரத்தம்

இதுவரை பார்த்த விஷயங்களிலிருந்து சில குறிப்புகள் தெளிவாகத் தெரிகின்றன. இரத்தமேற்றுவது உயிர் காக்கும் எனப் பெரும்பாலோர் நினைக்கிறபோதிலும் அது ஆபத்து நிறைந்தது. இரத்தமேற்றுவதால் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கானோர் இறந்துபோகிறார்கள்; இன்னும் அநேகர் அதிக நோய்வாய்ப்பட்டு நீடித்த பின்விளைவுகளை எதிர்ப்படுகிறார்கள். ஆகவே, உடல் ரீதியில் பார்த்தாலும்கூட, ‘இரத்தத்திற்கு விலகியிருக்கும்படி’ பைபிள் கொடுக்கும் கட்டளைக்குச் செவிசாய்ப்பது இப்பொழுதேகூட ஞானமான ஒரு காரியமாகும்.​—அப்போஸ்தலர் 15:28, 29.

இரத்தமில்லாத சிகிச்சையை நோயாளிகள் தெரிவு செய்யும்போது அநேக ஆபத்துகளிலிருந்து பாதுகாக்கப்படுகிறார்கள். யெகோவாவின் சாட்சிகளுக்கு இரத்தமின்றி சிகிச்சை அளிக்கும் சவாலை ஏற்றுக்கொண்டிருக்கும் திறமைமிக்க மருத்துவர்கள் பாதுகாப்பானதும் பலனளிப்பதுமான ஒரு சிகிச்சை முறையை கண்டுபிடித்திருக்கிறார்கள்; இது எண்ணற்ற மருத்துவ அறிக்கைகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இரத்தமின்றி தரமான கவனிப்பைத் தரும் மருத்துவர்கள் உயர்ந்த மருத்துவ விதிமுறைகளை விட்டுக்கொடுத்து விடுவதில்லை. மாறாக, ஆபத்துகளையும் நன்மைகளையும் தெரிந்துகொள்வதற்குரிய ஒரு நோயாளியின் உரிமைக்கு மதிப்பு கொடுக்கிறார்கள்; இதனால் தன் உடலுக்கும் உயிருக்கும் என்ன ஆகும் என்பதை ஒரு நோயாளியால் நன்கு அறிந்துகொண்டு தீர்மானமெடுக்க முடிகிறது.

இந்த விஷயத்தில் நாம் பேதைகள் அல்ல, ஏனென்றால் இந்தச் சிகிச்சை முறையை எல்லாரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். மனசாட்சி, நெறிமுறைகள், மருத்துவ கண்ணோட்டம் ஆகியவை நபருக்கு நபர் வேறுபடுகின்றன. ஆகவே, இரத்தத்திலிருந்து விலகியிருப்பதற்கு ஒரு நோயாளி எடுக்கும் தீர்மானத்தை ஏற்றுக்கொள்வது மற்றவர்களுக்கும் சில மருத்துவர்களுக்கும் கடினமாக இருக்கலாம். நியு யார்க்கைச் சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் இவ்வாறு எழுதினார்: “15 வருஷங்களுக்கு முன், குடல் புற்றுநோயினால் இரத்தப்போக்கு ஏற்பட்டு மரித்த ஒரு யெகோவாவின் சாட்சியுடைய படுக்கையின் பக்கத்தில், தேர்ச்சிபெற்ற ஓர் இளம் மருத்துவனாக நின்றுகொண்டிருந்த சமயத்தை என்னால் மறக்கவே முடியாது. அந்த நோயாளியின் விருப்பங்களுக்கு மதிப்பு கொடுக்கப்பட்டது, அவருக்கு இரத்தம் ஏற்றப்படவில்லை, ஆனால் ஒரு மருத்துவனாக எனக்கு ஏற்பட்ட பயங்கர விரக்தியை இன்றும் என்னால் நினைவுகூர முடிகிறது.”

இரத்தம் உயிரைக் காப்பாற்றியிருக்கும் என அவர் நம்பினார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவர் இதை எழுதி ஓராண்டுக்குப் பின், தி பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் சர்ஜரி (அக்டோபர் 1986) இவ்வாறு அறிவித்தது: இரத்தமேற்றும் முறை கண்டுபிடிக்கப்படுவதற்கு முன் குடலில் ஏற்படும் இரத்தப்போக்கினால் “2.5 சதவீதத்தினரே மரித்தனர்.” இரத்தமேற்றுவது சர்வசாதாரண பழக்கமாக மாறிய பிறகு, ‘10 சதவீத மரணம் ஏற்பட்டதாக மிகப் பெரிய ஆராய்ச்சிகள் அறிவிக்கின்றன.’ ஏன் இறப்பு வீதம் நான்கு மடங்கு அதிகமானது? ஆராய்ச்சியாளர்கள் இவ்வாறு கருத்துத் தெரிவித்தனர்: “ஆரம்ப நிலையில் இரத்தமேற்றுவது இரத்தம் உறைவதைத் தடுத்து, மீண்டும் இரத்தப்போக்கு ஏற்படுவதை அதிகரிப்பதாக தெரிகிறது.” அந்த யெகோவாவின் சாட்சிக்கு இரத்தப்போக்கு ஏற்பட்டபோது, அவர் இரத்தம் ஏற்றிக்கொள்ளாதது அவர் உயிர்பிழைக்கும் வாய்ப்பை உண்மையில் அதிகப்படுத்தியது என்றே சொல்லலாம்.

அதே அறுவை சிகிச்சை நிபுணர் மேலும் கூறினார்: “காலம் கடந்து செல்லச் செல்லவும், இன்னும் அநேக நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க அளிக்கவும் ஒருவருடைய எண்ணம் மாறலாம். இப்போது என்னைப் பொறுத்தவரை, புதிய மருத்துவ நுட்பங்களைவிட நோயாளிக்கும் மருத்துவருக்கும் இடையிலான நம்பிக்கையும், நோயாளியின் விருப்பங்கள் மதிக்கப்பட வேண்டிய கடமையும் அதிமுக்கியம் என்பதை உணருகிறேன். . . . அப்போது ஏற்பட்ட விரக்தி மறைந்துபோய், இப்போது அந்த நோயாளியின் உறுதியான விசுவாசத்தைக் கண்டு பிரமிப்பும் மதிப்புமே உண்டாயிருக்கிறது.” அந்த மருத்துவர் இவ்வாறு முடித்தார்: ‘என்னுடைய உணர்வுகள் எதுவாக இருந்தாலும்சரி, அல்லது விளைவுகள் என்னவாக இருந்தாலும்சரி, ஒரு நோயாளியின் தனிப்பட்ட விருப்பங்களையும் மத விருப்பங்களையும் எல்லா சமயத்திலும் மதிக்க வேண்டும் என்பதை அது எனக்கு நினைப்பூட்டுகிறது.’

“காலம் கடந்து செல்லச் செல்லவும், இன்னும் அநேக நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க அளிக்கவும்” பெரும்பாலான மருத்துவர்கள் எதைப் புரிந்துகொண்டார்களோ அதை நீங்கள் இப்போதே புரிந்துகொள்ளத் தொடங்கியிருக்கலாம். எவ்வளவு நல்ல ஆஸ்பத்திரிகளில் எவ்வளவு சிறந்த மருத்துவ கவனிப்பு கொடுக்கப்பட்டாலும், ஒரு கட்டத்தில் ஆட்கள் இறந்துவிடுகிறார்கள். இரத்தமேற்றினாலும் சரி இரத்தமேற்றாவிட்டாலும் சரி, அவர்கள் இறந்துவிடுகிறார்கள். நம் எல்லாருக்குமே வயதாகிக் கொண்டிருக்கிறது, முடிவு நெருங்கிக் கொண்டிருக்கிறது. இது விதியில் நம்பிக்கை வைப்பதாக அர்த்தமாகாது. மாறாக, இது எதார்த்தம். ஆம், இறப்பு என்பது வாழ்க்கையின் நிஜம்.

இரத்தம் சம்பந்தமாக கடவுளுடைய சட்டத்தை அசட்டை செய்கிறவர்கள் உடனடியாகவோ சிலகாலம் கழித்தோ கஷ்டப்படுகிறார்கள், இரத்தமேற்றியதால் சிலர் இறந்தும் விடுகிறார்கள் என்பதை அத்தாட்சி காட்டுகிறது. உயிர் பிழைப்பவர்களும்கூட நித்திய காலம் வாழ்ந்ததில்லை. ஆகவே இரத்தமேற்றுவது உயிரை நிரந்தரமாக பாதுகாப்பதில்லை.

மத மற்றும்/அல்லது மருத்துவக் காரணங்களால் இரத்தமேற்றிக் கொள்ளாமல், மாற்றுவகை சிகிச்சையை ஏற்றுக்கொள்கிறவர்கள் நன்றாக இருக்கிறார்கள். இவ்வாறு அவர்கள் இன்னும் சில ஆண்டுகளுக்கு உயிர் வாழ்கிறார்கள். ஆனால் நித்திய காலத்திற்கு அல்ல.

எல்லாரும் அபூரணர்களாக இருக்கிறார்கள், படிப்படியாக மரித்துப்போகிறார்கள் என்ற விஷயம், இரத்தத்தைப் பற்றி பைபிள் சொல்கிற முக்கியமான உண்மைக்கு நம் கவனத்தைத் திருப்புகிறது. இந்த உண்மையைப் புரிந்துகொண்டு அதை மதித்தால், இரத்தம் எவ்வாறு உயிரை​—⁠நம்முடைய உயிரை​—⁠நிரந்தரமாக காக்கும் என்பதை நாம் காண்போம்.

உயிர் காக்கும் ஒரே இரத்தம்

முன்பு குறிப்பிடப்பட்டபடி, இரத்தத்தைப் புசிக்கக் கூடாதென முழு மனிதகுலத்திற்கும் கடவுள் சொன்னார். ஏன்? ஏனென்றால் இரத்தம் உயிரை பிரதிநிதித்துவம் செய்கிறது. (ஆதியாகமம் 9:3-6) இஸ்ரவேலருக்குக் கொடுத்த நியாயப்பிரமாணச் சட்டத்தில் இதை இன்னும் கூடுதலாக விளக்கினார். அந்தச் சட்டம் அதிகாரப்பூர்வமாக ஆக்கப்பட்டபோது பலி செலுத்தப்பட்ட மிருகங்களின் இரத்தம் பலிபீடத்தில் ஊற்றப்பட்டது. (யாத்திராகமம் 24:3-8) எல்லா மனிதரும் அபூரணர்கள், அல்லது பைபிள் சொல்கிறபடி பாவிகள் என்ற உண்மையை அந்தச் சட்டங்கள் எடுத்துக்காட்டின. தமக்கு மிருக பலிகளைச் செலுத்துவதன் மூலமே இஸ்ரவேலர் தங்களுடைய பாவங்களுக்குப் பாவநிவிர்த்தி தேவை என்பதை உணர்ந்துகொள்ள முடியுமென கடவுள் கூறினார். (லேவியராகமம் 4:4-7, 13-18, 22-30) அன்று அவர்களிடம் கடவுள் அதைத்தான் கேட்டார், ஆனால் இன்று மெய்க் கிறிஸ்தவர்களிடம் அத்தகைய மிருக பலிகளை அவர் கேட்பதில்லை. என்றாலும், அது இப்போது நமக்கு மிகவும் முக்கியமான அர்த்தமுடையது.

அந்தப் பலிகளின் முக்கியமான நியமத்தைக் கடவுளே விளக்கினார்: “மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது; நான் அதை உங்களுக்குப் பலிபீடத்தின் மேல் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்குக் கட்டளையிட்டேன்; ஆத்துமாவிற்காகப் பாவநிவிர்த்தி செய்கிறது இரத்தமே. அதினிமித்தம் உங்களில் ஒருவனும் இரத்தம் புசிக்க வேண்டாம் . . . என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்னேன்.”​—லேவியராகமம் 17:11, 12.

பாவநிவர்த்தி நாள் என்ற பூர்வகால பண்டிகையின்போது, பலியிடப்பட்ட மிருகங்களின் இரத்தத்தை கடவுளுடைய வணக்கத்தின் மையமாக இருந்த ஆலயத்தின் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் இஸ்ரவேலின் பிரதான ஆசாரியர் கொண்டு செல்வார். இது ஜனங்களுடைய பாவங்களை மூடுமாறு கடவுளிடம் கேட்பதற்கு ஓர் அடையாளமாக இருந்தது. (லேவியராகமம் 16:3-6, 11-16) அந்தப் பலிகள் உண்மையில் எல்லா பாவங்களையும் நீக்கிவிடவில்லை, ஆகவே அவற்றை ஒவ்வொரு ஆண்டும் திரும்பத் திரும்ப செலுத்த வேண்டியிருந்தது. என்றாலும், இப்படி இரத்தத்தைப் பயன்படுத்தியது ஓர் அர்த்தமுள்ள முறைமைக்கு மாதிரியாக இருந்தது.

எல்லா விசுவாசிகளுடைய பாவங்களையும் முழுமையாக நிவிர்த்தி செய்யும் ஒரேவொரு பரிபூரண பலியைக் கடவுள் தருவார் என்பதே பைபிளின் மிக முக்கிய போதனை. இதுவே மீட்கும்பொருள் என அழைக்கப்படுகிறது, முன்னறிவிக்கப்பட்ட மேசியாவின், அதாவது கிறிஸ்துவின் பலி மீது இது கவனத்தை ஒருமுகப்படுத்துகிறது.

பாவநிவிர்த்தி நாளில் செய்யப்பட்டதையும் மேசியா வகிக்கும் பாகத்தையும் ஒப்பிட்டு பைபிள் இவ்வாறு கூறுகிறது: ‘கிறிஸ்துவானவர் வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியராய் வெளிப்பட்டு, கையினால் செய்யப்பட்டதாகிய . . . கூடாரத்தின் வழியாக அல்ல, பெரிதும் உத்தமமுமான [ஆலயத்தின்] வழியாகவும், வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரே தரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே [அதாவது பரலோகத்திலே] பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார். நியாயப்பிரமாணத்தின்படி கொஞ்சங்குறைய எல்லாம் இரத்தத்தினாலே சுத்திகரிக்கப்படும்; இரத்தஞ் சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது.’​—எபிரெயர் 9:11, 12, 22.

இரத்தம் சம்பந்தமாக நமக்கு கடவுளுடைய கண்ணோட்டம் ஏன் அவசியம் என்பது தெளிவாகிறது. இரத்தத்தின் பிரத்தியேக பயனை தீர்மானிக்கும் உரிமை படைப்பாளருக்கு இருப்பதால் அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை அவரே தீர்மானித்திருக்கிறார். மிருக அல்லது மனித இரத்தத்தைப் புசிக்காததன் மூலம் பூர்வ இஸ்ரவேலர் உடல் ஆரோக்கியத்தைப் பெற்றிருக்கலாம், ஆனால் அது மிக முக்கியமான விஷயம் அல்ல. (ஏசாயா 48:17) இரத்தத்தைப் புசிப்பது ஆரோக்கியமற்றது என்பதற்காக அல்ல, ஆனால் அப்படி புசிப்பதைப் பரிசுத்தக் குலைச்சலாக கடவுள் கருதினார் என்பதால் அதை அவர்கள் தவிர்க்க வேண்டியிருந்தது. மன்னிப்பைப் பெற்றுத் தருவதில் அது விலையேறப் பெற்றதாக இருந்ததன் காரணமாகவே இரத்தத்திலிருந்து அவர்கள் விலகியிருக்க வேண்டியிருந்தது, அது மாசுபட்டிருந்தது என்பதற்காக அல்ல.

மீட்கும் பலியைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு விளக்கினார்: ‘அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே இவருடைய [கிறிஸ்துவுடைய] இரத்தத்தினாலே பாவ மன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது.’ (எபேசியர் 1:7) அங்கே காணப்படும் மூல கிரேக்க வார்த்தை “இரத்தத்தினாலே” எனச் சரியாகவே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, ஆனால் அநேக பைபிள் மொழிபெயர்ப்புகள் அதற்குப் பதிலாக ‘மரணத்தினாலே’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றன. இதன் காரணமாக, இரத்தத்தைப் பற்றியும் அதோடு அவர் தொடர்புபடுத்திய பலியின் மதிப்பைப் பற்றியும் நமது படைப்பாளரின் கண்ணோட்டத்தை வாசகர்கள் தவறவிட்டு விடுகின்றனர்.

பரிபூரண மீட்கும் பலியாக கிறிஸ்து மரித்தாலும் அவர் மரித்த நிலையிலேயே இருந்துவிடவில்லை என்ற உண்மையைச் சுற்றியே பைபிளின் கருப்பொருள் அமைந்திருக்கிறது. பாவநிவிர்த்தி நாளில் கடவுள் வைத்த முறைமையைப் பின்பற்றி, “நமக்காக தேவனுடைய சமுகத்தில் பிரத்தியட்சமாகும்படி” பரலோகத்திற்கு இயேசு உயிர்த்தெழுப்பப்பட்டார். அங்கே தமது பலிக்குரிய இரத்தத்தின் மதிப்பைக் கடவுளிடம் செலுத்தினார். (எபிரெயர் 9:24) ‘தேவனுடைய குமாரனைக் காலின்கீழ் மிதிப்பதற்கும், அவருடைய இரத்தத்தைச் சாதாரணமாக கருதுவதற்கும்’ சமமான எந்தவொரு செயலையும் நாம் தவிர்க்க வேண்டும் என பைபிள் வலியுறுத்துகிறது. இவ்வாறு தவிர்த்தால்தான் கடவுளுடன் நல்ல உறவையும் சமாதானத்தையும் நம்மால் காத்துக்கொள்ள முடியும்.​—எபிரெயர் 10:29, NW; கொலோசெயர் 1:⁠20.

இரத்தத்தால் காக்கப்படும் உயிரை அனுபவித்து மகிழுங்கள்

இரத்தத்தைப் பற்றி கடவுள் சொல்வதை நாம் புரிந்துகொள்ளும்போது, உயிர் காக்கும் அதன் மதிப்பிற்குப் பெரிதும் போற்றுதல் காண்பிக்க ஆரம்பிக்கிறோம். ‘நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களிலிருந்து நம்மை விடுவித்தவரே’ கிறிஸ்து என பைபிள் விவரிக்கிறது. (வெளிப்படுத்துதல் 1:5, NW; யோவான் 3:16) ஆம், இயேசுவின் இரத்தத்தால் நாம் முழுமையாகவும் நிரந்தரமாகவும் பாவங்களிலிருந்து மன்னிப்பைப் பெற முடியும். அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.” ஆகவே, இப்படிப்பட்ட இரத்தத்தால்தான் என்றென்றும் நமது ஜீவன் காக்கப்படும்.​—ரோமர் 5:9; எபிரெயர் 9:⁠14.

கிறிஸ்துவின் மூலம் “பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும்” என்று யெகோவா தேவன் வெகு காலத்திற்கு முன்பே உறுதியளித்தார். (ஆதியாகமம் 22:18) இந்தப் பூமியை பூங்காவனம் போன்ற ஒரு பரதீஸாக மாற்றுவதும் அந்த ஆசீர்வாதத்தில் அடங்கும். விசுவாசம் வைக்கிற மனிதர்கள் அப்போது நோயினாலோ முதுமையினாலோ, ஏன் மரணத்தினாலோகூட பாதிக்கப்பட மாட்டார்கள். மருத்துவ நிபுணர்கள் இப்பொழுது நமக்கு அளிக்கிற தற்காலிக உதவியைவிட மேலான ஆசீர்வாதங்களை அவர்கள் அனுபவித்து மகிழுவார்கள். “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின” என்ற மகத்தான வாக்குறுதி நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது.​—வெளிப்படுத்துதல் 21:⁠4.

அப்படியானால், கடவுளுடைய தராதரங்கள் அனைத்திற்கும் கவனம் செலுத்துவது எவ்வளவு ஞானமான செயல்! மருத்துவக் காரணங்களுக்காகக்கூட இரத்தத்தை ஏற்றுக்கொள்ளாமல் அதன் சம்பந்தமாக கடவுள் கொடுத்த கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதும் அவற்றில் அடங்கும். இவ்வாறு நாம் தற்காலிக வாழ்க்கைக்கு மட்டுமே வாழ்பவர்களாய் இருக்க மாட்டோம். மாறாக, உயிருக்கும் என்றென்றும் பரிபூரணமாக வாழப்போகிற எதிர்கால வாழ்க்கைக்கும் உயர்ந்த மதிப்பு காட்டுபவர்களாய் இருப்போம்.

[பக்கம் 25-ன் பெட்டி]

கடவுளுடைய ஜனங்கள் தங்களுடைய உயிரைக் காப்பாற்றுவதற்கு இரத்தத்தை ஏற்க மறுத்தார்கள்; உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பதால் அல்ல, ஆனால் அப்படிச் செய்வது பரிசுத்தமற்றது என்பதால் அதை மறுத்தார்கள்; இரத்தம் அசுத்தமானது என்பதால் அல்ல, ஆனால் அது விலைமதிப்புள்ளது என்பதால் அதை மறுத்தார்கள்.

[பக்கம் 24-ன் படம்]

‘[இயேசுவுடைய] இரத்தத்தினாலே பாவ மன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது.’​—⁠எபேசியர் 1:7

[பக்கம் 26-ன் படம்]

இயேசுவின் இரத்தத்தால் உயிரைக் காப்பது பூமிக்குரிய பரதீஸில் முடிவில்லா வாழ்க்கைக்கு, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழியைத் திறக்கிறது