Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தேர்ந்தெடுக்கும் உரிமை உங்களுக்கு இருக்கிறது

தேர்ந்தெடுக்கும் உரிமை உங்களுக்கு இருக்கிறது

தேர்ந்தெடுக்கும் உரிமை உங்களுக்கு இருக்கிறது

இரத்தமின்றி சிகிச்சை அளிக்க நவீன மருத்துவ அணுகுமுறை ஒன்று (ஆபத்துகளை/நன்மைகளை ஆராயும் முறை) டாக்டர்களுக்கும் நோயாளிகளுக்கும் உதவியாக உள்ளது. ஒரு மருந்தினால் அல்லது அறுவை சிகிச்சையினால் உண்டாகும் ஆபத்துகளையும் நன்மைகளையும் டாக்டர்கள் எடைபோட்டுப் பார்க்கிறார்கள். நோயாளிகளும்கூட இந்த ஆராய்ச்சியில் பங்குகொள்ளலாம்.

எளிதாக புரிந்துகொள்ளக்கூடிய ஓர் உதாரணத்தை இப்போது கவனிக்கலாம். உங்களுக்கு நாள்பட்ட டான்ஸில் (tonsil) பிரச்சினை இருப்பதாக வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் என்ன செய்வீர்கள்? டாக்டரைப் போய்ப் பார்ப்பீர்கள். சொல்லப்போனால், இரண்டு டாக்டர்களைக்கூட நீங்கள் போய் பார்க்கலாம். ஏனென்றால் இன்னொருவருடைய அபிப்பிராயத்தையும் அறிந்துகொள்வது நல்லது என உடல்நல நிபுணர்கள் சொல்கிறார்கள். அதில் ஒரு டாக்டர் அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென சொல்லலாம். ஆஸ்பத்திரியில் எத்தனை நாட்கள் தங்க வேண்டும், எந்தளவு வலி இருக்கும், எவ்வளவு பணம் செலவாகும் ஆகியவற்றையெல்லாம் அவர் விளக்கலாம். ஆபத்துகளைப் பொறுத்தவரை, கடுமையான இரத்தப்போக்கு ஏற்பட அதிக வாய்ப்பில்லை, இந்த அறுவை சிகிச்சையால் மரணம் ஏற்படுவது வெகு அபூர்வம் என்று அவர் சொல்லலாம். ஆனால் இன்னொரு டாக்டரோ ஆன்டிபையாட்டிக் சிகிச்சை முறையை சிபாரிசு செய்யலாம். என்ன வகை மருந்து சாப்பிட வேண்டும், அதனால் என்ன பலன், இதற்கு எவ்வளவு செலவாகும் என்று அவர் விளக்கலாம். இந்த மருந்து சாப்பிட்டு வெகு சிலருக்குத்தான் உயிருக்கு ஆபத்தான அலர்ஜிகள் உண்டாகின்றன என்றும் அவர் கூறலாம்.

கைதேர்ந்த அந்த இரு மருத்துவர்களுமே ஆபத்துகளையும் நன்மைகளையும் சிந்தித்துப் பார்த்திருக்கலாம்; ஆனால் இப்பொழுது நீங்கள் அந்த ஆபத்துகளையும் நன்மைகளையும் உங்களுக்கு நன்றாகத் தெரிந்த பிற காரணிகளையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். (உணர்ச்சி ரீதியில் அல்லது ஆன்மீக ரீதியில் உங்களுடைய பலம், குடும்பத்தின் நிதி நிலைமை, குடும்பத்தார் மீது ஏற்படும் பாதிப்பு, உங்களுடைய சொந்த நெறிமுறைகள் ஆகியவற்றை உங்களால்தான் நன்றாக சிந்தித்துப் பார்க்க முடியும்.) பிறகு தீர்மானம் எடுக்கிறீர்கள். அறிவுப்பூர்வமாக தீர்மானமெடுத்த பிறகு ஒருவகை சிகிச்சைக்கு ஒப்புதல் தெரிவிக்கிறீர்கள், மற்றொன்றை விலக்கிவிடுகிறீர்கள்.

உங்கள் பிள்ளைக்கு டான்ஸில் வந்திருந்தாலும் இப்படித்தான் செய்வீர்கள். ஆபத்துகள், நன்மைகள், சிகிச்சை முறைகள் ஆகியவற்றைப் பற்றி அன்பான பெற்றோராகிய உங்களிடம் சொல்லப்படும்; ஏனென்றால் நேரடியாக பாதிக்கப்படப் போகிறவர்கள் நீங்கள்தான், அதன் விளைவுகளைச் சமாளிக்கும் உத்தரவாதமும் உங்களுக்குத்தான் இருக்கிறது. எல்லா அம்சங்களையும் சிந்தித்துப் பார்த்த பிறகு, உங்களுடைய பிள்ளையின் ஆரோக்கியத்தையும் உயிரையும் உட்படுத்துகிற இந்த விஷயத்தில், நீங்கள் நன்கு விஷயமறிந்து தீர்மானம் எடுக்கலாம். அறுவை சிகிச்சை செய்வதால் வரும் ஆபத்துகளைத் தெரிந்தே நீங்கள் அதற்கு ஒப்புதல் அளிக்கலாம். வேறுசில பெற்றோர்களோ, ஆன்டிபையாட்டிக் சிகிச்சையைத் தேர்ந்தெடுப்பதால் வரும் ஆபத்துகளைத் தெரிந்தே அதற்கு ஒப்புதல் அளிக்கலாம். ஆலோசனை கொடுப்பதில் மருத்துவர்கள் எப்படி வித்தியாசப்படுகிறார்களோ அது போலத்தான் மிகச் சிறந்ததை தீர்மானிக்கும் விஷயத்தில் நோயாளிகள் அல்லது பெற்றோர்கள் வித்தியாசப்படுகிறார்கள். நன்கு விஷயமறிந்து (அதாவது ஆபத்துகளை/நன்மைகளை நன்கு அறிந்து) தீர்மானம் எடுப்பதில் இது எதிர்பார்க்கத்தக்கதே.

இரத்தம் உபயோகிப்பதைப் பற்றியென்ன? இரத்தம் ஏற்றிக்கொள்வது பேராபத்தானது என்பதை உண்மைகளை எதார்த்தமாக ஆராய்கிற எவராலும் மறுக்க முடியாது. மாஸசூஸெட்ஸ் ஜெனரல் மருத்துவமனையில் இரத்தமேற்றுதல் பிரிவில் இயக்குநராக பணிபுரியும் டாக்டர் சார்ல்ஸ் ஹக்கின்ஸ் இதைத் தெள்ளத் தெளிவாக்கினார்: “இரத்தம் முன்னொருபோதும் இந்தளவு பாதுகாப்பானதாக இருந்ததில்லை. ஆனால் அது நிச்சயம் ஆபத்தானது என்றே கருதப்பட வேண்டும். மருத்துவத்தில் நாம் பயன்படுத்தும் பொருட்களில் அதுவே மிக மிக ஆபத்தானது.”​—⁠தி போஸ்டன் குளோப் மேகஸின், பிப்ரவரி 4, 1990.

நல்ல காரணத்தோடுதான் மருத்துவ துறையினருக்கு இவ்வாறு அறிவுரை கொடுக்கப்பட்டுள்ளது: “இரத்தமேற்றுவது சம்பந்தமான நன்மை/ஆபத்து பரிசீலனையில் ஆபத்தை மறு பரிசீலனை செய்வதும் மாற்று சிகிச்சை முறைகளை நாடுவதும் அவசியம்.” (நேரெழுத்துக்கள் எங்களுடையவை.)​—⁠பெரிஆப்பரேட்டிவ் ரெட் செல் டிரான்ஸ்ஃபியூஷன், தேசிய உடல்நல நிறுவனங்கள் மாநாடு, ஜூன் 27–29, 1988.

இரத்தமேற்றுவதில் உட்பட்டுள்ள நன்மைகளை அல்லது ஆபத்துகளைப் பற்றி மருத்துவர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு இருக்கலாம். ஒரு மருத்துவர் பல நோயாளிகளுக்கு இரத்தம் ஏற்றியிருக்கலாம். அதனால் ஆபத்துகளைவிட நன்மைகளே அதிகம் என அவர் உறுதியாக நம்பலாம். வேறொருவரோ அந்த ஆபத்துகளை வீணாக வரவழைக்கக் கூடாது என உணரலாம், ஏனென்றால் இரத்தமின்றி சிகிச்சை அளித்ததில் நல்ல பலன்களை அவர் பெற்றிருக்கலாம். என்றாலும், கடைசியில் தீர்மானிக்க வேண்டியது நீங்களே​—⁠நோயாளியாக இருந்தாலும் சரி, பெற்றோராக இருந்தாலும் சரி. ஆனால், நீங்கள் ஏன் தீர்மானிக்க வேண்டும்? ஏனென்றால் உங்களுடைய (அல்லது உங்கள் பிள்ளையுடைய) உடல், உயிர், நெறிமுறைகள், முக்கியமாக கடவுளோடுள்ள உறவு ஆகியவை அதில் உட்பட்டுள்ளன.

உங்களுடைய உரிமை மதிக்கப்படுகிறது

இன்று பெரும்பாலான நாடுகளில், எந்தச் சிகிச்சை முறை வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமை நோயாளிக்குக் கொடுக்கப்படுகிறது. “நன்கு விஷயமறிந்து ஒப்புதல் அளித்தல் என்ற சட்டம் இரண்டு அம்சங்களை அடிப்படையாக கொண்டுள்ளது: முதலாவது, சிபாரிசு செய்யப்படுகிற சிகிச்சை முறையைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில், ஒரு நோயாளி நன்கு விஷயமறிந்து தீர்மானம் எடுப்பதற்குப் போதிய தகவலைப் பெற்றுக்கொள்ளும் உரிமை இருக்கிறது; இரண்டாவது, மருத்துவர் பரிந்துரைக்கும் சிகிச்சை முறையை அந்த நோயாளி ஏற்றுக்கொள்ளலாம் அல்லது ஒதுக்கிவிடலாம். . . . குறிப்பிட்ட ஒரு சிகிச்சை முறையை மறுக்கும், ஒப்புக்கொள்ளும், அல்லது சில நிபந்தனைகளோடு ஒப்புக்கொள்ளும் உரிமை நோயாளிகளுக்கு இருப்பது மதிக்கப்படவில்லை என்றால், நன்கு விஷயமறிந்து ஒப்புதல் அளித்தல் என்பதற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும்.”​—⁠தகவலறிந்து ஒப்புதல்​—⁠சட்டக் கோட்பாடும் மருத்துவ பழக்கமும் (ஆங்கிலம்), 1987. a

சில நோயாளிகள் தங்களுடைய உரிமையைப் பிரயோகிக்க முடியாதபடி தடுக்கப்பட்டிருக்கிறார்கள். டான்ஸிலுக்கு அறுவை சிகிச்சை செய்வது அல்லது ஆன்டிபையாட்டிக் மருந்துகளைப் பயன்படுத்துவது சம்பந்தமாக விடாப்பிடியான கருத்தையுடைய நண்பர் ஒருவரிடமிருந்து எதிர்ப்பு வந்திருக்கலாம். அல்லது தான் கொடுத்த அறிவுரையே மிகச் சிறந்தது என ஒரு டாக்டர் அடித்துக் கூறியிருக்கலாம். சட்டத்தின் அடிப்படையில் அல்லது பண விவகாரத்தின் அடிப்படையில் மருத்துவமனை அதிகாரிகூட கருத்து வேறுபாடு உடையவராக இருந்திருக்கலாம்.

“எலும்பு முறிவு நிபுணர்கள் பலர் [யெகோவாவின் சாட்சிகளான] நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்வதில்லை” என டாக்டர் கார்ல் எல். நெல்சன் கூறுகிறார். “எந்தவொரு மருத்துவ சிகிச்சை முறையையும் வேண்டாம் என்று மறுப்பதற்கான உரிமை நோயாளிக்கு இருக்கிறது என்பது எங்களுடைய நம்பிக்கை. இரத்தமேற்றுதல் போன்ற குறிப்பிட்ட சிகிச்சையை ஒதுக்கிவிட்டு பாதுகாப்பான முறையில் அறுவை சிகிச்சை செய்வது மருத்துவ ரீதியில் சாத்தியமானால், அதை செய்ய தயாராக இருக்க வேண்டும்.”​—⁠எலும்பு மற்றும் மூட்டு அறுவை சிகிச்சை இதழ் (ஆங்கிலம்), மார்ச் 1986.

டாக்டரால் ஒரு சிகிச்சை முறையை திறம்பட அளிக்க முடியாத பட்சத்தில், அதை அளித்தே தீர வேண்டுமென கரிசனைமிக்க ஒரு நோயாளி அவரை வற்புறுத்த மாட்டார். ஆனால் டாக்டர் நெல்சன் குறிப்பிட்டபடி, கடமையுணர்வுள்ள மருத்துவர்கள் பலர் நோயாளியின் நம்பிக்கைகளுக்கு மதிப்பு தெரிவிக்கலாம். ஜெர்மன் அதிகாரி ஒருவர் இவ்வாறு கூறினார்: “யெகோவாவின் சாட்சிகளுக்கு ஏற்ற மாற்று சிகிச்சை முறைகள் அனைத்தும் தன்னிடம் இல்லை எனக் காரணம்காட்டி ஒரு மருத்துவர் . . . உதவி அளிப்பதற்கு மறுப்பு தெரிவிக்க முடியாது. சிகிச்சை செய்வதற்குரிய வாய்ப்புகள் தனக்குக் குறைவாக இருந்தாலும் அவர் உதவி செய்ய கடமைப்பட்டிருக்கிறார்.” (டெர் ஃப்ரானர்ஸ்ட், மே–ஜூன் 1983) அதைப் போலவே, மருத்துவமனைகள் இருப்பது வெறுமனே பணம் சம்பாதிப்பதற்கு அல்ல, ஆனால் எந்தப் பாகுபாடுமின்றி அனைவருக்கும் சேவை செய்வதற்கே. கத்தோலிக்க இறையியலாளர் ரிச்சர்டு ஜே. டெவின் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “நோயாளியின் உயிரையும் ஆரோக்கியத்தையும் காப்பதற்கு மருத்துவமனை எல்லா வகை மருத்துவ முயற்சியையும் எடுக்க வேண்டியதாக இருந்தாலும், அது கொடுக்கும் மருத்துவ கவனிப்பு [அந்த நோயாளியின்] மனசாட்சிக்கு விரோதமாக இல்லாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். அதோடு, இரத்தமேற்றுவதற்கு நயமாகப் பேசுவது, நீதிமன்ற ஆணையைப் பெறுவது போன்ற எல்லா வகையான பலவந்தத்தையும் அது தவிர்க்க வேண்டும்.”​—⁠உடல்நல முன்னேற்றம் (ஆங்கிலம்), ஜூன் 1989.

நீதிமன்றங்களுக்குப் பதிலாக

நீதிமன்றம் என்பது தனிப்பட்ட மருத்துவ பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குரிய இடமல்ல என்பதை அநேகர் ஒத்துக்கொள்கின்றனர். டான்ஸிலுக்கு ஆன்டிபையாட்டிக் சிகிச்சை முறையை நீங்கள் தேர்ந்தெடுப்பதாக வைத்துக் கொள்ளுங்கள்; வேறொருவர் உங்களுக்கு அறுவை சிகிச்சைதான் செய்ய வேண்டுமென வற்புறுத்தி நீதிமன்றத்திற்குச் செல்கிறார் என்றால் உங்களுக்கு எப்படி இருக்கும்? மிகச் சிறந்த சிகிச்சை முறை என தான் நினைப்பதை ஒரு மருத்துவர் அளிக்க விரும்பலாம், ஆனால் உங்களுடைய அடிப்படை உரிமைகளை மிதித்துப்போடுவதற்குச் சட்டத்தை நாடும் கடமை அவருக்குக் கிடையாது. இரத்தமேற்றுவதைத் தவிர்ப்பதையும் வேசித்தனத்தைத் தவிர்ப்பதையும் பைபிள் ஒரே தார்மீக தராதரமாக கருதுவதால், ஒரு கிறிஸ்தவருக்குப் பலவந்தமாக இரத்தமேற்றுவது பாலியல் பலாத்காரத்திற்கு, அதாவது கற்பழிப்புக்குச் சமமான குற்றமாகும்.​—அப்போஸ்தலர் 15:28, 29.

என்றாலும், மத உரிமைகளின் காரணமாக ஓர் ஆபத்தை ஏற்றுக்கொள்வதற்கு நோயாளி மனமுள்ளவராக இருக்கும்போது சில நீதிமன்றங்கள் மிகவும் நிலைகுலைந்து போய்விடுகின்றன, அதனால் “இரத்தமேற்றும்படி தீர்ப்பளிப்பதற்கு அவை சட்டப்பூர்வமான சில விதிவிலக்குகளை​—⁠அல்லது புனைகதைகளை​—​உருவாக்குகின்றன” என அறிவிக்கிறது இரத்தமேற்றுவதற்கு விஷயமறிந்து ஒப்புதல் அளித்தல் (ஆங்கிலம்) (1989). நோயாளி கருத்தரித்திருக்கிறார், அல்லது பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டியிருக்கிறது என்றெல்லாம் காரணங்காட்டி, இரத்தமேற்றப்பட வேண்டுமென அவை தீர்ப்பளிக்கின்றன. “அந்தக் காரணங்கள் சட்டப்பூர்வ புனைகதைகள்” என அப்புத்தகம் சொல்கிறது. “சிகிச்சையை மறுக்கும் உரிமை வயதுவந்தோருக்கு இருக்கிறது” என்றும் அது சொல்கிறது.

இரத்தம் ஏற்றிக்கொள்ளும்படி வற்புறுத்துகிற சிலர், யெகோவாவின் சாட்சிகள் எல்லாச் சிகிச்சை முறைகளையும் மறுப்பதில்லை என்ற விஷயத்தை அசட்டை செய்துவிடுகிறார்கள். யெகோவாவின் சாட்சிகள் ஒரேவொரு சிகிச்சை முறையை மட்டுமே மறுக்கிறார்கள், அதுவும் அத்தகைய சிகிச்சை முறை ஆபத்தானது என்று நிபுணர்களும்கூட சொல்கிறார்கள். பொதுவாக, ஒரு மருத்துவப் பிரச்சினையைப் பல்வேறு வழிகளில் சமாளிக்கலாம். ஒன்றில் ஒருவித ஆபத்து என்றால் மற்றொன்றில் வேறொரு ஆபத்து இருக்கிறது. இவற்றில் எது “உங்கள் நலனுக்கு சிறந்தது” என ஒரு நீதிமன்றமோ ஒரு டாக்டரோ தீர்மானிக்க முடியுமா? நீங்கள்தான் அதை தீர்மானிக்க வேண்டும். தங்களுக்காக வேறொருவர் தீர்மானிப்பதை யெகோவாவின் சாட்சிகள் நிச்சயமாகவே விரும்புவதில்லை; கடவுளுக்கு முன்பு இது அவர்களுடைய தனிப்பட்ட உத்தரவாதம்.

ஏற்கத்தகாத ஒரு சிகிச்சையை நீதிமன்றம் உங்களுக்குப் பலவந்தமாக அளித்தால், உங்கள் மனசாட்சி எவ்வாறு பாதிக்கப்படலாம்? அதோடு, வாழ வேண்டுமென்ற உங்களுடைய விருப்பம் எவ்வாறு பாதிக்கப்படலாம்? டாக்டர் கோன்ராடு டிரெபிங்கர் இவ்வாறு எழுதினார்: “நீதிமன்றத்தின் அந்தச் செயல் தவறான மருத்துவக் குறிக்கோளுக்கே ஓர் எடுத்துக்காட்டாக இருக்கும்; இது மனசாட்சியை மீறி குறிப்பிட்ட ஒரு சிகிச்சை முறையை ஏற்க நோயாளியை வற்புறுத்துவதற்கு வழிநடத்தும், உடல் ரீதியில் அவருக்குச் சிகிச்சை அளித்து மனோ ரீதியில் மரண அடி கொடுப்பது போல இருக்கும்.”​—⁠டெர் ப்ராக்டிஷ் ஆர்ஸ்ட், ஜூலை 1978.

பிள்ளைகளுக்கு அன்பான கவனிப்பு

இரத்தம் சம்பந்தமான நீதிமன்ற வழக்குகள் பெரும்பாலும் சிறுபிள்ளைகள் சம்பந்தப்பட்டவை. சில சந்தர்ப்பத்தில், இரத்தமில்லாத சிகிச்சையைப் பயன்படுத்தும்படி பெற்றோர்கள் மரியாதைக்குரிய விதத்தில் கேட்டுக்கொண்ட போதிலும், மருத்துவத் துறையினர் சிலர் இரத்தமேற்றுவதற்கு நீதிமன்றத்தின் ஆதரவை நாடியிருக்கிறார்கள். நிச்சயமாகவே, குழந்தையைத் துஷ்பிரயோகம் செய்வதையோ புறக்கணிப்பதையோ தடுக்கும் சட்டங்களை அல்லது நீதிமன்ற நடவடிக்கைகளை கிறிஸ்தவர்கள் ஆதரிக்கிறார்கள். பெற்றோர் சிலர் குழந்தையை முரட்டுத்தனமாக அடித்ததை அல்லது எவ்வித மருத்துவ கவனிப்பையும் கொடுக்க மறுத்ததைப் பற்றிய வழக்குகளை நீங்கள் ஒருவேளை வாசித்திருக்கலாம். எவ்வளவு கொடூரமான செயல்! புறக்கணிக்கப்படும் பிள்ளையைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்கலாம், எடுக்கவும் வேண்டும். ஆனால் இந்த விஷயத்திற்கும், இரத்தமில்லாத உயர்தர சிகிச்சையை அன்புள்ள பெற்றோர்கள் கேட்கும் விஷயத்திற்கும் எவ்வளவு வித்தியாசம்!

இப்படிப்பட்ட நீதிமன்ற வழக்குகள் பொதுவாக ஆஸ்பத்திரியில் இருக்கும் ஒரு பிள்ளை சம்பந்தமாகவே நடைபெறுகின்றன. ஆனால் அந்தப் பிள்ளை எப்படி ஆஸ்பத்திரிக்கு வந்தது, ஏன் வந்தது? தரமான மருத்துவ கவனிப்பைப் பெறவே அன்பும் அக்கறையுமுள்ள பெற்றோர்கள் அந்தப் பிள்ளையை அங்கே கொண்டு வந்திருக்கிறார்கள். இயேசுவைப் போல கிறிஸ்தவ பெற்றோர்களும் பிள்ளைகளை அக்கறையோடு கவனிக்கிறார்கள். ‘பால் கொடுக்கிற தாயானவள் தன் பிள்ளைகளைக் காப்பாற்றுவதை,’ அதாவது நெஞ்சார நேசிப்பதைப் பற்றி பைபிள் பேசுகிறது. யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய பிள்ளைகள் மீது இத்தகைய ஆழ்ந்த அன்பைத்தான் வைத்திருக்கிறார்கள்.​—1 தெசலோனிக்கேயர் 2:7; மத்தேயு 7:11; 19:13-15.

எல்லா பெற்றோர்களும் தங்களுடைய பிள்ளைகளின் பாதுகாப்பையும் உயிரையும் பாதிக்கக்கூடிய தீர்மானங்களை எடுப்பது இயல்பே. உதாரணமாக, வீட்டிற்குக் கதகதப்பூட்ட எரிவாயுவைப் பயன்படுத்துவதா அல்லது எண்ணெயைப் பயன்படுத்துவதா? வெகுதூர பயணத்திற்கு பிள்ளையை அழைத்துச் செல்வதா? நீச்சலுக்கு செல்ல அவனை அனுமதிக்கலாமா? இத்தகைய விஷயங்களில் ஆபத்துகள் உள்ளன, உயிரே போகும் அபாயமும் இருக்கிறது. விவேகத்தைப் பயன்படுத்தும் பெற்றோருடைய உரிமையை சமுதாயம் அங்கீகரிக்கிறது. ஆகவே, பிள்ளைகளைப் பாதிக்கிற கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தீர்மானம் எடுப்பதில் பெற்றோருடைய குரலே ஓங்கியிருக்க அனுமதிக்கப்படுகிறது.

1979-⁠ல் ஐ.மா. உச்ச நீதிமன்றம் இவ்வாறு தெளிவாக குறிப்பிட்டது: “வாழ்க்கையில் சிக்கலான தீர்மானங்கள் எடுக்க தேவைப்படுகிற முதிர்ச்சியும் அனுபவமும் நிதானமும் பெற்றோருக்கு இருக்கிற அளவுக்கு பிள்ளைகளுக்கு இல்லை என்பதன் பேரில்தான் குடும்பத்தைப் பற்றிய சட்டத்தின் கருத்து சார்ந்துள்ளது. . . . [மருத்துவ விஷயத்தில்] பெற்றோர் எடுக்கும் தீர்மானத்தில் ஆபத்துகள் இருக்கிறது என்பதற்காக தீர்மானம் எடுக்கும் அதிகாரம் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டு ஏதோவொரு நிறுவனத்திற்கோ நாட்டின் அதிகாரிக்கோ தானாகவே போய்விடுவது கிடையாது.”​—⁠பார்ஹம் Vs ஜே.ஆர்.

அதே ஆண்டில் நியு யார்க் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் முடிவான அறிக்கை ஒன்று இவ்வாறு குறிப்பிட்டது: “ஒரு பிள்ளைக்குத் தேவைப்பட்ட மருத்துவ கவனிப்பு கொடுக்கப்படவில்லையா என்பதைத் தீர்மானிக்க . . . அப்போதிருந்த சூழ்நிலைகளில் பிள்ளைக்குப் பெற்றோர் தகுந்த மருத்துவ சிகிச்சை அளித்திருக்கிறார்களா என்பதைக் கண்டறிய வேண்டும். பெற்றோர் ‘சரியான’ தீர்மானம் எடுத்திருக்கிறார்களா ‘தவறான’ தீர்மானம் எடுத்திருக்கிறார்களா என கேள்வி கேட்க முடியாது, ஏனென்றால் மருத்துவத் துறையில் பெரும் முன்னேற்றங்கள் இருக்கிறபோதிலும், இன்றைய மருத்துவத்தின் நிலை அப்படிப்பட்ட உறுதியான முடிவுகளுக்கு வர அனுமதிப்பது அபூர்வமே. அதோடு, பெற்றோருடைய இடத்தை நீதிமன்றத்தால் ஏற்கவும் முடியாது.”​—⁠இன் ரெ ஹாஃப்பாயர்.

அறுவை சிகிச்சை செய்வதா ஆன்டிபையாட்டிக் மருந்தை எடுத்துக்கொள்வதா என்ற தீர்மானத்தை எதிர்ப்படும் பெற்றோர்களின் உதாரணத்தை நினைவுபடுத்திப் பாருங்கள். ஒவ்வொரு சிகிச்சை முறையிலும் ஏதாவது ஆபத்துகள் இருக்கின்றன. ஆபத்துகளையும் நன்மைகளையும் பிற அம்சங்களையும் சீர்தூக்கிப் பார்த்த பின்னரே அன்பான பெற்றோர்கள் தெரிவு செய்ய வேண்டும். இது சம்பந்தமாக, பிள்ளைகளைப் பாதிக்கும் மருத்துவ ஆணைகளில் நீதிபதிக்கு வழிகாட்டிகள் என்ற நூலை எடுத்துப் பார்க்கும்படி டாக்டர் ஜான் சாமுவேல்ஸ் (மயக்க மருந்தியல் செய்தி, [ஆங்கிலம்] அக்டோபர் 1989) ஆலோசனை கூறினார், அந்த நூலின் கருத்து இதுவே:

“நோயாளி உயிர் பிழைப்பாரா இறந்துவிடுவாரா என்பதை மருத்துவர் ஓரளவு நிச்சயத்துடன் முன்னுரைக்கும் அளவுக்கு மருத்துவத் துறை முன்னேறவில்லை. . . . சிகிச்சை முறையைத் தேர்ந்தெடுப்பதற்கு வாய்ப்பு இருந்தால்​—⁠உதாரணமாக, 80 சதவீத வெற்றி வாய்ப்புடைய ஒரு சிகிச்சை முறையை மருத்துவர் பரிந்துரை செய்யும்போது, பெற்றோர் அதை ஏற்காமல் 40 சதவீதமே வெற்றி வாய்ப்புடைய ஒரு சிகிச்சை முறையைத் தேர்ந்தெடுத்தால்​—⁠மருத்துவ ரீதியில் அதிக ஆபத்தான, ஆனால் பெற்றோர் ஆட்சேபணை தெரிவிக்காத அந்த முறையையே மருத்துவர் கையாள வேண்டும்.”

இரத்தத்தைப் பயன்படுத்துவதால் சாவுக்கேதுவான ஆபத்துகள் ஏற்பட்டிருப்பதையும், சிறந்த மாற்று சிகிச்சை முறைகள் இருப்பதையும் பார்க்கும்போது, இரத்தத்தைத் தவிர்ப்பது ஆபத்து குறைந்ததாக தெரியவில்லையா?

கிறிஸ்தவர்கள் தங்களுடைய பிள்ளைக்கு அறுவை சிகிச்சை தேவைப்படும்போது இயல்பாகவே அநேக அம்சங்களைச் சீர்தூக்கிப் பார்க்கிறார்கள். இரத்தத்தைப் பயன்படுத்தினாலும் பயன்படுத்தாவிட்டாலும், எல்லா அறுவை சிகிச்சையிலும் ஆபத்துகள் இருக்கின்றன. எந்த அறுவை சிகிச்சை நிபுணரால் நூற்றுக்கு நூறு உத்தரவாதம் அளிக்க முடியும்? திறமைமிக்க மருத்துவர்கள் யெகோவாவின் சாட்சிகளுடைய பிள்ளைகளுக்கு இரத்தமேற்றாமல் அறுவை சிகிச்சை செய்து சிறந்த வெற்றி கண்டிருப்பதைப் பெற்றோர்கள் அறிந்திருக்கலாம். எனவே ஒரு மருத்துவரோ மருத்துவமனை அதிகாரியோ வேறொரு சிகிச்சையை அளிக்க விரும்பினாலும், மன அழுத்தத்தையும் காலதாமதத்தையும் ஏற்படுத்தக்கூடிய ஒரு சட்டப் போராட்டத்தை உண்டாக்குவதற்குப் பதிலாக அன்பான பெற்றோருடன் சேர்ந்து செயல்படுவது நியாயமாக இருக்கும் அல்லவா? அல்லது பெற்றோர் தங்களுடைய பிள்ளையை இன்னொரு மருத்துவமனைக்கு மாற்றலாம், அங்குள்ள மருத்துவப் பணியாளர்கள் இப்படிப்பட்ட நோயாளிகளைக் கையாளுவதில் அனுபவசாலிகளாகவும் சிகிச்சை அளிக்க மனமுள்ளவர்களாகவும் இருக்கலாம். இரத்தமேற்றாமல் சிகிச்சை அளிப்பது உண்மையில் அதிக தரமானதாக இருக்கும்; ஏனென்றால் நாம் ஏற்கெனவே கவனித்தபடி, ‘மருத்துவம் மற்றும் மருத்துவம் சாராத நியாயமான இலட்சியங்களை அடைய’ இது அந்தக் குடும்பத்துக்கு உதவும்.

[அடிக்குறிப்பு]

a “இரத்தம்: யாருடைய தீர்மானம், யாருடைய மனசாட்சி?” என்ற மருத்துவ கட்டுரையைக் காண்க. இது பிற்சேர்க்கையில் பக்கங்கள் 30-31-⁠ல் மறு அச்சு செய்யப்பட்டுள்ளது.

[பக்கம் 18-ன் பெட்டி]

சட்டப்பூர்வ பிரச்சினைகளிலிருந்து மற்றவர்களை விடுவித்தல்

‘இரத்தமேற்றுவதற்குச் சில மருத்துவர்களும் மருத்துவமனைகளும் நீதிமன்ற ஆணையைப் பெற ஏன் விரைகின்றனர்?’ என்று ஒருவேளை நீங்கள் யோசிக்கலாம். சில இடங்களில், தங்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படுமோ என்ற பயமே பொதுவான ஒரு காரணமாகும்.

யெகோவாவின் சாட்சிகள் இரத்தமில்லாத சிகிச்சை முறையைத் தேர்ந்தெடுக்கும்போது இப்படிப்பட்ட சட்டப்பூர்வ சிக்கல்களைப் பற்றி மற்றவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவக் கல்லூரி (அ.ஐ.மா.) மருத்துவர் ஒருவர் இவ்வாறு எழுதுகிறார்: “[யெகோவாவின் சாட்சிகள்] பெரும்பாலோர் மருத்துவர்களையும் மருத்துவமனைகளையும் சட்டப்பூர்வ பொறுப்பிலிருந்து விடுவிக்கும் அமெரிக்க மருத்துவ சங்கத்தின் படிவத்தில் தயக்கமின்றி கையொப்பமிடுகின்றனர், அநேகர் மருத்துவ எச்சரிப்பு [அட்டை] ஒன்றை எடுத்துச் செல்கின்றனர். ‘இரத்தம் சார்ந்த பொருட்களை ஏற்க மறுத்தல்’ படிவம் சரியாகக் கையொப்பமிடப்பட்டு தேதியிடப்பட்டிருக்கும்போது அது ஓர் ஒப்பந்தமாக இருக்கிறது, சட்டப்பூர்வமாகவும் செல்லுபடியாகும்.”​—⁠மயக்க மருந்தியல் செய்தி (ஆங்கிலம்), அக்டோபர் 1989.

ஆம், இரத்தமில்லாத சிகிச்சையை அளிக்கும் மருத்துவர் அல்லது மருத்துவமனை எவ்விதத்திலும் பொறுப்பேற்க வேண்டியதில்லை என்ற சட்டப்பூர்வ உறுதியை அளித்து, அவர்களோடு யெகோவாவின் சாட்சிகள் ஒத்துழைக்கின்றனர். மருத்துவ நிபுணர்கள் பரிந்துரை செய்தபடி, ஒவ்வொரு யெகோவாவின் சாட்சியும் ஒரு மருத்துவ ஆவணத்தை வைத்திருக்கிறார். இது ஆண்டுதோறும் புதுப்பிக்கப்பட்டு அந்த நபரால் கையொப்பமிடப்படுகிறது; இருவர் சாட்சி கையெழுத்துப் போடுகின்றனர்; அவர்கள் பெரும்பாலும் அவருடைய நெருங்கிய உறவினராக இருக்கின்றனர்.

மார்ச் 1990-ல், கனடாவில் ஒன்டாரியோவிலுள்ள உச்ச நீதிமன்றம் இத்தகைய ஆவணத்தை அங்கீகரித்து இவ்வாறு தீர்ப்பு வழங்கியது: “இது ஒருவரின் சட்டப்பூர்வ நிலைநிற்கையை காட்டுகிற எழுத்து வாக்குமூலமாகும்; மருத்துவரோடு ஒப்பந்தம் செய்யும்போது இரத்தம் அளிக்கக் கூடாதென தடை விதிக்கும் உரிமை இந்த ஆவணத்தைப் பெற்றிருப்பவருக்கு உண்டு.” மெடிசின்ஸ்க் எடிக் (1985) என்ற நூலில் பேராசிரியர் டேனியல் அண்டர்சன் இவ்வாறு எழுதினார்: “ஒரு நோயாளி, தான் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் என்றும், எந்தச் சூழ்நிலையிலும் தனக்கு இரத்தமேற்றக் கூடாது என்றும் சொல்கிற ஒரு தெளிவான வாக்குமூலத்தை வைத்திருந்தால், அது வாய்மொழியில் தெரிவிக்கப்பட்ட வாக்குமூலத்திற்குச் சமம்; ஆகவே அந்த நோயாளியின் உரிமையை மதித்து அவருடைய விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும்.”

மருத்துவமனையின் ஒப்புதல் படிவங்களிலும் யெகோவாவின் சாட்சிகள் கையொப்பமிடுகின்றனர். ஜெர்மனியைச் சேர்ந்த ஃப்ரைபர்க்கிலுள்ள மருத்துவமனையில் பயன்படுத்தப்படும் படிவத்தில், சிகிச்சையைக் குறித்து நோயாளிக்கு அளித்த விவரங்களையெல்லாம் மருத்துவர் எழுதுவதற்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. பின்பு, மருத்துவர் மற்றும் நோயாளியின் கையொப்பத்திற்கு மேல், இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: “நான் யெகோவாவின் சாட்சிகளின் மதத்தைச் சேர்ந்தவர்(ள்), எனக்கு அறுவை சிகிச்சை செய்யப்படும்போது வேறொருவரின் இரத்தத்தை அல்லது இரத்தம் சார்ந்த பொருட்களைப் பயன்படுத்துவதை உறுதியாக மறுக்கிறேன். நன்கு திட்டமிட்டுச் செய்யப்படும் இந்த அவசியமான சிகிச்சையில் இரத்தப்போக்கு ஏற்பட்டு அதிக சிக்கல்கள் உண்டாகலாம் என்பதை நான் அறிவேன். இது சம்பந்தமாக முழு விளக்கத்தைப் பெற்றிருக்கிறேன், வேறொருவரின் இரத்தத்தை அல்லது இரத்தம் சார்ந்த பொருட்களைப் பயன்படுத்தாமல் அறுவை சிகிச்சை செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.”​—⁠ஹெர்ஸ் கிரீஸ்லாஃப், ஆகஸ்ட் 1987.

உண்மையில், இரத்தமில்லாத சிகிச்சை முறையில் குறைந்த ஆபத்துகளே இருக்கலாம். ஆனால் குறிப்பு என்னவென்றால், மக்களுடைய நலனுக்காக உதவும் இப்பணிக்குத் தங்களை அர்ப்பணித்திருக்கும் மருத்துவத் துறையினர் தங்கள் பணியில் தொடர்ந்து முன்னேற யெகோவாவின் சாட்சிகளாக இருக்கும் நோயாளிகள் தேவையற்ற சட்டப்பூர்வ பிரச்சினைகளிலிருந்து அவர்களை மகிழ்ச்சியோடு விடுவிக்கின்றனர். இந்த ஒத்துழைப்பு எல்லாருக்கும் நன்மை பயக்குகிறது என “யெகோவாவின் சாட்சிகளுக்குச் செய்யப்பட்ட வயிற்று அறுவை சிகிச்சைகள்” என்ற கட்டுரையில் டாக்டர் ஏஞ்சலாஸ் ஏ. கேம்பூரிஸ் காண்பித்தார்:

“அறுவை சிகிச்சைக்கு முன் செய்யப்படும் அந்த ஒப்பந்தம் மீறப்படக் கூடாதது என்பதை அறுவை மருத்துவர் மனதில் வைக்க வேண்டும், அறுவை சிகிச்சை செய்யப்படுகிற சமயத்திலும் அதற்குப் பிறகும் என்ன நடந்தாலும் அவர் அதை மீறக்கூடாது. அப்போதுதான் தாங்கள் பெறும் அறுவை சிகிச்சையின் மீது நோயாளிகளுக்கு நல்ல அபிப்பிராயம் ஏற்படும், அதேசமயத்தில் அறுவை மருத்துவரும், சட்டப்பூர்வ மற்றும் தத்துவ ரீதியான பிரச்சினைகளைப் பற்றிக் கவலைப்படாமல் அறுவை சிகிச்சை மற்றும் தொழில் நுட்ப காரியங்களுக்குக் கவனம் செலுத்த முடியும். இதன் மூலம் மருத்துவர் நம்பிக்கையோடு அறுவை சிகிச்சை செய்யலாம், நோயாளியின் ஆசையும் நிறைவேற்றப்படலாம்.”​—⁠அமெரிக்க அறுவை மருத்துவர் (ஆங்கிலம்), ஜூன் 1987.

[பக்கம் 19-ன் பெட்டி]

“மருத்துவ தொழில்நுட்பத்தை மிதமிஞ்சி பயன்படுத்துவதே மருத்துவ பராமரிப்புக்காக இன்று அதிக செலவுகள் ஆவதற்குக் காரணம். . . . இதில் இரத்தமேற்றுதல் குறிப்பிடத்தக்கது, ஏனென்றால் அதிக செலவும் ஆபத்தும் இதில் உட்பட்டுள்ளது. இதனால், மருத்துவமனைகளுக்கு அங்கீகாரம் வழங்கும் அமெரிக்க இணை ஆணையம், இரத்தமேற்றுவதை ‘அளவுக்கு மீறி பயன்படுத்தப்படுவது, அதிக ஆபத்தானது, தவறு ஏற்பட அதிக சாத்தியமுடையது’ என்றெல்லாம் வகுத்திருக்கிறது.”​—⁠“இரத்தமேற்றுதல்” (ஆங்கிலம்), ஜூலை-ஆகஸ்ட் 1989.

[பக்கம் 20-ன் பெட்டி]

அமெரிக்கா: “தனிநபருடைய உரிமை சம்பந்தமான நெறிமுறை, அதாவது எதிர்காலத்தைக் குறித்து அவரவரே சொந்தமாகத் தீர்மானம் எடுக்க வேண்டுமென்ற கொள்கை, நோயாளியின் ஒப்புதல் பெறவேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது. அப்படி நோயாளியின் ஒப்புதலின்றி மருத்துவ சிகிச்சை அளிப்பது அவரை அடித்துப் போடுவதற்குச் சமம் என்பதால் அவரிடம் ஒப்புதல் கேட்பது சட்டரீதியில் தேவைப்படுகிறது.”​—⁠“இரத்தமேற்றுவதற்கு நன்கு விஷயமறிந்து ஒப்புதல் அளித்தல்,” (ஆங்கிலம்) 1989.

ஜெர்மனி: “நோயாளிக்கு உதவ வேண்டும், அவருடைய உயிரைப் பாதுகாக்க வேண்டும் என்ற கொள்கைகளைவிட சுய தீர்மானம் எடுப்பதற்கான நோயாளியின் உரிமையே மேலோங்கி நிற்கிறது. ஆகவே, நோயாளியின் விருப்பத்திற்கு எதிராக நாங்கள் இரத்தமேற்றுவதில்லை.”​—⁠“ஹெர்ஸ் கிரீஸ்லாஃப்,” ஆகஸ்ட் 1987.

ஜப்பான்: “மருத்துவ உலகில் ‘முழுமை’ என்று எதுவுமே கிடையாது. நவீன மருத்துவ முறையே மிகச் சிறந்தது என்று நம்பி டாக்டர்கள் அதைப் பின்பற்றுகிறார்கள், ஆனால் அந்த முறையையே முழுமையாக பின்பற்ற வேண்டுமென நோயாளிகளை வற்புறுத்தக் கூடாது. தெரிவு செய்கிற உரிமையை நோயாளிகளும் பெற்றிருக்க வேண்டும்.”​—⁠“மினாமி நிஹோன் ஷிம்பன்,” ஜூன் 28, 1985.

[பக்கம் 21-ன் பெட்டி]

“யெகோவாவின் சாட்சிகளுடைய குடும்பத்தினர் ஒற்றுமையாகவும் அன்பாகவும் இருப்பதை நான் பார்த்திருக்கிறேன்” என டாக்டர் லாரன்ஸ் எஸ். பிராங்கெல் கூறுகிறார். “அவர்களுடைய பிள்ளைகள் கல்வியறிவு பெற்றவர்களாகவும் அன்பும் அக்கறையும் உள்ளவர்களாகவும் மரியாதை காண்பிப்பவர்களாகவும் இருக்கிறார்கள். . . . மருத்துவ ஆலோசனைகளுக்கு ஏற்ப நடக்கிறார்கள்; இது, தங்களுடைய மத நம்பிக்கைகள் அனுமதிக்கும் அளவுக்கு மருத்துவ உதவியை ஏற்றுக்கொள்ள அவர்கள் முயற்சி எடுக்கிறார்கள் என்பதை நன்றாகவே எடுத்துக் காட்டுகிறது.”​—⁠குழந்தை மருத்துவத் துறை, எம். டி. அண்டர்சன் மருத்துவமனை மற்றும் புற்றுக்கழலை நிறுவனம், ஹெஸ்டன், அ.ஐ.மா., 1985.

[பக்கம் 22-ன் பெட்டி]

“மேதாவிகளின் அகந்தை காரணமாக நல்ல மருத்துவ நிதானிப்பு பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டு விடுவது குறித்து வருந்துகிறேன்” என டாக்டர் ஜேம்ஸ் எல். ஃபிளெட்சர், ஜூனியர் கூறுகிறார். “‘இன்றைய மிகச் சிறந்த’ சிகிச்சை முறை நாளை மாற்றப்படுகிறது அல்லது ஒதுக்கித் தள்ளப்படுகிறது. எது அதிக ஆபத்தானது: ‘மதப்பற்றுள்ள பெற்றோரின்’ மனப்பான்மையா அல்லது தான் அளிக்கிற சிகிச்சை முறையே மிக முக்கியம் என விடாப்பிடியாக இருக்கும் அகந்தையுள்ள மருத்துவரின் மனப்பான்மையா?”​—⁠“குழந்தை மருத்துவம்” (ஆங்கிலம்), அக்டோபர் 1988.