Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் சாட்சிகள் அறுவை சிகிச்சை/நெறிமுறை சவால்

யெகோவாவின் சாட்சிகள் அறுவை சிகிச்சை/நெறிமுறை சவால்

பிற்சேர்க்கை

யெகோவாவின் சாட்சிகள் அறுவை சிகிச்சை/நெறிமுறை சவால்

அமெரிக்க மருத்துவச் சங்கத்தின் அனுமதியுடன், அமெரிக்க மருத்துவச் சங்கப் பத்திரிகை (JAMA), நவம்பர் 27, 1981, தொகுதி 246, எண் 21, பக்கங்கள் 2471, 2472-லிருந்து மறு அச்சு செய்யப்பட்டுள்ளது. பதிப்புரிமை 1981, அமெரிக்க மருத்துவச் சங்கம்.

யெகோவாவின் சாட்சிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் விஷயத்தில் மருத்துவர்கள் ஒரு விசேஷித்த சவாலை எதிர்ப்படுகிறார்கள். உறுதியான மத நம்பிக்கையின் காரணமாக இந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் பிறருடைய அல்லது தங்களுடைய முழு இரத்தத்தையோ, சிவப்பு இரத்த அணுக்களையோ, வெள்ளை இரத்த அணுக்களையோ, பிளேட்லெட்களையோ (platelets) ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால் இரத்த ஓட்டம் உடலுக்கு வெளியே ஓர் இயந்திரத்தின் மூலம் தடையின்றி செல்லும்படி செய்யப்பட்டால், (இரத்தம் சாராத) இருதய–நுரையீரல் இயந்திரம், டையாலிசிஸ், அல்லது இது போன்ற பிற சாதனங்களைப் பயன்படுத்த அவர்களில் அநேகர் அனுமதிக்கிறார்கள். சட்டப்பூர்வ பிரச்சினையைப் பற்றி மருத்துவ துறையினர் கவலைப்பட வேண்டியதில்லை; யெகோவாவின் சாட்சிகள் நன்கு விஷயமறிந்து இரத்தம் ஏற்றிக்கொள்ள மறுப்பதால் சட்டப்பூர்வ பிரச்சினையிலிருந்து டாக்டர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கைகளை அவர்கள் எடுக்கிறார்கள். என்றாலும், இரத்தமில்லா மாற்று திரவங்களை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். இவற்றையும் நுட்பமான பிற சிகிச்சை முறைகளையும் பயன்படுத்தி, யெகோவாவின் சாட்சிகளில் பெரியோருக்கும் சிறியோருக்கும் எல்லா வகையான மேஜர் ஆபரேஷன்களையும் டாக்டர்கள் செய்து வருகிறார்கள். இதனால், இத்தகைய நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதில் சிறந்த மருத்துவ முறை உருவாகியுள்ளது. இது “முழு நபருக்கு” சிகிச்சை அளிப்பது சம்பந்தமான கொள்கைக்கு இசைவாக இருக்கிறது. (JAMA 1981;246:2471–2472)

உடல்நலம் சார்ந்த முக்கியமான ஒரு சவாலை மருத்துவர்கள் இன்று எதிர்ப்படுகிறார்கள். இரத்தம் ஏற்றிக்கொள்ள மறுக்கும் சுமார் ஐந்து லட்சம் யெகோவாவின் சாட்சிகள் அமெரிக்காவில் இருக்கிறார்கள். அவர்களுடைய எண்ணிக்கையும் அவர்களோடு சேர்ந்தவர்களுடைய எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இரத்தம் ஏற்றிக்கொள்ள மறுப்பதை அநேக மருத்துவர்களும் மருத்துவமனை அதிகாரிகளும் சட்டப்பூர்வ பிரச்சினையாக முன்பு கருதினார்கள், இரத்தமேற்றுவது மருத்துவ ரீதியில் விவேகமானது என நம்பியதால் இதற்கு நீதிமன்ற உத்தரவையும் நாடினார்கள். ஆனால் இப்பொழுது மருத்துவர்களுடைய மனப்பான்மையில் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்ந்து வருவதை சமீபகால மருத்துவ ஏடுகள் வெளிப்படுத்துகின்றன. ஹீமோகுளோபின் மிகக் குறைவாக இருந்த நோயாளிகள் அநேகருக்கு அறுவை சிகிச்சை செய்ததால் ஏற்பட்ட அனுபவம் அதற்கு காரணமாக இருக்கலாம். நன்கு விஷயமறிந்து ஒப்புதல் அளித்தல் (informed consent) என்ற சட்ட விதிமுறையைப் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்திருப்பதும் காரணமாக இருக்கலாம்.

இப்பொழுது, யெகோவாவின் சாட்சிகளில் பெரியோருக்கும் சிறியோருக்கும் இரத்தம் ஏற்றாமலேயே அவசரமற்ற அறுவை சிகிச்சைகளும் அவசர சிகிச்சைகளும் செய்யப்படுகின்றன. சமீபத்தில், இந்நாட்டிலுள்ள மிகப் பெரிய மருத்துவ மையங்கள் சிலவற்றைச் சேர்ந்த அறுவை சிகிச்சை மருத்துவர்களையும் நிர்வாகத் துறையினரையும் யெகோவாவின் சாட்சிகளுடைய பிரதிநிதிகள் சந்தித்தார்கள். இந்தச் சந்திப்புகளால், அவர்களிடையே புரிந்துகொள்ளுதல் அதிகரித்திருக்கிறது; வீணாகும் இரத்தத்தை சுத்திகரித்துப் பயன்படுத்துதல், மாற்று உறுப்புகள் பொருத்துதல், மருத்துவ/சட்ட ரீதியான மோதல்களைத் தவிர்த்தல் ஆகியவற்றைப் பற்றிய கேள்விகளுக்கும் தீர்வு காணப்பட்டிருக்கிறது.

சிகிச்சை சம்பந்தமாக யெகோவாவின் சாட்சிகளின் நிலை

யெகோவாவின் சாட்சிகள் மருத்துவ சிகிச்சையையும் அறுவை சிகிச்சையையும் ஏற்றுக்கொள்கிறார்கள். சொல்லப்போனால், அவர்களில் அநேகர் மருத்துவர்களாகவும் அறுவை சிகிச்சை நிபுணர்களாகவும்கூட இருக்கிறார்கள். ஆனால் யெகோவாவின் சாட்சிகள் மிகுந்த மதப்பற்றுள்ளவர்கள். இரத்தமேற்றுவதைப் பின்வரும் பைபிள் வசனங்கள் தடை செய்வதாக அவர்கள் நம்புகிறார்கள்: “மாம்சத்தை அதின் உயிராகிய இரத்தத்தோடே புசிக்க வேண்டாம்.” (ஆதியாகமம் 9:3, 4); ‘[நீ] அதின் இரத்தத்தைச் சிந்தப்பண்ணி, மண்ணினால் அதை மூடக்கடவாய்.’ (லேவியராகமம் 17:13, 14,); “வேசித்தனத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும், இரத்தத்திற்கும், விலகியிருங்கள்.” (அப்போஸ்தலர் 15:19–21).1

இந்த வசனங்கள் மருத்துவ சொற்களில் சொல்லப்படவில்லை என்றாலும், முழு இரத்தம், சிவப்பு இரத்த அணுக்கள், பிளாஸ்மா, வெள்ளை இரத்த அணுக்கள், பிளேட்லெட்கள் ஆகியவற்றை ஏற்றிக்கொள்வதையும் இவை தடை செய்வதாக யெகோவாவின் சாட்சிகள் கருதுகிறார்கள். ஆனால், ஆல்பியூமின், தற்காப்புப் புரதங்கள், இரத்தப்போக்கை தடுக்கும் மருந்துகள் (hemophiliac preparations) போன்றவற்றை யெகோவாவின் சாட்சிகளுடைய மத நம்பிக்கை அடியோடு தடை செய்வதில்லை. இவற்றை ஏற்றுக்கொள்ளலாமா வேண்டாமா என்பதை யெகோவாவின் சாட்சிகளில் ஒவ்வொருவரும் தனிப்பட்ட விதத்தில் தீர்மானிக்க வேண்டும்.2

உடலிலிருந்து எடுக்கப்பட்ட இரத்தத்தை ஊற்றிவிட வேண்டுமென யெகோவாவின் சாட்சிகள் நம்புகிறார்கள். அதனால், முன்னரே சேமித்து வைக்கப்பட்ட ஒருவருடைய சொந்த இரத்தத்தையும் அவர்கள் ஏற்றிக்கொள்வதில்லை. அறுவை சிகிச்சையின்போது இரத்தத்தைச் சேமித்து வைக்கும் முறையையும் (intraoperative collection) இரத்த சேமிப்பை உட்படுத்தும் இரத்தச்செறிவு மருத்துவ முறைகளையும் (hemodilution) அவர்கள் ஆட்சேபிக்கிறார்கள். என்றாலும், டையாலிசிஸ், (இரத்தம் சாராத) இருதய–நுரையீரல் சாதனங்களைப் பயன்படுத்துவது, அறுவை சிகிச்சையின்போது உடலுடன் இணைக்கப்படும் இயந்திரம் போன்றவற்றை அவர்கள் அனுமதிக்கிறார்கள்; நோயாளியின் மனசாட்சி என்ன சொல்கிறது என்பதை மருத்துவர் அவரிடமிருந்து தெரிந்துகொள்ள வேண்டும்.2

மாற்று உறுப்புகளைப் பொருத்துவது சம்பந்தமாக பைபிள் நேரடியாக எதுவும் சொல்லாததால், விழி வெண்படலம், சிறுநீரகம், அல்லது வேறுசில மாற்று திசுக்களைப் பொருத்துதல் சம்பந்தமாக யெகோவாவின் சாட்சிகளில் ஒவ்வொருவரும் தனிப்பட்ட தீர்மானம் எடுக்க வேண்டும்.

மேஜர் அறுவை சிகிச்சை சாத்தியமே

இரத்தம் சார்ந்த பொருட்களை யெகோவாவின் சாட்சிகள் ஏற்றுக்கொள்வதில்லை என்பதால் அது “தங்களுடைய கைகளைக் கட்டிப்போடுவது” போல் இருப்பதாக மருத்துவர்கள் உணருகிறார்கள். இதனால் அநேக சமயங்களில் அவர்களுக்குச் சிகிச்சை அளிக்க அறுவை சிகிச்சை நிபுணர்கள் மறுத்திருக்கிறார்கள். இருந்தாலும், இப்பொழுது அந்தச் சூழ்நிலையைத் தங்களுடைய திறமைக்கு வந்த மற்றொரு சவாலாகவே கருத ஆரம்பித்திருக்கிறார்கள். கூழ் நிலையில் (colloid) அல்லது படிக நிலையில் (crystalloid) உள்ள மாற்று திரவங்களை ஏற்றுக்கொள்வதையோ இரத்தக் கசிவைக் குறைக்க மின் முறைச் சூடிடுதல், இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மயக்க மருந்தை (hypotensive anesthesia) அளித்தல்,3 அல்லது உடல் வெப்பத்தைக் குறைந்த நிலையில் (hypothermia) வைத்து அறுவை சிகிச்சை செய்தல் ஆகிய முறைகளுக்கு யெகோவாவின் சாட்சிகள் மறுப்பு தெரிவிப்பதில்லை என்பதால் இவை வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டுள்ளன. தற்போதைக்கு அல்லது பின்னர் கொடுக்கப்படும் ஹிடாஸ்டார்ச்4 (hetastarch), நரம்புவழியாய் அதிக அளவில் செலுத்தப்படும் இரும்புச்சத்து கலந்த டெக்ஸ்ட்ரான் ஊசி மருந்துகள்,5,6 மற்றும் “ஒலி அறுவை சிகிச்சை கத்தி”7 (sonic scalpel) ஆகியவை நம்பிக்கையூட்டுவதாயும் மத ரீதியில் எந்தவித ஆட்சேபணையற்றதாயும் இருக்கின்றன. மேலும், சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இரத்தத்திற்கு மாற்றுப்பொருளான ஃப்ளோரின் கலந்த திரவம் (Fluosol-DA) பாதுகாப்பாகவும் திறம்பட்டதாகவும் இருந்தால்8 அதைப் பயன்படுத்துவதும் அவர்களுடைய நம்பிக்கைகளுக்கு முரணாக இல்லை.

1977-ல், ஆட் மற்றும் கூலீ9 என்பவர்கள் யெகோவாவின் சாட்சிகளுக்கு இரத்தமேற்றாமல் செய்த 542 இருதய இரத்த நாள அறுவை சிகிச்சையைப் பற்றி அறிக்கை செய்தார்கள். இந்த அறுவை சிகிச்சை முறையை “ஏற்கத்தகுந்த முறையில் அதிக ஆபத்தின்றி” செய்ய முடியுமென முடிவாக கூறினார்கள். எங்கள் வேண்டுகோளுக்கு இணங்க 1,026 அறுவை சிகிச்சைகளைப் பற்றிய ஓர் ஆய்வு விமர்சனத்தைச் சமீபத்தில் கூலீ மேற்கொண்டார். இவர்களில் 22% சிறுவர்கள்; “யெகோவாவின் சாட்சிகளுக்குச் செய்யப்பட்ட அறுவை சிகிச்சைகளில் இருந்த ஆபத்துகள், மற்றவர்களுக்குச் செய்யப்பட்ட அறுவை சிகிச்சைகளில் இருந்த ஆபத்துகளைவிட கணிசமானளவு குறைவாகவே இருந்தன” என்பதையும் அவர் உறுதி செய்தார். அதுபோல மைக்கெல் ஈ. டிபேக்கி, MD இவ்வாறு குறிப்பிட்டார்: “இரத்தமேற்றாமல் [யெகோவாவின் சாட்சிகளுக்கு] செய்யப்படும் அறுவை சிகிச்சைகளில் உட்பட்டுள்ள ஆபத்து விகிதம் இரத்தத்தைப் பயன்படுத்தி செய்கிற அறுவை சிகிச்சையில் இருப்பதைவிட அதிகமாக இல்லை” (சொல்லப்பட்டது, மார்ச் 1981). சிறுநீர்க் குழாய்10 மற்றும் எலும்பு முறிவு11 சம்பந்தப்பட்ட பெரிய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டதைப் பற்றியும் அந்நூல் பதிவு செய்திருக்கிறது. “[சாட்சியாக] இருக்கும் சிறுவர்களில் 20 பேருக்கு பின்-முதுகெலும்பு இணைப்பு வெற்றிகரமாக செய்யப்பட்டது” என்று ஜீ. டீன் மெக்ஈவன், MD, ஜே. ரிச்சர்டு போவன், MD ஆகியோர் எழுதுகிறார்கள் (வெளியிடப்படாத புள்ளிவிவரம், ஆகஸ்ட் 1981). அவர்கள் மேலும் கூறுவதாவது: “இரத்தம் ஏற்றிக்கொள்ள மறுக்கும் நோயாளியின் உரிமையை அறுவை சிகிச்சை நிபுணர் மதிக்க வேண்டியது அவசியம், ஆனால் அதே சமயத்தில் நோயாளியின் பாதுகாப்புக்கு ஏற்ற வகையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.”

“பலத்த காயமும் இரத்த இழப்பும்” ஏற்பட்ட சில இளைஞர்களுக்கும் மற்றவர்களுக்கும் வெற்றிகரமாய் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதைப் பற்றி ஹெர்ப்ஸ்மன்12 அறிக்கை செய்கிறார். இரத்தம் தேவைப்படும் சூழ்நிலை வரும்போது “யெகோவாவின் சாட்சிகள் ஓரளவு சாதகமற்ற நிலையில் இருக்கிறார்கள்” என்பதை அவர் ஒத்துக்கொள்கிறார். “இருந்தாலும், இரத்தத்திற்கு மாற்று சிகிச்சை இருக்கிறது என்பது நமக்குத் தெளிவாக இருக்கிறது.” “சட்டப்பூர்வ விளைவுகளுக்கு பயப்பட்டு” அநேக மருத்துவர்கள் யெகோவாவின் சாட்சிகளுக்குச் சிகிச்சை அளிக்க தயங்குவதைக் குறிப்பிடும்போது, பயப்படுவதற்கு இது நியாயமான காரணமல்ல என்று அவர் கூறுகிறார்.

சட்டப்பூர்வ பிரச்சினைகளும் வயதுவராதவர்களும்

மருத்துவர்களையும் மருத்துவமனைகளையும் சட்டப்பூர்வ பிரச்சினையிலிருந்து விடுவிப்பதற்கு அமெரிக்க மருத்துவச் சங்கத்தின் படிவத்தில் யெகோவாவின் சாட்சிகள் தயக்கமின்றி கையொப்பமிடுகிறார்கள்,13 அவர்களில் பெரும்பாலோர் மருத்துவ மற்றும் சட்ட அதிகாரிகளிடம் கலந்துபேசி தயாரிக்கப்பட்ட, தேதியிடப்பட்ட மருத்துவ எச்சரிப்பு அட்டையை (Medical Alert card) எடுத்துச் செல்கிறார்கள். இந்தப் படிவங்கள் அந்த நோயாளியை (அல்லது அவருடைய உரிமைக்காரரை) பொறுப்புள்ளவர்களாக ஆக்குகிறது, மருத்துவர்களுக்குப் பாதுகாப்பையும் அளிக்கிறது. ஏனென்றால் இப்படி கையொப்பமிடப்பட்டிருப்பதால் மருத்துவருக்கு எதிராக யாரேனும் வழக்கு தொடரும்போது அது “ஆதாரமற்றதாக தோன்றும்” என நீதிபதி உவாரன் பர்கர் கூறுகிறார். அதோடு, “கட்டாய மருத்துவ சிகிச்சையும் மத சுயாதீனமும்” என்ற ஓர் ஆய்வுரையில் இதைப் பற்றி பாரீஸ்14 இவ்வாறு எழுதினார்: “அந்தப் படிவத்தை ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட குறிப்புரையாளர் ஒருவர் அறிக்கை செய்ததாவது, ‘இரத்தம் ஏற்றிக்கொள்ள விரும்பாத நோயாளிக்கு மருத்துவர் கட்டாயப்படுத்தி இரத்தம் ஏற்றாமல் இருந்தால் . . . அவர் குற்றவாளியாக . . . பொறுப்பேற்க நேரிடும் என்பதற்கு எந்த ஆதாரத்தையும் அதில் என்னால் காண முடியவில்லை.’ இந்த ஆபத்து ஒரு சட்ட நிபுணரின் மனதில் தோன்றும் ஒன்றேயல்லாமல் உண்மையில் நிகழக்கூடிய காரியமல்ல என்றே தோன்றுகிறது.’

வயதுவராதோருக்குச் சிகிச்சை அளிப்பது மிகவும் கவலைக்குரிய விஷயமாக இருக்கிறது. இது, பிள்ளையை அசட்டை செய்தல் என்ற சட்டத்தின்படி பெற்றோருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் விளைவடைகிறது. ஆனால், யெகோவாவின் சாட்சிகளுடைய வழக்குகளைக் கையாண்ட மருத்துவர்களும் வழக்கறிஞர்களும் இத்தகைய நடவடிக்கைகளை எதிர்த்து கேள்வி கேட்கிறார்கள், ஏனென்றால் யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய பிள்ளைகளுக்குச் சிறந்த மருத்துவ கவனிப்பு கொடுப்பதை இவர்கள் அறிந்திருக்கிறார்கள். பெற்றோருக்குரிய பொறுப்பைத் துறந்துவிடவோ அதை ஒரு நீதிபதியிடம் அல்லது ஒரு மூன்றாம் நபரிடம் ஒப்படைக்கவோ யெகோவாவின் சாட்சிகள் விரும்புவதில்லை, ஆனால் குடும்பத்தின் மதக் கொள்கைகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டுமென்றே அவர்கள் உந்துவிக்கிறார்கள். கனடா மருத்துவ சங்கத்தின் முன்னாள் செயலர் டாக்டர் ஏ. டி. கெல்லி இவ்வாறு எழுதினார்:15 “வயதுவராத பிள்ளைகளுடைய பெற்றோரும் உணர்வற்ற நிலையிலுள்ள நோயாளிகளின் உறவினரும் நோயாளியின் விருப்பத்தை விளக்கும் உரிமையைப் பெற்றிருக்கிறார்கள். . . . அதிகாலை 2:00 மணிக்கு அவசர அவசரமாக வழக்குமன்றத்தில் ஒன்றுகூடி, விசாரணை நடத்தி, பிள்ளையை பெற்றோருடைய கண்காணிப்பிலிருந்து பிரிப்பது எனக்கு சரியாகப் படவில்லை.”

அறுவை சிகிச்சை, ஒளிக்கதிர் வீச்சு சிகிச்சை, அல்லது ‘கீமோதெரபி’ போன்றவற்றில் ஆபத்து/நன்மை உட்பட்டிருக்கும்போது பிள்ளைகளைக் கவனிக்கும் விஷயத்தில் பெற்றோருக்கு உரிமை இருக்கிறது என்பது தெளிவாக இருக்கிறது. இரத்தமேற்றுவதில் ஆபத்து இருக்கிறது என்பதால் மட்டுமல்ல, அதைவிட முக்கியமான நெறிமுறை காரணங்களுக்காகவும்16 யெகோவாவின் சாட்சிகளான பெற்றோர்கள் தங்களுடைய மத நம்பிக்கைகளுக்கு முரண்படாத சிகிச்சை முறைகளை அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறார்கள். இது, “முழு நபருக்கு” சிகிச்சை அளித்தல் என்ற மருத்துவக் கொள்கைக்கு இசைவாக இருக்கிறது; ஒரு குடும்பத்தின் அடிப்படை நம்பிக்கைகளை மதிக்காமல் உரிமை மீறி செயல்படுவதால் ஏற்படும் மனோ ரீதியிலான நிரந்தர பாதிப்பை கவனத்தில் எடுத்துக்கொள்கிறது. யெகோவாவின் சாட்சிகளுக்குச் சிகிச்சை அளிப்பதில் அனுபவமுடைய பெரிய மையங்கள் நாடு முழுவதும் இருக்கின்றன; சாட்சிகளுடைய குழந்தைகளுக்கும்கூட சிகிச்சை தர மறுக்கும் மருத்துவமனைகளிலிருந்து வெளியேறும் நோயாளிகளை இந்த மையங்கள் இப்பொழுது சேர்த்துக்கொள்கின்றன.

மருத்துவரின் சவால்

முடிந்தவரை எல்லா மருத்துவ முறைகளையும் பயன்படுத்தி நோயாளியின் உயிரையும் உடல் நலத்தையும் பாதுகாக்க அர்ப்பணித்திருக்கும் மருத்துவருக்கு யெகோவாவின் சாட்சிகளைக் கவனிப்பது ஒரு பிரச்சினையாக இருக்கலாம் என்பது புரிந்துகொள்ளத்தக்கதே. யெகோவாவின் சாட்சிகளுக்குச் செய்யப்பட்ட பெரிய அறுவை சிகிச்சைகள் பற்றிய தொடர் கட்டுரைகளுக்கு முன்னுரை எழுதும்போது ஹார்வி17 இவ்வாறு ஒப்புக்கொண்டார்: “என்னுடைய வேலைக்கு தடையாக இருக்கும் அவர்களுடைய நம்பிக்கைகள் எனக்கு எரிச்சலூட்டுவது உண்மைதான்.” ஆனால் அவர் தொடர்ந்து கூறினார்: “அறுவை சிகிச்சை என்பது மருத்துவருடைய தனிப்பட்ட தொழில்நுட்ப திறமையைச் சார்ந்திருக்கிறது என்பதை ஒருவேளை நாமும்கூட எளிதில் மறந்துவிடுகிறோம். அந்தத் திறமையை முன்னேற்றுவிக்க முடியும்.”

ஃப்ளோரிடாவில் தாதே மாகாணத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு மருத்துவமனை யெகோவாவின் சாட்சிகளுக்கு “சிகிச்சையளிக்க மறுக்கும் ஒரு கொள்கை” வைத்திருப்பது பற்றிய கவலைக்குரிய அறிக்கையை பேராசிரியர் பொலூக்கி18 குறிப்பிட்டார். “இந்தத் தொகுதியினருக்குச் சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும் பெரும்பாலான அறுவை சிகிச்சை முறைகள் மற்றவற்றைவிட குறைந்த ஆபத்தானவை” என்பதை அவர் சுட்டிக்காட்டினார். மேலும்: “நவீன சிகிச்சை முறையை கையாள முடியாத குறை இருந்தாலும், . . . இந்த நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்வதிலிருந்து நிபுணர்கள் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்” என்றும் கூறினார்.

யெகோவாவின் சாட்சிகளுக்கு சிகிச்சை அளிப்பதை ஒரு பிரச்சினையாக கருதுவதற்குப் பதிலாக, ஒரு மருத்துவ சவாலாகவே பல டாக்டர்கள் கருதுகிறார்கள். இந்தச் சவாலைச் சந்திக்க மருத்துவர்கள் இந்தத் தொகுதியினருக்குத் தரமான மருத்துவ சிகிச்சை முறையை உருவாக்கியிருக்கிறார்கள்; அதை இந்நாடு முழுவதுமுள்ள ஏராளமான மருத்துவ மையங்கள் ஏற்றிருக்கின்றன. அதே சமயத்தில் நோயாளியின் முழு நன்மையைக் கருதி மிகச் சிறந்த மருத்துவ கவனிப்பை இந்த மருத்துவர்கள் அளித்து வருகிறார்கள். கார்ட்னரும் மற்றவர்களும்19 இவ்வாறு கூறினார்கள்: “அந்த நோயாளியின் உடல் ரீதியிலான நோய் குணப்படுத்தப்படலாம், ஆனால் அந்த நோயாளியின் நம்பிக்கையின்படி, கடவுளோடுள்ள ஆன்மீக வாழ்க்கை பாதிக்கப்பட்டு அதனால் அர்த்தமற்ற வாழ்க்கை உண்டானால், ஒருவேளை மரணத்தைவிட மோசமான வாழ்க்கை உண்டானால் யாருக்கு நன்மை.”

தங்களுடைய உறுதியான நம்பிக்கையால் மருத்துவ ரீதியில் ஓரளவு ஆபத்து அதிகரிக்கலாம் என்பதையும் தங்களுக்கு அளிக்கப்படுகிற சிகிச்சையில் சிக்கல் ஏற்படலாம் என்பதையும் யெகோவாவின் சாட்சிகள் அறிந்திருக்கிறார்கள். அதனால் தங்களுக்குக் கிடைக்கும் மருத்துவ கவனிப்புக்கு மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறார்கள். உறுதியான விசுவாசமும் உயிர்வாழ வேண்டுமென்ற தீவிர ஆசையும் இருப்பதோடு, மருத்துவர்களுக்கும் மருத்துவ பணியாளர்களுக்கும் இவர்கள் மகிழ்ச்சியுடன் ஒத்துழைப்பு தருகிறார்கள். இதனால், இந்த ஒப்பற்ற சவாலை எதிர்ப்படுவதில் நோயாளியும் மருத்துவரும் ஒன்றுபட்டிருக்கிறார்கள்.

REFERENCES

1. Jehovah’s Witnesses and the Question of Blood. Brooklyn, NY, Watchtower Bible and Tract Society, 1977, pp. 1-64.

2. The Watchtower 1978;99 (June 15):​29-31.

3. Hypotensive anesthesia facilitates hip surgery, MEDICAL NEWS. JAMA 1978;239:⁠181.

4. Hetastarch (Hespan)​—⁠a new plasma expander. Med Lett Drugs Ther 1981;23:⁠16.

5.Hamstra RD, Block MH, Schocket AL:Intravenous iron dextran in clinical medicine. JAMA 1980;243:1726-1731.

6. Lapin R: Major surgery in Jehovah’s Witnesses. Contemp Orthop 1980;2:647-654.

7. Fuerst ML: ‘Sonic scalpel’ spares vessels. Med Trib 1981;22:1,30.

8. Gonzáles ER: The saga of ‘artificial blood’: Fluosol a special boon to Jehovah’s Witnesses. JAMA 1980;243:​719-724.

9. Ott DA, Cooley DA: Cardiovascular surgery in Jehovah’s Witnesses. JAMA 1977;238:1256-1258.

10. Roen PR, Velcek F: Extensive urologic surgery without blood transfusion. NY State J Med 1972;72:2524-2527.

11. Nelson CL, Martin K, Lawson N, et al: Total hip replacement without transfusion. Contemp Orthop 1980;2:​655-658.

12. Herbsman H: Treating the Jehovah’s Witness. Emerg Med 1980;12:​73-76.

13. Medicolegal Forms With Legal Analysis. Chicago, American Medical Association, 1976, p. 83.

14. Paris JJ: Compulsory medical treatment and religious freedom: Whose law shall prevail? Univ San Francisco Law Rev 1975;10:1-35.

15. Kelly AD: Aequanimitas Can Med Assoc J 1967;96:432.

16. Kolins J: Fatalities from blood transfusion. JAMA 1981;245:1120.

17. Harvey JP: A question of craftsmanship. Contemp Orthop 1980;2:629.

18. Bolooki H: Treatment of Jehovah’s Witnesses: Example of good care. Miami Med 1981;51:​25-26.

19. Gardner B, Bivona J, Alfonso A, et al: Major surgery in Jehovah’s Witnesses. NY State J Med 1976;76:​765-766.